பெரியார் பக்கம் 21

புரட்சியாளர் பெரியார் (3)

எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம்.

தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும். 

மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம்.

எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார்.

1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார்.

ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன.

திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது.

பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும்.

பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம். 

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி.

பெண்களின் திருமண வயது

பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது.

பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக.

குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும்

‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை. 

எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.

கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி.

சமதர்மத் திட்டம்

1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை.

அறிஞர் அண்ணாவின் பாராட்டு

ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ:

‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’

மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு அய்ம்பது ஆண்டுகள்,  அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு அய்ம்பது ஆண்டுகள் என்ற அளவில், ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக வால்டேர், ரூசோ, இப்படித் தொடர்ச்சியாகப் பல பேர் வந்து வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான், பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தது. ‘நூற்றாண்டுகளைக் குளிகைக்குள் அடக்குதல்’ இது ஆங்கில வழக்கு ஆகும். சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளில் தருவதுபோல, பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்துத் தம்முடைய வாழ்நாளிலேயே சாதித்துத் தீரவேண்டுமென்று அறிவோடும் உணர்ச்சியோடும் நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக வைத்துக் கொண்டு, எந்த அளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே குறிக்கோளாக, வாழ்க்கை முழுவதும் போராட்டக்களத்தில் நின்றார் பெரியார். 

வாழ்நாள் முழுவதும் புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பெரியாரும் மனச்சோர்வு கொள்ளும்வேளை இருந்தது. முதலமைச்சர் அண்ணா, கொடும் நோய்க்கு ஆளாகி, மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்ல நேர்ந்தது, பெரியாரைப் பெரிதும் உலுக்கிற்று. அப்போது ஏற்பட்ட மனச்சோர்வை, தன் பிறந்த நாள் மலர்க் கட்டுரையில், ‘நான் துறவியாகிவிடுவேனோ என்னவோ’ என்று வெளிப்படுத்தினார். இதைக் கண்ணுற்ற அறிஞர் அண்ணா, அமெரிக்காவிலிருந்து கவலையோடு ‘தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமுதாயத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூகச் சீர்திருத்தவாதிக்கும் கிடைக்கவில்லை, அதுவும் நமது நாட்டில். ஆகவே, சலிப்போ, கவலையோ கொள்ளத் தேவையில்லை’ என்று எழுதினார்.

பெரியார், சமதர்மக் கொள்கையைப் பரப்பி, வளர்த்து, மக்களின் ஆதரவைப் போதிய அளவு பெற்று, ‘எல்லார்க்கும் எல்லாம் இருப்பதான திசை நோக்கி’ நம் நாட்டை நடத்திச் செல்லும் பணியில் வெற்றிபெறுவதற்கு முன்பே மறைந்துவிட்டார். ஈராயிரம் ஆண்டுகளாகத் தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பியவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி ஆவார்.

அடிமையிலும் இழிவிலும் நெடுங்காலம் ஆழ்ந்து கிடந்ததால், தன்மானமே இன்றி, மரக்கட்டைகளாகக் கிடந்த பார்ப்பனரல்லாதாரை உலுக்கி, ‘நீ மனிதன், பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத்தறிவுக்கே முதல் இடம் கொடு. கடவுளை மற; மனிதனை நினை. பிறப்பால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்; மனைவி, மலிவான வேலைக்காரியல்ல; வெறும் விளையாட்டுப் பொம்மையல்ல; நகைமாட்டியல்ல; வாழ்க்கைத் துணை. உயிருள்ள, உரிமையுள்ள வாழ்க்கைத்துணை. எனவே, இருவரும் தோழமையோடு வாழுங்கள்’ என்று அய்ம்பது ஆண்டுகள் போல அய்ம்பதாயிரம் கூட்டங்களிலாவது அறிவு புகட்டிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஆவார். 

‘சமதர்ம வாழ்வே மனித வாழ்வு; முழு வாழ்வு; எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் வாழ்வு. சமதர்ம முறையின்கீழ் மட்டு மே மனிதன் சமத்துவ வாழ்வு வாழமுடியும்’ என்பதை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக விளக்கி விளக்கி ஒளிவிட்ட சமத்துவ ஞாயிறு, தந்தை பெரியார் ஆவார்.

சிந்தனையிலே, பேச்சிலே, எழுத்திலே கனல் கக்கி, இரும்பாக இருந்தவர்களை உருக்கி, சிந்திக்க வைத்த பெரியாருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன? பெரியாரின் தொண்டர்கள் எத்தகையோர்? அவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்காத தற்கொலைப் பட்டாளம். அரை நூற்றாண்டு காலம் சாதி வெறி, அதைத் தாங்கிக் கொண்டு வரும் சமயப்பற்று, மூடநம்பிக்கை ஆகியவை சேர்ந்த காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டு வரும் பெரும்படை. தன்னேரில்லாத புரட்சிப் படையை நாற்பத்து எட்டு ஆண்டுகள் முழுக்கட்டுப்பாட்டில் நடத்தி வந்த படைத் தலைவர் தந்தை பெரியார் ஆவார். பெரியார் அரை நூற்றாண்டு காலம் நடத்திய எண்ணற்ற கிளர்ச்சிகளில், மறியல்களில், போராட்டங்களில், எந்த ஒன்றிலும் பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததில்லை; தனியார் பொருளுக்கு நட்டம் ஏற்படுத்தியதில்லை.

ஒருமுறை கத்தி வைத்துக்கொள்ளுங்கள். நாள் குறிப்பேன்; அப்போது என்ன செய்வதென்று சொல்லுவேன்’ என்றும், மற்றோர் முறை ‘தீப்பந்தமும் பெட்ரோலும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். நான் நாள் குறித்து, என்ன செய்வதென்று ஆணையிடப்போகிறேன்’ என்றும் கட்டளையிட்டார். அப்போதும் வன்முறைக்கு இடங்கொடுக்கவில்லை; முன்னரும் இடம் விடவில்லை; பின்னரும் வழிவிடவில்லை, இவ்வளவு புரட்சிகளைப் பொழிந்து கொண்டிருந்த ஒரு தலைவர், இத்தனை நீண்ட காலம் எவருக்கும் எதற்கும் தீங்கு விளையாதபடி தன்னியக்கத்தவர்களைக் கட்டிக் காத்ததில், பெரியாருக்கு இணை எவருமிலர். தந்தை ஈ.வே.ராமசாமி வயதில் அறிவில் பெரியார்; சிந்தனையில் பெரியார்; தொண்டில் பெரியார்; சிறைக்கூடத்தைத் தவக்கூடமாக இருபத்தோறு முறை கொண்ட பெரியார், சாதனையில் பெரியார் குறிக்கோளை நோக்கிப் பீடுநடை போட்டதில் பெரியார்.

‘தந்தை பெரியார் வங்கத்தில் தொண்டாற்றியிருந்தால், இந்நூற்றாண்டின் காரல் மார்க்ஸ் எனப் போற்றி மகிழ்ந்திருப்பார்கள். பீகாரிலோ, உத்திரபிரதேசத்திலோ, தொண்டாற்றியிருந்தால், இந்திய லெனினாக்கி, சமதர்மத்தை இதற்குள் நிலைநாட்டி நிமிர்ந்து நிற்பார்கள். போயும் போயும் தமிழ்நாட்டு ‘சூத்திரர்களுக்குப் பாடுபட்டாரே! தந்தையை நினைப்போம். தொண்டைத் தொடருவோம். சாதியொழிந்த, வறுமையற்ற, எல்லோரும் வாழும், நன்றாக வாழும், ஒன்றாக வாழும் இந்தியாவை உருவாக்குவோம். மக்கள் இனத்தோடு சமமாகக் கலந்துவிடுவோம். சிந்தனையில், செயலில், மக்கள் இனத் தொண்டில், சாதனையில், தனக்கென வாழாமையில், உலகப் பெரியாராக விளங்கிய தந்தை பெரியார் அவர்களை எண்ணும்தோறும் பகுத்தறிவு விளங்குவதாக; சமத்துவ உணர்வு பொங்குவதாக; சமதர்ம உணர்வு கொப்பளிப்பதாக; தொண்டு உள்ளம் வளர்வதாக; துணிவு பெருகுவதாக; பொதுநல உணர்வு சுரப்பதாக; எளிமையும் வாய்மையும் ஒளிர்வதாக. எல்லோரும் வாழ, நன்றாக வாழ, ஒன்றாக வாழ உழைப்போமாக’ – என்று கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் தந்தை பெரியார் புரட்சியாளர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டி உறுதி செய்துள்ளார். 

நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் குறிப்பிடுவதுபோல், தான் ஏற்படுத்திய புரட்சியின் நல்விளைவுகளைக் கண்குளிரப் பார்த்த உலகின் ஒரே புரட்சியாளர் தந்தை பெரியார் என்பதுதான் அவருக்கு உள்ள பெரிய பெருமை எனில் அது மிகையில்லை எனலாம்.

கட்டுரையாளர்: முனைவர் தி.நெடுஞ்செழியன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *