புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம்

பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.
விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி..

புதுவெள்ளம்
சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின.

எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது.

வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான்.

காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது)

அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான்.

இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது.

ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது.

பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது.

தொடரும்

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *