கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் கடம்பூரிலிருந்து திரும்பவில்லை என்பதையும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான்.

அரண்மனையினுள் நுழைந்தவன் சின்னப் பழுவேட்டரையரைச் சந்திக்க எங்கு செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரு புலவர் கூட்டம் அரசரைச் சந்திக்க அவரின் அனுமதி வாங்கச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். தமையனாரை விட ஆஜானுபாகுவாய் வீற்றிருந்த சின்ன பழுவேட்டரையரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். வீர இளைஞர்களைக் கண்டால் தன் காவல்படையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆவலில் ஆர்வமாகக் கவனித்த சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனின் தூதுவன் என்றதும் முகம் கடுத்தார்.

ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, அரசரிடம் தானே ஓலையைச் சேர்த்து விடுவதாகக் கூறினார். இதை எதிர்பார்த்திருந்தபடியால் வந்தியத்தேவன் கடம்பூரில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்ததாகவும் அவர்தான் இந்த ஓலையை அரசரிடம் தன்னையே கொடுக்கச் சொன்னதாகவும் இட்டுக் கட்டிக்கூற, அரசரைப் பார்க்க உள்ளே அனுப்பினார்.

அரசரைக் கண்டதும் பரவசமும், அவர் நோயில் நலிந்து காணப்பட்டதால் வருத்தமும் அடைந்த வந்தியத்தேவனுக்குப் பேச்சே வரவில்லை. மகனிடமிருந்து வந்த ஓலை என்றது அரசரும், அரசியுமான வானமாதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். தான் கட்டிக்கொண்டிருக்கும் பொன்மாளிகைக்கு வருகை தருமாறு ஓலையில் ஆதித்த கரிகாலன் எழுதியிருந்ததைப் படித்த அரசர், ‘தெய்வங்களுக்கு மட்டுமே பொன்மாளிகை ஏற்படுத்த வேண்டும்; மனிதர்களுக்குத் தேவையா?’ என்று வருந்த, தாயும் தகப்பனுமாயும், நாட்டுக்கான அரசனுமாயும் விளங்கும் சுந்தரசோழர்-வானமாதேவிக்குப் பொன்மாளிகை கட்டியது தவறில்லை என வந்தியத்தேவன் இனிய சொற்களைக் கூற, இருவருக்கும் வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. தூரத்தில் சின்ன பழுவேட்டரையர் வருவதைக் கண்டவன், தான் சொல்ல நினைத்ததை அவசர அவசரமாகக் கூறினான். ‘தாங்கள் தஞ்சையிலிருந்து கிளம்ப வேண்டும். இங்கு அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அபாயம்.. அபாயம்’ .. எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்ன பழுவேட்டரையர் உள்ளே நுழைய, அவர் கடைசி வார்த்தையைக் கேட்டு விட்டார்.

அப்போது புலவர்கள் உள்ளே வர, வந்தியத்தேவன் அவர்களுடனேயே போய் நின்றுகொண்டான். வந்த புலவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட, அரசர் அதில் லயித்து மகிழ்ந்தார். பாடல்கள் வழி ஒரு குறிப்பு இருந்தது. அது இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கிருந்து உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டாம் என்பதாகும். நடுவில் குந்தவை தேவியைப் பற்றி அரசர் பேசியபோது, அவரின் முகம் நெகிழ்ந்ததைக் கண்ட வந்தியத்தேவன், அவரைச் சந்தித்து அடுத்த ஓலையைக் கொடுக்க வேண்டும் என்று இடுப்பைத் தொட்டு பார்த்தான். ஓலையைக் காணவில்லை. எங்கோ தொலைந்து போய்விட்டது என்று தெரிந்துகொண்டவன், இருப்பில் நிற்காமல் பதட்டமுற்று கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த புலவர்களுடனேயே திரும்ப முனைந்தான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் அவனைப் போகவிடாமல் இறுகக் கைப்பற்றி அரசரிடம் கூட்டிச்சென்று அபாயம் என அவர் காதில் விழுந்ததைப் பற்றி விசாரித்தார். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன், தான் அபயம் எனக் கேட்டதாகவும், தனக்கு ஒரு பத்து கிராமங்களாவது தங்களுடைய முன்னோர் பூமியில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் முறையிட்டான்.

அதையும் ரசித்த அரசரிடம், சின்ன பழுவேட்டரையர் ஓலைக்கு என்ன பதில் அனுப்புவது என்று கேட்க, அரசர் தஞ்சையை விட்டு வெளியே போவதில் அதுவும் பெண் பிள்ளைகள் போகும் பல்லக்கில் கால் செயலிழந்த நிலையில் போவது விருப்பமில்லை என்று கூறினார். அதற்குத் தகுந்த பதில் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்ததும் கலந்துகொண்டு அனுப்பலாம் எனவும், தன் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் போல் இருப்பதாகவும், எனவே ஆதித்த கரிகாலனையும், ஈழம் சென்றிருக்கும் அருள்மொழி வர்மனையும் வரச் சொல்லி ஓலை எழுதவேண்டும் எனவும் கூறினார். அதுவரை வந்தியத்தேவனை இங்கேயே தங்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார்.

ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கான சின்ன பழுவேட்டரையரின் ஆட்சேபனையைப் புலவர்களின் பாட்டால் குறிப்புணர்த்தியதைப் புரிந்துகொண்ட அரசர், அதற்கும் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். யமனிடமிருந்து கூட மீட்டு வருபவர் என்னும் அளவுக்கு அரசர் சின்ன பழுவேட்டரையரின்பால் நம்பிக்கை வைத்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது. ஓலையைத் தொலைத்திருந்த வந்தியத்தேவனுக்கு மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. அவன் நினைத்தாற்போலவே அந்த ஓலை சின்ன பழுவேட்டரையரிடம் ஒரு காவலன் மூலமாக அடைந்திருந்தது.

‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான தீரன் வேண்டும் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? ஓலையைக் கொண்டு வருபவனே அந்த வீரன்’ என்றும், ‘வந்தியத்தேவனைப் பூரணமாக நம்பலாம்’ என்றும் ஆதித்த கரிகாலன் அந்த ஓலையில் எழுதியிருந்ததைக் கண்ட சின்ன பழுவேட்டரையர், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று புரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்திருந்தார்.  அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, வந்தியத்தேவனைக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நன்கு உபசரிக்கும்படி ஆணையிட்டார்.

வெகுதூரம் வந்த களைப்பு போக அந்த மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட சுகபோக உபசரிப்பில் வந்த விஷயத்தையே மறந்து போகும் வண்ணம் மகிழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். புதிய உடைகள், உணவு எல்லாவற்றையும் ருசித்தவன், அங்கிருந்த சிற்பக் கூடத்தைச் சுற்றிப் பார்த்து சோழர்குல வரிசை, பராக்கிரமம், போர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், அதில் பழுவேட்டரையர் பரம்பரை செய்த தியாகங்கள், உதவிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புரிந்து கொண்டான். 

தன்னைக் கண்காணிப்பதற்கே இந்த உபசரிப்பு என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன், சடுதியில் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்த காவலாளிகளிடம் தன் பொருட்களைத் திருப்பித் தருமாறு சண்டையிட ஆரம்பித்தான். முன்வாசலில் குதிரையில் வந்த சின்ன பழுவேட்டரையரை ஓரக்கண்ணில் கவனித்தவன் தன்னை நெருங்கியவர்களை எல்லாம் ஒரே சுற்றில் வீழ்த்தினான். என்ன கலாட்டா என்று நெருங்கியவர், அவனின் வீரத்தை மனதுக்குள் மெச்சி, தமையனாரிடம் கலந்து கொண்டு  அவனைத் தன் காவற்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தன் பொருட்களெல்லாம் காணவில்லை, திரும்ப வேண்டும் என்று கேட்ட வந்தியத்தேவனிடம் என்ன பொருட்கள் எனக் கேட்க, அவன் வேறுவழியில்லாமல் குந்தவை தேவியின் ஓலையும் அதில் இருப்பதாகக் கூறி அனைத்துப் பொருட்களும் எனக்குத் திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தான். 

அவர் ஆணையின்படி எடுத்து வந்த பொருட்களில், தவறவிடப்பட்டிருந்த ஓலையும் அவன் வைத்திருந்ததை விட அதிகப் பொற்காசுகளும் இருந்தன. இதிலிருந்தே தன்னை உளவு பார்த்ததைப் புரிந்து கொண்டவன், அதிகப்படியாக இருந்த காசுகளை மறுத்தான். அதை வைத்துக்கொள்ளுமாறு கூறிய சின்ன பழுவேட்டரையர், அவன் அன்று அங்கேயே தங்கி, பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துவிட்டுப் போகிறானா என அவன் திட்டத்தை விசாரித்தார். இருந்துவிட்டுப் போவதாகவே கூறியவன், தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென அனுமதி கேட்டான். அவனுடன் இரு காவலாளிகளைத் துணைக்கு அனுப்பி, சுற்றிப் பார்க்கச் சொல்லிவிட்டு சின்ன பழுவேட்டரையர் கிளம்பினார். 

தான் தப்பிப் போகாமல் இருப்பதற்குத்தான் காவலாளிகள் இருவரும் வருகிறார்கள் என்று புரிந்துகொண்ட வந்தியத்தேவன், வேடிக்கை பார்ப்பது போல் போக்கு காட்டிக்கொண்டே, அங்கிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டு வந்தான். திடீரென அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்து, இந்தக் கோட்டையில் உதவி செய்வதானால் அவள்தான் செய்ய முடியும் என்று தோன்ற, காவலாளிகளிடம் இருந்து தப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியில் வேளக்காரப் படை வந்து கொண்டிருந்தது. திடீரென வேளக்காரப் படை வரிசையில் சிறிது குழப்பம் ஏற்பட, அதைப் பிடித்துக் கொண்ட வந்தியத்தேவன் அங்கிருந்து ஓடிய வீரர்களுடன், தானும் ‘பிடி.. பிடி’ என்று சத்தம் போட்டுக்கொண்டே எதிர்ப்பட்ட சந்தின் வழியே தப்பி ஓடினான்.  அவர்களுடனே சிறிது தூரம் ஓடியவன், பின் வழி மாறி சிறிய சந்துகளிலெல்லாம் மாறி மாறிச் சென்று, ஒரு பெரிய மதில் சுவரின் ஓரத்தில்  அமர்ந்து கொண்டான். இந்நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள், எப்படியேனும் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே சுவரின் மீது சாய்ந்து தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் யாரோ அழைப்பது கேட்டு விழித்தவன் மேலிருந்து ஒரு பெண் உருவம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். 

அந்த உருவம் ‘என்ன தூக்கமா? இரு ஏணி வைக்கிறேன். ஏறி வா’ எனக் கூறிவிட்டு மூங்கில் ஏணி ஒன்றை இறக்க, வந்தியத்தேவனால் நம்பவே முடியவில்லை. சரி ஆனது ஆகட்டும். போய்ப் பார்க்கலாம் என ஏறத் தொடங்கினான். ‘ம். அங்கே இளையராணி காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்குத் தூக்கம் கேட்கிறதா’ என்று அந்தப் பெண் கேட்க, வந்தியத்தேவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இளையராணி என்றால் நந்தினியின் மாளிகைக்கா நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணியவன், மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என வேகமாக ஏறினான். மதிலின் உச்சியில் ஏறிக் கீழே பார்த்தபோது, அது ஒரு அரண்மனையின் விஸ்தாரமான தோட்டம் எனத் தெரிந்தது.  யாருடையது எனக் கேட்கத் தொடங்கிய வந்தியத்தேவனை ‘உஷ்.. என அடக்கியபடி அந்தப் பெண் முன்னால் நடந்தாள். வந்தியத்தேவனும் தொடர்ந்தான். 

நடுவில் காவலாளிகளின் சத்தத்திற்கு மறைந்து கொண்டபோது நிலவின் வெளிச்சத்தில் அந்தப் பெண் வந்தியத்தேவன் முகத்தை உற்றுப்பார்த்து, ‘நீ போனமுறை வந்த அதே மந்திரவாதிதானா?’ என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் சமாளித்துக் கொண்டு அடிக்கடி மாறுவேடம் பூண்டாக வேண்டிய அவசியத்தைக் கூறினான். பின் ஒரு லதா மண்டபத்தை அடைந்தார்கள். அந்த இரவில் அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் ஒரு விதத்தில் தேவலோகமென வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. உள்ளே சென்ற பெண்ணிடம் பேசிய குரலை வைத்து, அது நந்தினிதான் எனப் புரிந்து கொண்டான். 

உள்ளே வந்தியத்தேவன் நுழைந்தபோது ஒயிலாய் சப்பர மஞ்சத்தில் நந்தினி சாய்ந்திருந்தாள். அவனைக் கண்டு வியந்தபோதும், பணிப்பெண்ணின் முன் இருவரும் சமாளித்துக் கொண்டனர். அழகெனும் தெய்வமே உருக்கொண்டாற்போல் நந்தினியின் மோகன உருவத்தைக் கண்டு மயங்கிய வந்தியத்தேவன், முன்னொருமுறை மதுவால் ஏற்பட்ட மயக்கத்தையும், சித்தம் கலங்குவதால் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று தான் உறுதி எடுத்துக் கொண்டதையும் நினைத்து, இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணிக் கொண்டு திடமாய் தன்னை வைத்துக் கொண்டான். நந்தினி தன் மயக்கும் குரலால் வந்தியத்தேவனிடம் பேசத் தொடங்கினாள்.

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *