பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். 

பீஷ்மரை ஒத்தவராக இருந்த மலையமான் மிலாடுடையாரின் பேச்சை, ஆதித்த கரிகாலன் மறுத்துப் பேசாதவனாயிருந்தான். பார்த்திபேந்திரன் வீரபாண்டியனை எதிர்த்த போரின் போது துணைசெய்தவனாய் இருந்ததால் ஆதித்த கரிகாலனுடன் இணைபிரியாதிருந்தான். அவனுக்கு, வந்தியத்தேவனும் கரிகாலனும் பாராட்டிய நட்பால் வந்தியத்தேவன் மேல் பொறாமை இருந்து வந்தது. பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்த ஆதித்த கரிகாலனிடம், ஏற்கனவே வந்தியத்தேவனின் மீதிருந்த பொறாமையால், அவன்தான் போன காரியத்தை உத்தேசித்துப் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென பார்த்திபேந்திரன்  குறை கூறினான். 

மிலாடுடையார்  பொறுமையாக சூழ்நிலையை இருவருக்கும் விளக்கத் தொடங்கினார். கடம்பூரில் நடந்த சதியாலோசனை பற்றிக் குறிப்பிட்டவர், பழுவேட்டரையர்கள் நாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளை திட்டமிடுவதாகவும், மதுராந்தகனுக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும், அந்தக் கூட்டத்தில் மதுராந்தகன் கலந்து கொண்டதையும் கூறி வருந்தினார். 

“மதுராந்தகன் கையில் வாளெடுத்து அறியாதவன்; பெண்ணாய்ப் பிறப்பதற்கு பதில் ஆணாய்ப் பிறந்தவன். மேலும், எனக்கு அரசுரிமைப் பட்டம் கட்டிவிட்டு, இப்போது எப்படி மாற்றலாம்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்க, மதுராந்தகனுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி மலையமான் அவனை சமாதானப்படுத்தினார். அதற்கு பார்த்திபேந்திரன் வெகுண்டு எழ, அவனை அடக்கியவர், “என் பேரனுக்கு சோழ அரசு இல்லையெனில்  படையெடுத்தாவது பெற்றுத் தருவேன்” என்று கூறி அவனையும் சமாதானப்படுத்தினார். கடம்பூர் மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பானோ என்று வந்தியத்தேவன் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், சின்னப் பழுவேட்டரையர் அவனை ஒற்றன் என்று குற்றம் சாட்டியதால் . பின்னர் தெளிந்ததாகவும் மிலாடுடையார் சொல்லவும், தான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறிய ஆதித்த கரிகாலன், குறுக்கே வந்தியத்தேவனை பழித்துக் கூறிய பார்த்திபேந்திரனையும் அடக்கினான். மிலாடுடையார் இப்போது சோழ ராஜ்யத்திற்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனை உடனே இங்கு வருவிக்குமாறும், பின் அனைவரும் சென்று சக்ரவர்த்தியைப் பழுவேட்டரையரின் பிடிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கூறினார். 

வந்தியத்தேவனை குந்தவையிடம் அனுப்பியிருப்பதாக ஆதித்த கரிகாலன் கூற, மிலாடுடையார் குந்தவையின் மீதான நம்பிக்கை தனக்குப் பெரிதாக உள்ளதாகவும், அவளைப் போன்ற அறிவுடையவர்கள் இதுவரை சோழர் குலத்தில் பிறந்ததில்லை எனவும், முதன்மந்திரியான அநிருத்தர் கூட குந்தவையின் கருத்தைப் பெரிதும் மதிப்பவர் எனவும் பெருமையாகக் கூறினார். அப்பொழுது பார்த்திபேந்திரன், ‘வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்கு முன் நந்தினியைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது?’ என்று கூற, ஆதித்த கரிகாலன் உறுத்து பார்த்திபேந்திரனைச் சுட்டு விடுவது போலப் பார்க்கவும், பார்த்திபேந்திரன் நடுங்கி விட்டான். 

மிலாடுடையார் பார்த்திபேந்திரனை மறுநாளே  இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனை அழைத்து வரக் கிளம்புமாறு கூறினார். பார்த்திபேந்திரன் அலைக்கழிப்புடன் நின்றிருக்கும் ஆதித்த கரிகாலனை நெருங்கினான். என்னவென்று கேட்க, ஆதித்த கரிகாலன் நெடிய பெருமூச்சை விட்டு நீங்காத வேதனையில் துடிப்பதை எவ்வாறு சொல்ல முடியும் என்று வருந்தியபடி இருக்க, அனைவரும்  அரண்மனைக்குத் திரும்பினர். பார்த்திபேந்திரன் எப்படியும் இதைக் கேட்டறிவது என்று உறுதி பூண்டான். 

அரண்மனை திரும்பியதும் அரவான் கதை கேட்க பெரியவர் கிளம்பியவுடன், பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனை அணுகினான். ஆதித்த கரிகாலன், மனம் நிலையற்று தவிப்புற்றிருந்தான். பார்த்திபேந்திரன் போரைப் பற்றிப் பேச்செடுக்கையில் ஆதித்த கரிகாலன் வேதனையுடன் போரையும் தன் சாதனைகளையும் வெறுத்து விரக்தியுடன் பேச, வேதனைகளைச் சொல்லுமாறு பார்த்திபேந்திரன் வற்புறுத்தினான். பெருமூச்செறிந்த ஆதித்த கரிகாலன், தூரத்தே வெறித்துப் பார்த்தபடி, ‘என் மனதைத் திறந்தால் இருப்பது என் தாயும் தந்தையும் அல்ல; குடும்பத்தினர் அல்ல; இந்த தேசம் அல்ல. அங்கு இருப்பது பழுவூர் இளையராணி நந்தினி மட்டும்தான்’ என்று கூற, பார்த்திபேந்திரன் திடுக்கிட்டான். தங்களுக்கு அவளை எப்படித் தெரியும் என்று கேட்க, ஆதித்த கரிகாலன் நந்தினியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

‘நந்தினியை என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிறு பெண்ணாக சந்தித்தேன்.  நானும் என் தம்பி, தங்கையும் விளையாடி முடித்துவிட்டு என் பாட்டி செம்பியன்மாதேவியைச் சந்தித்தபொழுது, அங்கு உதவி கேட்டு வந்தவர்களுடன் நின்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள் என்னைக் கவர்ந்து கொண்டாள். அவளை எங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளச் சொல்லி என் பாட்டி சொல்ல, குந்தவைக்கு அவளை ஏனோ பிடிக்காமல் போயிற்று. அழகின் மீதான பொறாமையில் சொல்கிறாள் என எண்ணி, அவளைச் சீண்டுவதற்காகவே நான் நந்தினியுடன் தொடர்ந்து பழகி குந்தவையுடன் சண்டை போட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிய நாட்டு யுத்தத்துக்குப் படையெடுத்துச் சென்ற என் தந்தைக்கு உதவியாக நானும் சென்றுவிட்டேன். அந்த யுத்தத்தில் தோற்று வீரபாண்டியன் எங்கோ மறைந்துகொள்ள, இலங்கைக்கும் நம் படைகள் செல்ல, நாங்கள் அதற்கெல்லாம் உதவி செய்துவிட்டுத் திரும்ப இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  

நான் திரும்பி வருகையில் குந்தவையும் நந்தினியும் வெகு அழகாகப் பரிமளித்ததுடன் தோழிகளாகவும் ஆகியிருந்தனர். எனக்கு நந்தினியுடன் பேசுவதானால் அத்தனை இன்பமாய் இருந்தது. ஆனால், என் பாட்டி செம்பியன் மாதேவிக்கோ குந்தவைக்கோ நான் அவளுடன் பேசுவது பிடிக்கவில்லை. பாட்டி என்னைக் கூப்பிட்டு, “அவள் சாதாரண அர்ச்சகருடைய பெண். அவளுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகக்கூடாது” என்று கூறினாலும் நான் கேட்பதாயில்லை. திடீரென ஒருநாள், அவளை அவளுடைய உறவினர்களுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால் நான், என் கோபத்தைக் குந்தவையிடம் காட்டிக் கொண்டிருந்தேன். பிறகு, இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காக சோழப் படைகளுடன் நான் தொண்டை நாட்டுக்கு வந்தபோதுதான் நீயும் நானும் நண்பர்களானோம். 

இலங்கையில்  நமது படை முறியடிக்கப்பட்டு கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்துவிட்டார் என்ற பின்னடைவு நமக்கு ஏற்பட்டதும் ஒளிந்திருந்த வீரபாண்டியன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து மதுரையைக் கைப்பற்றினான். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்தும்கூட, அவர் மதுரைக்குப் படையெடுக்கச் சித்தமானார். அவரைத் தடுத்து, மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையைக் கொண்டுவராமல் சோழ நாட்டுக்குத் திரும்பமாட்டேன் என சூளுரைத்துவிட்டு நாம் சென்றோம். 

வரிசையாய் வெற்றிகளைக் குவித்து, தப்பியோடிய வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு சென்றோம். அப்போது வைகை நதியின் நடுவில் ஒரு சோலையில், ஆண்டாளை ஒத்த தோற்றத்தில் நந்தினியைக் கண்டேன். அவள் கண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாகக் கூறி, தன் தாய் தந்தை மற்றும் தமயனுடன் வசிப்பதாகவும் தமயன் காசிக்குப் போயிருப்பதாகவும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டாள். அவளின் மீதான மோகம் கொழுந்துவிட்டு எரிந்தபோதும், வந்த காரியம் முடியட்டும் என்று பொறுமை காத்து , அவள் இருந்த பக்கம் படைகள் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். வீரபாண்டியனுடைய தலையுடன் தந்தையிடம் சென்று, அந்த வெற்றிக்குப் பரிசாக நந்தினியை மணக்கக் கேட்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன். 

ஆனால், தப்பி ஓடிய வீரபாண்டியன் அவள் வீட்டிலேயே கட்டிலில் படுத்திருந்ததையும் இவள் அவனுக்குப் பணிவிடை செய்ததையும் கண்டவுடன் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. நந்தினி என் காலில் விழுந்து, “நீங்கள் என்மீது ஒருகாலத்தில் கொண்டிருந்த அன்பின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். அவரை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றாள்.  “பாண்டியனுக்கும் உனக்கும் என்ன உறவு?” என்று அவளிடம் கேட்டேன். நந்தினி, “அவர் எனது காதலர். என் தெய்வம். என்னை மணம் புரிந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று சொல்லவும், என் கோபம் கட்டுக்கடங்காமல் சென்று அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரே வீச்சில் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினேன்.  உலகத்தின் மொத்த வெறுப்பு, குரோதம் எல்லாவற்றையும் அடக்கிய பார்வையில் நந்தினி என்னைப் பார்த்தாள். அச்சமயத்தில் நீங்களெல்லாம் வந்துவிடவும் குடிலில் இருக்கும் பெண்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என உத்தரவு இட்டுவிட்டு பாசறைக்குத் திரும்பிய என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என்றும் என் பிரியத்துக்குரிய நந்தினி வேறொரு ஆடவனின் உயிருக்காய் மன்றாடினாள் என்பதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

மறுபடி அவளைத் தேடிக்கொண்டு சென்றபோது அவளின் பெற்றோர் என நான் பழையாறையில் முதன்முதல் கண்டவர்கள் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தனர். விசாரித்தபொழுது நந்தினியைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் மூத்த மகளின் வீட்டுக்குப் போயிருந்ததும் திரும்பி வரும்பொழுது ஒரு பெண்ணின் கை, காலைக் கட்டிச் சிதையில் போட சிலபேர் முயன்றதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அவளைக் காணவில்லை என்றும் அழுதனர். நான், அந்தச் சிதையில் எரிந்த பெண் நந்தினியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து வருந்தி எரிச்சலடைந்து திரும்பிவிட்டேன். 

பின்னர் நாம் பழுவேட்டரையரின் திருமணம் பற்றி அறிந்துகொண்டு ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்னை அழைத்து இளவரசப் பட்டாபிஷேகம், மேலும் பரகேசரி என்னும் பட்டம் அளித்து இனி சோழராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுவதும் உனக்கே என என் தந்தை ஆசிர்வதித்து, அதற்குப் பாட்டியும் பெரியோர்களும் ஆசி கூறும் வைபவம் நடைபெற்றது. அந்த மணிமகுடத்துடன் அன்னை, பாட்டி என அனைத்து மாதரசிகளிடமும் ஆசி பெற அந்தப்புரத்துக்குத் தந்தை என்னை  அழைத்து சென்றார். அங்கே நடுநாயகமாக நந்தினி நின்றாள். ராணிக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முன்னைக் காட்டிலும் அழகாக, சர்வாலங்கார ரூபிணியாக நின்ற அவளைக் கண்டதும் அவளை மீண்டும் பட்டமகிஷியாக அடையப் போகிறேனா என்றெல்லாம் ஒரு கணம் என் மனம் மனக்கோட்டை கட்டியது. 

ஆனால், அப்பொழுது என் தந்தை ‘ஆ’ வெனக் கூச்சலிட்டபடி மூர்ச்சையடைந்து விட்டார். அவரைத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர் நந்தினியைப் பார்த்துதான் மூர்ச்சை அடைந்திருப்பாரோ என்ற ஐயம் எனக்கிருந்தது. நான் குந்தவையைத் தனியே அழைத்து நந்தினியைப் பற்றிக் கேட்க, “இப்போது நந்தினிதான் பழுவூர் இளைய ராணி. பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு வந்திருக்கிறாள்” என அவள் கூறினாள். அதைக் கேட்டபோது நான் அடைந்த வலியைப் போல் இதுவரை எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை. அன்று மயங்கிய என் தந்தையும் இன்றுவரை பூரண குணம் அடையவேயில்லை. 

நந்தினி ஒருநாள் என்னை அவள் அரண்மனைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்ப, நான் அங்கு சென்று அவளை லதா மண்டபத்தில் சந்தித்தேன். அவளைக் காணும்போதெல்லாம் சக்தி வாய்ந்த நீரோட்டங்களில் அகப்பட்டு சுக்கலாகிப் போகும் கப்பலைப் போல நான் ஆகிவிட்டிருந்தேன். அவள் சாதாரணமாகப் பேசத் தொடங்க, நானோ, அவள் என் அன்பை நிராகரித்தது வீரபாண்டியனைக் காதலித்தது, கிழவர் பழுவேட்டரையரை மணந்தது என அனைத்தையும் சொல்லி அவளைக் குற்றம் சாட்டினேன். அவளோ என் காதலைக் கொன்றதுமில்லாமல், என் காதலனையும் கொன்றீர்கள். என்னையும் கொன்றுவிடுங்கள் என்று கூறி இடுப்பில் இருக்கும் சிறு கத்தியை நீட்டினாள். துடித்துப் போய், இப்போது கூட ஒன்றுமில்லை. என்னுடன் வந்துவிடு தூர தேசம் சென்று வாழ்வோம் என அழைத்தேன். 

நந்தினியோ, இழிவாக பயமேற்படுத்தும் வண்ணம் சிரித்து, அங்கு சென்று வாழைத்தோட்டம் போட்டா வாழ்க்கை நடத்த முடியும் என இகழ்ந்தாள். பழூவூர் இளையராணியாக ஆகிவிட்டதனால் இப்படிப் பேசுகிறாயா எனக் கேட்க, ‘இதெல்லாம் திருப்தியில்லை; சோழநாட்டின் சக்ரவர்த்தினியாகவே விருப்பம். அதற்கு எண்ணமிருந்தால் வாருங்கள்’ என சீறினாள். நான் அவளை ஏதேதோ நிந்தித்துவிட்டு அன்று கிளம்பியவன் மறுபடி அவளைச் சந்திக்கவேயில்லை. ஆனால் அவள் என்னை விடுவதாயில்லை. கனவிலும் கற்பனையிலும் மோகனப் புன்னகையுடன் என்னை இம்சிக்கிறாள். பைத்தியம் போலவும், பழிவாங்குபவள் போலவும், அமைதியான முகத்துடனும் என்னை அனுதினமும் வாட்டுகிறாள். நான் தஞ்சை போகாமலிருப்பதற்கும் தந்தையை இங்கு வரவழைக்க நினைப்பதற்கும் இதுவே காரணம்” எனக் கூறி வருந்திய ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தேற்றினான்.

உத்தரவு கொடுத்தால் பெண்ணைக் கொன்ற பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று நந்தினியைக் கொன்று விடுகிறேன் என அவன் சொல்லவும், ஆதித்த கரிகாலன் நந்தினியின் சுண்டு விரலுக்கு யாரேனும் தீங்கு இழைத்தாலும் அவர்களை நான் எதிரியெனவே கருதுவேன் என்று மறுமொழி கூறினான். இதை இத்துடன் மறந்துவிட வேண்டுமெனவும் இலங்கைக்குச் சென்று அருள்மொழியை அழைத்து வந்தபின் தாத்தாவையும் பேரனையும் விட்டுவிட்டு நாம் படையெடுத்து தூரதேசங்கள் செல்வோமெனவும் கூறி ஆதித்த கரிகாலன் பார்த்திபேந்திரனைச் சமாதானப் படுத்தினான்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் முற்றிற்று.

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *