நான்காம் பாகம் தொடர்ச்சி..

நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.

தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை.

அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்று ஊமைராணிக்கு உணவெடுத்துக் கொண்டு வரலாம் என்று கிளம்பினாள்.

வழி நடுவில் அண்ணி ராக்கம்மாளும் இன்னொரு ஆணும் புதர் மறைவில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். பூங்குழலியைப் பார்த்ததும் ராக்கம்மாள் மட்டும் வெளிப்பட்டு ஊமை ராணி பற்றி அறிந்து கொள்ள கேள்விகளால் துளைத்ததற்குச் சமாளித்துப் பூங்குழலி பதில் கூறினாள்.

பிறகு சேந்தன் அமுதனைத் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள். உணவெடுத்துக் கொண்டு கிளம்புகையில், அவள் தந்தை தியாகவிடங்கர், தன்னை அரசாங்க காரியங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.

ஊமை ராணி மந்தாகினியுடன் படகில் செல்லும்போது திடீரென சிலர் வந்து பூங்குழலியை கட்டிப் போட்டுவிட்டு ஊமைராணியை பலவந்தமாகக் கூட்டிச் சென்றனர். கடத்தியவர்களில் தலைவனாக இருந்தவன் முன்பு வந்தியத் தேவனுடன் வந்திருந்த பழையாறை வைத்தியர் மகனாகிய பினாகபாணி.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சேந்தன் அமுதன் பூங்குழலியை அவிழ்த்து விட்டுவிட்டு தான் அங்கு திரும்பி வந்த கதையைக் கூறினான்.

அவளின் அண்ணியை கட்டிப் போட்டு இருந்ததைப் தஞ்சை செல்லும் வழியில் பார்த்ததாகக் கூறி, சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து வந்ததாகவும், ஊமைராணியைத் தஞ்சை செல்லும் வழியில் காவலர்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினான்.

இருவரும் தஞ்சை போகும் சாலையில் ஊமைராணியைத் தேடிச் சென்றனர்.
மன்னரின் முன்னிலையில் தன் அத்தைக்கு நியாயம் கேட்கப் போவதாக பூங்குழலி புலம்பிக் கொண்டே வந்தாள். இருட்டும் நேரத்தில் தஞ்சைக்கு அருகே மழைவரத் தொடங்கியதும் இருவரும் ஒரு மண்டபத்தில் ஒதுங்கினர். அருகே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. பல்லக்கு ஒன்று மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப் பட்டிருந்ததையும். அந்தப் பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் மேல்தான் மரம் விழுந்திருக்கிறது என்றும் அதனால் பல்லக்கு தூக்கி வந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் நிலவியதையும் தூர இருந்தே மின்னல் வெளிச்சத்தில் பார்த்தனர்.

அங்கிருந்து பல்லக்கை இவர்கள் இருந்த இட த்திற்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பல்லக்கிலிருந்து ஊமைராணி இறங்கி பூங்குழலியை தனியாக அழைத்து ஏதோ ஊமைபாஷையில் பேசினாள்.

அந்த இருட்டிலும் அதைப் புரிந்து கொண்ட பூங்குழலி சேந்தன் அமுதனை அழைத்து ஊமைராணி அவளுக்கு பதிலாக பல்லக்கில் தன்னைப் போகச் சொன்னதாகவும், சேந்தன் அமுதன் வீட்டுக்கு ஊமைராணியைக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டதாகவும் சமிக்ஞையில் சொன்னதாகக் கூறினாள்.

பயந்து போன சேந்தன் அமுதனை, ஊமைராணியின் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும் என்றும் சமாதானப் படுத்திவிட்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். இந்த நாடகத்தை எல்லாம் இன்னொரு நபரும் மண்டபத்து இருள் மூலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது இவர்களுக்கு தெரியாது.

ஆழ்வார்க்கடியான் முதன்மந்திரியை மறுநாள் காலையில் சந்தித்து அவரின் கட்டளைப்படி ஆதித்த கரிகாலனை சந்தித்தும் அவனது கடம்பூர் பயணத்தை தடுக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தான்.

அப்போது முதன் மந்திரி, திருமலையால் முடியாது என்று கைவிட்ட காரியமான ஊமைராணியை வைத்தியர் மகன் மூலம் தான் கொண்டு வந்து அந்தப்புரத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறி தன்னுடன் வந்து அவருடன் பேச உதவுமாறு ஆழ்வார்க்கடியானைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்தப்புரத்தில் ஊமைராணிக்கு பதிலாக பூங்குழலியைக் கண்டு அதிர்ந்தவர், பூங்குழலியின் துடுக்குப் பேச்சால் கோபமுற்றார். ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனுடன் ஊமைராணி சென்றதை மண்டபத்தில் தான் மறைந்திருந்து பார்த்ததாகவும், பழுவூர் ஆட்களின் பல்லக்கு என்பதால் தான் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினான். சேந்தன் அமுதன் குடிசையில்தான் மந்தாகினி இருப்பார் என்றும் திருமலை கூறினான். அப்போது குந்தவையும், வானதியும் வந்தனர்.

பூங்குழலியைக் கண்டு குந்தவை வெகுவாக ஆச்சரியப்பட்டாள். அநிருத்தர் நடந்ததைக் கூற, ஊமைராணி தஞ்சைக்கு வந்துவிட்டதை அறிந்த குந்தவை உடனே இங்கு அவளைக் கூட்டி வருமாறு பரபரப்புற்றாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பூங்குழலியால் மட்டுமே அது இயலும் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் மந்தாகினியை கூட்டிவர அனுப்பினார் அநிருத்தர்.

வானதியை தனியே அனுப்பிவிட்டு குந்தவை முதன்மந்திரியிடம் தன் தகப்பனாரைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். தன் பெரியன்னையைப் பற்றிய உண்மையை தன்னிடம் சொல்லிவிட்டு, அவள் இறந்து விட்டதாக எண்ணி அவர் துயருறுவதைக் கூறி குந்தவை அழுதாள்.

இதைக் கேட்டு வேதனையுற்ற அநிருத்தர், தன் மீதே குற்றமென்றும், தாம்தான் ஊமைராணியாகிய மந்தாகினி தேவி இறந்து போனார் என்று அரசரிடம் பொய் சொன்னேன் என்றும் கூறி வருந்தினார். மேலும், செம்பியன் மாதேவியின் பாதுகாப்பில், மந்தாகினி சிலநாட்கள் இருந்தபோது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் கூறினார்.

பேச்சுவாக்கில் அருள்மொழி உயிரோடு இருக்கும் விஷயத்தை குந்தவை சொல்லிவிட அது அனைவருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் அநிருத்தர் கூறினார்.
குந்தவை மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட தந்தை விரும்புகிறார் என்பதையும், தனக்கும் அதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் கூற,செம்பியன் மாதேவி அதற்கு பெரும் தடையாக இருப்பார் என முதன் மந்திரி கூறினார்.

ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் ஊமைராணியை கூட்டிக்கொண்டு வரும் வழியில் கோட்டைக்குள் நுழைந்த போது மந்தாகினியை கூட்டத்தில் தவற விட்டு விட்டோம் என்ற செய்தியோடு திரும்பி வந்தனர்.

பதைபதைத்த குந்தவையிடம், கோட்டைக்குள் வந்த பிறகே காணாமல் போயிருக்கிறார் என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு முதன்மந்திரி கிளம்பினார்.

மந்தாகினி தேவி பூங்குழலியுடன் வந்து கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.. ரவிதாஸனுடன் சோமன்சாம்பவனும் இணைந்து பழுவூர் அரண்மனையை அடைந்தனர். அங்கிருந்த பணிப்பெண்ணிடம் ஆந்தைக் குரல் கொடுத்து வரவழைத்து இளையராணியின் உத்தரவைச் சொல்லி பொக்கிஷ நிலவறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு உள்நுழைந்தனர்.

அவர்களுக்குத் தெரியாமலேயே மந்தாகினி தேவியும் உள்ளே நுழைந்து மறைந்து நின்று கொண்டார்.

பணிப்பெண் கொடுத்த சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு எடுத்த காரியம் நிறைவேற மூன்று நாட்கள் ஆகுமென்பதால் இங்கேயே மறைந்திருக்க வேண்டும் என பேசிக்கொண்டார்கள்.

தீவர்த்தி கொண்டு வந்து கொடுத்த தாதியை ஒரு நாழிகை கழித்து வந்து கதவு திறக்குமாறு ரவிதாஸன் சொல்லிவிட்டு சோமன் சாம்பவனை அழைத்துக் கொண்டு படிகள் வழியாக கீழிறங்கி நிலவறைக்கு கூட்டிச் சென்றான். போகும் வழியில் ஒரு சுவரின் மீது ஏறினால் அங்கிருந்து அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என சோமன் சாம்பவனிடம் விவரித்தான்.

ரவிதாஸன் சோமன் சாம்பவனிடம் இன்று செவ்வாய். இன்னும் இரு நாட்கள்
மறைந்து இருந்துவிட்டு, வெள்ளியன்றுதான், சுந்தரசோழரின் பட்டமகிஷி கோயிலுக்கு செல்லும்போது உன் காரியத்தை முடிக்க வேண்டும். சோழன் குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமைதான்.அதுவரை கவனமாக இரு’ என எச்சரித்து விட்டு ஒரு பாதாள அறையை திறந்து அதனுள் கூட்டிப் போனான்.

நடுவில் ஒரு இடத்தில் ரவிதாஸன் ஏறிப்பார்த்த இடத்தில் ஊமைராணி ஏறிப்பார்த்தார்.
அப்போது பாதாளத் துளையில் இறங்கிய ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் எதிர்பக்கத்தில் ஒரு மூலையில் வந்து நின்றிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்த போது மறைந்து கொண்டார்.

ரவிதாஸன் அங்கிருந்து சென்றதும் சோமன் சாம்பவன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். இருட்டும்போது தனியே இருப்பதால் லேசாய் பயந்திருந்தவன் மந்தாகினி ஓ’ வென எழுப்பிய ஓலத்தைக் கண்டு மேலும் பயந்து எதிர்திசையில் ஓடினான்.

அந்தத் தருணத்தில் அந்த பாதாள திறப்பில் இறங்கிய மந்தாகினி ஒரு சிற்பக் கூடத்தை அடைந்தார். அங்கே பகீரதன் சிலை, பத்துத்தலை ராவணன்சிலை போன்ற சிலைகளெல்லாம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டிருந்தது.

ராவணன் கைகளுக்கு இடையே இருந்த வழியின் வழியாகத் தான் வந்திருப்பது விலாசமான தோட்டம் என்று அறிந்து கொண்டாள்.

தோட்டத்தை ஒட்டி தாழவாரங்கள் தெரிந்தன. தாழ்வாரங்களைக் கடந்து செல்கையில் தீப ஒளி ஓரிடத்தில் தெரிய அங்கிருந்து பார்க்கையில் சுந்தரசோழரின் படுக்கையறை தெரிந்தது. எத்தனையோ காலங்களுக்கு பிறகு அவரைக் கண்டதும் மந்தாகினியின் உள்ளம் விம்மியது. முன்பு ரவிதாஸன் இங்கு நின்றுதான் சோமன் சாம்பவனிடம் திட்டத்தை விளக்கியதை நினைத்து ஒரு நிமிடம் மருண்டார்.

சின்னப் பழுவேட்டரையர் சற்றுமுன் முதன் மந்திரியைப் பற்றி சொல்லிப் போயிருந்த குற்றச்சாட்டுகளை சிந்தித்தவாறு படுத்திருந்தார் சுந்தர சோழர்.

கூடவே, வேளக்காரப் படையினருக்கும், பழுவூர் படையினருக்கும் ஏற்படும் சச்சரவுகளைப் பற்றியும் யோசித்து குழப்பமான மனநிலையிலிருந்தார்.
அநிருத்தர் கோடியக்கரையிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்ததாகவும் அதற்கு பழுவூர் அரண்மனைப் பல்லக்கை கேட்டதாகவும், குற்றங்களை அடுக்கியிருந்தார் சின்னப் பழுவேட்டரையர். தான் விசாரிப்பதாகக் கூறவும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அநிருத்தர் ஆழ்வார்க்கடியானுடனும் பூங்குழலியுடனும் சக்ரவர்த்தியை சந்திக்க வந்திருந்தார்.. மந்தாகினி தேவியை நழுவ விட்டது பற்றி அநிருத்தர் பெரிதும் கலக்கமுற்றிருந்தார்.

அநிருத்தரைக் கண்டவுடன் சக்ரவர்த்தியின் கோபமும் குமுறலாய் வெடித்தது. அனைவரும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைப்பதாக மருகினார். அனைவரையும் சந்தேகப்பட்டார்.

அநிருத்தர் தடுத்து அத்தனை உண்மைகளையும் கூறுவதாகக் கூறினார். முதலில், அருள்மொழியைக் காப்பாற்றிய பூங்குழலியை அழைத்து உண்மையைச் சொல்லும்படி கூறினார்.

பூங்குழலி தியாகவிடங்கரின் மகள் என்று தெரிந்துகொண்டு அவள் பயபக்தியுடன் அருள்மொழி வர்மர் பத்திரமாக இருக்கும்செந்தியைக் கூற சந்தரச் சோழர் சிறிது அமைதியுற்றார்.

ஆனால் தஞ்சையில் வீசிய காற்றும் மழையும் நாகப்பட்டினத்திலும் புயலாக வீசியதாய் கேள்விப்பட்டதில் இளவரசரின் நிலை குறித்து சுந்தரச் சோழர் அச்சமும் வருத்தமும் தெரிவித்தார்.

அநிருத்தர் ஆழ்வார்க்கடியானையும், பூங்குழலியையும் அனுப்பி இளவரசரை வரவழைக்க அனுமதி வழங்குமாறு வேண்டினார். பிறகு ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் பாசுரங்களையும், தேவாரத்தையும் பாட சுந்தரசோழர் ஒருவாறு அமைதியுற்றார். அவரை உறங்க வைத்துவிட்டு அனைவரும் அகன்றனர்.

சுந்தரசோழருக்கு பூங்குழலியின் முகச் சாயல் எதைஎதையோ நினைவுபடுத்த அவருக்கு பழைய நினைவுகள் உறக்கத்தில் கனவுகளாய் வரத் தொடங்கின.

உறக்கமும் விழிப்புமான நிலையில் நிஜமாகவே தன் முன் யாரோ நிற்பதாக உணர்ந்தார். கூர்ந்து பார்க்கையில் அது மந்தாகினி தேவியின் ஆவிதான், வழக்கம் போல வந்து விட்டாள் என்றெண்ணி அலறிக் கொண்டே, பக்கத்திலிருந்த விளக்கை அவர் மேல் எறிந்தார்.

நிஜத்தில் அங்கே நின்றிருந்த மந்தாகினி மேல் அது படவில்லையாயினும் அவள் முகத்தில் படர்ந்த வேதனை சக்கரவர்த்தியை வியக்க வைத்தது.

யார் நீ’ என்று கேட்க, சத்தம் கேட்டு அனைவரும் உள்ளே வர, மந்தாகினியைப் பிடிக்குமாறு அவர்களிடம் சத்தம் போட்டார் சுந்தரச் சோழர். அவர் ஓட முயல, ஆழ்வார்க்கடியான் பாய்ந்து அறைக் கதவைத் தாளிட்டான்.

ஊமைராணி வந்த வழியே போக முயற்சிக்க, பூங்குழலி பாய்ந்து அவரிடம் போகவிடாமல் நிலைமையை விளக்கினாள். அவர் நெற்றியிலிருந்து ரத்தம் வடிந்ததைப் பார்த்த குந்தவை சுந்தர சோழரிடம் கேட்க, தான் விளக்கை தூக்கியெறிந்ததாகவும், ஆனல் அவர் மேல் அது படவில்லையென கூறினார்.

பூங்குழலி விசாரித்ததில் மலைமேல் முட்டிக் கொண்டதாகக் கூற, தஞ்சையில் மலை ஏது என அனைவரும் புரியாமல் பார்க்க, வானதி சிற்பக் கூடத்தில் இருக்கும் இராவணன் சிலையின் மேலிருக்கும் மலைச் சிற்பமாக இருக்கலாமெனச் சொல்ல, மந்தாகினி ஆமோதித்தாள்.

சுந்தரசோழரின் மனைவியும் மலையமான் மகளுமான வானமாதேவி அவளை பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு சுந்தரசோழர் வியப்புடன் வினவ, தனக்கு எல்லாம் தெரியுமெனவும், முதன் மந்திரியிடம் இவரை பார்த்தால் அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததையும் கூறினார்.

அநிருத்தர் அப்போது மந்தாகினி தேவி இறந்ததாக பொய் கூறியதற்காக மன்னிக்குமாறு வேண்டினார். கோடியக்கரையிலிருந்து அழைத்து வரச் செய்த பெண்ணும் இவர்தான் என உண்மையை ஒப்புக் கொண்டார்.

வானமாதேவி குந்தவையை அழைத்து மந்தாகினிக்கு நல்ல உடை அணிவித்து அலங்காரங்கள் செய்து கூட்டி வருமாறு பணித்தார். சக்ரவர்த்தியிடம் ஊமைராணி இங்கிருக்க வேண்டுமென வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

பலவாறு மன உளைச்சலில் இருந்த சக்கரவர்த்திக்கு மந்தாகினியின் வரவு பிடிக்கவில்லை என்றாலும் மந்தாகினியின் வரவால் மகிழ்ந்திருக்கும் அரண்மனைப் பெண்களுக்காக இணங்கினார்.

ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வராமல் இருப்பது குறித்தும், அருள்மொழிவர்மன் இன்னும் ஊர் திரும்பாதது குறித்தும் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டார்.
அநிருத்தர் பழுவேட்டரையர்களும், சம்புவரையர் முதலான சிற்றரசர்களும் அரசுரிமைச் சதிகளில் ஈடுபடுவதாகச் சொல்லத் தொடங்க, சக்ரவர்த்தி அதை ஒருபோதும் தான் அதை நம்ப மாட்டேன் என உறுதியாகச் சொன்னார்.

குந்தவையை அனுப்பி செம்பியன் மாதேவியை வரச்சொல்லி மதுராந்தகனுக்கு பட்டம் அளிக்க அவரது சம்மதத்தைப் பெறப்போவதாகவும், அதற்கு யாரும் தடையாக நிற்க முடியாது எனவும் கூறினார்.

திருப்புறம்பியம் காட்டில் ஐந்து வயது பிள்ளைக்கு பட்டம் சூட்டியது, பொக்கிஷ நிலவறையில் உள்ள பொற்காசுகள் ஆபத்துதவிகளின் கரங்களில் இருப்பது இவை அனைத்தும் பழுவூர் இளைய ராணியினால் தான் என அநிருத்தர் கூறக் கூற சக்ரவர்த்தி மறுத்துக் கொண்டே வந்தார்.

பின் இரவு நேரங்களில் அவரை மந்தாகினி தேவி போல அவர் முன்நின்று இம்சித்து வந்ததும் நந்தினிதான் என்று சொன்னதும் முதலில் திகைத்தார்.

இருவருடைய உருவ ஒற்றுமையும் ஒன்றுதான் எனவும் அதை உணர்ந்து கொள்ள, நந்தினி கடம்பூரிலிருந்து திரும்பி வரும் வரையில் ஊமைராணி அரண்மனையிலேயே தங்கியிருக்க வேண்டுமெனவும் அநிருத்தர் கேட்டுக் கொண்டார்.
மேலும் நந்தினி சக்ரவர்த்தியின் புதல்வியாக இருக்கலாமெனக் கூற சுந்தரசோழர் கலீரென சிரித்தார்.

அப்போது, மந்தாகினியை அலங்காரம் செய்து வானவன் மாதேவி, குந்தவை, பூங்குழலி ஆகியோர் கூட்டிக் கொண்டு வந்தனர். அதைப் பார்த்த சுந்தர சோழருக்கு நந்தினியைப் பற்றி அநிருத்தர் சொன்னதும் பழைய நிகழ்வுகளும் யோசனையில் படர்ந்தது.

அநிருத்தரையே செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு ஆணையிட்டார். வெகுகாலத்திற்கு பின் அவருடைய மனம் நிறைவடைந்திருந்தது.

ஆழ்ந்த தூக்கத்தில் அனைவரும் இருக்க, மந்தாகினி தேவி நிலவறையில் ஒளிந்திருக்கும் ஆபத்தை நினைத்து கலங்கிக் கொண்டே இருந்தார். பூங்குழலியை எழுப்பி பின் தொடரச் செய்து அந்த சிற்பக் கூடத்துக்கு சென்று, இராவணன் கைகளின் இடையே இருந்த துவாரத்தின் வழி உள்புகுந்து கூட்டிச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது பூங்குழலியையும் மந்தாகினியையும் காணாமல் அனைவரும் கவலைப்பட்டனர்.

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *