பொன்னியின் செல்வன். 20

பொன்னியின் செல்வன். 20

நான்காம் பாகம் தொடர்ச்சி.. நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை. அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்று ஊமைராணிக்கு உணவெடுத்துக் கொண்டு வரலாம் என்று கிளம்பினாள். வழி நடுவில் அண்ணி ராக்கம்மாளும் இன்னொரு ஆணும் புதர் மறைவில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். பூங்குழலியைப் பார்த்ததும் ராக்கம்மாள் மட்டும் வெளிப்பட்டு ஊமை ராணி பற்றி அறிந்து கொள்ள கேள்விகளால் துளைத்ததற்குச் சமாளித்துப் பூங்குழலி பதில் கூறினாள். பிறகு சேந்தன் அமுதனைத் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள். உணவெடுத்துக் கொண்டு கிளம்புகையில், அவள் தந்தை தியாகவிடங்கர், தன்னை அரசாங்க காரியங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஊமை ராணி மந்தாகினியுடன் படகில் செல்லும்போது திடீரென சிலர் வந்து பூங்குழலியை கட்டிப் போட்டுவிட்டு ஊமைராணியை பலவந்தமாகக் கூட்டிச் சென்றனர். கடத்தியவர்களில் தலைவனாக இருந்தவன் முன்பு வந்தியத் தேவனுடன் வந்திருந்த பழையாறை வைத்தியர் மகனாகிய பினாகபாணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சேந்தன் அமுதன் பூங்குழலியை அவிழ்த்து விட்டுவிட்டு தான் அங்கு திரும்பி வந்த கதையைக் கூறினான். அவளின் அண்ணியை கட்டிப் போட்டு இருந்ததைப் தஞ்சை செல்லும் வழியில் பார்த்ததாகக் கூறி, சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து வந்ததாகவும், ஊமைராணியைத் தஞ்சை செல்லும் வழியில் காவலர்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினான். இருவரும் தஞ்சை போகும் சாலையில் ஊமைராணியைத் தேடிச் சென்றனர்.மன்னரின் முன்னிலையில் தன் அத்தைக்கு நியாயம் கேட்கப் போவதாக பூங்குழலி புலம்பிக் கொண்டே வந்தாள். இருட்டும் நேரத்தில் தஞ்சைக்கு அருகே மழைவரத் தொடங்கியதும் இருவரும் ஒரு மண்டபத்தில் ஒதுங்கினர். அருகே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. பல்லக்கு ஒன்று மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப் பட்டிருந்ததையும். அந்தப் பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் மேல்தான் மரம் விழுந்திருக்கிறது என்றும் அதனால் பல்லக்கு தூக்கி வந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் நிலவியதையும் தூர இருந்தே மின்னல் வெளிச்சத்தில் பார்த்தனர். அங்கிருந்து பல்லக்கை இவர்கள் இருந்த இட த்திற்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பல்லக்கிலிருந்து ஊமைராணி இறங்கி பூங்குழலியை தனியாக அழைத்து ஏதோ ஊமைபாஷையில் பேசினாள். அந்த இருட்டிலும் அதைப் புரிந்து கொண்ட பூங்குழலி சேந்தன் அமுதனை அழைத்து ஊமைராணி அவளுக்கு பதிலாக பல்லக்கில் தன்னைப் போகச் சொன்னதாகவும், சேந்தன் அமுதன் வீட்டுக்கு ஊமைராணியைக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டதாகவும் சமிக்ஞையில் சொன்னதாகக் கூறினாள். பயந்து போன சேந்தன் அமுதனை, ஊமைராணியின் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும் என்றும் சமாதானப் படுத்திவிட்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். இந்த நாடகத்தை எல்லாம் இன்னொரு நபரும் மண்டபத்து இருள் மூலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது இவர்களுக்கு தெரியாது. ஆழ்வார்க்கடியான் முதன்மந்திரியை மறுநாள் காலையில் சந்தித்து அவரின் கட்டளைப்படி ஆதித்த கரிகாலனை சந்தித்தும் அவனது கடம்பூர் பயணத்தை தடுக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தான். அப்போது முதன் மந்திரி, திருமலையால் முடியாது என்று கைவிட்ட காரியமான ஊமைராணியை வைத்தியர் மகன் மூலம் தான் கொண்டு வந்து அந்தப்புரத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறி தன்னுடன் வந்து அவருடன் பேச உதவுமாறு ஆழ்வார்க்கடியானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தப்புரத்தில் ஊமைராணிக்கு பதிலாக பூங்குழலியைக் கண்டு அதிர்ந்தவர், பூங்குழலியின் துடுக்குப் பேச்சால் கோபமுற்றார். ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனுடன் ஊமைராணி சென்றதை மண்டபத்தில் தான் மறைந்திருந்து பார்த்ததாகவும், பழுவூர் ஆட்களின் பல்லக்கு என்பதால் தான் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினான். சேந்தன் அமுதன் குடிசையில்தான் மந்தாகினி இருப்பார் என்றும் திருமலை கூறினான். அப்போது குந்தவையும், வானதியும் வந்தனர். பூங்குழலியைக் கண்டு குந்தவை வெகுவாக ஆச்சரியப்பட்டாள். அநிருத்தர் நடந்ததைக் கூற, ஊமைராணி தஞ்சைக்கு வந்துவிட்டதை அறிந்த குந்தவை உடனே இங்கு அவளைக் கூட்டி வருமாறு பரபரப்புற்றாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பூங்குழலியால் மட்டுமே அது இயலும் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் மந்தாகினியை கூட்டிவர அனுப்பினார் அநிருத்தர். வானதியை தனியே அனுப்பிவிட்டு குந்தவை முதன்மந்திரியிடம் தன் தகப்பனாரைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். தன் பெரியன்னையைப் பற்றிய உண்மையை தன்னிடம் சொல்லிவிட்டு, அவள் இறந்து விட்டதாக எண்ணி அவர் துயருறுவதைக் கூறி குந்தவை அழுதாள். இதைக் கேட்டு வேதனையுற்ற அநிருத்தர், தன் மீதே குற்றமென்றும், தாம்தான் ஊமைராணியாகிய மந்தாகினி தேவி இறந்து போனார் என்று அரசரிடம் பொய் சொன்னேன் என்றும் கூறி வருந்தினார். மேலும், செம்பியன் மாதேவியின் பாதுகாப்பில், மந்தாகினி சிலநாட்கள் இருந்தபோது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் கூறினார். பேச்சுவாக்கில் அருள்மொழி உயிரோடு இருக்கும் விஷயத்தை குந்தவை சொல்லிவிட அது அனைவருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் அநிருத்தர் கூறினார்.குந்தவை மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட தந்தை விரும்புகிறார் என்பதையும், தனக்கும் அதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் கூற,செம்பியன் மாதேவி அதற்கு பெரும் தடையாக இருப்பார் என முதன் மந்திரி கூறினார். ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் ஊமைராணியை கூட்டிக்கொண்டு வரும் வழியில் கோட்டைக்குள் நுழைந்த போது மந்தாகினியை கூட்டத்தில் தவற விட்டு விட்டோம் என்ற செய்தியோடு திரும்பி வந்தனர். பதைபதைத்த குந்தவையிடம், கோட்டைக்குள் வந்த பிறகே காணாமல் போயிருக்கிறார் என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு முதன்மந்திரி கிளம்பினார். மந்தாகினி தேவி பூங்குழலியுடன் வந்து கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.. ரவிதாஸனுடன் சோமன்சாம்பவனும் இணைந்து பழுவூர் அரண்மனையை அடைந்தனர். அங்கிருந்த பணிப்பெண்ணிடம் ஆந்தைக் குரல் கொடுத்து வரவழைத்து இளையராணியின் உத்தரவைச் சொல்லி பொக்கிஷ நிலவறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு உள்நுழைந்தனர். அவர்களுக்குத் தெரியாமலேயே மந்தாகினி தேவியும் உள்ளே நுழைந்து மறைந்து நின்று கொண்டார். பணிப்பெண் கொடுத்த சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு எடுத்த காரியம் நிறைவேற மூன்று நாட்கள் ஆகுமென்பதால் இங்கேயே மறைந்திருக்க வேண்டும் என பேசிக்கொண்டார்கள். தீவர்த்தி கொண்டு வந்து கொடுத்த தாதியை ஒரு நாழிகை கழித்து வந்து கதவு திறக்குமாறு ரவிதாஸன் சொல்லிவிட்டு சோமன் சாம்பவனை அழைத்துக் கொண்டு படிகள் வழியாக கீழிறங்கி நிலவறைக்கு கூட்டிச் சென்றான். போகும் வழியில் ஒரு சுவரின் மீது ஏறினால் அங்கிருந்து அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என சோமன் சாம்பவனிடம் விவரித்தான். ரவிதாஸன் சோமன் சாம்பவனிடம் இன்று செவ்வாய். இன்னும் இரு நாட்கள்மறைந்து இருந்துவிட்டு, வெள்ளியன்றுதான், சுந்தரசோழரின் பட்டமகிஷி கோயிலுக்கு செல்லும்போது உன் காரியத்தை முடிக்க வேண்டும். சோழன் குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமைதான்.அதுவரை கவனமாக இரு’ என எச்சரித்து விட்டு ஒரு பாதாள அறையை திறந்து அதனுள் கூட்டிப் போனான். நடுவில் ஒரு இடத்தில் ரவிதாஸன் ஏறிப்பார்த்த இடத்தில் ஊமைராணி ஏறிப்பார்த்தார்.அப்போது பாதாளத் துளையில் இறங்கிய ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் எதிர்பக்கத்தில் ஒரு மூலையில் வந்து நின்றிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்த போது மறைந்து கொண்டார். ரவிதாஸன் அங்கிருந்து சென்றதும் சோமன் சாம்பவன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். இருட்டும்போது தனியே இருப்பதால் லேசாய் பயந்திருந்தவன் மந்தாகினி ஓ’ வென எழுப்பிய ஓலத்தைக் கண்டு மேலும் பயந்து எதிர்திசையில் ஓடினான். அந்தத் தருணத்தில் அந்த பாதாள திறப்பில் இறங்கிய மந்தாகினி ஒரு சிற்பக் கூடத்தை அடைந்தார். அங்கே பகீரதன் சிலை, பத்துத்தலை ராவணன்சிலை போன்ற சிலைகளெல்லாம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டிருந்தது. ராவணன் கைகளுக்கு இடையே இருந்த வழியின் வழியாகத் தான் வந்திருப்பது விலாசமான தோட்டம் என்று அறிந்து கொண்டாள். தோட்டத்தை ஒட்டி தாழவாரங்கள் தெரிந்தன. தாழ்வாரங்களைக் கடந்து செல்கையில் தீப ஒளி ஓரிடத்தில் தெரிய அங்கிருந்து பார்க்கையில் சுந்தரசோழரின் படுக்கையறை தெரிந்தது. எத்தனையோ காலங்களுக்கு பிறகு அவரைக் கண்டதும் மந்தாகினியின் உள்ளம் விம்மியது. முன்பு ரவிதாஸன் இங்கு நின்றுதான் சோமன் சாம்பவனிடம் திட்டத்தை விளக்கியதை நினைத்து ஒரு நிமிடம் மருண்டார். சின்னப் பழுவேட்டரையர் சற்றுமுன் முதன் மந்திரியைப் பற்றி சொல்லிப் போயிருந்த குற்றச்சாட்டுகளை சிந்தித்தவாறு படுத்திருந்தார் சுந்தர சோழர். கூடவே, வேளக்காரப் படையினருக்கும், பழுவூர் படையினருக்கும் ஏற்படும் சச்சரவுகளைப் பற்றியும் யோசித்து குழப்பமான மனநிலையிலிருந்தார்.அநிருத்தர் கோடியக்கரையிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்ததாகவும் அதற்கு பழுவூர் அரண்மனைப் பல்லக்கை கேட்டதாகவும், குற்றங்களை அடுக்கியிருந்தார் சின்னப் பழுவேட்டரையர். தான் விசாரிப்பதாகக் கூறவும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானுடனும் பூங்குழலியுடனும் சக்ரவர்த்தியை சந்திக்க வந்திருந்தார்.. மந்தாகினி தேவியை நழுவ விட்டது பற்றி அநிருத்தர் பெரிதும் கலக்கமுற்றிருந்தார். அநிருத்தரைக் கண்டவுடன் சக்ரவர்த்தியின் கோபமும் குமுறலாய் வெடித்தது. அனைவரும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைப்பதாக மருகினார். அனைவரையும் சந்தேகப்பட்டார். அநிருத்தர் தடுத்து அத்தனை உண்மைகளையும் கூறுவதாகக் கூறினார். முதலில், அருள்மொழியைக் காப்பாற்றிய பூங்குழலியை அழைத்து உண்மையைச் சொல்லும்படி கூறினார். பூங்குழலி தியாகவிடங்கரின் மகள் என்று தெரிந்துகொண்டு அவள் பயபக்தியுடன் அருள்மொழி வர்மர் பத்திரமாக இருக்கும்செந்தியைக் கூற சந்தரச் சோழர் சிறிது அமைதியுற்றார். ஆனால் தஞ்சையில் வீசிய காற்றும் மழையும் நாகப்பட்டினத்திலும் புயலாக வீசியதாய் கேள்விப்பட்டதில் இளவரசரின் நிலை குறித்து சுந்தரச் சோழர் அச்சமும் வருத்தமும் தெரிவித்தார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானையும், பூங்குழலியையும் அனுப்பி இளவரசரை வரவழைக்க அனுமதி வழங்குமாறு வேண்டினார். பிறகு ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் பாசுரங்களையும், தேவாரத்தையும் பாட சுந்தரசோழர் ஒருவாறு அமைதியுற்றார். அவரை உறங்க வைத்துவிட்டு அனைவரும் அகன்றனர். சுந்தரசோழருக்கு பூங்குழலியின் முகச் சாயல் எதைஎதையோ நினைவுபடுத்த அவருக்கு பழைய நினைவுகள் உறக்கத்தில் கனவுகளாய் வரத் தொடங்கின. உறக்கமும் விழிப்புமான நிலையில் நிஜமாகவே தன் முன் யாரோ நிற்பதாக உணர்ந்தார். கூர்ந்து பார்க்கையில் அது மந்தாகினி தேவியின் ஆவிதான், வழக்கம் போல வந்து விட்டாள் என்றெண்ணி அலறிக் கொண்டே, பக்கத்திலிருந்த விளக்கை அவர் மேல் எறிந்தார். நிஜத்தில் அங்கே நின்றிருந்த மந்தாகினி மேல் அது

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.