பொன்னியின் செல்வன் – 15
மூன்றாம் பாகம் – கொலை வாள்
நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார்.
அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார்.
இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார்.
அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும், காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.
இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான்.
நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள்.
கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார்.
பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர்.
அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள். அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள்.
பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர்.
மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள்.
ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.
பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர்.
இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள்.
இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள்.
மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர்.
பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.
‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்.
- சவிதா

Comments (0)