பொன்னியின் செல்வன் – 11
முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.
மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.
அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள்.
பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு.
இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள்.
வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள்.
‘வாரிதியும் அடங்கி நிற்க
மாருதமும் தவழ்ந்து வர
காரிகையென் உள்ளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதேன்?
அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான்.
பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள்.
பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள்.
அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான்.
குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான்.
வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
தொடரும்.
- சவிதா

Comments (0)