பொன்னியின் செல்வன் – 14
மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர்.
போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான்.
திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார்.
சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர்.
யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார்.
விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன் சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார்.
இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும் ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக் காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார்.
அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.
வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான்.
மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர்.
நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது.
தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான். அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார்.
வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை.
கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள்.
இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தாள்.
‘இடி இடித்து எண்திசையும்
வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலை வல்லவர் போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்?’
ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார்.
இரண்டாம் பாகம் முற்றிற்று.
- சவிதா
-

Comments (0)