ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்த நிமிடம் முதல் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சம்புவரையரும், பழுவேட்டரையரும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தார்கள். அவனிடம் பேசுவதற்கே அவர்கள் பயந்து தயங்கியிருந்த பொழுதில்
ஆதித்த கரிகாலனே அவர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தான்.
மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சுந்தரசோழர் முடிவெடுத்திருப்பதாகவும், அதைப்பற்றிய சிற்றரசர்களின் அபிப்ராயம் என்னவென தெரிந்து கொண்டு, தான் முடிவெடுக்க இருப்பதாக நயந்து கூறினான்.

பழுவேட்டரையர் அதை நம்பி விட்டார்.
உடனே நந்தினியின் திட்டமான நாட்டை பிரித்து கொடுக்கும் யோசனையைக் கூற கரிகாலன் வெகுண்டான்.
‘கிழவர்களாகிய நீங்கள் வேண்டுமானால் பெண்களைப் பங்கு போட்டுக் கொள்வதைப்போல நாட்டை பிரிக்க எண்ணலாம். என்னால் முடியாது. அதனினும் மதுராந்தகனுக்கே எனது உரிமையை விட்டுத் தருகிறேன். பதிலாக வட திசை நோக்கி படை எடுத்துச் செல்ல சைன்யமும் அதற்குண்டான தளவாடங்களையும் அரசர் அனுமதியும் பெற்றுத் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’ எனக்
கேட்டான்.

பழுவேட்டரையர், ‘தஞ்சைக்கு சென்று சக்ரவர்த்தியுடன் பேசிக்கொண்டு’ , என்று சொல்லத் தொடங்கும்போதே நடுவில் இடைமறித்து, தஞ்சையில் சக்ரவர்த்தியை சிறைவைத்திருப்பதாகவும், பழுவேட்டரையர்களின் கைகளில்தான் ஆட்சிப்பொறுப்பும், நிதிமூலங்களும் இருக்கிறது என்பது தனக்குத் தெரியும் என்றும் வேண்டுமானால், இளையராணியிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறுங்கள்’ என எள்ளினான்..
பழுவேட்டரையருக்கு கோபம் மிகுந்தும் அடக்கிக் கொண்டு வாளாவிருந்தார்.

கரிகாலன் தான் இங்கேயே தங்கியிருப்பதாகவும். பழுவேட்டரையர் தஞ்சைக்கு சென்று மதுராந்தகனை அழைத்து வந்து ஆயத்தங்கள் செய்து முடித்தவுடன். தான் தஞ்சைக்கு சென்று பெற்றோரிடம் விடைபெற்று படைகளை அழைத்து செல்வதாகவும் முடிவாகக்
கூறினான். அதுவரை வேட்டையாடி பொழுதைக் கழிக்க விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு சம்புவரையரிடம் கேட்டுக்கொண்டு வந்தியத்தேவனை உடன் அழைத்தபடி அங்கிருந்து சென்றான். அனைவரும் திக்பிரமையடைந்திருந்தனர்.

ஒருவாறு மீண்ட பழுவேட்டரையருக்கு உடனடியாக அங்கிருந்து தஞ்சைக்கு நந்தினியை அழைத்துச் சென்றுவிடுவதுதான் உசிதம் எனத் தோன்றியது. கரிகாலன் மதுராந்தகனை இங்கே அழைத்து வந்தால் கரிகாலன் அவனை ஏதாவது செய்துவிடுவான் என்ற பயமும்
இருந்தது. தஞ்சைக்கு பாதுகாப்பாக நந்தினியை அழைத்துச் சென்றுவிட்டு சின்னப் பழுவேட்டரையரை கலந்தாலோசித்து விட்டு மேலே முடிவெடுக்கலாமென நந்தினியிடம் கூறி கிளம்பச் சொல்ல அவள் மறுத்தாள்.

நந்தினி, சபையில் கரிகாலன் பழுவேட்டரையரை அவமானப் படுத்தியதை மணிமேகலை சொல்லி விட்டதாகக் கூறி அழுதாள். எனவே அவனைப் பழிவாங்க வேண்டுமெனக் கூற, பழுவேட்டரையருக்கு நந்தினி தன்மீது வைத்துள்ள பதிபக்தியை நினைத்து உவகையுற்றார்.

நந்தினி மறைத்து வைத்த வாளைக் காட்டி தான் இங்கு பாதுகாப்பாக இருக்கப் போவதாகவும் அவர் மட்டும் தஞ்சை செல்லவேண்டுமெனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டாள். தற்போது அவரோடு கிளம்பினால் கிழவருக்கு நந்தினி மேல் நம்பிக்கையில்லை என்று பேச்சு கிளம்பும் என்றாள். அவருக்கு மனமில்லாத போதும் அவள் சொல்லை மீறாமல் கிளம்பிச் சென்றார்.

ஆதித்த கரிகாலன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான். சம்புவரையருக்கு மணிமேகலையை கரிகாலனுக்கு மணமுடித்தால் நல்லது என்று தோன்ற, கந்தமாறன் அதற்கு எதிராக இருந்தான். நந்தினிக்கும் கரிகாலனுக்கும் இடையில் ஏதோ இருக்க வேண்டும் என்று அவன் மருகி வந்தான்.

நந்தினியை அழைத்துக் கொண்டு வீரநாராயண ஏரியில் இருந்த சிறிய தீவின் நீராழி மண்டபத்திற்கு மணிமேகலை தன் தோழிகளுடன் பொழுதைக் கழிக்க வந்து சேர்ந்தாள்.

வேட்டையில் ஆதித்த கரிகாலன் கண்ணில் கண்ட மிருகங்களையெல்லாம் தன் ஆத்திரத்தினால் கொன்று தீர்த்தான். இரு காட்டுப்பன்றிகள் குறுக்கிட அதில் ஒன்றின் மீது கரிகாலன் எய்த அம்பு குறிதவறி விட கந்தமாறன் நகைத்தான். கரிகாலன் அவனிடம் பந்தயமிட்டு அவனையும் பார்த்திபேந்திரனும் ஒரு பன்றியை பிடித்து வருமாறும், தானும் வந்தியத்தேவனும் ஒன்றை பிடிப்பதாகவும் சவால் விட்டான்.
அதன்படி துரத்தி வந்தபொழுது, பன்றியைத் தவற விட்டனர். கரிகாலனும் வந்தியத்தேவனும் தனிமையில் எல்லாச் சூழலையும் விவாதித்தனர்.

வந்தியத்தேவனிடம் நந்தினியை தனியே சந்திப்பதற்கான தன் அச்சத்தை கரிகாலன் வெளிப்படுத்த, வந்தியத்தேவன் நந்தினி அவரின் சகோதரி என்ற உண்மையை அவளிடம் சொல்லுமாறு வற்புறுத்தினான். நந்தினியின் வஞ்சம் குறித்து பேசிய கரிகாலன்
நானோ அவளோ இறந்து விடுவது தான் இதற்கான தீர்வு என்றெல்லாம் பேசி கலங்கடித்தான். மணிமேகலையை தான் உடன்பிறவா சகோதரியாக கருதுவதாகவும், கரிகாலன் அவளை மணக்கலாமெனவும் வந்தியத்தேவன் கூறினான்.

அப்போது சிறுத்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பழைய பன்றியை கண்டு இருவரும் சண்டையிட்டு பன்றியை வென்றனர். அதற்கு எதிர்க்கரையில் பெண்களைப் பார்த்தவுடன் நீரில் குதிரையை விட்டுக்கொண்டு அங்கு சென்றனர். அங்கு பன்றியிடமிருந்து தப்பிய சிறுத்தை பெண்களை நோக்கிப் பாய தயாராய் இருந்தது. கரிகாலன் அம்பை விட சிறுத்தை பெண்களின் மீது பாய்ந்தது. சிறுத்தை, மணிமேகலை, நந்தினி மூவரும் நீரில் விழுந்தனர். பின் எழுந்த மணிமேகலையை நோக்கி சென்ற வந்தியத்தேவனை தடுத்து நந்தினியிடம் அனுப்பிவிட்டு கரிகாலன் அவளை நோக்கி சென்றான்.

கரிகாலன் தன்னைத் தொட்டு தூக்கியதை மணிமேகலை விரும்பாமல் பேச, அவளுடைய அன்புக்கு வந்தியத்தேவன் பாத்யதை இல்லை எனக் கரிகாலன் கூறி நந்தினியுடன் அவன் குலவிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்ட மணிமேகலை துணுக்குற்றாள்.

உண்மையில் வந்தியத்தேவன் நந்தினியை காப்பாற்றியவுடன் பயந்து வேகமாக இறக்கிவிட நந்தினி அவன் முதலில் தன்னிடம் வராததையும் தான் அவனுக்கு உதவி செய்ததை மறந்து விட்டதையும் சொல்லி ஏசினாள். அதற்கு பதிலளித்த வந்தியத்தேவனை ஒத்துக்கொள்ளாமல் மறுநாள் நள்ளிரவில் தன்னைத் தனியே சந்திக்குமாறு கூறினாள். அதற்குள் கரிகாலனும் மணிமேகலையும் நெருங்கிவிட பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

பின்னர் எதிரே அந்த அடிப்பட்ட சிறுத்தை கரையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனை அதைக் கொன்று வருமாறு அனுப்பிவிட்டு, நந்தினியுடன் தனியே பேச விழைந்தார்.

மணிமேகலையும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று விட நந்தினியிடம் அவள் தன் சகோதரி என்ற உண்மையைக் கூறினார். ஒரு கணம் திகைத்த நந்தினி இதைச் சொன்னது வந்தியத்தேவனா? எனக்கேட்க, ஆமோதித்த கரிகாலனை பார்த்துச் சிரித்தாள். இளைய
பிராட்டி குந்தவை நம்மை மறுபடியும் பிரிப்பதற்காக வந்தியத்தேவன் மூலம் செய்த சூழ்ச்சி என்று சொல்ல, வந்தியத்தேவன் அப்படிப்பட்டவனல்ல என்று கரிகாலன் மறுத்தார்.

அப்போது வந்தியத்தேவன் தன்மீது ஆசைப்பட்டதாகவும் தான் மறுத்ததால் கரிகாலனை
தன்னிடம் அணுகாதவாறு அவன் காவல் இருப்பதாகவும் பழி கூறினாள்.

முன்பே கடம்பூருக்கு வரும்போது வந்தியத்தேவன் ‘உங்களை விட்டு பிரிய மாட்டேன்’ என்று தன்னிடம் சொன்னதை கரிகாலன் நினைவுற்றான். மேலும் அநிருத்தர் அருள்மொழிவர்மருக்கு பட்டம் சூட்ட நினைப்பதாகவும், மதுராந்தகன் அரசாள தகுதியில்லாதவன் எனவும், ஆழ்வார்க்கடியான் தன்னை மணம்புரிந்து கொண்டு வைணவ பக்தியில் ஈடுபடவேண்டுமென ஆசைப்படுகிறான் என்றெல்லாம் கூறி தன்மீது பரிதாபம் ஏற்படும்படி செய்தாள்.

மேலும் வந்தியத்தேவன் திரும்பி வரும்போது அவனின் குலமான வாணர்குல பாட்டு ஒன்றை அவன் சொன்னதாகப் பொய் கூறி சொல்லலானாள். வந்தியத்தேவன் அதைத் தான் சொல்லவில்லை என்று மறுக்க, அதை காதில் கொள்ளாமல் அதில் மூவேந்தர்களின் தலையைப் பறித்ததாக வரும் வரிகளைச் சொல்லி காண்பித்தாள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவன் மீது வெறுப்பு கொள்ளும் வண்ணம் அனைத்தையும் செய்தவள், ஆதித்த கரிகாலனே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், அவன் தஞ்சைக்கு வர அவள் தடையாக இருப்பதாக கருதினால், தான் அங்கிருந்து போய்விடுவதாக கூறி அவனிடம் வருந்தினாள்.

ஆதித்த கரிகாலன் நந்தினியின் வலையில் முழுதாய் விழுந்தான்.
வந்தியத்தேவன் செயலற்று நிற்க, உணவுக்கு அழைக்க வந்த மணிமேகலை அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்து அவனையே பார்க்க, அவன் இந்த ஏமாற்றத்தை தாங்கவியலாமல் உள்ளக் கொந்தளிப்புடன் இருந்தான்.

உணவுக்குப் பின் மணிமேகலை பாட அனைவரும் ரசித்துக் கொண்டிருக்கையில் அவளின் பார்வை தன்மீதே இருப்பதைக் கண்ட வந்தியத்தேவன் அவள் மீது பரிதாபம் கொண்டான். அப்போது புயலும் மழையும் சூழ்வதைப்போல தோற்றம்
உண்டாக, படகும் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்தது.

எப்படிப் போவது என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சம்புவரையர் இரு பெரிய படகுகளை எடுத்துக்கொண்டு வந்து அனைவரையும் அழைத்துச் சென்றார்.

நான்காம் பாகம் முற்றிற்று.

  • savitha

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *