ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது.

மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும்.

அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார்.

மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது.

ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ:

முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள்.

பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள்.

இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும்.

இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்:

1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று?

நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான்.

2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்?

என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது.

3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன?

அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை.

4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா?

அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன்.

5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்?

தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி.

6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்?

வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான்.

7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா?

ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள்.

8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா?

பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது.

9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்?

புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை.

10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும்.

———

அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம்.

1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று?

2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன்.

எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான்.

2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்?

தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள்.

3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன?

பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான்.

4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா?

என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை.

5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்?

ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன்.

6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்?

வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும்.

7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா?

நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா?

காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது.

9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்?

சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது.

10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
———

நிறைவாக, அனுராதா.எஸ்.

நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம்.

1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று?

மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது.

2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்?

நிறைய பேர் இருக்கிறார்கள். முதல்வருடம் பார்க்கும்போதிலிருந்து கல்லூரி இறுதியாண்டு வரை அவர்களுடைய மாற்றங்கள் ஆச்சரியமானதாக இருக்கும்.

3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன?

அளவுக்கதிகமாக அன்பைப் பெற்றிருக்கிறேன். இழப்பென எதுவுமில்லை. கிடைக்காதது என்றால் பணம் அதிகமாக சம்பாதிக்கவில்லை என்பது மட்டும்தான்.

4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா?

நிறைய நேரம் கிளர்க் வேலைதான் பார்க்கிறோமென நினைக்கிற போதெல்லாம்.

5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்கு சென்றிருப்பீர்கள்?

இல்லத்தரசி.

6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்?

வீட்டில் நாம பேசினா யாரு கேட்பாங்க?

7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா?

ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கிறேன்.

8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா?

கொஞ்சம் கணிணி கற்க வேண்டியதிருக்கிறது அவ்வளவுதான். மற்றபடி சுலபம்தான்.

9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்?

கல்விக்கும் சமூக மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை. கல்வி வேலைவாய்ப்புக்கான வழியாக மட்டுமே உள்ளது. அதனால் பெரிய மாற்றம் என்பது எதுவும் வரவில்லை.

10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

நாம் நினைப்பதுபோல் அவர்கள் இருக்கத் தேவையில்லை. முடிவைவிட செயல் முக்கியமானது.

நேர்காணல்: சேலம் ராஜா


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *