மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது.   மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு  அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும்  கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள்   மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன.   கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின்  அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.   பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர்  அல்லது தலைவர் பதவிகளையும்  அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.