எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை


ஆகஸ்டு மாத இளம் வெயிலின்
அகிம்சைக் கூடத்தில்தான்
ஒத்துழையாமை உலைக்களம்.

ஒரு கிழவனின் அகிம்சை
இரும்பை எரியவிட்டுத்தான்
பரிசோதிக்கப்பட்டது.

உலகப் போரின் நெருக்கடியில்கூட
முகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்த
வெள்ளையனின்
அதிகார முகமூடி.

ஒவ்வொரு இந்தியனின்
இதயத்திலும்
எரிமலையின் சாம்பல்.

பக்கத்திலேயே இருந்தது
பகத் சிங்கின்
அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.
இருந்தும்
போர்க்களத்திற்குப் அருகிலேயே
புறமுதுகாளர்களின் கூடாரமும்.
மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்
தகதகக்கும் ஜாதி அம்புகள்.

மார்பில் ரோஜா சூடியவனை
மரணத்தைப்போல் பார்த்தார்கள்.

வேடிக்கைக்காரர்களின் கண்களில்
வெறிகள் மினுங்கின
“இந்தியச் சிறுமிக்கு
வெள்ளைக்கார துரையுடன்
குழந்தைத் திருமணம்.”

நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள்.

பசுமாடுகளுக்குப் பாதுகாப்பென
காடே கைகூப்பிய போதே
கள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம்.

கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்
தோண்டியெடுக்கப்பட்டன.
நிழலுருவங்கள்
இருளின் பூதங்களென
அகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன.

ஒரு நாட்டின் கொடித்துணியை
நெய்வதற்குமுன்
எத்தனை சவத்துணிகளை
நெய்ய வேண்டியிருக்கிறது.

களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்து
ஆயாசமானாள்
ஆகஸ்டு ராணி.

செய்கூலி சேதாரத்துடன்
ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்
அணியுமுன்
கழுத்தினைக் களவாடிய
கள்வர்கள்.

ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்
ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்
புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.
ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்
அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன.

எட்டப்பன்களின்
பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா.

இப்போது
வெள்ளையனே வெளியேறு என்றால்
சிரித்தபடியே அவன் சொல்கிறான்:
“இந்தியனே வெளியேறு.”

கவிதை: நா.வே.அருள்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *