பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்
இரத்தம் உறைந்த பூமியில்
வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையே போராடுகிறார்கள்

அண்டங்களுக்கு அப்பால் சென்று
குடியிருப்புகளை நிறுவ
இருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்
முயன்று கொண்டிருக்கையில்,
உயிர் தப்ப எண்ணியோர்
உயிரே பறக்கும் விமானத்தின்
சக்கரங்களிலிருந்து வீழ்வது
இருண்ட காலத்திற்குள் அவர்கள்
விழுவது போலவே இருக்கிறது

பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்
பழங்காலத்திலிருந்து பழங்குடிகளே
பல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்
வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்
மாறும் போதெல்லாம்
கற்காலத்தில் வாழவே
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
கொலைக்கருவி ஏந்தி
மதம் காப்பவர்களால்

புதுமையோ புரட்சியோ இல்லாமல்
பழமையிலேயே கிடக்கும்
பழங்குடிகளின் தேசம்
புவிசார் அரசியலில்
வளங்களைக் கொள்ளையடிக்கும்
வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது

ஆதிக்கம் எதுவாயினும்
அடிபணியோம் என்பதை
துப்பாக்கி முனையிலும்
பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்
பெண்கள் சொல்கிறார்கள்

ஆதிக்கவாதிகள் எல்லாம்
அழிந்து போன பேரரசுகளின் கல்லறையில்
புரட்சியின் பூப்பூக்கும் காலம்
போர்க்களத்திலும் அமைதி சூழும்

ஆக்கம்: பவா சமத்துவன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *