பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?
தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர் திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.
நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. 
திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள்.
நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம் வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக் குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள் என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.
காகிதம் மடித்தல், தொப்பிகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று கலை ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும்.
ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.
மேலும் கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம் இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில் தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.
எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம்.

இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது.
அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது.
சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்?
இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.
இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை. நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும் உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும்.
- சு. உமாமகேஸ்வரி
Mansoor
July 9, 2022அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பும் கொள்ளையும் சேர்ந்தே நடக்கும் அவலம்.. கண்முன் தெரிந்தும் நாம் பார்வையிழந்தவர்களாக .. அரசு பிறவிக் குறைபாடுள்ளதாக இருக்கிறது..
ஜெனசக்தி
July 10, 2022தமிழர்கள் இரந்தேனும் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் தகுதி தேர்வு எழுதிகொண்டே இருப்போம். இறப்பதற்கு முன் ஏதேனும் வேலை வாய்ப்பை எட்டி விடுவோம். வாழ்க தமிழ்