சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

1799, மே மாதம் 4-ம் தேதி. ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைக் காக்க, திப்பு சுல்தான் விரைந்து செல்கிறார். தான் உயிரினும் மேலாக நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையாவும், மிர்சாதிக்கும், கமருதீனும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறியதைக்கண்டு, ஒரு வினாடி பதைத்துத்தான் போனார்.

அவர்தான் வீரனாயிற்றே; உடைவாளைச் சுழற்றிக் களத்தில் இறங்கினார் திப்பு. எதிர்முகாமில் வெல்லெஸ்லி தலைமையில் ஏகாதிபத்தியப்படை. பெரும் போர் நடந்தது. போரின் நடுவே ஏதோ ஒரு துரோகியின் வாள் திப்புவைத் தாக்கியது.

போர் முடிவுக்கு வந்து, வெள்ளையர்கள் திப்புவைத் தேடுகின்றனர். இறுதியில், ஒரு மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி, போர்க்களத்தில் வீரர்கள் உடல்களுக்கிடையில் கிடக்கிறது, மாவீரன் திப்பு சுல்தான் உடல்.

போர்முடிந்ததும், திப்பு சுல்தான் மகன்களும் மகள்களும் உறவினர்களும் வேலூர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், போர்க்களத்தில் உயிர் நீத்த ஒரே மன்னரான திப்புசுல்தான் வாரிசுகள்,வேலூர் சிறையில் வாளாவிருக்கவில்லை. வேலூர் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள், மீசை வைக்கக்கூடாது; தலைப்பாகை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவுகளை எதிர்த்து, சிப்பாய்கள் கனன்று கொண்டிருந்தனர்.

சிப்பாய்களின் எதிர்ப்பை திப்பு சுல்தானின் மூத்த மகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும், அரசியல் ரீதியாக உருமாற்றி வந்தனர். இறுதியில், 1806 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி, புரட்சிக்கான தேதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் தேதியில் புரட்சி நடைபெறவில்லை.

பின்னர் 1806-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, வேலூர் கோட்டைக்குள் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள், சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசீம், சுபேதார் ஷேக் ஹுசைன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து, ஆங்கிலேய அதிகாரிகளையும், ஆங்கிலேய ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். கட்டாய தலைப்பாகை அமுல் படுத்திய கர்னல் மிக்கிராஸ் உட்பட, 14 வெள்ளை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

“வாருங்கள் நவாப், திப்பு சுல்தான் ஆட்சியைத் தொடருங்கள்” என்று, திப்பு சுல்தானின் மூத்த மகனை அழைத்தனர் சிப்பாய்கள். வேலூர் கோட்டைக்குள் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஆனால், அதிகாலை ஆர்க்காட்டிலிருந்து கர்னல் ராபர்ட் கில்லஸ்பி (Colonel Robert Gillespei) தலைமையில் பிரிட்டிஷ் படைகள் வந்து, புரட்சிக்காரர்களை வேட்டையாடியது.
தன்னெழுச்சியாக எழுந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான பெரும் புரட்சி, வெந்து தணிந்தது. ஆனாலும், அந்தத் தீ நாளங்கள் அணைந்ததுபோல் தோன்றினாலும், அதில் புகைந்து கனன்று கொண்டிருந்த தீக்கனல்,1857-ம் ஆண்டு அடுத்த புரட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு. ஆனால், 1806 -ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடத்தைப் பெறவில்லை என்பதுதான் கொடுமை.

  • ஷாகுல் ஹமீது

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *