வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’
என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல,

‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ 
வருந்தலை என் கேண்மைக் கோவே!’
என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான்.

தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது.

செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும்.

வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன்.

1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906.

அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்:

தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்?

அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்?

தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார்.

அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி.

செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி.

தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம்.

  • இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *