காற்றில் சிக்கிய பட்டம்

கவிதை

மொட்டை மாடியில்
தண்ணீர் தொட்டியின் மேல்
அரை நிக்கர் போட்ட ஒரு சிறுவன்
காலை மாலை
கை விரலுக்கிடையே நழுவும்
மணலைப்போல
நேரம் மறந்து
வானில் பட்டத்தைப்
பறக்கவிட்டுக்கொண்டேயிருக்கிறான்
இருட்டு மற்றும் வெளிச்சமென
இரண்டு காலத்திலும்
ஒரே சந்தோசமாய்

எழுத்துச் சுழற்சியில் சிக்கிய எனக்கு
அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான்
காலையில்
மஞ்சள் வெயில் நிறைந்த
என் வாசல் முற்றத்தில்
பட்டத்தின் கருநிழல் மட்டும்
செவ்வகக் குடை விரித்தாற்போலத் தெரிந்தது

நிஜத்தைவிடப் பெரிதாக அசையும்
ராட்சச நிழல் கண்டு
கண்கள் லயத்தில் மின்னின
பட்டத்தின் நிழல்
ஒரே இடத்தில் படபடத்துச் சுழன்று
தடுமாறித் தவித்தது
நான் வெளியே சென்றபோது
என் நிழலையோ
பட்டத்தின் நிழலையோகூடப்
பார்க்கவில்லை
என் வீட்டு மீட்டர் பெட்டியில்
சிக்கலான அமைப்பில்
சிக்கிய பட்டத்தை
ஆர்வத்தோடு மீட்டு
அவனிடம் காற்றில் எறிந்தேன்

அந்தப் பட்டத்தில்
உலக வரைபடம் இருந்தது
அதில் இருநாட்டு எல்லைப்பகுதி
வரையப்பட்ட இடத்தில் கிழிந்தது
ஆம்! பட்டம் கிழிந்தது
அச்சிறுவன் தரையில் அமர்ந்து
முதன்முறையாக
பறந்த பட்டத்தைத்
தலைகுனிந்து பார்க்கிறான்

பட்டத்தின்
பறக்கும் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் நூல் கண்டு
செயலற்றுக் காணப்பட்டது
எல்லையோரக் காவலளியின்
காலணியைத் தைப்பது போல
குண்டு துளைத்த ராணுவ வீரனின்
காயமடைந்த உடலின் பகுதியை
மருத்துவர் தைப்பது போல
அந்தப் பட்டத்தை
ஊசிகொண்டு தைத்துக்கொண்டிருக்கிறான்

அவனிடம் நான்
ஒன்று சொல்ல வேண்டும்
என் காலடியில்
கிழிந்த இரு நாட்டின்
எல்லைப்பகுதி கிடக்கிறது
அவன் அதைவிட்டு
இரு நாட்டையும் இணைத்துத்
தைத்துவிட்டான் போலும்

  • சுதாகரன். எஸ்

Comments (8)


தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 11, 2023

சூப்பர்

சுதாகரன்
சுதாகரன்
June 11, 2023

நன்றிகள், தினேஷ்

இந்துமதி கணேஷ்
இந்துமதி கணேஷ்
June 11, 2023

அருமை சுதாகர்

சுதாகரன்
சுதாகரன்
June 11, 2023

மிக்க நன்றிகள்

ஆனந்தி
ஆனந்தி
June 12, 2023

நல்ல சிந்தனை வாழ்த்துகள் 💐

சுதாகரன்
சுதாகரன்
June 12, 2023

மிக்க நன்றிகள்.

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

ஒற்றுமை விழையும் கவிதை!👏👏

சுதாகரன்
சுதாகரன்
June 16, 2023

மிக்க நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *