காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதே
பெரியார் கைபிடித்த கதிரொளியே
சாதியக் கைமுறித்த தமிழ்வேலே
தமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே

நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்
காவிரியாய்க் கரைபுரளும் நானிலமே
பாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்
நீவிரித்த விரல்வழி தேடியோடும்

ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்கு
நன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வு
குன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மை
நன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா

இறைவன் எங்குமில்லை என்றாய்
இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்
சாதிசமயம் மூடங்க ளென்றாய்
சாதிப்போம் வாவாதம்பி யென்றாய்

நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்
நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்
முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்
முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய்

நீயிருந்த காலம் பரிதியும் சிரித்தது
நீயில்லாக் காலம் புழுதியாகிப் போனது
நீயிருந்த காலம் பசியும் பறந்தது
நின்நாமம் அன்றோ நெஞ்சில் நிலைத்தது

வாழிய வாழிய நின்புகழ் வாழியவே
வாழிய வாழிய நின்கொள்கை வாழியவே
வாழிய வாழிய எம்வழிகாட்டி வாழியவே
வாழிய வாழிய அண்ணா வாழியவே!

  • கவிதை: வைகறையான் ……………….. ஓவியம்: சுந்தரம் முருகேசன்
  • …………………

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *