அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை அன்போடும் வாஞ்சையோடும் நினைவு கூர்கிறது. அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ் ஊற்றுதான் அரசியல் வானில் விஸ்வரூபமாக எழுந்து நின்று, பேரறிஞர் அண்ணா என்று அனைவர் மனத்திலும் பதிய வைப்பதற்குக் காரணமாக இருந்தது. சொல் புதிது, பொருள் புதிது எனத் தமிழ் மொழியின் புதிய அடையாளமாகத் திகழ்ந்தார். மேடைத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். நல்ல தமிழ் அறிஞராக, நாவன்மைமிக்க நாவுக்கரசராக, ஆங்கிலத்தில் நாவாடுகிற பாங்கைக் கண்டு ஆங்கிலேயர்களே வியந்த வித்தகராக, வற்றாத ஊற்றெடுக்கும் எழுத்து வன்மை மிக்க ஒரு எழுத்துக்காரராக, நாடக ஆசிரியராக, நடிப்பின் மெய்ப்பாடுகளை எடுத்துரைக்கும் கலைஞனாக, அரசியலில் உச்சம் தொட்ட ஆளுமையாக, காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக என்று விரிந்து பரந்துகொண்டே செல்கின்றன அவரைப் பற்றிய நினைவுகள். தமிழ்த்தாயின் தலைமகனாய், தமிழினத்தின் தனித் தலைவராய், திராவிட அரசியலின் பெருந்தலைவராய்த் திகழ்ந்த அண்ணாவிடமிருந்து உதித்த சொல், செயல் அனைத்திலும் தமிழ்தான் இரண்டறக் கலந்திருந்தது. மொழிக்கும் இனத்திற்கும் அவர் காட்டிய பாதை, ஒரு சிறந்த வழித்தடத்தை ஏற்படுத்தியது. ஆகவேதான், உரிமையோடு ‘அண்ணா’ என்று அழைத்த அனைவரும் அவரது உடன்பிறப்புக்களாயினர். அண்ணாவின் அறிவு, விசாலமானது; செறிவு மிக்க உறுதிப்பாடு உடையது. ஆகவேதான், அவரைப் பேரறிஞர் என்று எல்லாரும் வழிமொழிந்தார்கள். அறிவியல், பொருளியல், உளவியல், அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பன்முகப் புலமை பெற்றவர். அதனால்தான், தமிழகத்தின் 20ஆம் நூற்றாண்டை அறிவு யுகமாக அவர் மாற்றிக் காட்டினார். அண்ணாவின் இலக்கிய வளத்தால், இவ்வையகம் தழைத்தது, திளைத்தது. சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை தனது எழுத்துக்களின்மூலமாக எடுத்து வைக்கும், ஒரு புதிய உத்தியை அவர் கண்டறிந்தார். அதுவே, ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’. இக்கடிதங்களை, தேநீர்க் கடைகளில் ஒருவர் படிக்க, பெரும் கூட்டமாக நின்று கேட்கும் பழக்கம் அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாகும். அண்ணாவின் கடிதங்களைப் படிக்கும்வரை, சாப்பிடாமல் இருந்தவர்கள் ஏராளம் உண்டு. இவற்றோடு மாத்திரம் இல்லாமல், அண்ணாவின் நாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள், தமிழக மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சௌமியன், சமதர்மன், பரதன், நக்கீரன், குறிப்போன், ஒற்றன், வீரன் என்னும் புனைப் பெயர்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. பொழுதுபோக்கிற்காக இலக்கியங்கள் படித்தவர்கள் மத்தியில், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவும் படிக்கும் சூழ்நிலையை இவர் உருவாக்கிக் காட்டினார். சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்கள் மீதான சாடல், பெண்ணுரிமை, முதலாளித்துவ எதிர்ப்பு போன்றவற்றை வித்தாக, மூலக்கருத்தாக இவரது கதைகள் தூக்கிச் சுமந்தன. இவரது எழுத்துகள் எத்தகைய அழகுணர்ச்சி கொண்டவையாக எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடியனவோ அதற்கேற்ப, இவரது பேச்சு ஒரு புதிய வடிவத்தோடு அனைவரையும் வசீகரித்தது. தமிழ்நாட்டு மக்களின் மாசுகளை அகற்றுவதற்காக, அவர்கள்தம் வாழ்வில் மறுமலர்ச்சியை வித்திடுவதற்காக, மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகியவை தமிழ் மக்களிடத்தில் செழித்திடவும் செம்மாந்து நிலைத்திடவும், அவர்கள் வாழ்வு சிறந்திடவும் எத்தகைய எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாது செயலாற்றி, ‘மக்கள் பணியே, மகேசன் பணி’ எனப் புதிய முழக்கத்தை நாளெல்லாம் பறை சாற்றினார். இதழ் தோறும் இதழ் உரை, கட்டுரை, மடல், ஆய்வுரை, சிறுகதை, புதினம், சிறுநாடகம், நாடகம், கவிதை, ஊரார் உரையாடல், வரலாறு, நந்திக் கலம்பகம் எனும் வடிவங்களில் மக்கள் விரும்பிச் சுவைக்கும் சுவையான கருத்துக்களை வரைந்தார். ஏனென்றால், அவரே ஒரு முறை சொல்லுகிறபோது, “நந்திக்கலம்பகம் புது முறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன். கோடுகள் தயாராகிவிட்டன. விரைவில் வண்ணமும் கூட்டிட இயலும்” என்று வர்ணித்துள்ளார். இவையெல்லாம் எப்போது நிகழ்ந்தன, எப்படி நிகழ்ந்தன என எண்ணிப் பார்த்தால், நமக்கு வியப்புத்தான் மேலிடும். பிறமொழி ஆதிக்கத்தால், தமிழ்நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது, அறிஞர் அண்ணாவின் தமிழ் மொழியின் ஆற்றலால், இவையெல்லாம் நிகழ்ந்தன. ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேசச் சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வர முடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் தொற்றிக்கொண்டது. மேடையேறிய அண்ணா, “மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; மக்களுக்கோ நித்திரை; வழங்குவீர் எங்கள் சின்னத்தில் உங்கள் முத்திரை” எனப் பேச ஆரம்பித்தவுடன் மக்களின் தூக்கம் கலைந்தது. எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் ஆயிற்று என்ற செய்தியைப் பலரும் அறிந்திருக்கலாம். இதுபோலவே, தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்குப் பேச சென்றார். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், அண்ணா பேசும் மேடைக்கு எதிரே, ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக் கண்ட தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா இப்படிச் சொன்னார். “அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை. அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்ட எதிர் முகாமினர் வெட்கித் தலைகுனிந்தனர். இப்படி எண்ணற்ற அனுபவங்களை நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள், அண்ணாவைப் பரிகசிப்பதற்காக அவரிடம், ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், “No sentence can begin with because, because, because is a conjunction” என்று உடனே பதிலளித்தார். இவ்வாறாக, பேச்சாற்றலில் அனைவரையும் வியக்க வைத்தவர் அண்ணா. ஆகவேதான், அவருடைய மேடைப் பேச்சுகளை, மாலைநேரக் கல்லூரிகள் என்றும் கட்டடம் இல்லாத கல்லூரிகள் என்றும் வரலாற்று வகுப்பறைகள் என்றும் புகழாரம் சூட்டினார்கள். இவை ஏதோ சில பொருள்களைத் தரும் சாதாரண சொற்றொடர்கள் அல்ல. ஒரு சமுதாயத்தை விழிக்கச் செய்து, மறுமலர்ச்சி பெறச் செய்து, புது உணர்வுகளைத் தாண்டி புதிய சமுதாயமாக ஆக்கிய ஆற்றல்மிக்க வரிகள். இவையெல்லாம் அண்ணா உதிர்த்த முத்துக்கள்; பின்னாளில் தமிழகத்தின் சொத்துக்களாயின. இந்தச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மனோதத்துவ ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய இலக்கியக் குறியீடுகள்; மனித வாழ்விற்கு அடிப்படை இலக்கணங்கள்; தமிழக வரலாற்று அத்தியாயங்களின் தலைப்புகள்; இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அறிஞர் அண்ணாவின் இதயத் துடிப்புக்கள்; தமிழ்த் தாயின் தலைமகனின் இலட்சிய விளக்கங்கள்; தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற வழிகாட்டியின் வரலாற்றை விளக்கும் அடையாளங்கள்; அவருடைய வாழ்க்கை நெறிகள். ஆம், அரசியல் என்பது மற்றவர்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து ஆடும் சூதாட்டமல்ல. ஆழ்ந்த அன்பும் இணையற்ற பாசமும் நிறைந்த, சகோதர உணர்வும் மனிதாபிமானமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு மாபெரும் சிந்தனையாளர் அண்ணா. தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சரான அண்ணா, குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டவர். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை நடத்தினார். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, தனது திராவிடப் பற்றை வலுப்படுத்தினார். இரு மொழிச் சட்டத்தை உருவாக்கினார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றி, தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். உலக வரலாற்றிலேயே, பொது வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஒரு தலைவனுக்கு, அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போன்ற துயரம் மிகுந்த அனுபவம் ஏற்பட்டிருக்காது. இதயத்தைத் தூளாக்கும் சொற்கள், இழிமொழிகள், வசைகள், ரத்தத்தைச் சூடேற்றும் நாராச – நரகல் நடைப் பேச்சுக்கள், அழித்து ஒழிப்பதற்கான இடைவிடாத தாக்குதல்கள், தன்னை ஆளாக்கிய தலைவனிடமிருந்து, தான் ஆளாக்கிய அன்புத் தம்பிகளிடமிருந்து எப்போதும் எதிர்க்கும் எதிரிகளிடமிருந்து என்று, அனைத்து தரப்பினருடைய தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொறுமை காத்தார். மறப்போம், மன்னிப்போம் என்றார். இழைத்த கொடுமைகளை மறந்தார், மன்னித்தார். வீழ்த்த முயன்றவர்களும் வெறி பிடித்துத் தாக்குதல் தொடுத்தவர்களும் வெட்கித் தலைகுனிந்தனர். தாக்குதலையும் தழுவுதலையும் ஒன்றாகக் கருதினார். எதிர் முகாம்களில் இருக்கும் பண்பாளர்கள், தியாக உள்ளம் படைத்தவர்கள், திறமையாளர்கள், நல்லவர்கள், நாட்டுக்கு உழைத்த வித்தகர்கள், எங்கிருந்தாலும் எந்த முகாமில் இருந்தாலும் பாராட்டுகிற பண்பை வளர்த்தார். பகை, பழி, வெறுப்பு என்ற அநாகரிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த, திராவிடத்தின் தொடக்கப் புள்ளியான அண்ணாவின் கனிவும் அவர் பிறரைக் கனியச் செய்யும் முறையும் நாம் கற்க வேண்டிய பாடங்களாகும். (சுவடு பதிப்பகத்தின் முதல் வெளியீடான திராவிடச் சுவடுகள் நூலில், மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரைக்கான முகப்போவியம் : சுந்தரம் முருகேசன். நூல் அட்டை வடிவமைப்பு: நாநா)