பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

“ஈ.வே.ராமசாமியாகிய நான், தமிழர்களின் மீதான சூத்திரப் பட்டம் என்னும் இழிவைத் துடைத்தெறிய யாரும் முன்வராத காரணத்தால், நானே அந்தப் பணியை என் தோளில் சுமந்து செல்கிறேன்” என்று தமிழர்களுக்காகத் தானே முன்வந்து பகுத்தறிவுச் சிந்தனைகளை, சுயமரியாதைச் சிந்தனைகளை விதைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார்.

அவரின் பெருமைகள் எதையும் அறியாத 5 வயதில் 1965-இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதல்முறையாகப்  பெரியாரைப் பார்த்தேன். அப்போது பெரியாரின் எந்தக் கருத்துகளும் என்னை ஈர்க்கவில்லை. ஆண்களும், பெண்களும் என் போன்ற குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த போது எனக்கு ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.மாநாடு காலையில் தொடங்கியது. பலரும் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் மேடையில் இருந்த பெரியாரிடம் சென்று, அவரை வணங்கி, அவர் கையில் கட்சி வளர்ச்சி நிதிக்கு, விடுதலை வளர்ச்சி நிதிக்கு என்று ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொடுத்துக் கொண்டி ருந்தார்கள். பெரியார் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வளர்ச்சி நிதியை வாங்கிக் கொண்டிருந்தார். என்போன்ற சிறுவர், சிறுமியர் வளர்ச்சி நிதி கொடுத்தபோது, சிறுவர்களை “வாங்க ஐயா”, என்றும் சிறுமியை “வாங்க அம்மா” என்றும் விளித்தார். வளர்ச்சி நிதியைப் பெரியார் கையில் கொடுத்தபோது, சிறுவர்களின் கரங்களைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

5 வயதிலிருந்து நான் என் மூத்த சகோதரி சண்பக வல்லியின் வீட்டில் திருச்சி வரகனேரி பெரியார் நகரில் வாழ்ந்து வந்தேன். என் சகோதரியின் கணவர் என் மாமா ஓ.வேலு அவர்கள் (80களில் திருச்சி நகரத் தி.க. துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார்) என்னை மதுரை மாநாட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். பெரியார் சிறுவர்களுக்குக் கைகளில் முத்தம் கொடுப்பதைப் பார்த்து, என் கையில் 25 பைசா கொடுத்து, பெரியாரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் மேடைக்குச் சென்றேன். பெரியாரை நெருங்கியவுடன், பெரியார் என்னைப் பார்த்து, “வாங்க அய்யா” என்று கைகூப்பி வரவேற்றார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நன்கொடையாக 25 பைசாவைப் பெரியாரின் கைகளில் கொடுத்தேன். என் இரு கரங்களையும் பெரியார் பற்றிக் கொண்டு, கரங்களில் முத்தம் கொடுத்தார். அந்த நேரத்தில் பெரியாரைவிடவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது, அவரின் இருபக்கங்களிலும் இருந்த நாய்கள்தான். பெரியாரிடமிருந்து விலகிச் சென்ற நான், இருபக்கங்களிலும் இருந்த நாய்களின் தலைகளைத் தடவிக் கொடுத்தேன். பெரியாரும் ஒன்றும் சொல்லவில்லை. மேடையை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக மாநாட்டு மணலில் அமர்ந்தேன். என் பார்வைகள், சிந்தனைகள் அனைத்தும் பெரியாருக்குப் பக்கத்திலிருக்கும் நாய்கள் மீதே இருந்தன.

பகல் உணவு இடைவேளைக்கு, பெரியார் மேடையிலிருந்து வெளியே சென்றார். நாய்களும் பெரியாருடன் சென்றன. மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மீண்டும் தமுக்கம் மைதானத்திற்கு வேனில் வந்தார். வேன் நின்றவுடன் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அந்த இரண்டு நாய்களும் மேடையே நோக்கி வந்து பெரியார் அமரும் இடத்தின் வலப்புறம் இடப்புறம் அமர்ந்து கொண்டன. பின்புதான் பெரியார் வந்தார். மாலை நேரத்தைத் தாண்டி இரவு 7.00 மணியளவில் பெரியார் பேசத் தொடங்கினார். இரவு 9.00 மணிக்குப் பெரியார் தன் உரையை முடித்தார். அதுவரை அந்த நாய்கள் பெரியாரை விட்டு அகலவில்லை. சிறுநீர் கழிக்கவோ, உணவு அருந்தவோ அந்த நாய்கள் செல்லாதது என்னை பிரமிக்க வைத்தது. பெரியாரின் கருத்துகளால் மனிதர்கள் பெரியார் மீது அன்பு வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட என்னால், நாய்கள் ஏன் பெரியார் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றன என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.

தொடர்ந்து பெரியார் பற்றிய செய்திகள் ஒளிப்படங்கள் வழியாக “தந்தை பெரியார், தான் உணவு முன் நாய்களுக்கு உணவு வைக்கச் சொல்லுவார். நாய்களைக் கட்டிப் பிடித்தப்படி படுக்கையில் அமர்ந்திருப்பார். மணியம்மை அவர்களும் பெரியார் நாய்களிடம் கட்டிய அன்புக்கு நிகராகவே அன்பு காட்டினார்” என்ற செய்திகளை அறிந்தேன். நாய் மனிதர்களிடம் அன்பு காட்டக்கூடிய விலங்கு. எளிதில் மனிதர்களிடம் பழகிவிடும் தன்மை கொண்டது. மனிதர்கள் பிரம்மாவின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்ததாக மனுஸ்மிருதி சொல்வதாய்ப் பிறப்பில் வேற்றுமை பாராட்டுபவர்கள் குறிப்பிடுவார்கள். இதைக் கடுமையாகத் தந்தை பெரியார் எதிர்த்தார். அந்தக் காலத்து அரிஜன்கள் இந்தக் காலத்துத் தலித்துகள் பெரியாரிடம் சென்று, “ஐயா…. தலையில் பிராமணனும், தோளில் சத்திரியனும், தொடையில் வைசியனும் காலில் சூத்திரனும் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாங்கள் எங்கே ஐயா பிறந்தோம்” என்ற கேள்விக்குத் தந்தை பெரியார்,“அவர்கள் பிறக்கக்கூடாத இடத்தில் பிறந்துள்ளார்கள். நீங்கள்தான் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவர்கள்” என்று கோபமும் கேலியுமாய்ப் பதில் கூறியுள்ளார்.

நாயைப் பைரவன் என்று கடவுளின் வாகனமா வைத்திருந்தாலும் புராணங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நாய் என்பது இழிவு பொருளில்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடவுளின் முன்பு நாயினும் கீழானவன் என்னும் பொருள்பட “நாயினும் கடையேன்” என்று பக்தி இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதை வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நாய்களை மனிதர்களுக்கு இணையாக மதித்துள்ளார். நாய்களும் பெரியாரின் பண்பை மதித்திருக்கின்றன என்பதை நாய்கள் காட்டிய அன்பின் வழியாகப் பின்னாளில் என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.

1969-இல் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது என் சகோதரி,  மாமாவோடு லாரியில் திருச்சி வரகனேரியிலிருந்து பிப்.3ஆம் நாள் இரவு சென்னைக்குச் சென்றோம். லாரியில் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் 50 பேர் இருந்தார்கள். அனைவரும் சென்னை செல்லும்வரை அழுதுகொண்டே வந்தார்கள். சென்னை சென்று சேர்ந்தும் அழுது கொண்டே இருந்தார்கள். என் சகோதரியும் இதில் அடக்கம். அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை யாரும் சாப்பிடவில்லை. அண்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டம்தான் எனக்கு அரசியலைப் புரிய வைத்தது. அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார், “என் தலைமகனை இழந்து புத்திர சோகத்தில் இருக்கிறேன்” என்று வெளியிட்ட அறிக்கையின் வழியாக அண்ணாவையும் பெரியாரையும் புரிந்து கொண்டேன். அப்போது எனக்கு 9 வயது.

தொடர்ந்து பெரியார் கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்வது என்பது என் வழக்கமாகிவிட்டது. பகுத்தறிவுக் கண்காட்சியில் புராணக் குப்பைகளைச் சாடி வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து என் அறிவை, அறிவியல் உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்போது தொடங்கித்தான் பெரியாரின் நாய்களிடமிருந்து என் பார்வையை விலக்கிக் கொண்டு, பெரியாரின் கருத்துகள் மீது கவனம் கொண்டேன். திமுகவிற்காக 1971இல் என் தந்தை மற்றும் சகோதரர்களோடு 1971இல் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக உரையாற்றினேன். பெரியாரின் பேச்சுகளையும், திராவிடர் கழகச் சிறு வெளியீடுகள் வழியாகப் பெரியாரை முழுமையாக அறிந்துகொண்டேன். 1973 டிசம்பர் 24ஆம் தேதி பெரியார் இயற்கை எய்தினார். அப்போது 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியாரின் மறைவு செய்திக் கேட்டு எல்லாரும் அழுதுகொண்டிருந் தார்கள். ஒரு மரணத்திற்காக நான் முதன்முறையாக அழுதது தந்தை பெரியாருக் காகத்தான். அன்று இரவு திருச்சியிலிருந்து இரயில் மூலம் பெரியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இரயில் மூலம் சென்றோம். என் சகோதரர்களும் வந்திருந்தனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எங்களோடு வந்திருந்த வரகனேரி மருதமுத்து நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தார். பெரியார் மரணமும் எங்களின் உறவினர் மருதமுத்துவின் மரணமும் எங்களைப் பெரும் வருத்தம் கொள்ளவைத்தது. பெரியாரை 5 வயதில் அறிந்த நான் 10 வயதில் முழுமையாகப் புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு வயது 60. பெரியாரியச் சிந்தனைகளிலிருந்து வழுமால் நழுவாமல், பெரியாரியச் சிந்தனைகளை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

என்னை வளர்த்த என் மாமா ஓ.வேலு அவர்கள் பொன்மலை இரயில்வேயில் பணியாற்றி 80களில் ஓய்வு பெற்று, திராவிடர் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். பின்னர் 1992ஆம் ஆண்டு பெரியார் மறைந்த டிசம்பர் 24ஆம் நாள் காலை 7.00 மணிக்குப் பொன்மலை மருத்துவமனையில் இயற்கை எய்தினார். பெரியார் எங்கள் வாழ்வோடு இணைந்து எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *