செலக்டிவ் பாலிடிக்ஸ்
இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. 
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம்.
நிகழ்வு 1
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது.
அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே?
நிகழ்வு 2
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். 
நிகழ்வு 3
குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். 
நிகழ்வு 4
கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின.
கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது.
கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன.
ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு.

இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம்.
- தஞ்சை ராஜேஷ்
Comments (0)