தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார்.

‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார்.

பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும்.

மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்.

அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன.

1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார்.

அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர்.

மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது.

சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது.

வாழ்க அகிலன் புகழ்!

  • கோமதி சங்கர்

Comment (1)


மோகன் ராஜா
மோகன் ராஜா
June 27, 2022

வாழ்க அகிலன் புகழ். ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *