சென்ற மாதம் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அறையைச் சுத்தம் செய்ய வந்தவர் வயதில் மூத்த ஒரு பெரியவர். ‘பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘அப்துல் கலாம்’ என்றார். ‘கலாமின் பெயர் உங்களுக்கும்’ என்றேன். சிரித்துக்கொண்டார்.

‘எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள்?’ என்றேன். குறைவான ஊதியம் ஒன்று சொன்னார். ‘கட்டுபடியாகிறதா?’ என்றேன். ‘விலைவாசி ஏறிவிட்டது’ என்றவர், ‘சாதாரண மக்கள் பாடு மிகச் சிரமம்’ என்றார். நானும், இன்று காசுக்காக மக்கள் படும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘கேஸ் விலை கூடிவிட்டது’ என்றேன். அவரும் ‘ஆமாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘எல்லாம் இந்த மத்தியில் இருக்கிற மோடி அரசுதான்’ என்றேன். பேசியவர் அமைதியானார். ‘மோடியின் பொருளாதார, நிர்வாகச் சீர்கேடு’ என்று சொன்னேன். அமைதியாகவே இருந்தார். ‘என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீர்கள்?’ என்றேன். ‘அதுதான் நீங்கள் சொல்லிட்டீங்களே சார்’ என்றார்.

‘எல்லாம் இந்த மோடி அரசுதான் என்று, நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதுபோல நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்குறீர்கள்?’ என்றேன். ‘அதற்குக் காரணம் உங்களுக்கும் தெரியும் சார்’ என்று சொல்லிவிட்டு வேலையில் முனைப்பாக இருந்தார்.

என்னால் மோடி அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக மற்றவருடனான உரையாடலில் சொல்ல முடியும்போது, கலாம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கிற ஒரு மனிதரால் ஏன் அப்படிச் சொல்ல இயவில்லை? ஏன் அந்த அச்ச உணர்வு அவருக்கு ஏற்படுகிறது?

வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அச்ச உணர்வைத்தான் ஆகப் பெரிய ஆபத்தாக உணர்கிறேன். அரசின் அதிகாரத்தோடு இணைந்து, ஒரு பகுதி மக்களை அச்சத்தில் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். சமுகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சாதிய முரண்பாட்டிலும்கூட, உரிமைகளைப் பறிப்பதைவிட உயிர்வாழ்வதற்கான அச்சத்தை உருவாக்குவதையே ஆகப் பெரிய ஆபத்தாகக் காண்கிறேன். ஏனெனில், இருத்தலுக்கே போராடும் மக்களிடம் உரிமைப் போராட்டம் என்பதற்கு வழியின்றிப் போய்விடும். எனவே, உரிமைப் பறிப்புக்காக அவர்கள் தனியே எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை.

சாதியப் படிநிலையில், பார்ப்பனர்களைவிட சூத்திரர்கள் என்கிற சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழ் இருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் முடிந்தாலும் மேலவளவு படுகொலைகளை இன்று வாசித்தாலும் அச்சமாக இருக்கிறது; வெண்மணியும் கூட.

  • க. பாண்டியராசன்

Comments (2)


Mansoor

இதே அச்ச உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.. ஆனால் இது ரொம்பகாலம் நீடிக்காது..சாது மிரண்டால் காடுதாங்காது..!

Mansoor

இதே அச்ச உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.. ஆனால் இது ரொம்பகாலம் நீடிக்காது..சாது மிரண்டால் காடுதாங்காது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *