ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது.

ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை.

இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது.

தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு:

பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன்.

1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம்.

3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார்.

4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார்.

5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது.

6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது.

7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.”

9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை.

நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு?

12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும்.

கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும்.

இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *