பொது சிவில் சட்டம்தேவையா?

பொது சிவில் சட்டம்தேவையா?

ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12, சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள MEET அரங்கத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், சமூக சமய ஆய்வாளர் ஹமீது ஹுசைன் ஆகியோர் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய தோழர் ஹமீத் ஹூசைன், இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதன் அரசியல் நோக்கங்கள், பசுவதைத் தடுப்புச் சட்டம், முத்தலாக், பாபர் மசூதி, ஞானவாபி மசூதி போன்ற பிரச்சினைகளைப் பற்றியும் சமகாலத்தில் முஸ்லீம்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒன்றிய அரசு இசுலாமிய மக்களைக் குறிவைத்துத்தான் இந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவருகிறது, சில சட்டங்களைத் திருத்துகிறது என்றும் இத்தகைய வேலைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டுப் பேசி, இன்றைய சூழலில் பொது சிவில் சட்டத்தை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து தோழர் வாலாசா வல்லவன் பேசும்போது, 1939ஆம் ஆண்டு முதல், சுதந்திர இந்தியாவில் அண்னல் அம்பேத்கர் ஆற்றிய சட்டச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் அன்றைய காலகட்ட நிகழ்வுகளின் வரலாறுகளையும் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்றுவதற்கு அம்பேத்கர் முன் நின்ற பெரும் சவால்கள், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியது வரை பல வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், பாஜகவின் மூன்று முக்கிய நோக்கங்களான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, ராமர் கோயில் கட்டுவது ஆகிய இரு நோக்கங்களை நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்பதையும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவர்களின் மூன்றாவது நோக்கமான பொது சிவில் சட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார். அடுத்து உரையாற்றிய தோழர் தியாகு, இந்து கூட்டுக் குடும்பச் சட்டம், அதனை முன்வைத்து நிகழ்த்தப்படும் வரி ஏய்ப்புகள் என பொருளியல் பின்புலத்தில் இயங்கும் சட்ட நடைமுறைகள் மீதான விமர்சனத்துடன் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, பிற மதத்தினருக்கு கூட்டுக் குடும்பச் சட்டம் இல்லாமை, குற்றவியல் சட்டங்களும் திருமணம், சொத்துரிமை தவிர்த்த இதர சிவில் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருப்பதையும் சட்டம் குறித்த கருத்து கேட்கும்போதே பழங்குடிகளுக்குச் சட்ட விலக்கு என்ற உள்துறை அமைச்சரின் வாக்குறுதி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டிக் காட்டியதுடன் இதைப்போன்ற செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள, சமூகப் பொருளியல் அழுத்த விளைவுகள் ஆகியவற்றையும் அழுத்தமாக எடுத்து வைத்து, இசுலாமியர்களின் வாழ்க்கையையும் இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசி, இந்து ராஜ்ஜியம் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பொதுசிவில் சட்டம் என்று பேசினார். நிறைவாகப் பேசிய நீதியர் அரிபரந்தாமன், பொது சிவில் சட்டம் குறித்துத் தொடர்ந்து பேசுபவர்கள், அதற்கான வரைவுகூட முன்வைக்கபடாத நிலையிலேயே விலக்கு குறித்துப் பேசுவதையும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இசுலாமியர்கள் மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவதையும் சிறுபான்மை மக்களுக்குள்ளும் இசுலாமியர்கள் தனித்துக் குறி வைக்கப்படுவதையும் குடும்பம், சொத்து தொடர்பான வழக்குகளிலும்கூட நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் பொதுச் சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படுகின்றன என்பதையும், சிறுபான்மையினர் தொடர்பான சில வழக்குகளில் பெரும் முரண்பாடாக மனுநீதி கோலோச்சுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார். திருமணச் சட்டங்களில்கூட வயது வரம்பு, வரதட்சணை போன்ற அம்சங்கள் ஒப்பீட்டளவில் இந்துக்களால்தான் அதிகம் மீறப்படுகின்றன என்ற புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைகளையும் குறிப்பிட்டு, சிறுபான்மையினருக்கு இருக்கும் அச்ச உணர்வுகள் நீங்கி, காலப்போக்கில் உருவாகும் சமூக மாற்றங்களால், அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய (inclusive) சமூகமாக இந்தியச் சமூகம் மாறும் காலத்தில், பொது சிவில் சட்டம் இயல்பாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, நமது இலக்கு அத்தகைய நல்லிணக்கச் சமுதாயத்தை உருவாக்க வேண்டியதாக இருக்க வேண்டுமேயன்றி, வலிந்து திணிக்கும் சர்வாதிகாரத்தால் பொது சிவில் சட்டம் என்ற கருத்துக்குக்கூட ஆதரவு பெற முடியாது என்று கூறி முடித்தார். சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவையின் தலைவரும் சுவடு இணைய இதழின் நிர்வாக ஆசிரியருமாகிய சுவடு மன்சூர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சுவடு இணைய இதழின் ஆசிரியர் நல்லு இரா. லிங்கம், இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர் பவா சமத்துவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ஆர்க்காடு ராஜா முஹம்மது நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் பீட்டர் பால்ராஜ் நன்றிகூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே நண்டு ராக்கப்பன்?” “நீதானே பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்?” “மரியாதை இல்லாம பேசக்கூடாது” “நீ மட்டும் பேசலாமா?” “சரிங்க நண்டு சார். விஷயத்துக்கு வருவோம்…” “வந்துக்க” “12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் போனாயா?” “போனேன்” “போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன டானாக்காரருக்கு மீசையும் நாமமும் வரைஞ்சு விட்டியா?” “சமத்தா நின்னார். மீசையும் நாமமும் வரைஞ்சேன்” “போலீஸ்காரர்னு உனக்குத் துளியும் மரியாதை இல்லை” “சரியா வரையாம விட்ட மீசையை எச்சில் துப்பி அழிச்சேனே… அதைச் சொல்றீங்களா? நான் மீசையும் நாமமும் வரைஞ்சதை அந்தப் போலீஸ்காரர் செமத்தியா என்ஜாய் பண்ணினார் தெரியுமா?” “அடுத்து என்ன பண்ணின? ஸ்டேஷனுக்குள்ள திமுதிமுன்னு எருமைமாடு மாதிரி புகுந்த” “ஆமா… எவ்வளவு நேரம் வெளிவாசல் டானாக்காரர்கிட்டயே நிக்றது? உள்ளே நடந்தேன்” “கொண்டு வந்த மீன் கழிவுகளை ஸ்டேஷனுக்குள்ள விசிறியடிச்சே” “அஞ்சு கிலோ இருக்கும். கழிவுகளைக் கொட்ன பிறகு ஸ்டேஷன் பூராவும் கலீஜான நாத்தம்.. மீன் மார்க்கெட் அட்மாஸ்பியரை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வந்திட்டேன்ல்ல..” “அட்ரோஸியஸ்..” “டைரக்டர் அட்லி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..” “ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மரியசூசை ஓடிவந்து, ‘ஏய்யா மீன் கழிவுகளைக் கொட்டின?’ அப்டின்னு கோபமா கேட்டார்” “பழைய ரயில் கரி இன்ஜின் போலப் புசுபுசுத்தார்” “அவரை நீ என்ன பண்ணின?” “அவரை மடிலபோட்டு ரோரோன்னு கொஞ்சினேன்” “பொய்.. அவரைத் தாறுமாறா அடிச்சு, சட்டையைக் கிழிச்சு, தலைமுடியைப் பிய்ச்சு, அவர் மூஞ்சில சாணிய அப்பிட்ட… இன்ஸ்பெக்டர் ஐஸியூல இருந்து போன வாரம்தான் டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்டேஷன் ஆளுக வந்து உன்னையும் இன்ஸ்பெக்டரையும் விலக்கிவிடலைன்னா இன்ஸ்பெக்டர் அடி தாங்காமச் செத்திருப்பார்” “என்னை ரொம்பப் புகழாதிங்க பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்” “நீ வெளிவாசல் டானாக்காரரைத் தொந்திரவு பண்ணினது, இபிகோ 353 பிரிவின்படியும் இன்ஸ்பெக்டரைத் தாக்கிக் கொல்ல முயன்றது இபிகோ 307 பிரிவின்படியும் குற்றம். இதோட உன் க்ரைம் நின்னுச்சா? இல்லையே…” “எதையும் அரைகுறையா செய்றது என் பழக்கமில்லை” “ஸ்டேஷனுக்குள்ள இருந்த பெண் போலீஸைக் கட்டியணைச்சு இங்கீலிசு முத்தம் கொடுத்திருக்க.. பெண் போலீஸிடம் அத்து மீறி, பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணின. அந்தப் பொண்ணு வாங்கின முத்தத்தோட தப்பிச்சு ஓடிருச்சு” “அந்தப் பொம்பளை போலீஸ் எனக்குப் போதிய ஒத்துழைப்புத் தரல… ரேப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” “பணியில் இருந்த பெண் போலீஸைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இபிகோ 376 பிரிவின்படி ஏழுவருடக் கடுங்காவலுக்குரிய குற்றம். பெண் போலீஸின் கழுத்துச் செயினைத் திருடினாய். இது இபிகோ 511 பிரிவின்படிக் குற்றம்..” “அந்தப் பெண் போலீஸ் மாடு கட்டுற கயிறு மாதிரி இருந்துச்சு. அந்தச் செயினை விலைக்கா வாங்கிப் போட்டிருக்கும்? லஞ்சம் வாங்கித்தான் போட்டிருக்கும். அதான் லஞ்சப் பொருளைப் பறிமுதல் பண்ணினேன்…” “உன் அடுத்த க்ரைம்.. எழுத்தர் மேஜைக்கு ஓடி அவரின் கம்ப்யூட்டரை உடைத்தாய். அவரின் மேஜையிலிருந்த கோப்புகளைக் கிழித்துப் போட்டாய்..” “போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லேன்னா ஆட்டோமாட்டிக்காக குற்றங்கள் குறைஞ்சிடும். ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டான். நேஷனல் பெர்மிட் லாரிக்காரன்கள் நிம்மதியா லாரி ஓட்டுவான்க. நடைபாதை வியாபாரிகள்கிட்ட கோயில் யானை மாதிரி பிச்சை கேட்பது நின்றுவிடும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்காது..” மாஜிஸ்டிரேட் குறுக்கிட்டார். “விட்டா நீதிமன்றங்களும் தேவை இல்லைன்னு சொல்வ போல…” “நீதிமன்றங்கள்ல நேர்மை இருந்தா சாமானியர்களுக்கு எளிமையா நீதி கிடைச்சிரும். ஆனா அதனால நமக்கென்ன லாபம் மொதலாளி? இதுல தொழில் ரகசியம் என்னன்னா.. கி.. கி.. கி..” உசிலைமணியைப் போலவே மிமிக்ரி செய்து நீதிபதியை நக்கல் அடித்தான் ராக்கப்பன். “உன் பேச்சு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971இன் பிரிவு 2(சி), உன் துர்நடத்தைக்குத் தகுந்த தண்டனை தரும்” பப்ளிக் பிராஸிக்யூட்டர் தொடர்ந்தார். “காவல்நிலையப் பணிகளைச் செய்ய விடாதது, காவல்நிலைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை இபிகோ 425இன் படி குற்றம்” “குற்றம் குற்றம்னு ஏன் பினாத்றீங்க?” கத்தினான் ராக்கப்பன். “இதோட குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனின் குற்றங்கள் முடிவடையவில்லை. லாக்கப் ரூம் சாவியை எடுத்துத் திறந்து, லாக்கப்பில் இருந்த ஆறு கைதிகள் தப்பித்து ஓட உதவியிருக்கிறார்” “உங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா ராக்கப்பன்?” “ஒத்துக்கிட்டா அவார்டா தரப் போறீங்க?” “நேரடியான பதில் தேவை…” ராக்கப்பன் சார்பாக வாதாடும் வக்கீல் எழுந்தார். “யோவ் தேங்காமூடி வக்கீல்… நீ எனக்காக வாதாடி இன்னும் தண்டனையைக் கூட்டிராத. கம்னு உக்காரு” மாஜிஸ்டிரேட் ஒருகணம் யோசித்தார். “மிஸ்டர் பிபி, அக்யூஸ்ட்டின் நடவடிக்கைகள் முழுக்க மனநிலை பிறழ்ந்த ஒருவரின் நடவடிக்கைகளாகத் தெரிகிறது. நாம் ஏன் இவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது?” “ஏய் ஜட்ஜு.. யாரைப் பாத்து மென்டல்னு சொன்ன? நீதான் மெண்டல். நான் நல்லாத்தான் இருக்கேன்.. என்னால வேணுமின்னா பத்து பேரு மெண்டல் ஆவானுக” “போலீஸ் உன்னை அடித்தார்களா?” “அவனவன் பொண்டாட்டிக மேல இருந்த கோவத்தை என்னை அடிச்சுத் தீர்த்துக்கிட்டான்க. நான் வடிவேலுமாதிரி. என்னை ஆயிரம் அடி அடிச்சாலும் நல்லா இருந்துச்சு மசாஜ்னு எந்திரிச்சு வந்திருவேன்..” “உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” “நான் பரிதாபப்படச் சொன்னேனா? நீ உன் வேலையப் பாரு மாஜிஸ்..” “உன் தண்டனையைக் குறைக்கலாமா?” “எதுக்கு? இபிகோ என்ன சொல்லுதோ அந்த தண்டனைகளை என் மீது விதிச்சிட்டுப் போ..” மாஜிஸ்டிரேட் தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “இபிகோ 353, 376, 425, 511 மற்றும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி)இன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனுக்கு மொத்தமாக 17 வருடக் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை…” “டாங்ஸ் மாஜிஸ் செல்லாக்குட்டி” “உனக்கு அப்பீல் செய்ய அவகாசம் வேண்டுமா? சொந்த ஜாமீன் தரட்டுமா?” “அய்ய.. நேரா என்னைப் புழலுக்கு அனுப்பு அம்மணி..” *** புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்தான் ராக்கப்பன். “என்னய்யா… நுணலும் தன் வாயால கெடும் என்பதுபோல, குற்றங்களை எல்லாம் பெருமையா ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு வந்திட்ட?” என்றார் வார்டன். “நான் போட்டு வைத்த ஜெயில் திட்டம் ஓகே கண்மணி” பாடினான் ராக்கப்பன். “என்னது.. திட்டம் போட்டியா?” “ஆமா.. திட்டம்தான். மூன்று வேளை ராஜ உணவு- வாரத்திற்கு ஒரு புது சினிமா- மாதம் ஒருமுறை மனைவியுடன் மூன்று மணிநேரம்- செல்போன் இன்கம்மிங் கால் வசதி- ஆறுமாதத்துக்கு ஒரு வாரம் பரோல்- ஏசி அறை ஈரோப்பியன் கிளாசெட்டுடன். சிறைக்குள் கிடைக்கும் வசதி வாய்ப்பெல்லாம், மாதம் நாப்பதாயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்காது. தினம் மீன்வெட்டிச் சுத்தப்படுத்திக் கொடுத்தா பிச்சைக்காசு இருபது முப்பது ரூபாதான் கிடைக்கும். அதனால திட்டம் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, வெரைட்டி வெரைட்டியா க்ரைம் செய்து கைதாகிவிட்டேன். அடுத்த 15-18 வருஷத்துக்கு நான் மாமியார் வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை.. செம என்ஜாய் கரோதான்” வார்டன் தோள்களைக் குலுக்கி அங்கலாய்த்தார். “அட கிறுக்குப் பயலே.. எனி ஹவ், அரச விருந்தாளிக்கு என் கண்ணிய வரவேற்பு..” வெல்கம் ட்ரிங்க்காகக் கொடுக்கப்பட்ட மட்டன் சூப்பைக் குடித்தபடி கண் சிமிட்டிய ராக்கப்பன் சொன்னான், “சுதந்திர தினத்திற்கு பீஃப் பிரியாணி போட்ருங்க..”

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை. இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது. தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு: பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன். 1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும். 2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம். 3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார். 4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார். 5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. 6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது. 7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.” 9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள். இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். 10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு? 12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும். கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)