வேர்களாகும் விழுதுகள்
டிங்டிங் டிங்டிங் டிங்டிங்
மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான கிராமத்து சிறுமி ஒருத்தி “ஆலமர விழுதில நான் தூளி கட்டி ஆடனும்” என அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. 
என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த ஆலமரம். மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான் இதில் பல இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும். ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். 
குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா? கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின் சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள் கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.
தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம் 59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது? இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன். ஆதி கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன். 
இது போன்றே, ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள் மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான் பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.
“துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு பதிவு செய்ததேயில்லை. 
‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி. அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன் வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான் சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.


ஆனால் இலக்கிய உலகில் ஆண் சாதனையாளர்களின் புத்தகங்களும், ஆண்களின் சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன. ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது. உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ, பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில் தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.
ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும் கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால் கட்டப்பட்டன. பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும் நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. 
இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர். குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி, குலதெய்வமாய் வழிபடப்படும் பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும். .
ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும் துணிவையும் ஆணிவேராகக் கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.

சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு, குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய் மாறிய நிகழ்வுகள் குறித்தே பேசப் போகிறோம். ‘போதும் பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம். வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.
பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும் இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள் வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். 
ஏற்கனவே சமகாலத்தில் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த, மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம்.
இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக, அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம்.
பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி.
கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி
படங்கள்: இணையத்திலிருந்து
J.RAJARAM PANDIAN
August 4, 2021அருமையான வார்த்தைகள், அற்புதமான முன்னெடுப்பு ரமாதேவிக்கு வாழ்த்துக்கள்!!!
தஞ்சிகுமார்
August 5, 2021ரமாதேவி ரத்தினசாமியின் ‘ வேர்களாகும் விழுதுகள்’ பெண்ணியம் பற்றிய அருமையான கட்டுரை.ஒவ்வொரு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் வேர்கள்.
banurekha
August 6, 2021அருமையான கட்டுரை ரமாதேவி மேம்.
banurekha
August 6, 2021அருமையான கட்டுரை.வாழ்த்துகள் ரமாதேவி மேம்
தனம் ரகோத்தமன்
August 8, 2021அருமையான எளிமையான சொல்லாடல்.வாழ்த்துகள் ரமா