அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்
‘ஆண்களைப் போலவே சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று பெண்கள் தங்கள் கருத்துக்களை, அவர்கள் அனுபவத்தில் கண்ட அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாதிடுவது இயல்பான ஒன்று. குர்ஆன் மற்றும் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ள பாகிஸ்தானின் ரிஃபத் ஹாசன் (1943), அமெரிக்காவின் அமினா வதூத்-முஹ்சின் (1952), மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸ்ஸி (1940), எகிப்து நாட்டின் நவல் எல் சாதவி (1931) போன்ற பெண்ணியவாதிகளின் எழுச்சி, இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் இயக்கம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதற்குச் சான்று. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்ணியவாதிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? சமகால இஸ்லாமிய உலகின் சீர்திருத்தச் சிந்தனையாளரான ஆண் பெண்ணியவாதிகளில் ஒருவரான அஸ்கர் அலி இஞ்ஜினியர், ஆண்-பெண் சமத்துவம், திருமண உரிமைகள், ஹிஜாப் போன்ற பல விஷயங்களில் குர்ஆனின் அடிப்படையில், விளக்கங்கள் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். இஸ்லாமிய சமுதாயத்தில் அதற்குப் பெரும் பங்கு வகித்தவர் அஸ்கர் அலி இஞ்ஜினியர். முனைவர். அஷ்கர் அலி இன்ஜினியர், 1939 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகிலுள்ள சலும்பரில் பிறந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து இளம் பிராயத்திலேயே இஸ்லாமியக் கல்வியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். அரபு மற்றும் பாரசீக மொழிகளையும் இதற்காகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்த இரு மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். அவரது இளம் வயதிலிருந்தே, அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக் காட்டினார். அவர் ‘ஆசியாவின் எஸ்பினோசா’ (Espinoza) என்று மேனாள் இந்தியத் துணை ஜனாதிபதி முனைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மற்றும் அது கூறும் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றி எப்பொழுதும் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இருபது ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றார். அஷ்கர் ஒரு எழுத்தாளராக நாட்டில் அமைதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அசாத்தியத் துணிச்சலுடன் செயல்பட்டவர். சமூகம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவர். அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து உலக மதச்சார்பின்மையின் போக்குகளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவரது சுயசரிதை நூலான ‘A Living Faith: My Quest for Peace, Harmony and Social Change’ 2011 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியத் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது அரும்பணி அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத நல்லிணக்கத்திற்கான அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசாங்கம் 1997-இல் அவருக்கு ‘வகுப்புவாத நல்லிணக்க’ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்புவாத வன்முறை மசோதாவை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் தம் பங்களிப்பைச் செலுத்தினார். “அஸ்கர் சமகால இஸ்லாமிய உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, அதே சமயத்தில் எளிதில் அணுகக்கூடிய சீர்திருத்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று பன்முகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர், மொஹமத் இம்ரான் மொஹமத் தயிப் மேற்கோள் காட்டியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தில் சீர்திருத்தம் குறித்த பிரச்சனைகள் பற்றிய அவரது கருத்துக்கள், முஸ்லீம் சட்டம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியப் பங்களிப்பாகும். ஆயினும், அவை உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களில் காணப்படும் அடிப்படைவாத மீளுறுதிப்பாட்டின் கருத்தாடலினால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, மேற்செல்ல முடியாத நிலையை அனுபவித்துள்ளது. இஞ்ஜினியர், உலகெங்கிலும், அனைத்து சமூகங்களுக்கிடையில் பெண்-நிலை பெற்ற முக்கியத்துவம் குறித்துத் தனது மிகுந்த கவனத்தை செலுத்தினார். அஸ்கரின் கூற்றுப்படி பல விஷயங்கள், குறிப்பாக சமூகத்தின் நிலை மாறியுள்ளன. எனவே, மதநூல்களின் வசனங்களையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கருதினார். மற்றொரு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், அடிமை நிலைக்கு தெய்வீக சட்டங்களின் தத்துவங்கள் இனி பொருந்தாது என்று அவர் தீர்ப்பளித்தார். இவ்வாறாக, சமய மறைகள் கைவிடப்பட்டு, மதச்சார்பற்ற அடிப்படையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது நவீன நிலைக்கு ஏற்றவாறு அவற்றை மீள் வாசிப்பு செய்து மறுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்றார். அதே சமயத்தில், ‘அர்ரிஜாலு கவ்வாமுனா அலனிசா’ (arrijaalu qawwamuuna alannisaa) என்ற குர்ஆனின் வசனம் பெண்களை ஒடுக்கி ஆண்களின் கீழ் நிலையில் வைக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த வசனம், பெண்கள் மீது கடுமையாக உள்ளதாக அவர் கருதினார். ஆனால் ‘பெண்கள் தங்கள் வீடுகளில் பிணைக்கப்பட்டிருந்த காலங்களில், ஆண்களே அவர்களுக்குத் தேவைகளை வழங்குபவர்களாக இருந்தனர்’ என்கிற அக்காலச் சூழலையும் பார்க்கிறார். எனவே, குர்ஆன் அத்தகைய சமூக அமைப்பை மகிமைப்படுத்தவோ அல்லது அதை நெறிமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் நிகழும்போது, பெண்கள் ஆண்களுடன் இணைப் பங்காளிகளாகும்போது, பெண்கள் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவளாகவோ ஆக வேண்டும்; மேலும் ஆண்களைப் போலவே குடும்பத்தில் மேலோங்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றுரைக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டாக, திருமண விஷயத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர், இருவருடைய நிலையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பெண்களை விட சிறப்புரிமை ஏதுமின்றி, மாறாக, ஆண்களை விடவும் பெண்களுக்கும் எவ்விதச் சலுகையுமின்றி, சமமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கடவுளால் வேண்டப்படுவனவற்றை மீறாதவரை, ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியபடி மண ஒப்பந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. விவாகரத்து உரிமை (talaq tajwiz) உட்பட, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்துடன் அவள் அந்த உடன்பாட்டில் ஈடுபடலாம். உண்மையில், பாதுகாவலர் (guardian) என்ற கருதுகோளையே குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்; ஒரு பெண் அவள் தெரிவு செய்யும் பட்சத்தில், ‘பாதுகாவலர்’ யாருமின்றி மணம் செய்து கொள்ளச் சுதந்திரம் உள்ளது என்கிறார். ‘இஸ்லாமிய அமைப்பு, அதன் சட்டதிட்டங்களின் படி, பெண்களின் நிலைக்கு ஒரு சாபம்’ என்று சொல்லும் மதச்சார்பற்ற பெண்ணியவாதிகள், இஸ்லாத்தை ஒரு ஒடுக்குமுறையாகச் சித்தரித்து, மேற்கத்திய மதச்சார்பற்ற மாற்றுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை மதக்கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். குர்ஆனின் முறையான விளக்கத்தைப் பார்க்கும்போது, பெண் விடுதலையைப் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு பிரச்சனையா அல்லது தேவையா? பெண் விடுதலை இஸ்லாத்திற்கு இயைந்ததா? இல்லையா? என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இஸ்லாத்தின் பார்வையிலிருந்து, பெண் விடுதலையைக் காண்பதற்கான விளக்கங்கள், பெண் விடுதலைக்கான சிந்தனை எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார். இன்றைய சமூகம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை தொடர்பான சமகாலப் பிரச்சனை இஸ்லாமிய சமூகம் முழுவதும் பரவலாகப் பரவியுள்ளது. எனவே, இந்த நவீன யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ற விளக்கத்தை, அந்தச் சமூகமே பயன்படுத்திக்கொள்ள, மதிப்புமிக்க பங்களிப்பை அஸ்கர் அலி இஞ்ஜினியர் வழங்கிவிட்டு, அழியாச் சுவடுகள் பதித்துச் சென்றிருக்கிறார். ஆனந்த் பாசு