கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா?

நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது.

காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன.

கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன.

இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது.

இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன.

1. இலஞ்சி மன்றம்

கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்!

“கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம்.

இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2. பாவை மன்றம்

அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் !

“அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்”

– இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம்

இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன.

3. நெடுங்கல் நின்ற மன்றம்

பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்!

இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம்.

வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்!

– இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம்

இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார்.

இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன.

கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது.

இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன.

சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது.

பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள்.

தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன.

கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ.

பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

  • செந்தில்குமார் தீனதயாளன்

Comments (6)


சுதாகரன்
சுதாகரன்
June 14, 2023

கருபொருள், உள்ளடக்கம் சிறப்பு

நாகை.மு.ரமேஷ்குமார்
நாகை.மு.ரமேஷ்குமார்
June 14, 2023

அருமையான கட்டுரை…

கலைஞரே கண்டுகொள்ளாததின் காரணம் என்னவாக இருக்கும்….?

சுவடு மன்சூர்
சுவடு மன்சூர்
June 14, 2023

மண்ணின் மைந்தர் செந்தில்குமார் தீனதயாளன் எழுதிய கட்டுரை அருமை.. தொடர்ந்து எழுதுங்க சார்..
❤❤❤

Rajarajan
Rajarajan
June 14, 2023

நல்ல விவரங்கள். நன்றி

ம. செம. மோகன் ராஜா
ம. செம. மோகன் ராஜா
June 14, 2023

விரைந்து பூம்புகார் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று நம்புவோம்.

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

So pathetic!

பேனா சிலைக்கு பதிலாக இந்த மாதிரி பாழடைந்த வரலாற்றை மீட்டு கலைஞரின் புகழ் பரப்பலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *