இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)
நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://hexamedia.in/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கான பிரிவு 18 பயன்படுத்தப்படுகிறது. என்.ஐ.ஏ.வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றிலெல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை; சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஊபா வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ஊபா வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018இல் 16.32%, 2019இல் 32.08%, 2020இல் 16.88% பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர். ஊபா வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57 (2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ஊபாவில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே. மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கடந்த 2022 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், ’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வழக்கமான சட்ட நடைமுறைக்கு முரணாக, ‘மெய்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல’ என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ஊபா. ஊபா சொல்லும் ‘அதிருப்தி’ என்றால் என்ன? இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது. இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ அல்லது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம். யாரைத்தான் விட்டுவைத்தது ஊபா? மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில், கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக, பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை நின்றவர்கள், தலித் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், அருட்தந்தை ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது. பீமா கோரேகான் வழக்கில் மூன்று முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதிய புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதி செய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருன்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா ஜார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்பால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா உள்ளிட்ட மாணவர்கள் ஊபாவின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர். ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராஜ்தீப் சர்தேசாயும் வினோத் கே ஜோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக் ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்மீது ஊபாவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் கப்பான்மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது. பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின்போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு. அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட விரோதச் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள் மற்றும் பிற பழங்குடிகளை இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். ஜார்க்கண்டின் மஸ்தூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இஸ்லாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்காக வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தெலங்கானாவைச் சேர்ந்த 9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களைச் சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இஸ்லாமியர்கள் ஒருபக்கம். இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொரு பக்கம். இந்துத்துவத்தின் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரி அமைப்பினர், உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஊபா கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14, வாழ்வுரிமையையும் ஆள்வகைச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும். பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப்போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது. தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறு செய்யக்கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதை, ஒன்றிய ’காவல்துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டுவரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ.வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை நடத்திய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலைன் 2015 ஜூன் 25 அன்று தெரிவித்தார். இவ்வாறாக, ஊபா சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மக்கள் அமைப்பாகத் திரள்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என்பது எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, அவர்களை முற்றாக முடக்கிச் சிறையில் அடைத்துவிட வழிவகை செய்கிறது. என்.ஐ.ஏ. அமைப்பானது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் துணை போவதாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இவ்விரண்டுக்கு எதிராகவும் இவற்றை முற்றாக அகற்றவும் குரல் எழுப்புவதும் செயல்படுவதும் தற்போதைய முக்கியத் தேவையாகும்.