இரவின் நிழல்
திரை விமர்சனம்‘பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்தான் என்னை எல்லா வயசிலேயும் விரட்டிக்கிட்டே இருந்தது ; சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனால் தீரும், சில பாவங்கள், செய்யறவா கங்கையோடு போனாலும் தீராது; வெதச்சுது எல்லாம் முளைக்கும்டா, பாவம் உட்பட’ – சுருக்கமாகச் சொன்னால் இதுதான், ‘இரவின் நிழல்’. நந்து (பார்த்திபன்) – காட்டமாகச் சொன்னால், கந்து வட்டிக்காரன்; கண்ணியமாகக் கூறினால், பைனான்சியர். குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான, கரடுமுரடான அவனது வாழ்க்கையை, வேதனையை, சுரண்டலை, பஞ்சமா பாதகங்களை, ஆஷாடபூதித்தனம் இல்லாமல், அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்துள்ள ‘இரவின் நிழல்’ எனும் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் கதை. இதனை ‘டார்க் ஸ்டோரி’ என்றால் அது நகைமுரண். நந்துவின் வாழ்க்கைப் பாதையில் இடையிடையே பயணிக்கும் அம்மா ராணி (ரேகா நாயர்), சந்துரு (நந்து), ஆனந்த கிருஷ்ணன் (நந்து), காதலி லட்சுமி (சினேகா), மனைவி சிலக்கம்மா (பிரீகிடா சகா), பார்வதி (சாய் பிரியங்கா ரூத்), பிரேம குமாரி (வரலட்சுமி சரத்குமார்), சாமியார் பிரேமானந்தா (ரோபோ சங்கர்) ஆகியோர் துணைப் பாத்திரங்களாக மட்டுமல்லாது, நந்துவின் பாத்திரப் படைப்புக்கு உறுதுணையாகவும் நிற்பது சிறப்பு. சிலக்கம்மா (பிரீகிடா சகா) கலக்கலம்மா ! பொதுவாக, விருப்பப்பட்ட வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. அமைந்த வாழ்க்கையை, கிடைத்த வாய்ப்புக்கேற்ப செப்பனிட்டுக்கொண்டு, அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதுதான், எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கின்றது. நந்துவின் வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை ; அப்படியான வாழ்க்கைக்குத்தான், நந்து தேர்வானான். பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் விரட்ட முடியாத இடத்தை அவன் அடைந்து, மனதில் குற்ற உணர்வும் அன்பு மயமான வாழ்க்கையும் ஒருங்கே முகிழ்த்து, நடக்கும் போராட்டத்தில் பலியாவது நந்து, பிழைத்து நிற்பது மனிதம். இவற்றை ‘செல்லுலாய்ட்’டில், நான்-லீனியர் சிங்கிள் ஷாட் மூலம், தொய்வில்லாமல் வழங்க பார்த்திபன் மிகவும் மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. வெற்றியும் பெற்றுள்ளார். நான்-லீனியர் சிங்கிள் ஷாட் குறித்த புரிதலை ஏற்படுத்த, படத்தின் முதல் அரை மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் படத்திற்கான வாய்ஸ் ஓவர் தவிர்த்து, அந்தத் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கான வாய்ஸ் ஓவராக அமைந்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். படத்திலும்கூட வாய்ஸ் – ஓவர்தான்; என்றாலும், இதில் காட்சிகளின் நீள அகலங்களுக்கு வாய்ப்பில்லாததைக் கணக்கில் கொண்டால், இதைத் தவிர்க்க முடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். பாவம் என்கிற ஒரு வட்டத்துக்குள்தான் நந்துவின் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டது போல, மீண்டும் மீண்டும் அவனது காரியம் ஒவ்வொன்றையும் பாவமாகவே வரித்துக் கொண்டு வருகிறது, கதை. நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, அவன் விற்கும் கஞ்சா காசுதான், அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சுகபோக வாழ்க்கை வாழ வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். ஏசியா புக் ஆப் ரிகார்ட்ஸ், இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ் இரண்டிலும், ‘இரவின் நிழல்’ ‘முதல் ஏசியன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக முத்திரை பதித்த பார்த்திபனின் இந்தச் சாதனைக்கான கடும் உழைப்புக்கு, ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசையும், ஆர்தர் வில்சனின் பிரமிப்பான ஒளிப்பதிவும் பக்கா பலம். கலை இயக்குநர் விஜய் முருகனின் உழைப்பும் வீண் போகவில்லை. ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ குறித்த புரிதலுடனான அனுபவத்திற்கும், வாலிபக் கவிஞர் வாலி போன்று, பார்த்திபனின் வார்த்தை ஜாலத்தைச் சுகிக்கவும், பொதுவாக எலைட் சமூகம் முகம் சுளிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றிய ஆபாசம் உட்பட ஆசாபாசங்களை, வலிகளை உணரவும், தூக்கம் தொலைத்த ஓர் இரவு வாய்க்கவும் வாய்ப்பளிக்கிறது, பார்த்திபன் இராதாகிருஷ்ணனின் ‘இரவின் நிழல்’. மதிப்பெண் : 8.5/10 மது ராஜேந்திரன்