தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது. இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://hexamedia.in/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு 14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல் மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல் தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால் பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.