குருதி
திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா). இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும் மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை, மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும், கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்), அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று, குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான் நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால் வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச் செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்” “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு, ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ” “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப் படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம். அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி, சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில் பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும் எவர் மனதிலும் இப்படி மின்னுவதும் இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து