திருப்பூர் எனும் திருப்புமுனை -7
போட்டி உற்பத்தியாளர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம் நாட்டில் வேறு எங்கெல்லாம் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது எனப் பார்ப்போம், சென்னை, கர்நாடகா, மகாராஷ்டிரா, லூதியானா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பின்னலாடைகள் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திருப்பூர் மட்டுமே 55% அளவுக்கு நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் உற்பத்திக்கான பங்களிப்பைச் செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது, சீனா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மார், சில ஆப்பிரிக்கா நாடுகள், பெரு, பிரேசில், துருக்கி, போர்ச்சுகல், ஜோர்டான் உள்ளிட்டவை இந்தியாவில் உற்பத்தியாகும் பின்னலாடை வகைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். உலக ஜவுளித் தேவையில் சீனா 35% பங்களிப்பை வழங்குகிறது. பங்களாதேஷ் 8%, வியட்நாம் 7%, இந்தியா 3.8% பங்கினை அளிக்கின்றன. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக, பருத்தி சார்ந்த ஆடைகளே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் பஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன. 1960களின் இறுதிவரை, உள்நாட்டுப் போர், கலவரம், நிலையில்லாத் தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சீனா, அமெரிக்க ஆக்கிரமிப்பினால் மிகுந்த இன்னலுக்கு உள்ளான வியட்நாம், இந்தியாவின் முயற்சியால் 1971இன் இறுதியில் தனி நாடு அந்தஸ்தைப் பெற்ற பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நாளது தேதியில், ஏறத்தாழ உலகின் ஜவுளிச் சந்தையின் சரி பாதியைத் தங்களிடம் வைத்துள்ளன. 1990களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து மட்டுமே ஆயத்த ஆடைத் தயாரிப்பை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ், இன்றைய தேதியில் பஞ்சை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயாரித்து அனுப்புமளவிற்குத் தனது கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. வியட்நாமைப் பொறுத்தவரை அதன் ஆடை உற்பத்தித் தேவைக்கான துணிகளை 8% மட்டுமே தனது நாட்டில் தயாரிக்கிறது. மீதமுள்ள 92% அளவிற்கான நூல் மற்றும் துணிகளை, சீனா, இத்தாலி, துருக்கி, பங்களாதேஷ், இந்தியா, தைவான், கொரியா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தே ஆடை உற்பத்தியை மேற்கொள்கிறது. பல உள்நாட்டுக் குழப்பங்களால் அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் பாகிஸ்தான், சிறுகச் சிறுகத் தனது ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தி, இன்று குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள், பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் தொழில் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதோடு, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரி இல்லாமல் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒருபுறம்; உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தாலும் பல்வேறு இன்னல்களை இந்தியாவிற்குக் கொடுத்துள்ளது என்பதை மறுக்கவியலாது. உதாரணத்திற்கு, இங்குள்ள ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல மானியங்களை மத்திய அரசு வழங்கி வந்த காரணத்தால், தொழில் நன்றாக வளர்ந்தது. உலகத் தேவைக்கு 3% அளவிற்கும் தனிநபர் வருவாய் 1000 அமெரிக்க டாலர் என்கிற அளவினை எட்டும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிலுக்கு வழங்கி வரும் மானியங்களைப் படிப்படியாக குறைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையைப் பின்பற்றவில்லை என்று, ஐ.நா.வில் இந்தியாவை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசு, 8 ஆண்டுக் காலம், இயன்ற அளவு மானியங்களை வழங்கியே வந்தது. சீனாவைப் பொறுத்தமட்டில், அங்கு பருத்தி ஆடைகள் தவிர்த்து, செயற்கை நூலிழை எனச் சொல்லப்படும் பாலியஸ்டர், நைலான், ரேயான் உள்ளிட்ட ஆடைகள் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலும் இவ்வாறான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பாலியஸ்டர் ஆடைகள் வடமாநிலங்கள், குறிப்பாக லூதியானா மற்றும் சூரத்தில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. அதுவும் உள்நாட்டு விற்பனைக்கே அதிகம் அனுப்பப்படுகிறது. இது தவிர, அக்ரிலிக், வூல் உள்ளிட்ட ஆடைகளும் சீனாவில் அதிகளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறனை எடுத்துக்கொண்டால், நாம் மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். அதேபோல் ஒரு தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு ஏற்ப ஆட்களின் பங்களிப்பு என்பது 1 இயந்திரத்திற்கு 1.15 என்கின்ற அளவிலே உள்ளது. இது பங்களாதேஷ் மற்றும் வியட்னாமிற்கும் பொருந்தும். அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு இயந்திரத்திற்கு இரு ஆட்கள் என்கிற அளவு உள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரை, சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நிர்ணமாணிக்கப்பட்ட தொழிற்சாலைக் கொள்ளளவிற்கு 80% அளவு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்தியாவில் இது 40% அளவே உள்ளது. ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஒதுக்கீடு அதாவது கோட்டா முறையிலேயே ஏற்றுமதி செய்ய இயலும். இது அனைத்து உற்பத்தி நாடுகளுக்கும் பொருந்தும். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா ஒருங்கிணைந்ததல்ல. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் என, தனித்தனி நாடுகளாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தனி ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி நாட்டு அரசும் இறக்குமதி நாட்டு அரசும் இந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்வர். அதன் அடிப்படையில் உற்பத்தி நாடுகளின் அரசு, தனது துறைசார் அலுவலகத்தின் வாயிலாக இந்த ஒதுக்கீடுகளை, சீரிய காலகட்டத்தில் ஏல அடிப்படையில் வெளியிடும். அதிக மதிப்புக்கூடிய ஆடைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த ஒதுக்கீடுகளைப் பெற்று ஏற்றுமதி செய்வர். 2004ஆம் ஆணடுக்குப் பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டு, 2005 முதல் தாரளமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய நாடுகள் சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் என்பதைத் தரவுகள் விளக்கும். திருப்பூரின் கட்டமைப்பு மட்டுமே பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பல்வேறு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பை நாட்டின் பிற பகுதிகளில், அவ்வளவு ஏன், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில்கூட ஏற்படுத்த இயலாமல் போனது. இதை உள்ளபடியே பெரும் அவலமாகவே கருதவேண்டும். குறைந்தபட்சம் நாடு முழுவதும் 20 திருப்பூர் அமையப்பெற்றிருந்தால், வர்த்தக வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரச் சூழலும் பறந்து விரிந்திருக்கும். பல மாநிலங்கள் இன்றளவும் முயன்றாலும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதும், இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுடன் அணுகினால், பல திருப்பூர்களை உருவாக்க இயலும் என்பதே நிதர்சனம். ஏற்றுமதிக்கான ஆடைகள் பெரும்பாலும் கப்பல் வழியாகவே இறக்குமதி நாடுகளுக்கு அனுப்பப்படும். காலக்கெடு தவறியோ அல்லது இறக்குமதி நிறுவனத்திற்கு உடனடித் தேவை என்கிற நிலையிலோ விமானம் வாயிலாக அனுப்பப்படும். பெரும்பாலான விமானம் வாயிலான சரக்குப் போக்குவரத்து சென்னை, பெங்களூரு, கொச்சின், மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் வாயிலாகச் செல்லும். கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகங்கள் வாயிலாகச் செல்கின்றன. தூத்துக்குடியைப் பொறுத்தமட்டில் மதர் வெஸ்ஸல்ஸ் எனப்படும் பெரிய கப்பல்கள் வருவதற்கான வாய்ப்பில்லை. அதனால் இங்கிருந்து சிறு கப்பல் வாயிலாக இலங்கைத் துறைமுகம் சென்று, சீனாவிலிருந்து புறப்பட்டு வரும் மதர் வெஸ்ஸல் வாயிலாக அனுப்பப்படும். மும்பை, கொச்சி, முந்த்ரா துறைமுகங்களுக்கு மதர் வெஸ்ஸல்ஸ் வருகின்றன, இந்தியாவிலிருந்து கப்பல் வாயிலாக அனுப்பப்படும் சரக்குகள் ஐரோப்பியத் துறைமுகங்களை அடைய 20 முதல் அதிகபட்சம் 30 நாட்களும் அமெரிக்காவிற்கு 28 முதல் 55 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன. விமானம் வாயிலாகச் செல்வதற்கு 2 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. ஒருவழியாக என்னால் இயன்ற அளவு, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலின் தோற்றம் மற்றும் அதன் கட்டமைப்பு, கடந்துவந்த பாதை குறித்து விவரித்துவிட்டேன். இனி நிகழ்கால நிலை, இடர்ப்பாடுகள், சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்தான பார்வைகள் குறித்து அடுத்த பகுதியிலிருந்து பேசுகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியும் அன்பும்.