கரைசேராப் படகுகள் – 7
தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம் முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை; “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை. “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம் “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள் மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு, நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்