பொன்னியின் செல்வன் – 19
நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் ஆயுதம் மறைந்திருக்கும். நண்பர்கள் போலச் சூழ்ந்திருக்கும் எதிரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று அறிவுரைகள் கூறிவிட்டு, தான் திருக்கோவலூர் சென்று வெண்ணாற்றங்கரைக்குப் படையுடன் திரும்பிவருவதாகச் சொல்லி வருத்தமுடன் விடைபெற்றார். வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அந்த மழைக்கால கொள்ளிட நீர்ப்பெருக்கில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டார்கள். மேற்கொண்டு செல்லக் குதிரையில்லாமல் கடம்பூருக்கு அருகில் நடந்தே வந்து சேர்ந்தனர். ஆதித்த கரிகாலர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை எனத் தெரிந்துகொண்டார்கள். கோட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஐயனார் கோவில் ஒன்றைக் கண்டதும் இரவை அங்கேயே தங்கிக் கழித்துவிடலாம் என்று கோவிலை நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த மண் குதிரைகளில் ஒன்று நகர்ந்தது. அதன் பிலத்தில் இருந்து, கடம்பூர் மாளிகையின் சேவகனும் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவனுமான இடும்பன் காரி எழுந்து வருவதைப் பார்த்து இருவரும் ஒருபுறம் மறைந்துகொண்டனர்.அவன் கோவிலுக்குள் விளக்கேற்றி வைத்ததைப் பார்த்ததும் இங்கே யாரேனும் வருவார்கள் என ஆழ்வார்க்கடியான் கூறினான். வந்தியத்தேவன் வழக்கம்போல ஆர்வம் உந்த, அந்தப் பிலத் துவாரத்தில் இறங்கிப் பார்ப்பதாகக் கூறி அந்தத் துவாரத்துக்குள் சட்டெனப் புகுந்துவிட்டான். புகுந்த சற்று நேரத்தில் அந்தச் சுரங்க வழியை வெளியிலிருந்து இடும்பன் அடைத்துவிடவே சுரங்க வழி இருள் வழியாக மாறிவிட்டது. வெகுதூரம் சென்றபிறகு அந்த வழி சம்புவரையரின் அரண்மனையில் உள்ள ஒரு மண்டபத்தில் முடிந்தது. சுற்றிலும் காட்டு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்கள் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வல்லவரையன் முதலில் மிரண்டாலும் அது வேட்டை மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்களையும் ஆயுதங்களையும் சேர்த்து வைக்கும் மண்டபம் என்பதை அறிந்துகொண்டான். அங்கிருந்த யானை உருவம் ஒன்றின் தந்தத்தைத் தன்போக்கில் திருகியதும் சுவரில் ஒரு துவாரம் தெரிந்தது. அதில் எட்டிப்பார்க்க, ஒரு அழகிய பெண்ணின் முகத்தோடு முத்தமிடுவது போன்ற தோற்றத்தில் தன் முகமும் தெரிய, வந்தியத்தேவன் அதிர்ந்து போய்ச் சிலையாய் நின்றான். அந்தப் பெண் சிறிதாய் ‘கூ’வெனக் கூவினாள். இவன் பயந்து யானை மீதிருந்து கையை எடுக்க, துவாரம் பழையபடி மூடிக்கொண்டது. கந்தன்மாறனின் தங்கையான மணிமேகலைதான் அந்தப் பெண் என்று வந்தியத் தேவனுக்குத் தெரிந்துவிட்டது. மணிமேகலை கள்ளம் கபடு தெரியாமல் வளர்ந்த பெண். வந்தியத்தேவனைப் பற்றி அவளிடம் பெரிதாகப் பேசி அவன் மீது ஆசையை வளர்த்துவிட்டவன் கந்தமாறனே. பிறகு அவனே அரசியல் அழுத்தங்களில் சிக்கி வந்தியத்தேவன் நாடோடி என்றும் தன்னை முதுகில் குத்திய துரோகி என்றும் கூறி அவனை மறந்துவிடுமாறு கூறி வந்தான். பின்பு மதுராந்தகருக்கு அவளை மணம் செய்து வைப்பதாகப் பேசினார்கள். இப்போதோ விருந்தாளியாக வரப்போகும் இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு மணிமேகலையை மணமுடிக்கப் போவதாக கூறத் தொடங்கினார்கள் இந்தப் பேச்சுகளெல்லாம் முன்பொருமுறை கந்தன் மாறன் அந்தப்புரத்திற்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்திய வாலிபனின் உருவத்தைத் தன் நெஞ்சில் பதிந்து வைத்துக்கொண்ட மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை. அவள் இந்தத் திட்டங்களை மறுத்து வந்தாள். பழுவேட்டரையரும் இளையராணியும் வரப்போவதாகவும் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து, வரவிருக்கும் ஆதித்த கரிகாலனிடம் சமரசப் பேச்சு நடத்தப் போவதாகவும் அரண்மனையில் பேசிக்கொண்டார்கள். நந்தினி தங்குவதற்காக வேட்டை மண்டபத்தை அடுத்த அறையைத் தயார் செய்துகொண்டிருந்தபோதுதான் யானைமுகக் கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் தலைகாட்டிய வந்தியத் தேவனின் முகத்தை ஆடியில் பிம்பமாகத் தெரிந்த தன் முகத்தை முத்தமிடுவது போலான நெருக்கத்தில் பார்த்துக் கூவிவிட்டாள் மணிமேகலை. உடனே அந்த முகமும் மறைந்துபோய்விட்டது. தொடர்ந்து வேட்டை மண்டபத்தில் சந்தடிகள் கேட்டன. தன் தோழி சந்திரமதியை அழைத்து விளக்கு எடுத்துவருமாறு மணிமேகலை பணித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றாள். வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் இருந்து வெளிவர யோசித்துக்கொண்டிருக்கும் போது, இடும்பன் காரி ஒரு முதலையை வைத்து மூடியிருந்த ரகசிய வழியைத் திறந்துகொண்டு மேலே வருவதைப் பார்த்தான். உடனே வந்தியத்தேவன் ஒரு குரங்கின் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலை உள்ளே வருவதைப் பார்த்தவுடன் இடும்பன் காரி விலங்குகளைத் துடைப்பதுபோல நடித்தான். மணிமேகலை விசாரித்ததற்கு, தான் இங்கு வெகுநேரமாக இருப்பதாக இடும்பன்காரி கூற மணிமேகலை கதவைத் திறந்தபடி வெளியே சென்றுவிட்டாள். அப்போது இடும்பன்காரியைத் தொடர்ந்து பின்னே வருபவர்களின் பேச்சுச் சத்தமும் கேட்க, வந்தியத்தேவன் அந்தக் குரங்கு பொம்மையை இடும்பன்காரியின் மேல் தள்ளி அந்தத் துவாரத்தில் விழுமாறு செய்துவிட்டு யானையின் தந்தத்தைத் திருகி அந்தச் சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயன்றான். இடுப்பு வரை வந்தாலும் பாதிக்குமேல் வெளியே போக முடியாமல் தவித்தவனுக்கு மணிமேகலை கை கொடுத்து அறைக்குள் இறக்கிவிட்டாள். வந்தியத்தேவனிடம், ‘தன்னை முதுகில் குத்திய சிநேகத் துரோகி’ என்ற கந்தமாறனின் குற்றச்சாட்டை மணிமேகலை விசாரித்தாள். வந்தியத்தேவன் அதை மறுத்து, கந்தமாறனின் முன்னிலையில் இதைக் கேட்குமாறு கூறினான். கந்தமாறன் ஆதித்த கரிகாலனை அழைத்துவரப் போயிருப்பதாகவும் அவர்கள் வரும்வரை ஆயுத சாலையில் மறைந்திருக்குமாறும் மணிமேகலை கூறினாள். இதற்குள் வேட்டை மண்டபத்தில் நடமாட்டம் அதிகமாகக் கேட்க, அங்கிருந்த வாத்தியக் கருவிகள் வைத்திருக்கும் யாழ் களஞ்சியத்தில் மறைந்திருக்குமாறு சொல்லிவிட்டு மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் சென்றாள். அதற்குள் மணிமேகலையின் தோழி அறைக்குள் வந்து விடவே, வந்தியத்தேவன் யாழ் களஞ்சியப் படிகளில் ஏறத்தொடங்கினான். முடிவில் மேன்மாடத்திற்கு வந்துவிட்டான். முந்தைய முறை வந்தியத்தேவன் வந்தபோது, தான் படுத்திருந்த மேல் மச்சு அதுதான் என்று அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தான். அங்கிருந்த நிலா மாடத்திலிருந்து பார்க்கையில் கடம்பூர் அரண்மனை வாசலில் பெரிய பழுவேட்டரையரை ராஜோபசாரத்துடன் வரவேற்பது தெரிந்தது. மதிலைத் தாண்டிவிடுவோம் என்றெண்ணி ஒரு மூங்கில் கழியைப் பிடித்து ஏறி கோட்டை மதிலை விட்டு இறங்கியபோது தேவராளன் தன் நாயுடன் அவனைத் தாக்கத் தயாராய் இருக்க, வந்தியத்தேவன் அவன் மீதே குதிக்க, ஆழ்வார்க்கடியானும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து நாயையும் அவனையும் காட்டுக் கொடிகளால் கட்டிப்போட்டனர். மதிலின் ஓரமாகவே இருவரும் வெளியேறினார்கள். அச்சமயம் அங்கு வந்த கடம்பூர் வீரர்களின் குதிரைகளைப் பறித்துக்கொண்டு விரைந்தனர். ஆதித்த கரிகாலர் கோட்டையை நெருங்குவதற்கு முன்னமே அந்த வழியில் சென்று அவரைச் சந்தித்தார்கள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கண்டதும் மகிழ்ந்ததைக் கண்டு பார்த்திபேந்திரனும் கந்தமாறனும் அசூயை அடைந்தார்கள். கந்தமாறன் தன் முதுகில் குத்தியவன் எனக் குற்றம் சாட்ட, வந்தியத்தேவன் தானே அவனைக் காப்பாற்றியதாகவும் அவன் முதலில் எதற்காக பொக்கிஷ அறைச் சுரங்கத்தின் வழியே வந்தான் எனவும் யாரைக்கூட்டி வந்தான் என்பதையும் சொல்லுமாறு கேட்க கந்தமாறன் மெளனம் சாதித்தான். உடனே பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனுக்காகத்தான் இளவரசர் அருள்மொழி கடலில் குதித்ததாகவும் இப்பொழுது இவன் மட்டும் தப்பி வந்தது எப்படி என்று கேட்குமாறு குற்றஞ்சாட்டினான். வந்தியத்தேவன் அவனை முந்திக்கொண்டு, பார்த்திபேந்திரன் எப்படித் தனியாகக் கடலில் குதிக்க இளவரசரை அனுமதிக்கலாம் என்று திருப்பிக் கேட்க, ஆதித்த கரிகாலர் பெரிதாகச் சிரித்தார். ஒரு தருணத்தில் தன் கையிலிருந்த வேலால் கந்தமாறன் வந்தியத்தேவனைத் தாக்க முயல அந்த வேலைக் கரிகாலர் பிடுங்கித் தன் இரும்பையொத்த கரங்களால் முறித்துப் போட்டார். வியப்பாகப் பார்த்த அனைவரிடமும், தன் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளக் காரணம் இளையராணியின் மோகன சக்திதான் எனவும் தனக்கு அதைப் பற்றித் தெரியும் என்பதால் இத்துடன் இந்தப் பேச்சை நிறுத்துமாறும் கூறினார். ஆழ்வார்க்கடியானை முன்பே பார்த்திருப்பதாகக் கூறி விசாரிக்க, வீரபாண்டியன் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது மறைவிடத்திலிருந்து ஆதித்த கரிகாலருக்கு அந்த இடத்தைச் சொன்னது தானே எனக் கூறினான் திருமலை.ஆவேசமடைந்த ஆதித்த கரிகாலர் அவனை வெட்ட வர, வந்தியத் தேவன் குறுக்கிட்டு, அவன் முதன்மந்திரியின் தூதன் எனவும் அவருக்கு சேதி கொண்டுவந்திருப்பதாகவும் கூறினான். அமைதியடைந்த கரிகாலன் அவர்களைக் குதிரையில் தன்னுடன் இருபக்கமும் வருமாறு கூறி அவர்களுடன், நடந்த செய்திகளை எல்லாம் கேட்டவாறே பயணத்தைத் தொடர்ந்தார். பழுவூர் இளையராணியைச் சந்தித்த மணிமேகலைக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. நந்தினியும் பாசத்தை அவள்மீது சொரிந்து, தன்னை அக்காவென அழைக்கும்படிக் கூறினாள். அவளை முழுமையாக நம்பிய மணிமேகலை அவளிடம் மனதைத் திறந்தாள். வந்தியத்தேவனே அவள் மனதில் குடிகொண்டுள்ளவன் என்பதைக் கூறினாள். மேலும் வந்தியத்தேவனை இந்த அறையில் பார்த்ததையும் இடும்பன் காரியை விசாரிக்க உள்ளே செல்கையில் அவன் காணாமல் போய்விட்டதையும் சொல்லி, தனது காதல் வெற்றி பெற அவளுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென நந்தினியைக் கேட்டுக்கொண்டாள். ஆதித்த கரிகாலர் தன் பரிவாரங்களுடன் வர சம்புவரையரும் பழுவேட்டரையரும் மாளிகை வாசலில் அவர்களை எதிர்கொண்டழைத்து வரவேற்றார்கள். சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மக்களின் கூட்டம் குவிந்திருந்தது. ஆதித்த கரிகாலன் அவர்களிடம் இளவரசனாகப் பேசினான். ஆதித்த கரிகாலன் மாளிகைக்குள் வந்ததிலிருந்தே ஒருவாறு நிலையழிந்ததாகக் காணப்பட்டான். பழுவேட்டரையரையும் சம்புவரையரையும் சொற்களால் குத்திக்காட்டிப் பேசினான். அனைவரும் அவனை சமாதானப் படுத்தும் வழிதெரியாது நிற்கையில், பார்த்திபேந்திரன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூற, அவனையும் சதியில் கூட்டு சேர்ந்து விட்டாயா எனக்கேட்டு அதிர வைத்தான் கரிகாலன். நந்தினியைக் கண்டு வணங்கி பழுவூர் பெரிய பாட்டிக்கு வணக்கமெனச் சொல்ல, அவளின் கூரிய பார்வையைத் தாங்காமல் தாண்டிச் சென்றான். சம்புவரையரிடம் தன் தாத்தா இரவில் தூங்கினால் பகைவர்கள் சூழ்வர் என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருப்பதைச் சொல்லி சிரித்தான். பழுவேட்டரையரிடம், அவர் மூடுபல்லக்கில் மதுராந்தகனைக் கூட்டி வந்ததைச் சொல்லி எள்ளி நகையாடியதைப் பார்த்தவர்கள் அனைவரும் அவனது நடவடிக்கையைக் கண்டு நடுங்கினர். அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். சம்புவரையரையும், பழுவேட்டரையரையும் தன் சொற்களால் வதைத்தான். பின் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கப் போவதை அறிந்துகொண்டு எல்லோரிடமும் ஆலோசனை செய்து விடலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.