பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?
“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது. மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும் பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை, இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி