உலகை உலுக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் போர்கள்
சத்தமின்றி ஒரு செயலி வரலாறு மற்றும் நவீன தத்துவவியல் சிந்தனையாளர் யுவல் நோவா ஹராரியின் புத்தகங்களில் ‘ஹோமோ டியஸ்’ முக்கியமானது. எதிர்கால மனித குலத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து அதில் பேசுகிறார். வருங்காலத்தில் நடக்கும் போர்கள் போர்க்களங்களில் நடக்கப் போவதில்லை; கம்ப்யூட்டர் சர்வர்களில்தான் நடக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார். தொழில் நுட்பத்தில் தேர்ந்த நாடு போர்த்திறனிலும் தேர்ந்து விளங்கப் போகிறது என்று வாதிடுகிறார். போலவே கெவின் பெனடிக்ட் எனும் போர்முறை உத்தியாளர், வழமையாக போர் நிகழும் களங்களில் நாளைய போர்களுக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்க்கிறார்: நிலம், கடல், வானம், விண்வெளி, தகவல் தொழில் நுட்பம் நாளைய போர்கள் மேற்சொன்ன ஐந்து பரிமாணங்களில் நிகழப் போகிறது. போலவே, போர்களில் வெற்றி என்பதன் அர்த்தமும் மாறி விட்டிருக்கிறது. பண்டைய காலங்களில் வேறொரு நாட்டுடன் போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னர்கள் அந்த நாட்டின் தங்கம், வெள்ளி, தானியங்கள் போன்றவற்றைக் கொள்ளை அடித்து எடுத்துக் கொண்டு போவார்கள். இன்றைக்கு தங்கம் அல்லது தானியங்கள் வேண்டி எந்த நாடும் போரைத் துவங்கப் போவதில்லை. ஆனால் தகவலுக்காக போர்கள் துவங்கப்படும் அபாயம்தான் இன்று இருக்கிறது. தகவல் அதிகமாகக் கைவசம் இருக்கும் நாடுதான் உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த நாடாக இருக்கப் போகிறது. தங்கத்தை, தானியங்களை பொத்திப் பாதுகாத்து, அவற்றைச் சுற்றி அரண் அமைத்து காத்துக் கொண்டிருந்தது போல தகவல் பொதிந்து கிடக்கும் சர்வர்களை அரசாங்கங்கள் பொத்திப் பொத்தி பாதுகாக்கப் போகிறார்கள். இதுதான் எதிர்காலம். அந்த எதிர்காலத்தின் சிறியதொரு டிரெய்லர் சமீபத்தில் நமக்குக் காட்டப்பட்டது. இஸ்ரேல் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன், அந்நாட்டின் தொழில் நுட்ப நிறுவனம் NSO உருவாக்கிய மென்பொருள் செயலி ‘பெகசஸ்’ நமக்கு அந்த எதிர்காலத்தைச் சற்றே திறந்து காட்டி இருக்கிறது. அந்த எதிர்காலம் ரசிக்கத்தக்கதாக இல்லை. இந்த பெகசஸ் செயலியை ஒரு நபரின் மொபைல் ஃபோனில் அவர் அனுமதி இன்றியே நிறுவி விடலாம். சம்பந்தப்பட்ட நபர் எந்த லின்க்கையும் கிளிக் செய்யத் தேவையில்லை. ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் எதுவாக இருப்பினும் ஒரே ஒரு வாட்சப் மிஸ்டு கால் போதும். பெகசஸ் அவர் ஃபோனுக்குள் புகுந்து கொண்டு விடும். புகுந்த உடனேயே அந்த மிஸ்டு காலின் தடயத்தைக் கூட அதுவே அழித்தும் விடும். இதற்கு Zero-Click Attack என்று பெயர். ஃபோனை உருவாக்கிய கம்பெனிகளுக்கே தெரியாத ஓட்டைகள் பெகசஸ்சுக்கு தெரியும். அதன் வழியே வசதியாக உள்ளே புகுந்து கொண்டு விடும். ஃபோன் உள்ளே நுழைந்ததும் அந்த ஃபோன் வழங்கும் அதி உயர்ந்த உரிமைகளைத் தனதாக்கிக் கொண்டு விடும். இதற்கு Root Privileges என்று பெயர். உள்ளே வசதியாக உட்கார்ந்த நொடியில் இருந்து அந்த ஃபோனில் உள்ள கால்கள், எஸ்.எம்.எஸ்கள், ஈமெயில், ஜிபிஎஸ், இணையப் பயன்பாடு என்று எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கும். அந்த ஃபோன் வைத்திருப்பவருக்கு அப்படி நடப்பதே தெரியாமல் இதனைச் செய்ய இயலும். ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவலில் இப்படிப்பட்ட ஒரு செயலியின் பயன்பாடு பற்றிய குறிப்புகள் நிறைய வரும். பெகசஸ் இதோடு கூட நிறுத்தாது. தேவைப்படும் பொழுது தானாகவே காமிராவை இயக்கி உங்களைப் படமெடுத்துக் கொள்ளும். மைக்ரோஃபோனை இயக்கி நீங்கள் வீட்டிலோ ஆபீசிலோ பேசுவதை ரெக்கார்ட் செய்து அனுப்பி விடும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களா, நடக்கிறீர்களா, எந்தத் திசையில் செல்கிறீர்கள் என்றுகூட சொல்லி விடும். தகவல் பாதுகாப்புக்குப் பெயர் பெற்றதாகப் பீற்றிக்கொள்ளும் ஆப்பிள் ஐஃபோன் கூட பெகசஸ்சின் வலையில் இருந்து தப்பிக்க முடியாது. பெகசஸ்சின் இப்படிப்பட்ட அதி தீவிர செயற்பாடு காரணமாக, அந்தச் செயலியை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே தாங்கள் விற்பதாகவும் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் இந்தச் செயலியை விற்றதில்லை எனவும் இஸ்ரேலிய அரசு தெரிவித்திருக்கிறது. அது கூட தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்க அல்லது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மட்டுமே பயன்பாட்டு லைசென்ஸ் தருவதாகவும், வேறு அரசியல்-சார் காரணங்களுக்கு உளவு பார்க்க இந்தச் செயலியைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது, இஸ்ரேலின் கூற்று உண்மை எனில், தீவிரவாதச் செயல்களைக் கண்காணிக்க வேண்டி வாங்கிய செயலியை, தங்களது அரசியல் லாபங்களுக்கு பாஜக பயன்படுத்தி இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேசவிரோதமும் கூட. ஆனால் எந்த அலட்டலும் இன்றி இந்திய அரசு இதனைச் செய்து விட்டு, எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. நிற்க, இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்திய அரசைச் சாடுவதல்ல. அதனை நிறைய பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தத் தொழில் நுட்பத்தின் வசீகரம் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதுதான். பெகசஸ் ஒரு பனிப்பாறையின் முனைதான். இப்படிப்பட்ட முயற்சிகளை பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், மற்றும் ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் தொழில் நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டே வருகிறார்கள். 2007ல் எஸ்தோனிய நாட்டு அரசு ஒரு போர் நினைவுச் சின்னத்தை இடம் மாற்றும் முயற்சிகளில் இறங்கியது. இது சோவியத் காலத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால் ரஷ்யாவுக்குக் கோபம் வந்தது. அந்நாட்டு மக்கள் இணைந்து எஸ்தோனியா மீது மாபெரும் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இது படைகளின் தாக்குதல் அல்ல. ரஷ்ய ஹேக்கர்கள் திட்டமிட்டு நடத்திய இணையத் தாக்குதல். இதில் எஸ்தோனியாவின் ஒட்டு மொத்த இணையமும் ஸ்தம்பித்து நின்றது. நாடாளுமன்றம் முதல் அமைச்சரவை வரை யாரும் எதுவும் செய்ய இயலாமல் போனது. ‘நாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை,’ என்று ரஷ்யா கற்பூரம் அணைத்தது; ஆனால் இதில் ரஷ்யாவுக்குத் தொடர்பில்லை என்பதைக் கேட்டு புடின் கூட கொஞ்சம் சத்தமாகச் சிரித்திருப்பார். 2010ல் ஈரானின் அணுசக்தி நிலையங்களின் கணினிகளில் வைரஸ் போன்ற ஒரு செயலி ஊடுருவியது. அது அணுசக்திக் கருவிகளைத் தாறுமாறாகச் செயல்பட வைத்து பிரச்சினைகளை உருவாக்கியது. பின்னர் அணு மின் நிலையக் கணினிகளில் இருந்து தகவல்களைத் திருடி ‘தேவைப்படுபவர்களுக்கு’ அனுப்பியது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பது உறுதியானாலும் அந்த வைரஸ் செயலியை உருவாக்கியது அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. ஆப்பிள் டிவியில் வெளியாகி இருக்கும் ‘தெஹ்ரான்’ எனும் இணையத் தொடர் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட திரில்லர் கதைதான். அப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்கா மீதே ரஷ்யாவின் தாக்குதல் நடந்தது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில் சர்வரை ஹேக் செய்து தகவல்களைக் கசிய விட்டு அவருக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தார்கள். அது தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தாக்குதல் சதித் திட்டத்தில் டிரம்பின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறைய புகார்கள் எழுந்து, அது தொடர்பான விசாரணைகள் நடந்தாலும் அறுதியாக எந்த விஷயமும் வெளிவரவில்லை. போலவே, உக்ரைன் மின் நிலையங்கள், இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பு சர்வர்கள் என்று அதற்குப் பின் பல்வேறு இணையத் தாக்குதல்கள் இதுவரை நிகழ்ந்து விட்டிருக்கின்றன. இவற்றுக்கு பயந்தும், வேறு காரணங்களுக்காகவும் சீனா போன்ற நாடுகள் அனைத்து இணைய சர்வர்களையும் தங்கள் தேச எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றன. அப்படி செய்திருப்பதன் மூலம் இணைய நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்து தங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைத் தடுக்க முடிகிறது. ஒவ்வாத என்றால் தீவிரவாத அல்லது குற்ற நடவடிக்கைகள் அல்ல. எண்பதுகளில் தியனென்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டி போராட்டங்களைத் துவக்கிய கல்லூரி மாணவர்கள் மீது சீன அரசு ராணுவ டாங்கிகளை ஏற்றி அவர்களையும் அந்தப் போராட்டத்தையும் நசுக்கியது. அந்த சம்பவம் யாருக்கும் தெரியக் கூடாது, அது பற்றி பற்றி யாரும் பேசக்கூடாது என்று கவனமாகப் பாதுகாக்கிறது. போலவே தலாய் லாமாவுக்கு சீனா மற்றும் திபெத்தில் எந்த ஆதரவும் இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறது. சீன எல்லைக்குள் இருந்து கொண்டு நீங்கள் ‘தியனென்மென் சதுக்கப் போராட்டம்’ அல்லது ‘தலாய் லாமா’ என்று இணையத்தில் தேடினால் தேடிய ஓரிரு மணிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உங்களைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச் எனும் வரலாற்று ஆய்வாளர் உண்மையாகவே சீனா சென்று ஒரு கிராமத்தில் அறை எடுத்து இதனை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் தனது கம்ப்யூட்டரில் தேடிய இரண்டு மணி நேரத்தில் நிஜமாகவே நான்கு பேர் கதவைத் தட்டி விசாரித்தார்கள். இந்த சம்பவத்தை ‘திபெத்… திபெத்…’ எனும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார். இப்படிப்பட்ட உளவு அல்லது கண்காணிப்பு வசதிகள் சீனா போன்ற சர்வாதிகார நாட்டுக்கும் இன்றைய இந்தியா போன்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரசுகளுக்கும் தேவன் தந்த வரம்தான். தகவல் தொழில் நுட்பத்தின் வசீகரங்களும் ஆபத்துகளும் தனித்தனியானவை அல்ல. சொல்லப் போனால் பார்க்கும் பார்வையில்தான் தொழில் நுட்பத்தின் சாத்தியக் கூறு இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ்சில் ‘கறுங்கண்ணாடி’, Black Mirror, என்ற சிறுந்தொடர் ஒன்று கிடைக்கிறது. இதில் இன்றைய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் காணக்கிடைக்கின்றன. அறிவியல் புனைவு என்ற வகையில் இந்தக் கதைகள் வந்தாலும் உண்மைக்கு வெகு அருகில் இவை இருப்பது சற்றே நம்மை தொந்தரவு செய்கிறது. விபத்தில் கணவனை இழந்த இளம் மனைவியிடம் அவனைத் திரும்பவும் ‘உருவாக்க’ ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தை அணுகுகிறாள். அந்த இளைஞனின் சமூக ஊடகப் பதிவுகள், அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள், அவன் ஃபோன் உரையாடல்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை வைத்து அவனது ‘குணாதிசயங்களை’ அந்த நிறுவனம் மீளுருவாக்குகிறது. அவனது பல்வேறு புகைப்படங்களை வைத்து அவனைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குக்குகிறது. அவனது குணாதிசயங்கள் கொண்ட ‘செயலியை’ அந்த ரோபோவுக்குள் செலுத்தி விட்ட உடன் அவள் கணவன் ‘தயார்’! அப்படி உருவாகும் கணவன் ஒரிஜினல் கணவனைப் போலவே பேசுகிறான், பழகுகிறான். சிரிக்கிறான். ஆனால் ஏதோ ஒரு குறை. இயற்கைக் கணவனிடம் இருந்த சில துர்குணங்கள் அந்த செயற்கைக் கணவனிடம் செலுத்தப்படாததால் எப்போதுமே நல்லவனாகவே நடந்து கொள்கிறான். அது அவளை ஆயாசப்படுத்துகிறது. இப்படித்தான் நமது இணைய நடத்தைகள் நமது குணாதிசயத்தை கம்ப்யூட்டர் சர்வர்களுக்குக் கடத்துகின்றன. பெகசஸ்