சொன்னவண்ணம் செய்த பெருமாள்

தாய்மொழி தின நாடகம் காட்சி 1 காலம்: ஆறாம் நூற்றாண்டில் ஒரு மாசி மாதம்தினம்: மகம்இடம்: திருவெஃகா விண்ணகரம்நேரம்: காலைபாத்திரங்கள்: சீதையம்மை, திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன், கோயில் பட்டர் திருக்கோயிலைச் சுத்தம் செய்து வரும் சீதையம்மை அன்றும் சுத்தம் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் நேரம். எதிரே திருமழிசை ஆழ்வாரின் சீடன் வருகிறான். சீதையம்மை: வணக்கம் ஐயா. கணிகண்ணன்: வணக்கம் அம்மையே, ஏன் சோர்ந்தாற்போல் வருகிறீர்கள்? சீதையம்மை: வயதாகிவிட்டதல்லவா. இந்தப் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாள் நான் சேவை செய்யக் கொடுத்துவைத்திருக்கிறேனோ. அவளின் கடைசி வாக்கியத்தைக் கேட்டவாறே வந்துகொண்டிருந்த ஆழ்வார் குறுக்கிட்டு, திருமழிசை ஆழ்வார்: வருந்த வேண்டாம் அம்மையே. நாராயணனிடம் சொல்லி வைக்கிறேன். அவன் அருள்புரிவான். திடமுடன் வாழ்வாய். கவலை வேண்டாம். கோயில் பட்டர் எதிரில் வந்தவாறே, பட்டர்: ஆஹா.. இன்று ஆழ்வாரின் திருநட்சத்திரம் ஆயிற்றே.. தெய்வத் தமிழ் அல்லவா அவர் வாக்கு! அப்படியே பலிக்கும். அம்மா சீதா, நீ கவலைப்படாதே. கணிகண்ணன்: குருநாதரின் ஜன்ம தினம் அல்லவா. இந்தப் பள்ளிகொண்ட பெருமாள், ஐயனின் தமிழுக்குத் தாசன் அல்லவா. அம்மையே, நீ யுவதி போல நிலைபெறுவாய். இந்தக் கச்சி மணிவண்ணன் கை கொடுப்பான். பாம்பணை மேல் பள்ளி கொண்டவனை திருமழிசை ஆழ்வார் தமிழால் பாடித் துதிக்க, எல்லாரும் கண்மூடிப் பெருமாளிடம் லயித்துக் கிடக்கின்றனர். காட்சி 2 நேரம்: முன்மதியம்இடம்: அரண்மனைபாத்திரங்கள்: பல்லவ அரசன், கணிகண்ணன் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கணிகண்ணன்: அரசே, வணங்குகிறேன். அழைத்தீர்களாமே.. பல்லவ அரசன்: ஆமாம், ஆழ்வாரின் சீடனே! எனது நீண்ட நாள் விருப்பம் ஒன்றுள்ளது. அதை நீர் ஆழ்வாரிடம் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும். கணிகண்ணன்: சொல்லுங்கள் மன்னா. பல்லவ அரசன்: ஆழ்வாரின் தமிழால் என்னைப் பாட வேண்டும். ஒரு பாட்டு போதும்.. பணிந்து கேட்கின்றேன். நீர்தான் உமது குருவிடம் சொல்லி நிறைவேற்றி அருள வேண்டும். கணிகண்ணன்: இது நிறைவேறாது மன்னவா. எம் ஐயன் நாராயணனையன்றி மனிதரைப் பாடுவதில்லை. அவரிடம் இந்த விண்ணப்பத்தை என்னால் வைக்கலாகாது. அரசன்: நீர் இதை எப்படியும் செய்ய வேண்டும். இது அரச கட்டளை. கணிகண்ணன்: ஆண்டவன் கட்டளைக்கே அடி பணிவேன். அரசன்: என் விருப்பத்தை நிறைவேற்றாவிடில் உம்மை நாடு கடத்துவேன். நீர் இரவுக்குள் நகர் விட்டு வெளியேற வேண்டும். அமைச்சர் உள்பட அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்து நிற்க, கணிகண்ணன் செல்கின்றான். காட்சி 3 இடம்: திருக்கோயில்நேரம்: முன் மாலைபாத்திரங்கள்: கணிகண்ணன், திருமழிசை ஆழ்வார், பாம்பணைந்தோன் கோயிலில் மாலை பூஜை தொடங்கியதை அறிவிக்கும் மணியோசை கேட்கிறது. ஆழ்வார்: கணிகண்ணா, புறப்படு. பெருமாளை சேவித்துவிட்டு வரலாம். கணிகண்ணன்: குருநாதா, மன்னிக்க வேண்டும். நான் நகர் நீங்குகிறேன். இது அரசாணை. ஆழ்வார்: என்ன! அரசன் உன்னை நகர் நீங்கச் சொன்னாரா? ஏனப்பா? கணிகண்ணன்: ஐயனே, என் வாயால் எப்படிச் சொல்வேன்.. தாங்கள் அரசனைப் பாடவேண்டுமாம். அதை நானே உங்களிடம் விண்ணப்பிக்க வேண்டுமாம். நான் மறுத்தபடியினால் எனக்கு இந்தத் தண்டனை. ஆழ்வார்: வா, பெருமாளிடம் போவோம். பெருமாள் முன்பு பக்தர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். ஆழ்வார் பாடுகிறார். “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடையசெந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” ஆழ்வார் பாடிவிட்டு நடக்கிறார். கணிகண்ணனும் நடந்து போகிறான். பட்டர் பாம்பணைந்தோனை ஒருகணம் பார்க்கிறார். பெருமாளின் பாம்பணை அதிருவதாக அவருக்குப் பட்டது. அரசனுக்கு அங்கு நடந்ததை சொல்வதற்கு ஓடுகிறார். காட்சி 4 நேரம்: பின் மாலைஇடம்: அரண்மனைபாத்திரங்கள்: அரசன், பட்டர், அமைச்சர், காவலன், மக்கள் அமைச்சர்: அரசே! ஆழ்வாரின் சீடனை நகர் நீங்க உத்தரவிட்டது சரியாகத் தோன்றவில்லை. அரசன்: ஏன் அமைச்சரே? நான் பணிவாகத்தான் அவரிடம் வேண்டினேன். அரசன் என்ற மரியாதைக்காவது அவர் தனது குருவிடம் சொல்லுகிறேன் என்று போயிருக்கலாம். இவர் சொல்லி குரு மறுத்திருந்தால்கூடப் பரவாயில்லை. அமைச்சர்: இருப்பினும் நகர் நீங்க உத்தரவு போட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவலன்: (வேகமாக வந்து) அரசே, வாயில் முன் மக்கள் பதற்றத்துடன் கூடி வருகின்றனர். அரசனும் அமைச்சரும் வெளியில் வரவும் எதிரில் கோயில் பட்டர் வந்துகொண்டே, பட்டர்: அரசே, அபச்சாரம் நடந்துவிட்டது. கணிகண்ணன் நகர் நீங்குவதால் ஆழ்வாரும் நகர் நீங்கினார். அத்துடன் பெருமாளையும் அழைத்துக்கொண்டுபோய்விட்டார். மக்கள் பதற்றத்துடன் அலைகிறார்கள். அரசன்: என்ன! பெருமாளை அழைத்துக்கொண்டா?! என்ன உளருகிறீர் பட்டரே? அமைச்சர்: அரசே! அமைதி கொள்ளுங்கள். பட்டரே, நடந்தது என்ன? பட்டர் நடந்ததைச் சொல்லி முடிக்கிறார். அமைச்சர்: அரசே, வாருங்கள். ஆழ்வார் வெகுதூரம் போயிருக்க மாட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வருவோம். அவர் வந்தால்தான் பெருமாள் வருவார். அரசன்: அமைச்சரே, நீங்களுமா.. பெருமாள் அவர் பின்னே போய்விட்டாரா என்ன? அமைச்சர்: அரசே, மன்னிக்க வேண்டும். ஆழ்வாரின் தமிழில் பெருமாள் நகர் நீங்கிப் போய்விட்டார். இனி தமிழ் உள்ளளவும் பெருமாள் இந்தக் கச்சி திருவெஃகாவில் இருக்கமாட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசருக்குப் பொறி தட்டியது. அரசர்: சரி, புறப்படுங்கள். (வெளியில் இருக்கும் மக்களிடம்) காஞ்சி நகர மக்களே! என்னை மன்னியுங்கள். ஆழ்வாரிடம் போகின்றேன். அவரை அழைத்துக்கொண்டுதான் வருவேன். அரசன், அமைச்சர், பட்டர் எல்லாரும் விரைகிறார்கள். மக்களும் அரசர் பின்னே நடக்கிறார்கள். மாசி மகத்தின் முழுநிலவு மேலேறி வந்து விண்வழியே அவர்களை முந்திக் கொண்டு ஆழ்வாரிடம் சேதி சொல்ல விரைகின்றது. காட்சி 5 காலம்: பின்னிரவுஇடம்: வேகவதி நதியின் அக்கரையில் ஒரு மரத்தடிபாத்திரங்கள்: அரசன், அமைச்சர், பட்டர், திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் மற்றும் மக்கள். ஆழ்வார் வேகவதி நதியைத் தாண்டிப் போய்விட்டார் என்று அறிந்து எல்லாரும் நதியின் அக்கரை போய்ச் சேருகின்றனர். ஆழ்வாரும் கணிகண்ணனும் மரமொன்றின் அடியில் அமர்ந்திருக்கின்றனர். அரசன்: (வந்து கொண்டே), பக்தரே, இந்தச் சிறியேனை மன்னிக்க வேண்டும். கணிகண்டரே, நீரும் என்னைப் பிழை பொறுத்து மன்னித்து அருள வேண்டும். கச்சிப் பதிக்குத் திரும்ப வேண்டும். அமைச்சர்: தமிழ் உருவமே! தங்கள் வாக்கில் இருக்கும் நாரணன் இங்கும் நிறைந்து இருப்பதை உணர்கிறேன். கச்சியைக் கைவிட்டுவிடாதீர் ஐயா. தமிழ் வாக்கிற்குச் செவி சாய்த்து உம்முடன் வந்திருக்கும் இறையையும் அழைத்து வரவேண்டும். திருமழிசை ஆழ்வார்: கணிகண்ணனே, மன்னவன் மனம் வருந்தினான். நாம் மீண்டும் திருவெஃகா செல்லலாம்தானே? கணிகண்ணன்: ஐயனே, செல்லலாம். இத்தனை மக்களும் பெருமாளைத் தேடி வந்தார்களே..! ஆழ்வார்: மன்னவனே! அதிகாரத்தால் அடைய முடியாததும் உலகில் உண்டு என்பதைப் புரிந்திருப்பீர். இதோ, என் தமிழ் வாக்கிற்காக மணிவண்ணனும் என்னுடன் ஓரிரவு வந்து நிற்கும் இந்த இடத்தை மக்கள் ஓரிரவிருக்கை என்று நினைவில் வைத்திருப்பார்கள். சொல்லிவிட்டு ஆழ்வார் காஞ்சி நோக்கி நடக்கிறார். எல்லாரும் அவரைத் தொடர்ந்து நடக்கின்றனர். முழுநிலவு வானில் விழி மலர்த்தி சிரிக்கின்றது. திருவெஃகா கோயிலுக்குள் வந்ததும் ஆழ்வார் வெளியில் பார்த்துப் பாடுகின்றார். “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடையசெந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்படுத்துக்கொள்” கோயில் எங்கும் ஆழ்வாரின் தமிழ்க் குரல் ஒலிக்கிறது.