திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.   இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர். குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு. சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற  நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது). பிராண்டுகள் இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன. மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும். இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.  திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் துணியாக உற்பத்தி செய்யபடும். முதல் நிலை, நிட்டிங் என அழைக்கப்படும். வாங்கிய நூலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த குறியீடுகளுக்கு உட்பட்டு, அதற்குரிய துணி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு துணியாகப் பின்னல் செய்யப்படும். அடிப்படைத் துணி இவ்வாறாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்நாட்டு இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது அதிநவீன இறக்குமதி இயந்திரங்கள் வாயிலாக, அதிகளவு துணி உற்பத்தி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யபட்ட துணி, வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரக்குறிப்பிற்கு உட்பட்டு சாயம் ஏற்றப்பட்டு அல்லது சலவை செய்யப்பட்டு, சில சமயங்களில் துணியாக இருக்கும் நிலையிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு, உரிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஆடைகளாகத் தைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். இதில் ஆடைகளின் வடிவத்திற்கு ஏற்ப பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற மதிப்புக்கூட்டல் செய்யப்படும். இது தவிர, அக்சஸரீஸ் என அழைக்கப்படும் லேபிள், டேக், ஸ்டிக்கர் மற்றும் ஆடைகளைப் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை அதற்குரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பெறப்பட்டு ஆடைகளைப் பேக்கிங் செய்து அனுப்பிவைக்கப்படும். மேற்சொன்ன விபரங்களைக்கொண்டு திருப்பூரின் பின்னலாடை உற்பத்திச் சங்கிலியைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நூறு முதல் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் – நிறுவனத்தின் உற்பத்திப் பின்னணி மற்றும் திறன் அடிப்படையில் – முதலீடு செய்யப்பட்டு இயங்கிவருகின்றன. குறைந்தபட்சம் 5 முதல் ஆயிரங்கள் என்னும் எண்ணிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த உற்பத்திச் சங்கிலியின் தலைமைப் பொறுப்பு, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரையே சாரும். ஒவ்வொரு நிலை சார்பு நிறுவனமும் அடுத்தடுத்த நிலை சார்பு நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. சார்ந்து இயங்கினாலும் ஒவ்வொரு படிநிலை உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமே இந்த மாதிரியான உற்பத்திச் சங்கிலியை வெற்றிகரமாக இயங்க செய்யும். இதுவொரு இயல்பான கலாச்சாரமாகவே இங்கு உருவெடுத்துள்ளது. இப்படியான ஒரு அமைப்பை நான் அறிந்தவரை உலகளவில் திருப்பூரில் மட்டுமே காண இயலும். திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு பின்னலாடையையும் ஒரு பண்பாட்டு உருவாக்கமாகவே நாம் பார்க்கலாம். இந்தப் பண்பாட்டு இயக்கம் பல ஆயிரம் நபர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளியாக உயரப் பெரும் காரணம் இந்தப் பண்பாட்டு விழுமியமே என்று சொன்னால் மிகையல்ல. ஒரு தொழில் நகரம் உருவாகும்போது, ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாகும். அந்த வகையில், இங்கு பனியன் தொழில் சாராத பல தொழில்கள், அதாவது ஒரு கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்கும் எளிய வியாபரி முதல், மளிகை, உணவகம், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், நகைக் கடைகள், அடுமனைகள் (பேக்கரி) என, பல அடுக்குகளில் தொழில்கள் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளன. இப்படியாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது, மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது. ஒரு கிராமமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட ஊர், இன்று ஒரு மாவட்டத் தலைநகராக எவ்வாறு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது என்பதை மேற்சொன்ன விவரங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு செய்திகளைக் கூறவேண்டியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசித்த ஒரு சகோதரி, நொய்யல் ஆற்றின் நிலை குறித்த தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். அவரின் கவலை, ஒட்டுமொத்த நொய்யல் வழித்தடச் சமூகத்தின் கவலை என்பதாகவே நாம் கருதலாம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு அங்கம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் நிலைப்பாடும் அதுதான். இந்தத் தொடரில், நொய்யல் குறித்து, விருப்பு வெறுப்பின்றி தனி அத்தியாயமே வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நான்காம் அத்தியாயத்தில் மற்றுமொரு தரவோடு உங்களைச் சந்திக்கிறேன்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.