திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும் கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பார்ப்போம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் என்றாலும் உள்நாட்டு உற்பத்தி, அதில் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் இதர ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என, பல்வேறு வகைகளில் இங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வகை உற்பத்தியிலும் இயந்திரங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மாறுபடும் நிலை உள்ளது. உள்ளாடைகள் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் ஒரே சீரான வேலைவாய்ப்பும் ஒரே மாதிரியான ஆடைகளை உற்பத்தி செய்யும் முறையும் உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி உற்பத்தியைப் பொறுத்த மட்டில் குறிப்பிட்ட வகை ஆடைகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்கள் சீரான வாய்ப்புகளையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உற்பத்தி முறையையும் கையாள்வது நடைமுறையில் உள்ளது. மேலே குறிப்பிட்ட உற்பத்தி முறைகளைக கடந்து ஒவ்வொரு ஆர்டர்களும் வெவ்வேறு வகைகளில், வடிவங்களில் தயாரிக்க வேண்டிய சூழலைப் பல நிறுவனங்கள் சந்திக்கின்றன. அந்த நிலை தொழிலாளர்களின் திறனுக்கான சோதனையாகவும் அமைகிறது. அது மட்டுமல்ல. ஒரேவிதமான வேலையைச் செய்வது தொழிலாளர்களுக்கு ஒருவிதமான சலிப்புத் தன்மையை உருவாக்குவதால் ஒரே தொழிற்சாலையில் நீடிப்பது கேள்விக்குறியாகிறது. இதனால் உற்பத்தித் தடை, தரத்தில் குறை, கால தாமதம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒருபுறம் தொழில் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்திய அளவுக்கு இதைப்போன்ற நுண் விடயங்களை நாம் தவறவிட்டதாகவே கருதுகிறேன். சிறிதும் பெரியதுமாக, அனைத்து உற்பத்தி நிலையிலும் ஏறத்தாழ 20000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் ஆறு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றினாலும் தொழிலாளர் சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் தொழிலாளர்கள் தரப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறம், தங்களின் சிறிய பங்களிப்பைச் செலுத்துவதில் உள்ள மனத்தடையால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிக்காலச் சலுகைகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்னும் இரு அவலங்களையும் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். நாள் சம்பளம் என்பதைக் கடந்து பீஸ் ரேட், அதாவது எவ்வளவு ஆடைகளைத் தைக்கின்றார்களோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆடைக்குமான  கட்டணத்தை நிர்ணயம் செய்து, வார இறுதியில் தைத்த ஆடைகளுக்கு ஏற்ப சம்பளத்தைப் பெறுகின்றனர். இது குறுகிய காலத்தில் பெரும் பயனை அளித்தாலும் பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளை இழப்பதோடு, தரம் மற்றும் தொடர்ந்து தொழிற்சாலைகளை மாற்றிச் செல்லும் போக்கு என ஆரோக்கியமற்ற சூழலுக்கு வழிவகுத்துள்ளது. பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் இந்தப் போக்கினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி, தொழிலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அவலம், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் தாமதங்களைச் சரி செய்ய, இறுதியாக ஆடைகள் தயாரிப்பை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். இந்த அழுத்தம் மொத்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. தங்களது நிறுவனம் சிரமப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தொழிலாளர்களும் கடுமையான உழைப்பினைக் கொடுத்து நிறுவனத்தின் சிரமத்தைக் குறைக்க உதவுவர். ஒருகட்டத்தில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறி, தொழிலாளர்கள் மத்தியில் ஒருவிதமான சலிப்புத் தன்மையை ஏற்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். எப்பொழுதுமே திருப்பூரைப் பொறுத்தமட்டில், ஆட்கள் பற்றாக்குறை என்பது நிரந்தரம். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தொழிலாளர்களும் தொழிற்சாலைகளை மாற்றும் போக்கும் ஆங்கங்கே நடக்கவே செய்கிறது. இது உற்பத்தி, தரம் மற்றும் கால தாமதத்தை ஏற்படுத்தி, தொழில் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழலும் இருக்கவே செய்கிறது. இவற்றையெல்லாம் கள ஆய்வுக்கு உட்படுத்தி, தொழில் முனைவோர் தரப்பும் தொழிலாளர் தரப்பும் கலந்துரையாடி, நல்லதொரு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவேண்டிய முக்கியத் தேவை உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொடர் பயிற்சிகள், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சமீப வருடங்களில் ஏற்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய மாநில அரசுகள் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்து மிகுந்த அக்கறை கொண்டு, அதற்கான திட்டங்களை வகுத்து, தொழிலுக்கு உதவுகின்றன. அதுமட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. அதனைச் சரியான முறையில் தொழில்துறையினர் பயன்படுத்தி, தங்களுக்கான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கஜா புயல் சமயத்தில மீட்பு நடவடிக்கைக்காக சில நாட்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தேன். அங்கே ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதைக் காண நேர்ந்தது. குறிப்பாக, மீனவக் குடும்பத்துப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அளிக்கும் வல்லமை ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலுக்கு உள்ளது. ஏனெனில், அவர்களைப் புலம் பெயரச் செய்ய இயலாது. ஆனால், உற்பத்தித் தொழிற்சாலைகளை அங்கே அமைக்கலாம். நாளது தேதியில் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தொழில் அமைந்துள்ள திருப்பூருக்கு வரவழைப்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டு செல்வதன்மூலம் தொழிலை வளர்ப்பதோடு வேலைவாய்ப்புகளைப் பரவலாக மாநிலம் முழுவதும் ஏற்படுத்த இயலும். கொங்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், அதிக அளவு தொழில் வளர்ச்சியைக் கொண்ட மாவட்டங்கள் உள்ள பகுதி இது. இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்தும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசில் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும் மாவட்டங்களுக்கிடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட்டனர். ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் நிச்சயமாக இன்னும் பெருமளவு வேலைவாய்ப்பிற்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஆயத்த ஆடைத் துறையைப் பொறுத்தமட்டில் எந்த அளவு இயந்திரங்கள் அவசியமோ அந்த அளவுக்கு தொழிலாளர்களும் மிக அவசியம். அந்தவகையில் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, உற்பத்திச் செலவில் பெரும்பகுதியைத் தொழிலார்களின் திறன் குறைவு காரணமாகச் செலவிடுவதைக் கருத்தில்கொண்டு, அதை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு குடும்பத்தில் இருவர் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றினால், குறைந்தது மாதம் இருபதாயிரத்திற்கும், கூடுதலாகப் பொருளீட்டலாம். முன்புபோல் இல்லாமல் தற்காலத்தில் தொழிற்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமையப்பெற்றுள்ளன. சரியான அணுகுமுறையை மேற்கொள்வதான் மூலம் நிச்சயம் ஏரளமான தொழிலாளர்களை இந்தத் தொழிலுக்கு ஈர்க்க முடியும். மீண்டும் வரும் திங்களன்று வேறு சில தரவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் இதுவரை திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், உள்கட்டமைப்பு, கடந்துவந்த பாதை, தொழிலாளர்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்த்தோம். இனி இந்தத் தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துக் காண்போம். 1980களில் துவங்கிய ஏற்றுமதி 1984இல் 9 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று 37 ,500 கோடி ரூபாய் என்ற அளவினை எட்டி உள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதில் 200 நிறுவனங்கள் 23000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. மீதமுள்ள 11500 கோடி ரூபாயை 1800 நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. 1991ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் பல்வேறு உலகளாவியச் சந்தை வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. இருப்பினும் கோட்டா முறை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திய நிலையில், 2004ஆம் ஆண்டுக்குப் பின் கோட்டாமுறை ஒழிந்து மேலும் வாய்ப்புகள் எளிதாகின. இந்நிலையில் போட்டி நாடுகளின் தொடர் வளர்ச்சி, நமக்கான வாய்ப்புகளைப் பெறுவதில் கடும் சவால்களை உருவாக்கியுள்ளது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறைமுகமான தடைகளால் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்தே வந்தன. அதையும் கடந்து தொழிலில் சீரான முன்னேற்றங்களைப் பெற்றாலும் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தொடர் தகமைப்பில் பின்தங்கின. அதேசமயம் இறக்குமதி நிறுவனங்களின் தேவைக்கேற்பத் தங்களைத் தகவமைத்து, புதிய நுட்பங்களுக்கு உடனடியாக முதலீடுகளைச் செய்து பயணித்த நிறுவனங்கள் இன்றளவும் தொடர்ந்து முன்னேறியே வருகின்றன. 10 முதல் 20% வரை ஒவ்வோரு வருடமும் அந்த நிறுவனங்கள் வளர்கின்றன. அதேபோல் குறிப்பிட்ட ஆடைகள், அதாவது உள்ளாடைகள் மட்டும், இரவு உடைகள் மட்டும், ஆண்களுக்கான மேலாடைகள் மட்டும், பெண்களுக்கான மேலாடைகள் மட்டும், பிறந்த மற்றும் சிறுவர்களுக்கான உடைகள் மட்டும் எனக் கவனம் பதித்து அதற்கேற்பத் தங்களின் தொழிற்சாலைக் கட்டமைப்புகளை அமைத்துப் பயணிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கவனச் சிதறல் இல்லாத காரணத்தால், தலைமை மேலாளர் முதல் கடைநிலை அலுவலர் வரை எல்லா நிலைகளிலும் நன்கு பயிற்சி பெற்று, தரம் மற்றும் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு அடுத்தடுத்த வர்த்தக அளவுகளில் அவர்கள் வளர்ச்சி காண்கின்றனர். எல்லா விதமான ஆடைகளையும் தயார் செய்யும் அணுகுமுறையைக் கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியில் பின்தங்குவதும் ஒருகட்டத்தில் இழப்பைச் சந்தித்துத் தொழிலிருந்து விலகிய சூழல் ஏற்பட்டதும் உண்டு. அதேசமயம் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எல்லா விதமான ஆடைகளை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளைத் தனித்தனியாக ஏற்படுத்திப் பயணிக்கும் நிறுவனங்கள் அபார வளர்ச்சியையும் அடைந்துள்ளன. இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகளவில் இரண்டாம் இடத்தை வகிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பருத்தியை நூலாக மாற்றும் நூற்பாலைகள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் இந்திய நூற்பாலைகளில் 55% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் நூல், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பருத்தியாலான ஆடைகளே திருப்பூரில் 95% அளவுக்கு உற்பத்தியாகின்றன. குதிரைக்குக் கடிவாளம் இட்டதுபோல், அதை நோக்கியே இந்தத் துறை பயணித்தது இன்றைய தேதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். பருத்தி ஆடைகள் மிருதுவானவை; கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்றவை. குளிர்காலத்தில் பருத்தி ஆடைகளின் பயன்பாடு மிகக் குறைவே. நமது ஏற்றுமதிச் சந்தை 90% ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சார்ந்துஉள்ளது. அங்குள்ள பருவநிலை என்பது, ஆண்டுக்கு 4 முதல் அதிகபட்சம் 5 மாதங்களே கோடைக்காலம். மீதமுள்ள மாதங்களில் பருத்தி ஆடைகளின் தேவை என்பது மிகக் குறைவு. பருத்தித் துணியில் குளிர்கால ஆடைகளை மிகக் குறைவாகவே இறக்குமதியாளர்கள் வாங்குவர். ஏனெனில் பருத்தியைவிட செயற்கை நூலிழைகளான பாலியஸ்டர், நைலான் போன்றவற்றில் தயாராகும் ஆடைகளே உடலைக் கதகதப்பாக வைப்பதற்கு உதவும் என்பதால், இந்த வகை ஆடைகளையே அவர்கள் அதிகம் இறக்குமதி செய்வர். செயற்கை நூலிழை ஆடைகளைத் தயாரிப்பதில் நாம் கவனத்தைச் செலுத்தாமல் விட்டதை மிகப்பெரிய இழப்பாகத் தற்சமயம் உணர்கிறோம். நுகர்விலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நமது வாழ்க்கை முறையை ஒட்டியே ஒரு தகவலைச் சொல்கிறேன். 25 -30 வருடங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்று வந்தபின், சீருடைகளைக் களைந்து, இருக்கும் உடைகளை அணிந்து விளையாடச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றைய தேதியில், என்ன விளையாட்டை மேற்கொள்கிறோமோ அதற்கேற்ப ஆடைகளை அணியும் பழக்கத்திற்கு அது மாறியுள்ளது. இது ஒரு மிகப் பெரிய வர்த்தக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் விளையாட்டுகளுக்கென்றே தயாராகும் ஆடைகள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அதற்கான பிரத்தியோக சில்லறை வர்த்தகப் பெரும் நிறுவனங்கள் வளர்ந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர இரவு உடை, பார்ட்டி வெர் என, ஒரு நாளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று விதமான ஆடைகளை அணிவதால், நுகர்வு அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளை நாம் உள்வாங்கத் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி என்னும் வசதியான வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக்கொண்டோம். பஞ்சு விலையின் கடும் உயர்வு, நூல் தட்டுப்பாடு, நூல் ஏற்றுமதி, உள்ளிட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாகத் தொழிலுக்கான நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்படுத்துவது; அதனால் பெரும் பாதிப்பிற்கு இந்தத் தொழில் உள்ளவதற்கான காரணம், மாற்று ஏற்பாடுகள் இல்லாததும் அதை நோக்கி நமது கவனத்தைச் செலுத்தாததுமே. இதைச் சரியாக உள்வாங்கிய சீனா, பங்களாதேஷ், வியட்நாம், கொரியா, தைவான் போன்ற நாடுகள் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கின்றன. உலகளவில் சந்தைக்கு வரும் விளையாட்டு தொடர்பான ஆடைத் தயாரிப்பில் பருத்தி ஆடைகள் 21% மட்டுமே. மீதமுள்ள 79% ஆடைகள் செயற்கை நூலிழையில் தயாரிக்கப்படுபவையே. பருத்தி ஆடை உற்பத்தியில் நமது போட்டி உற்பத்தி நாடுகளான வங்கம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பைக் கழித்தால் நமது பங்களிப்பு 3 முதல் 4% மட்டுமே. செயற்கை நூலிழை ஆடைகளில் நாம் போட்டியிலேயே இல்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கான காரணம், பருத்தித் துணிகள் தயாரிக்கும் அளவிற்கான நுட்பமும் சூழலும் செயற்கை நூலிழைத் தயாரிப்பில் இல்லை என்பதே. ஒவ்வொரு வருடமும் செயற்கை நூலிழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்சமயம் இந்தியாவின் விளையாட்டு தொடர்பான ஆடை வர்த்தகம் 8% என்ற அளவிற்கு உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த ஆடையை வேண்டுமெனாலும் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்கள், தற்சமயம் அந்தந்த விளையாட்டுகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளதை நம்மால் காணமுடியும். நம்மைச் சுற்றியே அதற்கான சான்றுகள் உள்ளன. மிகச் சமீப வருடங்களில் விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரணங்களுக்காகவே பிரத்தியோகமாகத் தங்களது சில்லறை வர்த்தக மையங்களை இந்தியாவில் அமைத்த டெக்காதலோன் (Decathlon) நிறுவனம் நாளது தேதியில் மிக விரிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களின் கடைகளையும் அமைத்துவருவதைக் கண்கூடாகக் காணலாம். பருத்தி ஆடைகள் உற்பத்தி என்கின்ற வட்டத்தைக் கடந்து, செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியையும் நாம் கைகொள்ளவேண்டிய நிலையை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுவொன்றும் பெரும் விடயமும் அல்ல. பருத்தி ஆடைத் தயாரிப்பிற்கான கட்டமைப்பில் பல்வேறு சிறு மாற்றங்களையும் அதற்கான முதலீடுகளையும் செய்தால் அடுத்தடுத்த வருடங்களில் நமது ஆடைத் தயாரிப்பில் குறைந்தது 25% முதல் 30% செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை எட்டலாம். அதற்கான முயற்சிகளைப் பல்வேறு தளங்களில் பல்வேறு நிறுவனங்கள் துவங்கியுள்ளன என்கிற நற்செய்தியையும் இங்கே பகிரக் கடமைப்பட்டுள்ளேன். கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மகத்தானவை. அந்த விதத்தில் மகத்தான படங்களுடன் திருப்பூர் தொழில்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த பகுதிகளில் மேலும் பல விபரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.