ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

உயர் கல்வித்துறையில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மத்தியில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்துத் தற்போது மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. 63 பக்கங்களைக் கொண்ட NHEQF (National higher education qualification frame work) என்று சொல்லக்கூடிய தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையானது, அனைத்து உயர்கல்வி அமைப்புகளையும் ஒற்றை அமைப்பின் கீழ் கொண்டுவந்து HECI (Higher Education Commission of India) எனப்படும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாகவும் உள்ளது.  இதனைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போதைய தமிழக அரசானது மாநிலத்திற்கென்று தனியான தனித்துவக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதோடு அல்லாமல், தமிழ்நாட்டிற்கான தனியான கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அதில் கல்வியாளர் ஜவகர்நேசன் தமிழ்நாடு கல்விக் கொள்கை வரைவுக் குழுவிலிருந்து வெளியேறியது, தமிழ்நாட்டு  மக்களிடமும்  கல்வியாளர்களிடமும் கல்விக் குழுவின் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர்கல்வித் துறையில், குறிப்பாக NEP 2020இன்  ஒரு அங்கமாக விளங்கும் திறன் மேம்பாடு (Skill Development) குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் சந்தைக்கு (Labour Market) மாணவர்களைத் தயார்படுத்துதல் என்ற திட்டத்தினை முன்னிறுத்துகிறது. அத்தகைய திறன் மேம்பாடு (Skill Development) என்பது எத்தகைய சூழலை மாணவர்களிடம் உருவாக்கும் என்பதற்கான விடையை தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபடவில்லை. தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் என்பது, தேசிய கல்விக் கொள்கையின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Skill Development  Programme) தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தபடுவதாகவே கல்வியாளர்களால் கவலையோடு பார்க்கப்படுகிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ என்பது, மாணவர்களின் திறனை வளர்க்கும் திட்டம் என்று சொல்லப்பட்டது (Skill Based Programme). ஆனால் இதனை, தேசிய கல்விக் கொள்கையான NEP  2020க்கு  ஆதரவான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுத்துள்ளதாகவே கல்வியாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் NEP 2020இன் நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம் என அறிவித்ததன் மூலம் மாநிலக் கல்விக் கொள்கையானது எதிர்கால மாணவர் சமூகத்திற்குச் சரியான வழிகாட்டலோடு அமையுமா என்ற சந்தேகத்தையும் மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சரியான திசையில் செல்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டமானது தமிழக அரசின் லேபிள் ஒட்டப்பட்ட தனியார் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதே கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டு.  இதன் பின்னணியில் Amazon, IBM, Educom போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்குவதால், வணிகமயம் மட்டுமே (Commercialization) இதன் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தத் திட்டத்தை ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்? திறன் வளர்க்கும்  திட்டத்திற்குத் தமிழக அரசிடம் திறன் இல்லையா? அல்லது கல்வியாளர்கள் இல்லையா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கு பலகோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதற்குப் பின்வரும் காலங்களில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா இல்லையா என்பதற்கான விடை தமிழக அரசால் வழங்கப்படவில்லை. 1949இல் கல்விக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது முதல் தற்போது வரை தமிழக மாணவர்களிடம் திறனே வளரவில்லையா? அப்துல் கலாம், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மின்னஞ்சல் மென்பொருளை உருவாக்கிய சிவா அய்யாதுரை போன்றவர்கள் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்தே திறனை வளர்த்து உச்சநிலையை அடைந்தனர். இதுபோன்றே திறனை வளர்த்தவர்களின் பட்டியல் நீளமானது. தற்போது அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டு (O.D) தமிழகப் பல்கலைக்கழகங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதோடு பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகப் பல்கலைக்கழகங்கள் மூலம் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது, கல்வியாளர்களைக் கலக்கமுற செய்துள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு வடிவத்தில் உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்கும் இந்தத் திறன் மேம்பாடு என்கின்ற ‘நான் முதல்வன் திட்டம்’ ஏதோ கடமைக்கு மாணவர்கள் கற்பதாகவே உள்ளது. இதில் கற்றல் கற்பித்தல் குறைபாடும் பெரும் இடைவெளியை ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதும் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுவதும் கல்வியின் முக்கிய நோக்கமாக இதுவரை இருந்து வந்துள்ளது. அதைவிடுத்து திறன் மேம்பாடு என்ற பெயரில், தொழிலாளர் சந்தையை  (Labour Market) உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவமான இந்த ‘நான் முதல்வன்’  திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கள நிலவரத்தை அறிந்த கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

தொழில் நிறுவனங்களின் நிலை திருப்பூரின் தொழில் வளர்ந்த வரலாறு, இன்றைய சிக்கல் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரில், தொழிலின் போக்கு மற்றும் பல்வேறு நிலைகளில் சந்திக்கும் சிக்கல் குறித்துப் பார்த்துவருகிறோம். இந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்களின் போக்கு குறித்துக் காணலாம். ஒரு பின்னலாடை நிறுவனம் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் வர்த்தக முறைகள், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்கனவே சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். காலங்கள் செல்லச் செல்ல உற்பத்தி நாடுகள் அதிகரித்தன. புவிசார் அரசியல், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை நமது ஏற்றுமதிக்குக் கடும் நெருக்கடிகளை அளித்து வந்தன. இருப்பினும் அந்த மாற்றங்களை, சவால்களைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் தொடர் தகவமைப்பின் மூலம் தங்களின் வர்த்தகத்தைப் பாதுகாத்துக்கொண்டதோடு வளரவும் செய்தனர். மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாத நிறுவனங்கள் பெரிய அளவு வளர இயலவில்லை. பொதுவாக, வர்த்தகம் தொடங்கிய காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் எல்லாவிதமான ஆடைகளையும் தயார் செய்தே வந்தனர். ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஆடைகள் தயாரிப்பிற்கான நிபுணத்துவம் பெற்று, அந்த வகை ஆடைத் தயாரிப்பில் உள்ள தொழில் நுட்பங்களை அடையாளம் கண்டு, தொடர் மேம்பாடுகள் வாயிலாக நல்ல தரத்துடன் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக உற்பத்தி செய்து தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, அந்த வகை ஆடைகளை இறக்குமதி செய்யும் வாடிக்கையாளர்களை அணுகி, தங்களின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் நிறுவனங்கள் ஒருபுறம் உலகளாவிய சிக்கல் காரணமாக சிறு பின்னடைவைச் சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ந்தே வருகின்றனர்.  அதுமட்டுமல்ல, காலத்திற்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துவருவதையும் அதற்காக லாபத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதென்ன கட்டமைப்பில் மாற்றங்கள்? பொதுவாக ஒரு தொழில் வளரும்போது போட்டி வருவது இயல்பு. அப்படிப் போட்டி வரும்போது, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஜவுளித்துறையைப் பொறுத்தமட்டில் அன்றாட மாற்றங்களே இந்தத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறது. உற்பத்தி நாடுகள் ஒருபுறம் அதிகரித்து வருவதும் கட்டமைப்பில் பின்தங்கியிருந்த நாடுகள் மிக வேகமாகக் கட்டமைப்பில் நம்மைக் காட்டிலும் முன்னேறி வருவதும் பின்தங்கிய நாடுகள் என்ற காரணத்தால் அவர்களுக்கு வரியில்லா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வளர்ந்த இறக்குமதி செய்யும் நாடுகள் அளிப்பதும் காட் ஒப்பந்தத்தின் சரத்துகளைக் காரணம் காட்டி, நமது நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தடுத்ததும்  வங்கிகளில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்கள், பருத்தியை அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கியது உள்ளிட்ட பல நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்தே வருகிறோம். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தொழிலை முன்னெடுக்கவேண்டிய நிர்பந்தம், மிகச் சவாலான இந்த நிலையைச் சரியாக உள்வாங்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தொழில் எவ்வழியே பயணிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு பல்வேறு உற்பத்திநிலை மாற்றங்களை முன்னெடுத்தன. புதிய தொழில்நுட்பங்கள், உலகளாவிய உற்பத்தித் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் சிறந்த உற்பத்தி முறைகள், பருத்தி ஆடைகளைக் கடந்து செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, உற்பத்திச் செலவினங்களைக் குறைக்கும் பல்வேறு முன்னெடுப்புகள் எனப் பயணித்த காரணத்தால் தங்களைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொண்டனர். மேலே கூறியவற்றைப் பின்பற்றாத நிறுவனங்கள் தொடர்ந்து வளரத் தடை ஏற்படுவதும் ஒருகட்டத்தில் வர்த்தகத்தைவிட்டு வெளியேறும் நிலையும் உள்ளது. இதில் இன்னொரு பெரும் சிக்கல், மேற்சொன்ன மாற்றங்களைச் செய்து பயணிக்க உள்ள தயக்கத்தால், தங்களின் நிலைக்கு உகந்த வர்த்தகத்தை முன்னெடுக்கும்பொருட்டு எவ்வித வரையறையும் விதிமுறைகளும் விதிக்காத இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் அதில் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதும், ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விலையில் தள்ளுபடி செய்து ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி செய்த ஆடைகளுக்குப் பணம் பெற இயலாத நிலை, எனக் கடும் சிக்கல்களைச் சந்தித்து, உற்பத்திச் சங்கிலியில் பாதிப்பினை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மூடிவிட்டுச் செல்லும் நிலை கவலைக்குரிய ஒன்று. ஏற்றுமதித் தொழிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேற்சொன்ன நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு உள்நாட்டு உற்பத்திக்கு வெகு நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொண்டன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி என்பது இரு நிலைகளில் நடைபெறுகிறது. ஒன்று, முறை சாரா உற்பத்தி, மற்றொன்று முறைசார் உற்பத்தி. முறை சாரா உற்பத்தியில், தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் வியாபித்துள்ள மொத்த வியாபாரிகள், இங்குள்ள உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் சரக்குகளைப் பெற்று சில்லறை வணிகர்களிடம் அனுப்பி விற்பனை செய்வர். முறைசார் உற்பத்தி என்பது, ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் நடத்தும் சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் ஆடைகள். நாளது தேதியில் மேலே மற்றும் கடந்த இரு அத்தியாயங்களில் குறிப்பிட்ட ஏற்றுமதிக்கான தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுச் சான்றிதழ் வரையறைக்குள் முறைசார் உள்நாட்டு உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களும் ஆட்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு படிநிலை நிறுவனங்களும் தங்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே தொழிலில் நிற்க இயலும் என்னும் நிலையை நோக்கித் தொழில்துறை பயணிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு வருடமும் சரியாகத் திட்டங்களை வகுத்துப் பயணிக்கும் எல்லா நிறுவனங்களும் வளர்ந்தே வருகின்றன. திட்டமில்லாமல் அல்லது திட்டமிடத் தெரியாமல் பயணித்த நிறுவனங்கள் பின்னடைவையே சந்திக்கின்றன. திட்டம் வகுப்பது என்றால் என்ன? நிகழ் வருட உற்பத்தி, செலவுகள், சந்தித்த பிரச்சனைகள், நிதி நிலை அறிக்கைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு, அடுத்து எப்படிப் பயணிக்க வேண்டும், அதற்கு என்ன மேம்பாடுகளைச் செய்ய வேண்டும், இலக்குகள் நிர்ணயம் போன்றவைதான் திட்டம் வகுப்பது. இதை வாசிப்பவர்களுக்கு, நான் ஏதோ கார்ப்பொரேட் ரேஞ்சிற்குப் பேசுவதாகத் தோன்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்; திருப்பூரிலிருக்கும் ஒவ்வோர் நிறுவனமும் 5 அல்லது 6 இலக்க முதலீட்டில் தொடங்கப்பட்டவையே. தொடர் தேடல்களே வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. தொடர் தேடல் என்பது கூட்டுமுயற்சி மற்றும் பகிர்தல் என்னும் அற விழுமியங்களால் சாத்தியமானது. வேதனையோடு ஒன்றைப் பகிரவேண்டும். அந்த அற விழுமியங்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொலைத்து வருவதும் இந்தத் தொழிலின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். உரையாடல்களும் பகிர்தல்களும் மட்டுமே இந்தத் தொழிலை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்றால் மிகையல்ல. அந்த விடுபட்ட பகிர்தல்களையும் உரையாடல்களை தொடர்ந்து மேற்கொள்வோம். அதுவே இந்தத் தொழிலை மீட்டெடுக்கும் கருவிகளில் ஒன்று. சரி, தொழில்முனைவோர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறீர்கள், அரசாங்கம் சார்ந்த நெருக்கடிகள் இல்லையா? தொழில் பின்னடைவுக்கு அரசு காரணமில்லையா? என்னும் கேள்விகள் வாசிப்பவர்களுக்கு எழும். நிச்சயம் உள்ளன. அவை குறித்து அடுத்த அத்தியாயங்களில் பேசுவோம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.  

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறை நெருக்கடிகள் கடந்த அத்தியாயத்தில் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் குறித்துப் பார்த்தோம். பின்னலாடைகளுக்கான தர ஆய்வுகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பின்னலாடைத் தயாரிப்பு என்பது பல உற்பத்திப் படிநிலைகளைக் கடந்து வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கும்போதே அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வர். இதில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தங்களின் சொந்தத் தரக் கட்டுப்பட்டுப் பிரிவைக்கொண்டு தர ஆய்வு செய்து அனுப்புவது ஒரு வகை. பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டுச் சேவை வாயிலாக, ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரான சரக்குகளை, ஏற்றுமதிக்கு முன்பாக, இறக்குமதி நிறுவனம் எந்தத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தை நியமிக்கிறதோ அந்த நிறுவன ஊழியர்கள், ஏற்றுமதிக்குத் தயாராகப் பெட்டிகளில் பேக்கிங் செய்து வைக்கப்பட்ட ஆடைகளை, குறிப்பிட்ட வரையறைகொண்ட கணக்கின் அடிப்படையில், பெட்டிகளைத் திறந்து ஆடைகளைத் தர ஆய்வு செய்து, அந்த ஆடைகள் இறக்குமதி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்தில், தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அந்த அறிக்கையை இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். முதல் வழிமுறையில் இறக்குமதி நிறுவனம் சரக்குகளைப் பெற்ற பின், அவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதை ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தெரிவித்து, உரிய நிவாரணங்களை பெறுவர். இதில், ஏற்றுமதி நிறுவனம் வர்த்தக வாய்ப்புகளை இழப்பதும் பெரும் பொருள் இழப்பைச் சந்திப்பதும் நிகழ்வது உண்டு. இரண்டாவது முறையில், இறக்குமதி செய்யப்பட்டபின் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.  அப்படியே எழுந்தாலும் அதற்குரிய பொறுப்பு ஆய்வு செய்த நிறுவனத்திற்கு இருந்தாலும், இறுதியில் பொருள் இழப்பு என்னவோ ஏற்றுமதி நிறுவனத்திற்கே. தயார் செய்த ஆடைகளில் அப்படி என்ன தர ஆய்வுகள் நடைபெறும் என இந்தத் தொழிலைச் சாராதவர்களுக்குக் கேள்வி எழலாம். தர ஆய்வு என்பது இரு வகைப்படும். முதல் வகை, ஆடைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பன்னாட்டு நிறுவனத்திடம் துணியின் தன்மைகள், அதன் நெகிழும் தன்மை, சாயத்தின் தரம், குறிப்பிட்ட அளவுக்கு ஆடையைத் துவைத்த பின் ஏற்படும் மாற்றங்கள், உபயோகித்த ரசாயனங்களில் உள்ள நச்சுத்தன்மை, சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் சோதிக்கப்பட்டு, சோதனை முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். இரண்டாம் வகையில், ஆர்டர்களை வழங்கும் இறக்குமதி நிறுவனம் ஆடைகளின் வடிவமைப்பு, அளவுகள், அதில் உள்ள வண்ணங்கள், பிரிண்டிங் மற்றும் எம்பிராய்டரி இருந்தால் அதன் வடிவம் மற்றும் அதன் வண்ணங்கள் மற்றும் அதன் தரம் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக கொடுத்துவிடுவர். ஆடை உருவாக்கத் துணியின் வகை, அதன் தன்மை, ஆடைகளில் தைக்கப்படும் லேபிள்கள், பிராண்ட் டேக், சில்லறை விலை உள்ள டேக், ஆடையைப் பேக் செய்ய பயன்படுத்தும் பாலிபேக் உள்ளிட்டவற்றைப் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டுவிடும். இந்த விவரங்கள் அனைத்தும், அந்தக் குறிப்பிட்ட ஆர்டருக்கு உகந்த மாதிரியுடன் தர ஆய்வினைச் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கும் முன் அதன் மாதிரியை (ப்ரொடக்சன் சாம்பிள்) இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றபின் உற்பத்தியைத் தொடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு ஆடையை இறக்குமதி நிறுவனம், ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பும். ஆய்வு நிறுவனத்தினர் இதனைக் கொண்டு, தயாராக இருக்கும் ஆடைகளை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள குறைகளைப் பட்டியலிட்டு இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்புவர். ஏற்றக்கொள்ளக்கூடிய அளவுகளில் குறைகள் இருப்பின் அதனை ஏற்றுக்கொண்டு தயாரான ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். குறைகள் அதிகம் இருப்பின் அவற்றைச் சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி அறிவுறுத்தப்படுவர். ஏற்றுமதி நிறுவனமும் மீண்டும் ஆடைகளைச் செப்பனிட்டு மறு ஆய்விற்கு உட்படுத்தி ஏற்றுமதி செய்வர். இதில் ஆய்வு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து, இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகமும் இதற்கென்று தரக்கட்டுப்பாட்டுப் பிரிவைக் கொண்டிருக்கும். அந்தப் பிரிவு, மேற்சொன்ன இரண்டாம் வகை ஆய்வுடன், துணி முதற்கொண்டு உற்பத்தியின் ஒவ்வொரு நிலையையும் கட்டுப்படுத்தும். இதன்வாயிலாக, உற்பத்தியாகும் ஆடைகளின் தரத்தை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதல் தர ஆய்வினை அதற்குரிய பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே செய்வர். இறக்குமதி நிறுவனங்களோ, அவர்களின் கிளை அலுவலகங்களோ இந்த வசதிகளை வைத்துக்கொள்வதில்லை; முற்றிலும் மற்ற நிறுவனங்களையே சார்ந்து இருக்கும். இதில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு என்ன சிக்கல்? முதலில் சொன்ன ஆய்வுகளை மேற்கொள்ள, இங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களிடத்தில் வேண்டிய வசதிகளைக் கொண்ட ஆய்வுக்கூடத்தை அமைந்துள்ளதால், ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் சரியான சோதனைகளை மேற்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் சோதனைகளை எளிதாகக் கடந்து ஒப்புதல் பெறுவர். சிறு நிறுவனங்களிடம் இதுபோன்ற கட்டமைப்பு வசதி இல்லை என்பதால், உற்பத்தி நிலையில் எங்கு தவறு நேர்ந்தாலும் சோதனையில் தோல்வியடைந்தால் ஆர்டர்கள் ரத்தாகும் நிலை அளவுகக்குச் செல்லும் அல்லது தள்ளுபடியுடன் ஆர்டர்களை அனுப்ப நேரிடும். இதனால் அந்தச் சிறு நிறுவனத்தின் நிதிச் சுமை அதிகரித்து, ஒரு கட்டத்தில் நிறுவனத்தை நடத்த மேலும் கடன்களை வாங்கிப் பயணிக்கவேண்டிய நிலை உருவாகும். ஒருமுறை தவறு நேர்ந்ந்தாலும் வர்த்தக வாய்ப்புகள் சிறு நிறுவனங்களை விட்டு, வேறு நிறுவனங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், வாங்கிய கடன் சுமை அதிகரிக்க, ஒருகட்டத்தில் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும். இதில் தவறு யாருடையது? சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ, ஒரு ஆர்டரை ஒப்புக்கொண்டு வாங்கிவிட்டால், நிச்சயமாக அதற்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் ஆடையின் தரம் மற்றும் தன்மைகள் அனைத்தும் இறக்குமதியாளர் குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். வர்த்தகப் போட்டியில் விலையைக் குறைத்து ஆர்டர்களை எடுப்பதன் காரணமாகத் தரத்தில் உடன்பாடு செய்துகொள்ளும் செயல்களால் ஆய்வுகளில் தோல்வியுற்று, அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாவது மட்டுமின்றி, அதே இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் மற்ற ஏற்றுமதி நிறுவனங்களிடத்திலும் அடுத்தடுத்து அந்த நிறுவனம் ஆடைகளுக்கான விலையைக் குறைத்துக் கேட்கும். இந்தச் சூழலில் ஏற்றுமதியாளர்களால் உடனடியாக வேறு இறக்குமதி நிறுவனங்களுக்குச் சென்று ஆர்டர்களை எளிதாகப் பெற்றுவிட முடியாது. ஒரு ஆர்டரைப் பெருவதற்குக் குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் ஆகும். இந்தச் சூழலில் லாபத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யவேண்டிய நிலைக்கு, நல்ல நிலையில் செயல்படும் நிறுவனமும் தள்ளப்படும். இதனால் லாப விகிதங்கள் குறைந்து, அடுத்து வேறொரு இறக்குமதி நிறுவனம் சரியான உற்பத்தி விலைக்கு ஆர்டர்கள் வழங்கும்வரை இந்தச் சிரமத்தை ஏற்றுக்கொண்டே பிற நிறுவனங்களும் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். தரக் கட்டுப்பாடுகள், ஆய்வுகள், மற்றும் அதன் சிக்கல்கள் குறித்துப் பார்த்தோம். இந்தத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு குறித்துத் தனி அத்தியாயம் ஒன்றை அடுத்து வரும் வாரங்களில் எழுதுகிறேன். ஏற்றுமதி நிறுவனங்களின் போக்கினைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம். மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

நெருக்கடிகளையும் போராட்டங்களையும் கடந்த பயணம் ஏற்றுமதி நிறுவனங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.   1980களில் ஏற்றுமதி தொடங்கிய காலத்தின் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்தே ஜவுளித் தொழில் பயணிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான இயந்திரங்களே அனைத்து உற்பத்தி நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்தன. 1990களில் தொடங்கிய உலகமயமாக்கல் காரணமாக ஜப்பான், சீனா, கொரியா, ஐரோப்பா, துருக்கி, அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்து தையல், நிட்டிங், டையிங், காம்பக்ட்டிங், பிரின்டிங் மற்றும் எம்பிராய்டரி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிலைகளுக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வலுவான உற்பத்திச் சங்கிலிக் கட்டமைப்பு ஏற்பட்டது. அரசின் மானியங்கள், வரிச் சலுகைகள், வங்கிகளின் தாராளமான நிதி உதவி ஆகியவை, இங்குள்ள தொழில் முனைவோர்களை அடுத்தடுத்து தொழில் தொடங்கவும் விரிவுபடுத்தவும் ஊக்கமளித்தன. இதன் காரணமாக ஒருபுறம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருகின. ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. தரமான ஆடைகள் குறித்த நேரத்தில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதி நாடுகள் காலத்திற்கு ஏற்ப, உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளின் கட்டமைப்பை ஆய்வுக்கு உட்படுத்தத் தொடங்கின. பல்வேறு விதிமுறைகளைக் கொண்ட ஆய்வினை பன்னாட்டு நிறுவனங்களின் வழியே மேற்கொண்டு, அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வர்த்தகம் மேற்கொள்ளப்படும் நிலை உருவானது. சிறிய அளவில் தொடங்கிய இந்த முறை தொடர்ந்து சீரிய இடைவெளியில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தவண்ணம் உள்ளது. இதற்காகவே இங்குள்ள நிறுவனங்கள் பல்வேறு மாற்றங்களைச் செய்து உற்பத்தியை மேற்கொள்ளவேண்டிய நிலை நிலவுகிறது. நெறிமுறைகளும் ஆய்வுகளும் தொழிற்சாலைகள் அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா? சுகாதாரமான சூழல் உள்ளதா? தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் சரியாகச் செயல்படுகிறதா? பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா? இவற்றைப் போன்ற செயல்பாடுகளை உற்பத்தி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பனவற்றையெல்லாம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி சான்றிதழ் அளிப்பர். இந்தச் சான்றிதழ் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்படும். இறக்குமதி செய்யும் நாடுகளுக்குத் தகுந்த ஆய்வறிக்கைகள், இதற்காகவே செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் வாயிலாகப் பெறப்படுகின்றன. இறக்குமதியாளர்கள், குறிப்பாக பிராண்ட் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே ஆர்டர்களை வழங்கின. இந்த ஆய்வுகளுக்கு உட்படாத நிறுவனங்களும் தொழிலில் நீடித்தன. ஏனெனில் அவர்களின் வாடிக்கையாளர்கள் இத்தகைய ஆய்வறிக்கைகளைக் கோரவில்லை. ஆனால், முன்பே ஓரிடத்தில் குறிப்பிட்டதைப்போல, இறக்குமதி நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, நாளது தேதியில், ஆய்வுகளுக்கு உட்படாத நிறுவனங்களால் ஏற்றுமதி உற்பத்தியில் ஈடுபட இயலாது என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம். பல்வேறு முன்னணி – பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ்களை அளித்தாலும் பலவேறு பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் உற்பத்தித் தொழிற்ச்சாலைகளை ஆய்வு செய்வதெற்கென்றே ஒரு பிரிவினை ஏற்படுத்தி, அவர்களே நேரடியாக ஆய்வினை மேற்கொண்டு சான்றிதழ்களை அளிக்கின்றனர். இந்த மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு, அதற்கென ஒரு தனிப் பிரிவினை ஏற்படுத்தி, தொடர்ந்து சூழலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்ட நிறுவனங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் வருவதும் அதனால் தொடர்ந்த வர்த்தக வளர்ச்சி சாத்தியமானதும் வெளிப்படை. நான் மேற்சொன்ன மாற்றங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்ளாத நிறுவனங்கள், இந்தச் சான்றிதழ்களைக் கோராத இறக்குமதியாளர்களிடம் மட்டுமே வர்த்தகம் மேற்கொள்கின்றனர். காலங்கள் செல்லச் செல்ல, ஒருகட்டத்தில் சான்றிதழ் பெறாத நிறுவனங்களால் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். எந்த ஏற்றுமதி நிறுவனம் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர்களைப் பெறுகிறதோ, அந்த நிறுவனம் மட்டுமே சான்றளிக்கப்பட்ட நிலை மாறி, ஆடை உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்கிற நிபந்தனை நாளது தேதியில் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக, ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறும் நிலையை நோக்கி நகர்கின்றன. இன்னும் ஓரிரு வருடங்களில் உற்பத்திச் சங்கிலியில் உள்ள ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அனைத்துமே சான்றிதழ்கள் பெறுவது கட்டாயமாகும். சான்றிதழ்களைப் பெறுவது எளிதானதா என்று கேட்டால், நிச்சயமாக எளிதான ஒன்றல்ல என்றே கூற முடியும். அதே சமயத்தில், பெற இயலாததும் அல்ல என்றும் சொல்லலாம். ஆனால் அதற்கான செலவினங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் மிக அதிகம். மேலும் ஒவ்வொரு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய நிபந்தனைகளைச் சேர்ப்பதும் இருக்கும் விதிகளை மேம்படுத்துவதுமாக, பார்க்கவேண்டிய வர்த்தகத்தைத் தாண்டி, இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்படவேண்டிய நிலை, கடுமையான அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமும் 10 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமும் ஒரே மாதிரியான சான்றுகளைப் பெறவேண்டியது அவசியம். அதே சமயம், பெரு நிறுவனங்களுக்கு அதெற்கென்று தனிப் பிரிவினை உருவாக்கிச் செயல்படும் வல்லமை உண்டு. சிறு நிறுவனங்களால் அவ்வாறு செய்ய இயலாது. காரணம் அந்த அளவிற்கான நிதிச் சூழல் அவர்களுக்கு ஒத்துழைக்காது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் வர்த்தகத்தைச் சுருக்கிக்கொள்வதும் புதிய உயரங்களை நோக்கிப் பயணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் பின்தங்குவயதும் நிகழ்கிறது. அடுத்ததாக, காலம் செல்லச் செல்ல சான்றிதழ்கள் உள்ள நிறுவனங்களுக்குத் தேவையான வர்த்தக வாய்ப்பை இறக்குமதியாளர்கள் உறுதி செய்கின்றார்களா என்ற கேள்வி எழுமேயானால், அதுவும் இல்லை என்பதே கசப்பான உண்மை. தொழிற்சாலை ஆய்வுகளைக் கடந்து, நாளது தேதியில் ஏற்றுமதி நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு, வளங்குன்றா உற்பத்திச் செயல்பாடுகள், மூலப்பொருட்களின் பிறப்பிடம், கொடுக்கப்பட்ட ஆடைகள் எங்கு விளைந்த பருத்தியிலிருந்து எந்த நூற்பாலையில் நூலாக மாற்றப்பட்டு, எந்த நிறுவனத்தில் துணியாக மாற்றப்பட்டு, எந்த தையல் கூடத்தில் தைத்து ஏற்றுமதி செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வர்த்தக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், தங்களின் பிரதிநிதிகளை இங்கு அனுப்பி தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொள்வதும் அதனை அவர்கள் நாட்டில் உள்ள பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டு, இந்திய உற்பத்தியாளர்களின் மேல் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது குறித்துத் தனி அத்தியாயம் ஒன்றைப் பின்னர் எழுதுகிறேன். தொழிற்கூட ஆய்வுகளைத் தாண்டி, தயாரிக்கப்படும் ஆடைகளின் தர ஆய்வுகள், அதன் முறைகள், அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம். ஜவுளித் தொழிலில் இல்லாதவர்கள் அதை வாசிக்கும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படும் என்றாலும் எங்கள் நிலையை அது உங்களுக்குத் தெளிவாக உணர்த்தும். மீண்டும் திங்களன்று அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.  

கடவுளும் முரண்களும்

கடவுளும் முரண்களும்

கவிதைகள் பன்னாட்டு நிறுவனத்தில் எனக்குநாளை நேர்முகத் தேர்வு இருக்கிறதுஉனது காணிக்கையான என் முடியைஇன்று இறக்க முடியாது என்றஎன் கோரிக்கைக்குஆயிரம் ரூபாய் நன்கொடைஅளித்தால் போதும் என்றஉன் பூசாரிக்குநான் என்ன பெயர் வைப்பேன்?நீயும்தான் என்ன பெயர் வைப்பாய்? குதர்க்கமாகப் பேசுகிறேன் என்றுநினைக்க வேண்டாம் ஒன்று பிச்சை இடுகிறீர்கள் – அல்லதுபிச்சை எடுக்கிறீர்கள் கடவுளைஉங்களோடு தொழுவதில்கூடஎனக்கு முரண்பாடு இருக்கிறது வேண்டா வெறுப்பாகஒவ்வொரு முறையும்ஏதாவது ஒரு தேய்வத்தின் முன்நிறுத்துகிறார்கள் என்னை அவர்கள் வேண்டுகிறார்கள்எனக்கோ கேள்விகள்தான் பிறக்கின்றன ஒருபோதும்எழுதுகிறவனுக்குக் கடவுள் இல்லை என்றுயார் சொல்வது?அப்படி ஒருவேளை இருந்தால்அவன் எழுத்தாளன் இல்லை என்பதையும்யார் சொல்வது?

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை தரமாகவும் சுவையாகவும் பாதுகாப்பான முறையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்படுவது போற்றத்தக்கது. அதுபோக, பிஞ்சுக் குழந்தைகளின் காலைப் பசியாற்றும் நோக்கில் இதற்கு வித்திட்ட தமிழக முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசுக்குக் கூடுதல் சுமை மிகுந்த திட்டம்தான் எனினும், அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசி போக்குவதும் ஓர் நல்லாட்சியின் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து செயல்படும் முதல்வரின் சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் நிச்சயம் வாழ்த்தி வரவேற்பர். இந்த ஆட்சியின் தனித்துவம் மிக்க திட்டம் இது. அதேவேளையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒரு புள்ளி விவரப்படி 24310 அரசுத் தொடக்கப் பள்ளிகளுடன் 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முடிய உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசிப்பிணி போக்க உள்ளது அறியத்தக்கது. எட்டு வகுப்பு முடிய உள்ள உயர் தொடக்கப்பள்ளிகளாக விளங்கும் நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு என்பதை மேலும் சற்றுப் பெரிய மனத்துடன் அணுகி, அரசின்மீது தூக்கி வைக்கப்படும் பாரத்தைப் பொறுத்துக்கொண்டு ஒரே வளாகத்தில் பயிலும் 6,7,8 வகுப்புக் குழந்தைகளும் பயனுறத்தக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதுடன், உரிய உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உடனடித் தேவையாக இருக்கிறது. பிறரைப் பார்க்கவைத்து உணவு உண்ணும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் என்றும் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், தம் பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கைகள் அரசின் ருசியான வகைவகையான காலை உணவு உண்பதை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டு, தமக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் மனத்தைக் கல்வியால் ஈடுகட்டுவது என்பது மிகவும் சிரமமான, சிக்கலான காரியமாகும். ஆசிரியர்களாலும் இதனைச் சரிசெய்தல் என்பது இயலாத ஒன்று. ஆகவே, அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் தொடக்க வகுப்புகளுக்குரிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயர் தொடக்க வகுப்புகளில் கல்வி பயின்று வரும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் மாணவர் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இக் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டித்துச் செயல்படுத்துதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போலவே, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் அறிவித்தபோது தொடங்கி, அதனைச் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றியபோதும், முட்டை மற்றும் தானியச் சிற்றுண்டி வகைகளைக் கலைஞர் இந்தத் திட்டத்தில் சேர்த்தபோதும், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. பிற திட்டங்களெல்லாம் அரசுப்பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படும்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இப்போது காலை உணவுத் திட்டத்திலும் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மதிய உணவு உண்ணும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் மட்டும் மறுக்கப்படுவது அறமன்று என்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும். மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் பயில்கிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகள் அருகில் இல்லாத கிராமப் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளே இருக்கும் ஒரே வாய்ப்பு. மிகச் சொற்ப அளவிலான நகர்ப்புறப் பள்ளிகளை மனத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறையாக இருக்காது. எனவே, தமிழக அரசு தூரிதமாகச் செயல்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும், இதுகுறித்து எழுதவில்லையா என்கிற கேள்விகளும் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விவரங்களும் கோர்வையாக வர வேண்டும் என்கிற கவனத்துடன் ஒவ்வொரு தரவுகளையும் எழுதிவருகிறேன். அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விடுபட்ட ஒவ்வொன்றையும் அவசியம் எழுத விழைகிறேன். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்திக்கான துணி வகைகள் பல. அவற்றுள் முக்கியமானவை பாலியஸ்டர், நைலான், மொடால், பாம்பூ, அக்ரிலிக் , ரேயான் உள்ளிட்டவை. இவற்றில் பருத்தி இழைகள் கலந்தும், ஸ்பான்டெக்ஸ் என்ப்படும் இழுவை நூல்வகைகள் இணைத்தோ அல்லது தனியாக ஒரு நூலிழை வகையாகவோ துணிகள் தயாரிக்கப்பட்டு ஆடைகளாக உருவாகின்றன. நாளது தேதியில் நுகர்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் நாம் எவ்வாறான ஆடைகளை உபயோகித்தோம், இன்றைய தேதியில் எவ்வளவு மாற்றங்களை அடைந்துள்ளோம் எனச் சிந்தித்துப் பாருங்கள். இந்த மாற்றங்கள் தொடர்ந்து வேகமாக முன்னெடுக்கப்படும் நிலையில் தொடர்ந்து பருத்தி இழை ஆடைகளின் உற்பத்தி குறித்தே நமது பார்வை இருப்பது இன்றைய பின்னடைவுக்கு மட்டுமல்லாது, வளர்ச்சி நிலைத் தேக்கத்துக்கும் காரணமாக நாம் பார்க்கலாம். பருத்தி உற்பத்தி இங்கே அதிகம். உலகத் தேவையில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் ஆடை ஏற்றுமதி செய்கிறோம். தேவைகள் பெருமளவிற்கு இருக்கும்போது ஏன் பருத்தி ஆடை உற்பத்தியை விட்டுவிட்டு செயற்கை நூலிழை உற்பத்தியை நோக்கி செல்லவேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் எழும். கடந்த 30 ஆண்டுகளில் உற்பத்தி தேசங்கள் அதிகரித்துள்ளன. பங்களாதேஷ், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகள் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. பாகிஸ்தானும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. கோர் ப்ரோடக்ட் எனச் சொல்லப்படும் பல்வேறு ஆடைகளின் உற்பத்தி இந்த தேசங்களுக்கு மாறியுள்ளது. காரணம், இந்தத் தொழில் வளரவேண்டும் என்கிற நோக்கத்தில் அந்தந்த நாட்டின் அரசுகள் அங்குள்ள உற்பத்தியாளர்களுக்குக் கொடுத்த சலுகைகள், புவிசார் அரசியல் நோக்கம், அதே சமயம் மதிப்புக் கூட்டல் குறித்தான கருத்துக்களைப் புறந்தள்ளி பஞ்சு, நூல் மற்றும் துணி ஏற்றுமதியை ஊக்குவித்தது, உற்பத்தி தேசங்கள் பெற்ற சர்வதேசச் சலுகைகள் மற்றும் உள்நாட்டுச் சலுகைகள் ஆகியவை ஆடை விலைகளில் பெரும் வேறுபாடுகளை உருவாக்கியதால் இறக்குமதி நாடுகள் விலை குறைவாகக் கிடைக்கும் நாடுகளை நோக்கி நகர்ந்தனர். மென்பொருள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் அதிக வருவாய் ஈட்டியதால் ஜவுளித்துறையை ஆதரிப்பதில் அரசின் தரப்பில் சுணக்கம் ஏற்பட்டதும், வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜவுளித்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவத்தை அரசு புறந்தள்ளியதும், பருத்தியை ஊக பேர வணிகத்தில் சேர்த்ததும், அதனால் ஏற்பட்ட தொடர் நூல் விலை மாற்றங்கள் ஆகியவையும் பருத்தி ஆடை உற்பத்திக்கான பின்னடைவில் உள்ள முக்கிய காரணங்கள். முந்தைய பகுதியில், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி குறித்துப் பார்த்தோம். ஏற்கனவே திருப்பூரின் உற்பத்திப் படிநிலைகள் குறித்தும் பார்த்துள்ளோம். முற்றிலும் பருத்தி ஆடைகள் தயாரிப்பதற்கான கட்டமைப்பில், செயற்கை நூலிழை ஆடைகளை எவ்வாறு தயாரிப்பது என்கிற கேள்வி சிலருக்கு எழக்கூடும். திருப்பூரின் வரலாறே, உழைப்பு; அதையும் கடந்து, நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் விவேகமும் வேகமும்; மற்றும் முதலீடுகளுக்குத் தயங்காத தொழில்முனைவோர் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான். மேற்சொன்ன காரணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கப் போகிறோமா அல்லது இந்தக் கடும் சவால்களையும் தாண்டிய வாய்ப்புகளை நமதாக்கிக்கொள்ளப் போகிறோமா என்பதே நமது அடுத்தகட்டப் பயணத்தைத் தீர்மானிக்கும். பெரும் முதலீடுகள் இல்லாமல், அதே சமயம் இருக்கும் கட்டமைப்பை செயற்கை நூலிழை ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பல்வேறு தளங்களில் இதை முன்னெடுக்க வேண்டும். அதே சமயம், புதிய முதலீடுகளை இந்தக் கோணத்தில் திருப்பவேண்டிய தேவையும் உள்ளது. தனித்தனி உற்பத்திக் கேந்திரங்களாக உள்ள நூற்பாலைகள், நிட்டிங், டையிங், பினிஷிங், பிரிண்டிங் போன்றவை குழுவாக இணையவேண்டும். இவை ஒரே நிறுவனமாக மாறி, துணிகள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களாக மாறவேண்டும். இந்தவகையில் உற்பத்திச் செலவு குறைவு, தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் வழிகள், பணச்சுழற்சி, ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மொத்தமாகத் துணியாக வாங்கி ஆடைத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு இன்னும் கவனத்தைக் குவித்தால் வர்த்தகத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10% நிறுவனங்கள்,துணியாக வாங்கி ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் முறைக்கு முழுமையாக மாறிவிட்டனர். பல நிறுவனங்கள் பகுதி அளவில் இவ்வாறு செயல்படுகின்றன. இந்த முறைக்கு மாறுவது தொழிலை நாம் தக்கவைக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கிறேன். திரும்ப திரும்ப ஒன்றைத் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி மட்டுமே பிரதானம் என்னும் வசதியான வரையறையைக் கடந்து வெளியே வரவேண்டும். அவ்வாறு கடந்து வந்தால் பெரும் வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது. அழியப் பிறந்த மண் அல்ல இது; அழிவின் விளிம்பு வரை சென்று, மிகப் பெரிய அளவில் உயிர்த்தெழும் வல்லமை கொண்ட ஊர். அடுத்தடுத்த அத்தியாங்களில் வங்கி சார்ந்த சிக்கல்கள், தொழிலார்கள் அளவில் செய்யவேண்டிய மாற்றங்கள், உற்பத்தி நிலைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப்போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் கற்றல் – கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவுப் பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது. இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லாருடைய மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசியத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டுகளித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்குப் பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் இதைப்போன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது. இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவிதக் குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம். எனினும், இது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம். இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்புக் கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை. சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்குச் சரியாக விடையளிப்பது அவசியம். வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம்.  இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழிகோலும். இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை – இனிமை – எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு. எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத்தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல, வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக்கொண்டிருக்கும். தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின்போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம். இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு களால் (Online Mutual Response Class) கல்வி வளப்படுத்தப்படும். தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனத்தின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள்  மனத்தின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாகக் கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும். இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிகரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திரச் செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்துவிடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்பக் கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார். ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை யாக (AI Class) உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்டபோது பலரும் இதெல்லாம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில்

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது. தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார். ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார். கவிஞர் ஜீவா ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர். மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார். ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது. 1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,   பாசிசமே பாசிசமேபாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மைநீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம் என்ற பாடலை எழுதினார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர். கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது. 22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார். பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம். இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன. போராளி ஜீவா மேடையில் ஓர் வேங்கை பாயுமேகைகளை விண்ணோக்கி வீசி வருமேவீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமேவெஞ்சேனை முறுக்கேறுமேகோடையின் இடி கொண்டு கொட்டுமேவார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார். உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார். 08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார். தமிழ்ப் பற்றாளர் ஜீவா மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார். 1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை. சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

போட்டி உற்பத்தியாளர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம் நாட்டில் வேறு எங்கெல்லாம் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது எனப் பார்ப்போம், சென்னை, கர்நாடகா, மகாராஷ்டிரா, லூதியானா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பின்னலாடைகள் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திருப்பூர் மட்டுமே 55% அளவுக்கு நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் உற்பத்திக்கான பங்களிப்பைச் செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது, சீனா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மார், சில ஆப்பிரிக்கா நாடுகள்,  பெரு, பிரேசில், துருக்கி, போர்ச்சுகல், ஜோர்டான் உள்ளிட்டவை இந்தியாவில் உற்பத்தியாகும் பின்னலாடை வகைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். உலக ஜவுளித் தேவையில் சீனா 35% பங்களிப்பை வழங்குகிறது. பங்களாதேஷ் 8%, வியட்நாம் 7%, இந்தியா 3.8% பங்கினை அளிக்கின்றன. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக, பருத்தி சார்ந்த ஆடைகளே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் பஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன. 1960களின் இறுதிவரை, உள்நாட்டுப் போர், கலவரம், நிலையில்லாத் தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சீனா, அமெரிக்க ஆக்கிரமிப்பினால் மிகுந்த இன்னலுக்கு உள்ளான வியட்நாம், இந்தியாவின் முயற்சியால் 1971இன் இறுதியில் தனி நாடு அந்தஸ்தைப் பெற்ற பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நாளது தேதியில், ஏறத்தாழ உலகின் ஜவுளிச் சந்தையின் சரி பாதியைத் தங்களிடம் வைத்துள்ளன. 1990களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து மட்டுமே ஆயத்த ஆடைத் தயாரிப்பை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ், இன்றைய தேதியில் பஞ்சை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயாரித்து அனுப்புமளவிற்குத் தனது கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.   வியட்நாமைப் பொறுத்தவரை அதன் ஆடை உற்பத்தித் தேவைக்கான துணிகளை 8% மட்டுமே தனது நாட்டில் தயாரிக்கிறது. மீதமுள்ள 92% அளவிற்கான நூல் மற்றும் துணிகளை, சீனா, இத்தாலி, துருக்கி, பங்களாதேஷ், இந்தியா, தைவான், கொரியா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தே ஆடை உற்பத்தியை மேற்கொள்கிறது. பல உள்நாட்டுக் குழப்பங்களால் அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் பாகிஸ்தான், சிறுகச் சிறுகத் தனது ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தி, இன்று குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள், பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் தொழில் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதோடு, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரி இல்லாமல் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒருபுறம்; உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தாலும் பல்வேறு இன்னல்களை இந்தியாவிற்குக் கொடுத்துள்ளது என்பதை மறுக்கவியலாது. உதாரணத்திற்கு, இங்குள்ள ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல மானியங்களை மத்திய அரசு வழங்கி வந்த காரணத்தால், தொழில் நன்றாக வளர்ந்தது. உலகத் தேவைக்கு 3% அளவிற்கும் தனிநபர் வருவாய் 1000 அமெரிக்க டாலர் என்கிற அளவினை எட்டும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிலுக்கு வழங்கி வரும் மானியங்களைப் படிப்படியாக குறைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையைப் பின்பற்றவில்லை என்று, ஐ.நா.வில் இந்தியாவை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசு, 8 ஆண்டுக் காலம், இயன்ற அளவு மானியங்களை வழங்கியே வந்தது. சீனாவைப் பொறுத்தமட்டில், அங்கு பருத்தி ஆடைகள் தவிர்த்து, செயற்கை நூலிழை எனச் சொல்லப்படும் பாலியஸ்டர், நைலான், ரேயான் உள்ளிட்ட ஆடைகள் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலும் இவ்வாறான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பாலியஸ்டர் ஆடைகள் வடமாநிலங்கள், குறிப்பாக லூதியானா மற்றும் சூரத்தில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. அதுவும் உள்நாட்டு விற்பனைக்கே அதிகம் அனுப்பப்படுகிறது. இது தவிர, அக்ரிலிக், வூல் உள்ளிட்ட ஆடைகளும் சீனாவில் அதிகளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறனை எடுத்துக்கொண்டால், நாம் மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். அதேபோல் ஒரு தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு ஏற்ப ஆட்களின் பங்களிப்பு என்பது 1 இயந்திரத்திற்கு 1.15 என்கின்ற அளவிலே உள்ளது. இது பங்களாதேஷ் மற்றும் வியட்னாமிற்கும் பொருந்தும். அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு இயந்திரத்திற்கு இரு ஆட்கள் என்கிற அளவு உள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரை, சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நிர்ணமாணிக்கப்பட்ட தொழிற்சாலைக் கொள்ளளவிற்கு 80% அளவு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்தியாவில் இது 40% அளவே உள்ளது. ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஒதுக்கீடு அதாவது கோட்டா முறையிலேயே ஏற்றுமதி செய்ய இயலும். இது அனைத்து உற்பத்தி நாடுகளுக்கும் பொருந்தும். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா ஒருங்கிணைந்ததல்ல. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் என, தனித்தனி நாடுகளாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தனி ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி நாட்டு அரசும் இறக்குமதி நாட்டு அரசும் இந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்வர். அதன் அடிப்படையில் உற்பத்தி நாடுகளின் அரசு, தனது துறைசார் அலுவலகத்தின் வாயிலாக இந்த ஒதுக்கீடுகளை, சீரிய காலகட்டத்தில் ஏல அடிப்படையில் வெளியிடும். அதிக மதிப்புக்கூடிய ஆடைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த ஒதுக்கீடுகளைப் பெற்று ஏற்றுமதி செய்வர். 2004ஆம் ஆணடுக்குப் பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டு, 2005 முதல் தாரளமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய நாடுகள் சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் என்பதைத் தரவுகள் விளக்கும். திருப்பூரின் கட்டமைப்பு மட்டுமே பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பல்வேறு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பை நாட்டின் பிற பகுதிகளில், அவ்வளவு ஏன், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில்கூட ஏற்படுத்த இயலாமல் போனது. இதை உள்ளபடியே பெரும் அவலமாகவே கருதவேண்டும். குறைந்தபட்சம் நாடு முழுவதும் 20 திருப்பூர் அமையப்பெற்றிருந்தால், வர்த்தக வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரச் சூழலும் பறந்து விரிந்திருக்கும். பல மாநிலங்கள் இன்றளவும் முயன்றாலும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதும், இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுடன் அணுகினால், பல திருப்பூர்களை உருவாக்க இயலும் என்பதே நிதர்சனம். ஏற்றுமதிக்கான ஆடைகள் பெரும்பாலும் கப்பல் வழியாகவே இறக்குமதி நாடுகளுக்கு அனுப்பப்படும். காலக்கெடு  தவறியோ அல்லது இறக்குமதி நிறுவனத்திற்கு உடனடித் தேவை என்கிற நிலையிலோ விமானம் வாயிலாக அனுப்பப்படும். பெரும்பாலான விமானம் வாயிலான சரக்குப் போக்குவரத்து சென்னை, பெங்களூரு, கொச்சின், மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் வாயிலாகச் செல்லும். கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகங்கள் வாயிலாகச் செல்கின்றன. தூத்துக்குடியைப் பொறுத்தமட்டில் மதர் வெஸ்ஸல்ஸ் எனப்படும் பெரிய கப்பல்கள் வருவதற்கான வாய்ப்பில்லை. அதனால் இங்கிருந்து சிறு கப்பல் வாயிலாக இலங்கைத் துறைமுகம் சென்று, சீனாவிலிருந்து புறப்பட்டு வரும் மதர் வெஸ்ஸல் வாயிலாக அனுப்பப்படும். மும்பை, கொச்சி, முந்த்ரா துறைமுகங்களுக்கு மதர் வெஸ்ஸல்ஸ் வருகின்றன, இந்தியாவிலிருந்து கப்பல் வாயிலாக அனுப்பப்படும் சரக்குகள் ஐரோப்பியத் துறைமுகங்களை அடைய 20 முதல் அதிகபட்சம் 30 நாட்களும் அமெரிக்காவிற்கு 28 முதல் 55 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன. விமானம் வாயிலாகச் செல்வதற்கு 2 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.   ஒருவழியாக என்னால் இயன்ற அளவு, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலின் தோற்றம் மற்றும் அதன் கட்டமைப்பு, கடந்துவந்த பாதை குறித்து விவரித்துவிட்டேன். இனி நிகழ்கால நிலை, இடர்ப்பாடுகள், சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்தான பார்வைகள் குறித்து அடுத்த பகுதியிலிருந்து பேசுகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியும் அன்பும்.  

பவால்

பவால்

திரை விமர்சனம் அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.   அவை, அவன் போலியாகக்  கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தைச் சடுதியில் நொறுங்கச் செய்து, அவனது வேலைக்கே உலை வைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. அவற்றை அவன் எவ்விதம் எதிர்கொண்டான், மண உறவும் வேலையும் மீண்டும் அவனுக்கு வாய்த்ததா என்பதுதான், நிதிஷ் திவாரி இயக்கி, ஹிந்தியில் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன்  வெளியாகி உள்ள ‘பவால்’ திரைப்படத்தின் மொத்தக் கதை. வலிப்புக் குறைபாடு இருப்பதைத்  திருமணத்திற்கு முன்பே நிஷா தெளிவாக அவனிடம் கூறியும் சம்மதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் அதையே காரணம் காட்டி அவளைத் தவிர்க்கும் அஜய், தனக்குள் வியாபித்திருக்கும் ஆளுமைச்  சிதைவை அறியாதது சோகம்.   இரண்டாவது உலகப் போரில் தொடர்புடைய நாடுகளுக்கு, தவிர்க்க இயலாத நிலையில் மனைவியுடன் பயணித்துப்  பார்வையிடுவதும் அப்போது நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரோடு இருக்கும் ஒருவரது அனுபவத்தை அறிய நேரிட்டதால் அவனுக்குள் வரும் மாற்றத்தையும் அந்த மாற்றம் அவளுக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் அஜய் தீட்சித்தாக வரும் வருண் தாவணும் நிஷாவாக ஜான்வி கபூரும்  வெளிப்படுத்துவதில், தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். அஜயின் தந்தை மனோஜ் பாவா, தாய் அஞ்சுமன் சக்சேனா, எம்.எல்.ஏ. ரகுவன்ஷி முகேஷ் திவாரி, அவரது மகன் அதுல் நிகில் சாவ்லா, நண்பன் பிரதீக் பச்சோரி (பிபின்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை. மித்தேஷ் மிர்ச்சந்தானியின் காமிரா, இந்தியாவில் லக்னோ, கான்பூர்,  மும்பை என்றும் பாரிஸ், பெர்லின், ஆம்ஸ்டர்டாம், கிரக்கோவ் வார்ஸா, போலந்து ஆகிய அயல்நாடுகளிலும் சுற்றிச் சுழல்வதுடன், இரண்டாம் உலகப்போர் காலத்திலான உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் கருப்பு வெள்ளையில் வழங்கி, மனதில் ஆழமாகப் பதிய வைப்பது சிறப்பு. டேனியல் பி ஜார்ஜ்ஜின் பின்னணி இசையும் சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இனிமையான பாடல்களுக்கு நால்வர் இசை அமைத்துள்ளனர். “எக்ஸாம் வருது பேப்பர் செட் பண்ணனும்” (அஜய்) “முதல்ல உன் லைஃப்ப செட் பண்ணு” (அம்மா) “பிரச்சனைகளைச் சமாளிக்கக் கத்துக்க. இப்படி ஓடாத” (அப்பா) “எப்போ உனக்கு இந்த உறவைச் சமாளிக்க முடியாதுன்னு தோனுதோ, அப்போ எங்ககிட்ட வந்துரும்மா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. டைவர்ஸ் வாங்கறது கேவலம் இல்ல” (நிஷாவின் அம்மா) “தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா எல்லாம் தெரியும்; இடத்தப் பத்தியும் மனுஷங்களப் பத்தியும்” (நிஷா) “நமக்குள்ள எதுவுமே காமனா இல்ல” (அஜய்) “காமனா இருக்கணும்னு அவசியமா?” (நிஷா) “ஹிட்லரோட லைஃப்ல இருந்து முக்கியமா ஒன்னு கத்துக்லாம்னா, அது பொய், பித்தலாட்டம். இதனால உருவாகற இமேஜ் ரொம்ப நாள் நீடிக்காது. அதனாலதான் இந்த நிலம,  எங்க இட்லர் செத்தானோ அங்க ஒரு கார் பார்க்தான் இருக்கு, ஒரு மெமோரியலும் இல்ல.  சரிதான், கடைசியில உண்மைதான் வெல்லும். பொய்மை இல்ல” (அஜய்) “பத்து மாசமா நெனச்சிகிட்டு இருந்தது, நீ எனக்கு லாயக்கில்லன்னு. ஆனா, இந்தப் பத்து நாள்ல புரிஞ்சுகிட்டேன் நான் உனக்கு லாயக்கில்லன்னு” (அஜய்) “நம்ம வாழ்நாள்ல ஏற்படற துக்கம் அவங்களோட ஒருநாள் வாழ்க்கைக்கு முன்ன ஒன்னுமே இல்ல” “வரலாறு இருக்கறதுக்குக் காரணம், நம்ம தப்ப திருத்திக்கத்தான்” (ரகுவன்ஷி) “மத்தவங்ககிட்ட இருக்கிறதப் பார்த்து அதையே நினைச்சுகிட்டு வருத்தமா இருந்தா, நாம என்னைக்குமே சந்தோஷமா இருக்க முடியாது. ஆனா, கிடைச்சதுல சந்தோஷத்தைத் தேடினா அப்போ முகத்தில் தெரிகிற உண்மையான சந்தோஷம், அந்தச் சந்தோஷத்தைவிடச் சிறந்த இமேஜ் எதுவுமே இல்லை” இவை, அர்த்தபூர்வமான, நினைவை வருடிக்கொண்டே இருக்கும் வசனங்கள். ஹிட்லரின் கொடிய ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலான அனுபவத்தைப் பெரியவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, அதை மொழிபெயர்த்து உணர்வுப்பூர்வமாக அஜய்யிடம் சொல்லும் நிஷாவும் கேட்கும் அஜய்யும் அவை தங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளான லேசான விரிசல் மறையவும் அவனுக்குள் அவன் திருத்தம் பெறவும் வாய்ப்பாக அமைத்திருக்கும் பாங்கு, இயக்குநரின் முத்திரை. காதல், பாசம், குடும்பம், மனிதம், பிம்பம், ஆளுமை போன்றவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணரவும் நாயகன் அஜய் தீட்சித் போன்ற மனப்பான்மை கொண்ட எவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்து தெளிவு பெறவும் நித்தீஷ் திவாரி அற்புதமாக இயக்கி வழங்கி உள்ள ‘பவால்’ வாய்ப்பளிப்பது நிச்சயம். மதிப்பெண் : 7/10

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும்” என்பதுதான் கர்ணன் கேட்ட இரண்டாவது வரம். மரணத் தருவாயில், தன்னை மகனே என்று அழைக்கும்படி கர்ணன் கேட்ட வரத்தில் முக்கியமான சாதிப் பாகுப்பாட்டின் பின்னணி ஒன்று ஒளிந்திருக்கிறது. அது என்ன? கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை உலகறியும். ஆனால் அவன் செய்ய முடியாமற்போன ஒரு தானம் இருக்கிறது. அது ‘அன்னதானம்’. சூதபுத்ரனின் கையினால் எல்லா தானமும் பெற்ற பார்ப்பனர்களும் மக்களும் அவன் கையிலிருந்து ‘அன்னதானம்’ மட்டும் பெற மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் கர்ணனால் ‘அன்னதானம்’ மட்டும் வழங்க முடியவில்லை என்கிறது மகாபாரதம்.இதிலும் சூத்திரன் சத்ரியன் என்ற பாகுபாடு, இந்த நியதியின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்ற நியதி, கர்ணனின் நெஞ்சைத் துளைக்கும் கொடூர வண்டாகவே இருந்தது. அதிலும், ‘அன்னதானம் செய்தவன் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக முடியும்’ என்றும் ‘இல்லையேல் நரகத்தில் வாடவேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கர்ணனுக்குப் போதித்திருந்தார்கள். தான் சூதபுத்திரன் என்று அறியப்படும்வரை, தன்னால் அன்னதானம் செய்ய முடியாது என்று நம்பினான் கர்ணன். அதனால்தான் குந்திதேவியிடம், மரணத் தருவாயில், தனது பிறப்பு ரகசியத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகப் பெற்றான். குந்திதேவி ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது மரணத்திற்குமிடையிலான தருணத்தில், யாரேனும் சிலருக்கு ‘அன்னதானம்’ தந்து சொர்க்கத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் கர்ணனின் நோக்கம். எனில், முன்பே அது அறிவிக்கப்பட்டால் நல்லதுதானே என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அந்த அறிவிப்பால் யுத்தத்தில் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க முடியாமல் போய்விடுமே! அதனால்தான் அந்த இரண்டாவது வரத்தைக் குந்தி தேவியிடம் கேட்டான். அப்படித்தானே ஆகிப் போனது. செஞ்சோற்றுக் கடனுக்காக எல்லாவற்றையும் பின்தள்ளிய அவனது செய்நன்றி பாராட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!மகாபாரதக் காலத்தில் வருணாசிரம அமைப்பு, சில வர்ணங்களைச் சில காரியங்களை செய்யவிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கர்ணனின் கதை காட்டுகிறது. இனி அசுவத்தாமனைப் பார்ப்போம். அசுவத்தாமன் துரோணரின் ஒரே மைந்தன். போர் செய்வதில் மகாரதன். அவன் சிரஞ்சீவி. அவனுக்கு எந்த நாளும் மரணமில்லை.தொடை பிளந்து நிலத்தில் கிடந்த துரியோதனன், மரண தேவியின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில் சாம்ராஜ்ய ஆசையோ யுத்தத்தைத் தொடரும் எண்ணமோ துரியோதனனுக்கு இல்லை. புயலுக்குப் பின்னே அமைதி என்பதைப்போல, வீர மரணத்தைத் தழுவக் காத்திருந்தான். துரியோதனனின் சாவுத் துயர் அஸ்தினாபுரத்தைக் கலங்கடிக்கும் முன்பு நடந்த கடைசி நாடகத்தின் பாத்திரமாக அசுவத்தாமனே இருந்தான். பார்ப்பனனும் சுத்த வீரனுமான அஸ்வந்தாமனுக்கு துரியோதனனை அவனது மரணத் தருவாயில் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. “துரியோதனா.. யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே. பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் சல்லியனையும் தலைமைச் சேனாதிபதிகளாக்கி, நீ, இதோ தொடை பிளந்து பூமா தேவியின் மேல் மரணத்திற்காக காத்துக்கொண்டு கிடக்கிறாய். உன்னைப் பார்க்க மனம் பேதலிக்கிறது. உன்பொருட்டு, நான் எதையேனும் செய்ய வேண்டும் என்று என் உள்மனம் சொல்கிறது” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் சிரஞ்சீவி என்று காட்ட, அவன் தலையில் ஒரு அபூர்வமணி கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஒளி சிந்தும். அந்த ஒளி துரியோதனின் கண்களில் பட்டுத் தெறித்தது. “அசுவாத்தமரே, யுத்தம் முடிந்துவிட்டது. இரு பக்க சேனைகளும் அழிந்துவிட்டன. யுத்தம் செய்யத் தேர்களோ யானைகளோ வாள்களோ இல்லை. இந்த யுத்தத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் நர மாமிசத்தை விரும்பி உண்ணும் நரி போன்ற விலங்குகளின் விருந்து மண்டபம்போலக் காட்சி அளிக்கிறது குருக்ஷேத்ரபூமி. எங்கும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. இந்த நிலையில் அசுவத்தாமரே, உமக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் துரியோதனன். “துரியோதனா, நீ ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ என்னை கௌரவ சேனையின் தலைமைச் சேனாதிபதியாக நியமித்துவிடு. நீ மரணம் அடையும் முன்பு உன் மனம் குளிர நான் உனக்கு நல்ல சேதி கொண்டுவருவேன்” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் அந்த அளவிற்கு இரங்கிக் கேட்டுக்கொண்டதால், துரியோதனனும், இல்லாத கௌரவப்படைக்கு அசுவத்தாமனைத் தலைமைச் சேனாதிபதியாக நியமித்தான். அசுவத்தாமன் எமனோடும் அஞ்சாமல் போர் புரியக்கூடிய போராளிதான். ஆனால், எதிரிப்படை என்று எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கென்று ஒரு படை இல்லாத நிலையிலும் அசுவத்தமனால் என்ன செய்யமுடியும்? தன் தந்தையை அநியாயமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கிடவும் துரியோதனச் சக்ரவர்த்திக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்திட வேண்டும் என்ற உந்துதலினாலும், ஆனால், வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிக்கொண்டும் இருந்த அசுவத்தாமன், பண்டவர்களின் பாசறை இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் படுத்தான். ஆனாலும் என்ன செய்ய முடியும் என்பது அசுவத்தாமனுக்குப் புரியவே இல்லை. அந்தச் சமயத்தில் அவன் படுத்திருந்த மரத்தின்மேல் அலறல் சத்தம் கேட்டது. அசுவத்தாமன் உற்றுக் கவனித்தான். மரத்திலிருந்த கோட்டான்கள் சில, தமக்கு வசதியான இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரத்தில் கண் தெரியாத காக்கைகளைத் தங்களுடைய இரையாக்கிக் கொள்வதைக் கவனித்தான். அதுதான் இந்த அலறலுக்கான காரணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி: இதற்குமுன் போர்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் மோதிக்கொண்ட நிலைநின்று நடத்திய (Positional) யுத்தம். ஆனால், மரத்தடியில் படுத்திருந்த அசுவத்தாமனுக்குக் கோட்டான்களின் மூலம் கிடைத்த பாடம், எதிரி உறங்கும்போது கொல்ல முயலும் யுத்தம். இரவில் நடத்தும் கொரில்லா யுத்தம். உலக இலக்கியங்களில் முதன்முறையாக, ‘கொரில்லா யுத்தத்தின்’ சாராம்சத்தை மகாபாரதத்தில்தான் பார்க்கிறோம். உடனே அசுவத்தாமன், தன் யுத்த முறையை வகுத்துக்கொண்டான். அதன்படி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாய் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து, அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாண்டவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் ‘பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன்’ என்று ரத்தம் வடியும் கையைக் காட்டி, அவனை மனங்குளிர வைப்பது அசுவத்தாமனின் திட்டம். அதன்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த பாசறைக்குள் அசுவத்தாமன் கிருபாச்சாரியாருடன் நள்ளிரவில் புகுந்தான். பாசறைக்குள் பலர் படுத்திருப்பதைக் கண்டான். இருட்டில் அவர்கள் முகங்களும் உருவங்களும் சரியாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி அசுவத்தாமன் அங்கே படுத்திருந்த அனைவருடைய கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் வந்து, “துரியோதனா.. வெற்றி உன்னுடையதே! இந்த நிசப்தமான இரவில் பாண்டவர்கள் அனைவரையும் ரத்தம் வடியும் இந்த கைகளினால் கண்விழிகள் பிதுங்கப் பிதுங்கக் கொன்றுவிட்டேன். அதனால், யுத்தத்தில் நீதான் வெற்றி பெற்றாய். கடைசியாக உன் தலைமைச் சேனாதிபதியாக உனக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். அதனால் மனநிம்மதியுடன் வெற்றி வீரனாக சொர்க்கம் போவாயாக!” என்று துரியோதனனிடம் அசுவத்தாமன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கிருஷ்ணனும் பாண்டவர்களும் வந்து சேர்ந்தார்கள்.“அசுவத்தாமா.. இது என்ன பேடித்தனம். அந்தப் பாசைறையில் படுத்திருந்தவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் பிறந்த பால்குடி மறவாப் பாலகர்கள். அவர்களைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கிருஷ்ணன் கடிந்துகொண்ட பின்னர்தான், அசுவத்தாமனுக்கு, தான் இரவில் பாண்டவர்களுக்குப் பதிலாக, பாண்டவர்களின் மைந்தர்களைக் கொன்றுவிட்டோம் என்பது புரிந்தது. அசுவத்தாமனால் பதில் பேசமுடியவில்லை. மௌனமாக இருந்தான்.“அசுவத்தாமா.. இந்தக் கொடூரச் செயலுக்கு உனக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். ஆனால் நீ சிரஞ்சீவி. அதனால் உன்னைக் கொல்ல முடியாது. இந்த பஞ்சமகா பாதகத்தைச் செய்த பிராமணனாகிய நீயே உன் தோல்வியை ஒப்புக்கொள். அதுதான் உனக்குத் தக்க தண்டனையாக இருக்கும்” என்றான் கிருஷ்ணன். அசுவத்தாமன் அதற்கு ஒப்புக்கொண்டான். தன் தலையில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு ஒளிரும் மணியைத் தன்னுடைய சரணாகதியின் அடையாளமாக, அசுவத்தாமன் கிருஷ்ணனிடம் எடுத்துக் கொடுத்தான். அதுமட்டும் அசுவத்தாமனுக்குப் போதுமான தண்டனை ஆகாது என்பதால், “நீ மனித உருவத்தை இழப்பாய். ஆனால் நீ சிரஞ்சீவி என்பதால் வனாந்திரங்களில் ஓலமிட்டுக்கொண்டு ஓடும் ஊழிக்காற்றாய்க் காலம் முழுக்கத் திரிந்தலைவாய்” என்று கிருஷ்ணன் அசுவத்தாமனுக்கு சாபம் கொடுத்தான். அதுமுதல் அசுவத்தாமன் வனாந்திர ஓலமாகத் திரிகிறான் என்கிறார் வியாசர். முதல் கொரில்லா யுத்தம் பல்வேறு காரணங்களினால் தோற்றுப்போயிற்று என்பது உண்மையெனினும், பல நாடுகளில் இந்த யுத்த முறையைக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்யம் போன்ற வல்லரசுகளையே மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் என்பதைச் சரித்திரத்தின் ஏடுகள் சொல்கின்றன. இதில் உள்ள சட்டப் பிரச்சனை என்னவெனில், குருக்ஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்னர், இரண்டு படைகளின் தலைமைச் சேனாதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து, யுத்தத்தை எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார்கள் என்கிறது மகாபாரதம். இரவு வரும் முன்னே யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இரவு நேர யுத்தம் என்றால் அது இரு தரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்றும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காயமுற்றவர்களை யுத்தகளத்திலிருந்து அகற்றி, வைத்திய சாலையில் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னோடு யுத்தம் செய்யாத வீரனை மற்றொரு வீரன் தாக்கக்கூடாது என்றும் பல யுத்த விதிகளை அந்த இருதரப்புக் கூட்டத்தில் வகுக்கிறார்கள். ஒரு விசித்திரம் என்னவென்றால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யுத்த நியதிகள்தான் தற்போது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள யுத்த நியதிகளின் முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை. பிரச்சனை என்னவெனில், துல்லியமாக வரையறுத்த இந்த நியதிகளை, சிரஞ்சீவியாக வாழ வரம்பெற்ற ஒரு பார்ப்பன வீரன் மீறி, ஒரு பாவமும் அறியாத பாலர்களை இரவில் கழுத்தை நெறித்துக் கொல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நியதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; தர்மசாத்திரம் பயின்றவர்கள் செய்யும் செயலுமல்ல. இன்று சில பார்ப்பனர்கள், தாங்கள் குற்றமே இழைப்பதில்லை என்றும் சட்டத்தின் ஆட்சியை மதித்து வாழ்பவர்கள் என்றும் மற்ற அடுக்குகளில் வாழ்பவர்களைவிட மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள் என்றும் அர்த்தமில்லாமல் பீற்றுகிறார்கள். அவர்கள், குரு துரோணரின் மகனான அசுவத்தாமன் செய்த கொடுஞ்செயலைப்பற்றி மகாபாரதத்தில் உள்ள கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். ‘மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள்’ என்பதை அசுவத்தாமன்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.   இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர். குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு. சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற  நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது). பிராண்டுகள் இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன. மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும். இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.  திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.   மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா? முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்? ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. மன்றங்கள் 1) தமிழ் மன்றம்2) ஆங்கில மன்றம்3) கணித மன்றம்4) அறிவியல் மன்றம்5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்7) தமிழ் இலக்கிய மன்றம்8) ஆங்கில இலக்கிய மன்றம்9) வினாடி வினா மன்றம்10) வானவில் மன்றம்11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்12) போக்சோ மன்றம்13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்14) சாலைப் பாதுகாப்பு மன்றம்15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்16) சுற்றுச்சூழல் மன்றம்17) நூலக மன்றம்18) முன்னாள் மாணவர்கள் மன்றம்19) JRC20) SCOUT21) NSS22) NCC நலத்திட்டப் பதிவேடுகள் 1) பாடப்புத்தகங்கள்2) பாடக்குறிப்பேடுகள்3) புத்தகப் பை4) காலணிகள்5) அட்லஸ்6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்7) இலவசச் சீருடை விவரங்கள்8) Sanitary Napkin for Girl Students Details9) Geometry Box10) இலவச சைக்கிள்11) மடிக்கணினி கூடுதல் வேலைகள் 1) Student Admission – Register2) Student Transfer Certificate – Register3) Potential Dropout Details4) OOSC Details5) X, XII STD – Nominal Roll6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)7) School Timetable8) இல்லம் தேடிக் கல்வி9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை10) புதுமைப் பெண்11) 7.5% இட ஒதுக்கீடு12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்13) எண்ணும் எழுத்தும்14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்17) RBSK & IEDSS18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு கல்வி உதவித்தொகைப் பணிகள் 1) Pre Matric SC/ST Scholarship2) Post Matric SC/ST Scholarship3) Minority Scholarship4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை6) MBC Scholarship இதர பணிகள் 1) SSLC / HSC (+1, +2) Exam Duty2) Online Entry NR for 10th Students3) Supplementary Exam (June, September)4) NMMS (VIII STD) Exam5) NTSE (X STD) Exam6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு7) ESLC (VIII STD) Exam8) TNPSC Exam9) Election Duty10) BLO Duty11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு12) Stock Register Maintain Duty13) Treasury / Pay Bill work14) TRI certificate15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff16) Sports competitions17) Over all Competitions18) கலைத் திருவிழா19) CRC & BRC Training / RP Training இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது. தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை. கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை. மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.   இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிபெறுவோரில் 500 மாணவர்கள் மற்றும் 500‌ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இளநிலைப் பட்டம் முடிக்கும்வரை ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும். அதாவது மீண்டும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதி நடைமுறைக்கு வருகிறது. திறன்கள் குறித்து மட்டுமே பேசுவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறோம்; ஆனால் திறனறித் தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்யும்படி கூறுகிறோம். லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெறும் ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனில், சமவாய்ப்பு இதில் எங்கே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்கு அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கான மாநிலத்  திட்ட இயக்குனரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் கூட்டாக ஒரு இணைச் செயல்முறைக்கான சுற்றறிக்கையை இம்மாதம் அனுப்பியுள்ளனர். அந்தச் சுற்றறிக்கையில், ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற பெயரில் 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech Lab) வழியாக வினாடி-வினா தேர்வுகளை நடத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் பல்வேறு மாவட்டங்களிலும் 6-12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. இன்றுதான், அதாவது ஆகஸ்ட் 12 அன்று மாலைதான் தேர்வுகள் முடிவடைகின்றன. அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, அதாவது ஆகஸ்டு 16 முதல் 29 வரை மாணவர்களுக்கு வினாடி-வினா தேர்வுகளை நடத்தி, அதைப் பதிவு செய்யும்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பிவைத்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு நாட்கள் தேர்வுகள் என்றாலும் ஆய்வகங்களில் மாணவர்களைப் பகுதி பகுதியாக அனுப்ப வேண்டியிருப்பதால், ஆசிரியர்களால் வகுப்புகளைக் கவனிக்கவோ பாடங்களை நடத்தவோ இயலவே இயலாது. இந்தத் தேர்வுகள் முடிந்து அடுத்த சில நாட்களில், செப்டம்பரில், காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடுமே! ஒரு தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுமென்றால், நமது கல்வியின் நோக்கம்தான் என்ன? குழந்தைகள் பள்ளிக்கு வருவதே தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதற்கா? ஆசிரியர்கள் எதற்கு? பாடம் நடத்துவதற்கா அல்லது தேர்வுகள் நடத்துவதற்கா? இந்த வினாடி-வினா தேர்வு நடைமுறையிலும் கொள்குறி வகை வினாக்கள்தான் இடம்பெறுகின்றன. எனில், ஆறாம் வகுப்பு முதலே நாம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிந்துகொள்ள முடிகிறது அல்லவா? குறிப்பாக, இத்தகைய தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகையாகவே இருக்கும். எந்தத் தேர்வு என்றாலும் பாடப்பொருள் அறிவை, கொள்குறி (multiple choice) வகை வினாக்களாகவே எதிர்கொள்ளும்படி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வுகளை வன்முறை என்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்வும் நுழைவுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. “கல்வி என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சிடப்பட்ட பாடங்களை ஒரு குழந்தையின்மீது திணித்து, அது அந்தக் குழந்தையின் மூளைக்குள் ஏறிவிட்டதா எனத் தேர்வுகள் மூலம் பரிசோதிப்பதும் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்” என்கிறார் மரியா மாண்டிசோரி. ஆனால் நாம், நமது பள்ளிகளில் என்ன செய்துகொண்டுள்ளோம் தெரியுமா? முதல் வகுப்பு முதல் ஆன்லைன் தேர்வு. எண்ணும் எழுத்தும் திட்டம் வகுப்பறைகளில் நடப்பது, அதன் நீட்சியாக குழந்தைகளுக்கு அலைபேசி செயலி வழியாகத் தேர்வு. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலும் தேர்வு, தேர்வு, தொடர்ந்து தேர்வுகள் மட்டுமே‌. சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் பாடங்களைக் கற்றுத் தருவதும் தேர்வுகள் நடத்துவதும் நடைமுறையில் இருந்தாலும் தற்போது இருக்குமளவுக்கு குழந்தைகளுக்கு மன அழுத்தமோ பாடச் சுமைகளோ இருந்ததில்லை. பாடநூலில் உள்ள பாடங்களை நடத்துவதற்கான சூழலும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு இருந்தது. அந்தந்தப் பாட ஆசிரியர்கள், தமது மாணவர்களின் சூழல் மற்றும் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் இன்னபிற சூழல்களையும் கருத்தில்கொண்டு, பாடங்களில் உள்ள வினாக்களை சிறு தேர்வுகளாக அவ்வப்போது நடத்துவார்கள். அதன் மதிப்பீட்டுக்குப் பிறகு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எங்கெல்லாம் கவனம் தேவையோ, அங்கு சிறப்புக் கவனம் தருவார்கள். அதேபோல, பாடநூல்களும் இத்தனைக் கனமாகவோ குழப்பங்கள் நிறைந்ததாகவோ இருக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனையும் அன்றைய பாடநூல்கள் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாக, தற்போதைய பாடநூல்களின் அளவும் அதீதப் பாடப்பொருள்களும் குழந்தைகள் கல்வியை வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதைக் குறித்து நாம் எங்காவது கவனம் கொள்கிறோமா? கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இது குறித்தான கள உண்மைகளை வெளியே சொல்வதில்லை; கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. உலகத் தரத்தில் கல்வி தருவதாகக் கூறி, போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாகப் பாடநூல்களை வடிவமைக்கின்றனர், பாடநூல் குழு உறுப்பினர்கள். பாடநூல்களை வெறுக்கும் மனநிலைக்குச் தள்ளப்படும் குழந்தைகளை இங்கு  ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கலாம். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி பெற வைக்கப்படுகின்றனர். தடையில்லாத் தேர்ச்சியின் (No Detention Policy) மோசமான விளைவுகளால் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பிலும்கூடத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தாய்மொழியில் சரளமாகப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைத்தான் இந்தக் கல்வி முறை உருவாக்கி வைத்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி, அவர்களது கல்வி  வாழ்க்கையைப் பதம் பார்க்கும் அடுத்த கத்தி. ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி தரும் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள அற்புதமான கல்வித்துறை நம்முடையது. ஆம், ஒரு மொழியை மொழியாகவே கற்பிக்கத் தெரியாமல் செயல்படும்போது, மற்ற பாடங்களான அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள ஆங்கில அறிவை எப்படிக் கடத்த முடியும் என்ற கேள்வி நம்மிடையே இருந்தால், நாம் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கமாட்டோம். எல்லாமே இங்கு ஆவணங்கள்தான். குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரிகிறதா? எழுதத் தெரிகிறதா? சிறு தேர்வு வைத்துள்ளீர்களா? யூனிட் டெஸ்ட் வைத்துள்ளீர்களா? மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? மதிப்பெண் குறைந்தால் அதற்குக் குறைதீர் கற்பித்தல் செய்கிறீர்களா? மெல்லக் கற்போர் பயிற்சி நடக்கிறதா? பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?  ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படுகிறதா? இவை அனைத்தையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றினாயா? இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். இவைதான் இன்று அரசுப் பள்ளிகளில் நடக்கும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள். அடுத்ததாக, வாரத்தேர்வு வைத்தீர்களா? மாதத் தேர்வு வைத்தீர்களா? சிறப்பு வகுப்புகள் வைத்தீர்களா, வைக்கவில்லையா? வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; ஆனால் தேர்ச்சி வீதம் குறையக் கூடாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப, சிறப்பு வகுப்புகள் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் கவனம் தேவை. எனில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமா? ஒரு கட்டத்தில் எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே, குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இவை மட்டுமா? உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech lab) வழியாக ஒவ்வொரு மாதமும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள். அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் எனில், மாணவன் எப்போதுதான் சிந்தனை செய்வது? சொந்த நடையில் எழுதுவது? எப்போது தான் கற்ற கல்வி மூலம் இந்தச் சமூகத்துக்காக வினையாற்றுவது? என்பன போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் நம்மிடம்  பதிலே இல்லை. கல்வித்துறையிலும் சந்தேகமே ஏற்படுவதில்லை என்பதுதான் நம்முடைய ஆகப் பெரிய கவலை. எப்போது வேண்டுமானாலும், நாளொன்றுக்கு  குறைந்தபட்சம் சுமார் மூன்று ஆணைகளாவது பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை, கணக்கீடுகள், போட்டி அறிவிப்புகள், பயிற்சிகள், எமிஸ் பதிவேற்றங்கள், மாணவர்கள் விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் என, தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் இயல்பான வகுப்பறைகளை முற்றிலும் பாதிக்கின்றன. இவற்றுடன் மாணவர்களது உடல்நலக் குறைவு, அவர்கள் விடுப்பு எடுப்பது, உறவினர் வீடுகளுக்கு செல்வது, உள்ளூர்ப் பண்டிகைகள், ஆசிரியர்கள் உடல் நலமின்மை, விடுப்பு எடுப்பது, பயிற்சிக்குச் செல்வது என, இப்படிப் பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. தற்காலத்தில் அலைபேசிகளின் ஆதிக்கம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பழக்கங்கள், இப்படி இன்னும் சில கவன ஈர்ப்பு விஷயங்களைத் தாண்டி மாணவர்களைக் கல்விக்குள் அழைத்து வரவேண்டிய தேவை உள்ளது. ஒரு கல்வி ஆண்டில் மாணவர் – ஆசிரியர்  இருவரும் இணைந்து, எத்தனை நாட்கள் கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று கணக்கிட்டால், நம்முடைய போதாமை முழுமையாக வெளிப்படும். அரைகுறைக் கல்வியைக்கூடப் பெறாமலேதான் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி என்ற சுலோகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அது அல்லவே கல்வி. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்பதை, குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போதுதான் உணர்கின்றனர். பள்ளிக் கல்வியை முடித்தபிறகும் பல வகையான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நீட், JEE உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். குழந்தைகள் பாறைகளாக மாறிப்போகும் மனநிலையில், இறுகிப்போய்தான் வாழ்கின்றனர். அவர்களது மாணவப் பருவம் மிகவும் வறட்சியாகவே இருக்கிறது. தேர்வுகளை வெறுக்கும் குழந்தைகளது மனநிலை காக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபடவேண்டும். குழந்தைகளது மனநிலை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முழு மனதோடும் ஆர்வத்தோடும் கற்றலில் ஈடுபடும் சூழலையும் மனநிலையையும் உருவாக்க வேண்டியதே இன்றைய முக்கிய மற்றும் அவசரத் தேவை.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம். நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அமையப்பெற்றதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்து திருப்பூரை நோக்கிப் பலர் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். திருப்பூருக்கு வேலை செய்து பொருளீட்ட வந்த யாரையும் திருப்பூர் கைவிடவில்லை என்பதே நிதர்சனம். எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு வேலை கேட்டு வந்த ஒவ்வொருவரையும் அடிப்படைச் சம்பளம் ஒன்றை நிர்ணயம்செய்து, அவருக்குத் தேவையான பயிற்சிகளை நிகழ்நேரத் தொழிற்சாலை இயக்கத்தின்போதே அளித்து, ஒருகட்டத்தில் நன்கு தேர்வு பெற்றபின், திறனுக்கு ஏற்ற ஊதியத்துடன் பணியாற்றி வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்கு அவரை நகர்த்திச் சென்றது வரலாறு. பின்தங்கிய மாவட்டங்கள், குறிப்பாக வேளாண் மற்றும் இதர பணிகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பொருளாதார மேம்பாட்டிற்காகத் திருப்பூரை நோக்கி வந்ததும் அப்படி வந்த ஒவ்வொருவரையும் திருப்பூர் கைவிடாமல் சுவீகரித்ததோடு மட்டுமல்லாமல் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி, வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. பல்வேறு தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் சமூகத்திலிருந்து ஏரளமான பட்டதாரிகள் உருவாகி சமூகத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. இங்குள்ள தொழிலாளர்களும் சரி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் முனைவோர்களும் சரி, எப்பொழுதும் தங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டதே இல்லை. எந்தவொரு தொழிலாளியிடம் உரையாடினாலும்  தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் ‘எங்க கம்பெனி’ என்பதை மிகுந்த உரிமையுடனும் வாஞ்சையுடன் குறிப்பிடுவர். ஏற்றுமதி ஆடைகளைக் குறித்த நேரத்தில் அனுப்பவேண்டிய நெருக்கடியான சூழல்கள் அடிக்கடி ஏற்படும். அந்த நேரங்களிலெல்லாம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதேநேரத்தில் தொழில்முனைவோர்களும் உரிய முறையில் தொழிலாளர்களின் மாண்பை மதித்து, அவர்களை நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர். தொழிலாளர்கள் என வரும்போது, தொழிற்சங்கங்களின் பங்களிப்பை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் மிக சிறப்பாக இயங்கி வந்தன. அதன் தொடர்ச்சியாக, பின்னலாடைத் தொழிலார்களுக்கான தொழிற்சங்கங்கள், பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் தொடங்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். 1984ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பஞ்சப்படி போராட்டம், நீண்ட நாட்கள் வேலை நிறுத்தமாக நடைபெற்று, பலகட்டப் பேச்சுவாத்தைகளுக்குப் பிறகு முடிவுற்றது. தொழிற்சங்கங்களுக்கும் தொழில் முனைவோர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு பேணப்பட்டால் மட்டுமே எந்தவொரு தொழிலும் சிறப்பாக நடைபெறுவதோடு அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லும் என்பது அடிப்படை. அந்தவகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் பிரதான தொழில்முனைவோர் சங்கங்களும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வேலை நிறுத்தமோ சிறு சலசலப்போ இல்லாமல் தொழில் பயணிக்கிறதென்றால், இருதரப்பிற்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர புரிதலும் உரையாடல்களுமே காரணம். தொழிலாளர்கள் – தொழில் முனைவோர்கள் உறவிலும் மற்ற எந்த ஊர்களிலும் காண இயலாத பண்பாட்டினைத் திருப்பூரில் காணலாம்.  சம்பளம் மற்றும் தொழிலார்களின் இதர உரிமைகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதெல்லாம், அதைப் புதிதாகக் காண்பவர்களுக்கு, தொழிலாளர் – தொழில் முனைவோர் உறவு கெட்டு, இனி தொழிலுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற தோற்றம் இயல்பாகவே ஏற்படும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. அவரவர் கருத்தில் அவரவர் வலுவாக நிற்பர். ஒருகட்டத்தில் மிகச் சுமூகமான தீர்வை நோக்கி நகர்ந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்து தொழில் தடைபடாமல் நடைபெறச் செய்வர். தொழில் முனைவோர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு ஆகியவை இணைந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது வேறு எங்கும் காணமுடியாது ஒரு நடைமுறையாகும். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடாவிட்டால் தொழிமுனைவோன் என்கிற முறையில் நான் நன்றி மறந்தவனாவேன். ஏனெனில் பின்னலாடைத் தொழில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, ஸ்தம்பித்து நின்ற நேரங்களிலெல்லாம், போர்க்களத்தில் முன்நின்று களமாடி, போரை வெல்வதற்கான காரணமாக அமையும் முன்னணி வீரர்கள் போல், இந்தத் தொழிலைக் காப்பாற்றிய பெருமை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களையே சாரும். நான் மேலே குறிப்பிட்ட தரவுகள் மூலம் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்கான பின்புலங்களில் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தொழில் வெற்றியில் மட்டுமல்லாது, எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் திருப்பூரின் உதவிக்கரம் முதலாவதாக நீள்வதுடன், அதிகளவு பங்களிப்பை நல்குகிற செய்தியையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும். அதன் அடிப்படை, நான் மேற்சொன்ன மனிதநேயமிக்க தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுப் பாலமே. கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் மிகக் கொடூரமான காலகட்டம் என்பதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டோம். குறிப்பாக, நாடெங்கிலும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை நாடே பார்த்தது. ஆனால் திருப்பூர் மட்டுமே அந்தச் சிக்கலைச் சிறப்பாகக் கையாண்டது என்றால் அது மிகையில்லை. ஒரு தொழிலாளர்கூடப் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டதோடு, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் ரயில்களிலும் பேருந்துகளிலும் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிய பெருமை திருப்பூர் தொழில் சமூகத்தையே சாரும். அதுமட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு இலவசத் தடுப்பூசியை அரசு அறிவிக்கும் முன்னரே, கட்டணம் செலுத்தி பல ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய அந்த நேயமும் திருப்பூரையே சாரும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏறத்தாழ 19 மாநிலத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரின் விருப்ப மாநிலம் தமிழ்நாடு என்றாலும் அதில் திருப்பூர் முதன்மை வகிக்கிறது. இதற்குக் காரணம், பொருளீட்டல் வாய்ப்புகளைத் தாண்டி, தொழிலாளர்களை சரிசமமாக, சக மனிதனாக மதிக்கும் மக்கள் திருப்பூர் மக்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சப்பாத்தியையும் இட்லியையும் பரஸ்பரம் பங்கிட்டு உண்ணும் பண்பாட்டினை, சக மனிதனை நேசிக்கும் அறத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ள மக்கள் திருப்பூர் மக்கள் என்பதே பெருமைமிகு உண்மை. தொழில் மற்றும் அது வளர்ந்த கதை, அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பங்களிப்புகளைப்பற்றி இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில், திருப்பூரிலிருந்து வர்த்தக உறவினை மேற்கொள்ளும் வர்த்தகர்கள், சந்தைகள் ஆகியவற்றைப்பற்றியும் அதைத் தொடர்ந்து, இன்றைய தேக்கநிலை, செய்யத் தவறிய மற்றும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம். தொடர்ந்து பயணிப்போம், நம்பிக்கையுடன்.  

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்கடாஸ்மாக் பழரசத்தின் பரவசம் ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்கஎதிர்த்திசையில் சிலர்மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்தலைவிரி கோலமாய் இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்அம்பலமானது செய்திஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்