குமிண் சிரிப்பு

குமிண் சிரிப்பு

நாடக விமர்சனம் : மது ராஜேந்திரன் சிவபுரம் நடராஜர் சிலை கடத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட உண்மைக் கதையின் அடிப்படையில், சுஜாதா விஜயராகவன் எழுத்தில், திரைப்பட இயக்குநரும் வீணைக் கலைஞருமான எஸ்.பாலச்சந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கத்தில் மேடையேறி  இருக்கும் நாடகம்தான் ‘குமிண் சிரிப்பு.’ புதுப்பிப்பதற்காகத் தம்மிடம் வந்த  ராஜநல்லூர் சிவன் கோவில் நடராஜர் சிலையைப் போன்றே அச்சு அசலான ஒரு சிலையைப் பணத்தாசையால் மாணிக்க ஆசாரி செய்து விற்றுவிடுகிறார். அச்சிலை பல கைகள் மாறி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக்கூடத்திற்குப் போய்ச் சேருகிறது. இச்சிலைத் திருட்டு, பின்னர் வெளியுலகத்திற்குத் தெரிந்ததையடுத்து நடந்த சட்டப் போராட்டத்தின் இறுதியில் நடராஜர் சிலை மீட்கப்பட்டு, கிராமத்திற்குத் திரும்ப வருவதுதான் ‘குமிண் சிரிப்பு’ நாடகத்தின் மொத்தக் கதை. அப்பர் பாடலில் வரும் வார்த்தைகள் நாடகத்தின் தலைப்பாக இருப்பதுடன், உண்மையை வெளிப்படுத்த அதையே ஒரு உத்தியாகவும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிலை செய்யும் நேர்த்தியில் பெருமிதம் கொள்வதிலாகட்டும் வந்தவர்களிடம் முடிந்தவரை பேரம் பேசுவதிலாகட்டும்  நகை செய்யும் ஆசாரியிடம் மனைவிக்கு வாங்கும் நகை குறித்துச் சந்தேகம் தீர விசாரிப்பதிலாகட்டும்  மாப்பிள்ளை,  மகளிடம் பெற்ற பயனைப் பங்குபோட முனைவதிலாகட்டும் செய்த குற்றம் வெளிப்பட்டுவிட, அதைப் பேசிப் புலம்பி மருகுவதிலாகட்டும், பாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி மாணிக்க ஆசாரியாகவே மாறி நடிப்பில் பிரகாசிக்கிறார் ராஜா மான்சிங். ஆசாரியின் மகள் செல்லம்மா, மனைவி, மருமகன் கோபால், நிலக்கிழார் குமாரசாமி,  காவல் ஆய்வாளர், கலை வரலாற்றாய்வாளர் ரோஜர் வில்லியம்ஸ் உள்ளிட்ட துணைப் பாத்திரங்களும் நடிப்பில் தத்தம் பங்களிப்பைக் குறையின்றி வழங்கியுள்ளனர். மேடையில் வழக்கமான அரங்க அமைப்புகளைத் தவிர்த்து, பிரம்மாண்டமான டிஜிட்டல் பின்புலத்தைப் பயன்படுத்தியுள்ள புதுமை பாராட்டத்தக்கது. எனினும் அந்தத் திரை வரம்பிற்கு அப்பாலும் பாத்திரங்கள் நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோன்று, மேடை ‘மைக்’குகளுக்குப் பதிலாக, பாத்திரங்களின் தலையைச் சுற்றி ஒலிவாங்கியைப் பயன்படுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அவை வெள்ளை நிறத்தில் அல்லாது கருப்பு நிறத்தில் இருந்திருந்தால், பார்வைக்குச் சற்று உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கும். பின்னணி இசையின் துல்லியமும் பாடலின்  கனீரென்ற குரல்களும் ஈர்க்கின்றன. ஒளியமைப்பும் ஒப்பனையும் அருமை. இடையிடையே வரும் நிதீஷ் குமாரின் ‘சிவ’தாண்டவம் நேர்த்தியாக இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதன் குறியீடு என்னவென்பது (எஸ் பி எஸ்) ‘ராமனு’க்குத்தான் வெளிச்சம்! பொதுவாகச் சிலைத்திருட்டு பற்றி அமையாமல், வசதியாக சிவபுரம் நடராஜர் வழக்கைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைத் திருட்டில் கைக்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து ஒரு முழுமையான தோற்றம் வெளிப்படாதது ஒரு குறையே. சிலைத் திருட்டில் கடவுளர் சிலைகள் மட்டுமின்றி, பழமையான கலைப் பொருட்களும் ஓவியங்களும்கூட அடங்கும். இதனை பக்தி நாடகமாகவே உருவகித்துவிட்டதால், ஒரு ‘திரில்லர்’ அளவிற்குச் செல்ல வேண்டிய கதையோட்டம் இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம், சிலைத் திருட்டின் மர்மத்தை முதல் காட்சியிலேயே உடைக்காமல், விறுவிறுப்பான விசாரணையின் முடிவில் வழக்கின் முடிச்சை அவிழ்த்திருந்தால், குறைவான எண்ணிக்கையிலேயே படங்களைத் தந்திருந்தாலும் தமிழ்நாட்டின் ஹிட்ச்காக் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் புதல்வரானஇயக்குநரிடமும் அவரின் மரபு வெளிப்பட்டிருக்கும். மதிப்பெண் 6.5/10

புரட்சியின் தரிசனம்

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி – ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம், மனத்திரையில் அரங்கேறிய ஒவ்வொரு தருணமும் வியப்பும் பெருமிதமும் சிலிர்ப்பும் மேலோங்கி எழுந்ததை உணர்ந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதல் 44 ஆண்டுகள் புரட்சிக்காரராகவும், அடுத்த 44 ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்து 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். புரட்சிக்காரராய் அவர் வாழ்ந்த வாழ்வையும் அதிகம் அறியப்படாத அவருடைய தவ வாழ்க்கையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாய் நாடகம் அமைந்துள்ளது. மேடை நாடகமாக அரங்குகளில் நடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்புடன், பல புதிர்களுக்கு விடையளிக்கும் தகவல் செறிவுடன், உணர்ச்சி பொங்கும் காட்சி அமைப்புகளுடன் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதை நாயகரின் வரலாற்றினை இயற்றமிழில் இல்லாமல், நாடகத் தமிழில் ஆக்கி அளித்திடல் வேண்டும் என்ற நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது. சங்கர கிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் சென்னையிலிருந்து வந்து மைசூர் நந்தி மலை அடிவாரத்தில் ‘சத்குரு ஒம்கார் ஆசிரமம்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரி ஸ்வாமியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்து நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வீட்டில் நாடகத்தின் முதற்காட்சி தொடங்குகிறது. ஆஷ் கொலை வழக்கின் முதற் குற்றவாளியாகக் கூண்டிலேற்றப்பட்டு, வழக்கின் முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனை முடித்து வந்த நீலகண்டர் பழைய நட்பின் தொடர்ச்சியாக பாரதியார் வீட்டிற்கு வருகைபுரியும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. அடுத்து வரும் இருபத்து மூன்று காட்சிகளிலும் வீர சுதந்திரம் வேண்டி எழுச்சித் திட்டங்கள் தீட்டி, புரட்சி இயக்கங்களைக் கட்டமைத்து, பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ.உ.சி., நீலகண்டர், வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, திருவனந்தபுரம் பத்மநாப அய்யங்கார், ஓட்டப்பிடாரம் மாடசாமி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வ.ரா., சிங்கார வேலர் என, அத்தனை தேச பக்தச் செம்மல்களையும் நாம் சந்திக்கிறோம். மட்டுமின்றி, பின்னாளில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஓம்கார் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த காந்தி அடிகளையும், அவருடைய சீடர் ஜே.ஸி. குமரப்பாவினையும் சந்திக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சி, தேச பக்தர்களின் மனப் போராட்டங்கள், சிறைக் கொடுமைகள், போராட்டத்தின் விளைவாகத் தியாகிகள் சந்தித்த வறுமை நிறைந்த குடும்பச் சூழல், தலைமறைவு வாழ்க்கை எனப் பல நிலைகளையும் நாடகம் உணர்த்தி நிற்கிறது. நாடகம் முழுவதும் உரையாடல்கள் நறுக்குத் தெரித்தாற்போலும் கருத்துவளம் மிக்கவையாவும் இருந்தாலும் எடுத்துக்காட்டாகச் சில காட்சிகள்: காட்சி 2இல், ஓம்கார் சுவாமியாகிய நீலகண்டர் கூற்றான, ‘நாங்க ஆரம்பிச்சு வச்சோம்; காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா ஜனங்க எங்க பின்னால வந்துடுவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா ஜனங்களைத் தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலை எல்லாம் செஞ்சார்.’ காட்சி 6இல், வ.உ.சி. நீலகண்டர் உரையாடலில் வ.உ.சி.யின் கூற்றாக வரும், ‘தேச பக்தின்னா என்ன? மக்களோட பிரச்சினையைப் பேசறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமனே தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனக்கிறீரா நீலகண்டர்? இந்தப் பாடம் யாரு சொன்னது?’ காட்சி 3இல், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமியான நீலகண்டரிடம், ‘அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல இது (சந்நியாச வாழ்க்கை) தப்பித்தலோ என்று தோன்றுகிறது சுவாமி’ என்று உசுப்பியதும் ஓம்கார் சொல்லும் பதிலில், புரட்சிக்காரர் தொண்டுகள் ஆற்றும் தவ வாழ்க்கைக்கு மாறி வந்ததின் சூட்சுமம் வெளிப்படுகிறது. காட்சி 19இல், ஓம்கார் சுவாமிகள் பத்திரிகையாளர் சங்கரகிருஷ்ணன் உரையாடலில் ஓம்கார் சுவாமிகளின் கூற்றாக வரும், ‘தேசத் தொண்டு என்பது தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்கார வேலரும்தான்’ என்ற வரிகள் புரட்சிக்காரர் தொண்டுகள் புரியும் தவ வாழ்க்கைக்குத் திரும்பிய புதிரை அவிழ்ப்பதாய் அமைகின்றன. மேலும் அதே காட்சியில், 1922 ஜூலையில் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது சிங்கார வேலர்தான் என்பதை ஓம்கார் சுவாமிகள் தெரிவிப்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. காட்சி 18இல், 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கார வேலர் இல்லத்தில், அவருக்கும் நீலகண்டருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நீலகண்டரின் கூற்றான, ‘தேச விடுதலை என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்‘ என்ற வரிகள் சிங்கார வேலருடன் இணைந்து பணியாற்றியதில் பெற்ற தெளிவு என்று நீலகண்டர் வெளியிடுவதும் அதே காட்சியில் சிங்கார வேலர், காந்தி அடிகள் சுதந்திரப் போராட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தைக் கூறி, ‘இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் (காந்திஅடிகளிடம்) இருப்பதாகக் காங்கிரஸில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது’  என்ற வரிகள் நமது மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் தொன்மத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் நீலகண்டரின் வரலாற்றை நாடகமாகக் கருக்கொண்டு, வளமான உரையாடல்களுடன், மேடை நாடகமாக அரங்கேற்ற வசதியாக செட் சிக்கனத்தை மனதில் கொண்டு, ஒலி-ஒளி தொடர்பான காட்சி அமைப்புக் குறிப்புகளையும் வழங்கியிருப்பது அவருடைய கலைப்புலம் சார்ந்த திறமைக்குச் சான்று. இந்நூல் தமிழ் நாடக உலகிற்குக் கிடைத்துள்ள சற்று வித்தியாசமான படைப்பு. வாசிப்பதற்கு மிக உகந்தது ஆயினும் இதன் நாடக அரங்கேற்றம் நூல் ஆக்கப்பட்டதின் முழுப் பயனையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதாய் அமையும். பாராட்டுகளும் வாழ்த்துகளும். சுவடு இணைய இதழில் தோழர் கோமதி சங்கர் ஆக்கத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், சுவடு வெளியீடாக நூலாக்கம் பெற்று விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்களால் வெளியிடப்பட்ட ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நாடக நூலுக்கான முதல் மதிப்புரையை அதிவிரைவில் வழங்கியுள்ள தோழர் பாப்பையா அவர்களுக்கு சுவடு பதிப்பகம் சார்பிலும் சுவடு இணைய இதழ் சார்பிலும் நாடக ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆ-ர்

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

தேச பக்தக் கலைஞர்

தேச பக்தக் கலைஞர்

மதுரகவி பாஸ்கர தாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது.கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் படடியலில் பிரதானமாக முன்னால் வருபவர் கலைஞர் மதுரகவி பாஸ்கர தாஸ். மதுரகவி பாஸ்கர தாஸ் தமது படைப்பாற்றலால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அக்கினிப் பொறி தட்டும் தேசிய எழுச்சிப் பாடல்களால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்களிடம் தேசபக்த உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தார்.பிரிட்டிஷ் அரசு நாடகத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது பக்திப் பாடல்கள் என்ற போர்வையில் விடுதலைக் கிளர்ச்சிப் பாடல்களை உருவாக்கினார். இவர் எழுதிய பாடல்களை கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா போன்ற கலைஞர்கள் மேடைகளில் பாடிவந்தனர். 1892ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் பாஸ்கர தாஸ். இவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி. இருள் நீக்கி மக்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைச்சாமி என்று இவரது பெற்றோர்கள் பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ! நாகலாபுரத்தில் நான்காம் வகுப்பு வரை படித்தபிறகு, தனது பாட்டியின் ஊரான மதுரைக்குச் சென்றார். அங்கு ஆரம்பத்தில் கட்டட வேலைக்குச் சென்ற இவர், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றில் கலந்துகொள்வதில் நாட்டம் கொண்டார். சிறுவயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும் பாடுவதிலும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். சிலகாலம் மதுரை அனுமந்தராயன் கோயில் தெருவில் வாழ்ந்திருந்தபோது, அதே தெருவில் வசித்து வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இவரிடம் பாடல்களைக் கேட்பார். இவர், 11 நாடகங்கள் மற்றும் 110 நாட்டுப்பற்றுப் பாடல்களை இயற்றியுள்ளார். மதுரை திருநகரில் சித்திரகலா என்ற புகைப்பட நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு ஏழு ஆண்கள், 7 பெண்கள். மொத்தம் 14 குழந்தைகளில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துவிட்டனர்.ஐந்தாவது மகளின் பெயர் சரஸ்வதி. இவரது கணவர் எம். எஸ். சண்முகம் நில அளவைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது எழுத்து மற்றும் நாடகத்துறையில் செயல்பட்டுவரும் தமிழ்ச்செல்வன், கோணங்கி, பூபதி ஆகியோர் இவர்களது மகன்களே. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மகாகவி காளிதாஸ் பற்றி, தமிழில் முதல் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற தேசபக்திப் பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார் பாஸ்கர தாஸ். இதன்மூலம் முதல் சினிமா பாடலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார். திரைப்படங்களாக இருந்தாலும் நாடக மேடைகளாக இருந்தாலும் இவரின் பாடல்கள் தேசபக்திக் கனலை ஊட்டி வளர்க்கும் பாடல்களாகவே இருந்தன. இவரது பாடல்களில் உள்ள கருத்துகள் பாமர மக்களுக்கு உதவிகரமாக இருந்தன. திரையில், திரை இசைப் பாடல்களில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்துப் பாடல்கள் இயற்றிக்கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்பாடல்களை இயற்றியவர் இவர். இவரது பாடல்களால் மக்கள் எழுச்சிபெற்று வருவதைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், இவர்மீது பல வழக்குகளைத் தொடுத்தபோது அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைப் பாராட்டி முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ் என்று பெயரிட்டுப் பெருமிதம் கொண்டார். எட்டையபுரம் மன்னர் இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் விளைநிலங்களைப் பரிசாகக் கொடுத்தார். இவரது பெருமையை கவியோகி சுத்தானந்த பாரதியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், அவ்வை தி.க. சண்முகம், தீரர் சத்தியமூர்த்தி என பலதுறைப்பட்ட பெருமக்களும் பாராட்டியுள்ளனர். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் நூலாக வெளிவந்திருக்கிறது. 1926ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் முதன்முதலாக நாடக நடிகர்களுக்காகத் தொடங்கப்பட்டு அதன் முதல் தலைவராக மதுரகவி பாஸ்கரதாஸ் இருந்தார். மதுரையில் தொடங்கி, பின்னாளில் சென்னையில் நாடகச் சங்கம் தொடங்குவதற்கு இப்பெயரைப் பயன்படுத்த அனுமதி கேட்டபோது மதுரை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். தேசபக்தர், கவிஞர், பாடகர், நடிகர், தொழிற்சங்கவாதி என பன்முகத்தன்மை கொண்ட மதுரகவி பாஸ்கரதாஸ், மகாத்மா காந்தியின் பாசத்திற்குரியவர். சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற தமிழ்நாட்டு தேசபக்தர்களைப் பற்றி வரலாற்றில் குறைந்த பதிவுகளே உள்ளன. அந்த வரிசையில் மதுரகவி பாஸ்கர தாஸூம் இருக்கிறார். இது அவலமல்லவா! இந்த அவலத்தைப் போக்க மதுரகவி பாஸ்கரதாஸிற்கு மணி மண்டபம் கட்டி இவரது வரலாறு தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியச் செய்தல் வேண்டும்.

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார். ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது. இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. “எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ். டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில், நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை. இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். ‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது. மேகங்களின் மத்தியில் எங்கோஎன் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்நான் போராடுபவர்களை வெறுக்கவில்லைநான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்என் நாடு கில்டார்டன் கிராஸ்என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாதுசட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை தனிமையின் தூண்டுதல் மேகங்களில்இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோஅனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியதுபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்மரணம் சமநிலை செய்கிறது. ‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்  பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

அவள் பெயர் சக்தி

அவள் பெயர் சக்தி

மேடை நாடக விமர்சனம் திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஜனனி கார்த்திக் தம்பதியருக்குள் குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகளைப்  பகிர்தல், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றில் எழும் பிரச்சனைகளின் உச்சமாக, குழந்தை ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விடுகிறாள் ஜனனி. சராசரி அப்பாவாக பரமேஸ்வரன், கொஞ்சமே புரிந்த அம்மாவாக சாந்தி, அவர் காலத்திலேயே உறைந்து போனவளாக கொள்ளுப்பாட்டி, தனித்துவத்தில் அக்கறையும், ஊசலாட்டமும் ஒருங்கே கொண்ட தங்கையாக ஹரிணி ஆகியோர் ஜனனியின் ஊடாகவும், அவளுடன் சேர்ந்தும் வாழ்க்கையை அவரவர்  கோணத்தில் அலசுகிறார்கள்; வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. என்னதான் முடிவு என்பதும், அந்த முடிவை எட்டுவதற்கான காரணங்களாக அவர்கள் எவற்றை நிறுவுகிறார்கள் என்பதும்தான், தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ள, கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ நாடகத்தின் கதைக்கரு. நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக இயக்குநர் என்கிற பன்முகத் திறமை கொண்ட, நினைவில் வாழும் கோமல் சுவாமிநாதன் அவர்களின் புதல்வி தாரிணி கோமல் இந்த நாடகத்தை மிகச் சிறப்புற எழுதி இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகமாகப் பரிசு பெற்றது. சிறந்த கதை இயக்கத்திற்காகத்  தாரிணி கோமல் விருது பெற்றுள்ளார். நான்கு தலைமுறைப் பெண்களின் வளர்சிதை மாற்றங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார் தாரிணி. ஒரே குடும்பத்தில் உள்ள அந்த நான்கு பெண்களின் தலைமுறை முன்னேற்றத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் பெறும் வசதியை, அது ஒரே குடும்பமாக உள்ளதாலேயே, இயல்பாகப் பரிணமிக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதில், உணர்வுபூர்வமான குறுக்கீடு இல்லாது நேர்மறையான வாய்ப்பைப் பெற இயலாமல் போவது ஏமாற்றமே! பல்வேறுபட்ட குடும்பங்களில் இருக்கும் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், தலைமுறை மாற்றத்தைப் பதிவு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும். கல்வி, பொருளாதார வகையில் சௌகரியமான ஒரு குடும்பச் சூழலில் நிகழக்கூடிய தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவிட, இவை அல்லாத ஒரு குடும்பத்தில் கண்ணெதிரே காணும் (அவ்விதம் கவனிக்க விழைந்தால்)  குடும்பத்தின் பொருட்டான  ஒரு பெண்ணின் தியாகம், அர்ப்பணிப்பு அதனினும் உயர்வாகத் தெரிய, கொண்டாட வாய்ப்புண்டு. அந்தக் கொள்ளுப் பாட்டியிடம், அன்றாடம் நடக்கும் தன் சோகக் கதையைக் கூறும் அக்குடும்பப் பணிப்பெண் சுகுணாவின் கதையும், அப்படித்தானே! இந்த நான்கு தலைமுறைப் பெண்களின் தனிமனித சுதந்திரம், ஆசாபாசங்கள், ஆதங்கங்கள், பிரச்சனைகள், ஐயத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பின்மை ஆகியவற்றை அலசும் அக்கறையில் கொஞ்சம், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைந்துள்ளவர்கள், ஆண்கள்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டி இருக்கலாம். என்ன, கைத்தட்டு கிடைப்பதென்பது சற்றுச் சிரமம்தான்! குடும்பத்திற்காக, இட மாறுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் விதமாக, தனது பதவி உயர்வை அம்மா சாந்தி துறந்ததை வருத்தத்தோடு வெளிப்படுத்துவதும், விருப்ப ஓய்வு கொடுப்பதற்குத்  தடையாக இல்லாமல், தான் ‘அனுமதி’க்கவேதானே செய்தேன் என்று சங்கரன் கூறுவதும்,  அதேபோன்று, தன் வேலை, தனது பதவி உயர்வு, நிறுவனத்தில் தமக்குள்ள இருப்பு என்று, சுயநலமாக தன்னைப் பற்றியே சிந்திக்கும் கார்த்திக் பேசுவதும் கவனிக்கத்தக்கவை. கதைக்கருவை ஒட்டிய வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, ஜனனி, தினேஷ், அர்ஜுன், ஹரிணி பேசும், தாரிணி கோமலின் வசனங்கள் சிந்தனைக்கு உரியவை!  ஜனனியாக வரும் கிருத்திகா சுர்ஜித், ஹரிணியாக வரும் மயூரா பாலகுருநாதன் இருவரும் நாட்டியக் கலைஞர்கள் என்பதால், மெருகேறிய நடிப்பைக் காண முடிகிறது. அறிமுக நடிப்பிலேயே அசத்திய பேபி இயல், உஷா ரவிச்சந்திரன் (கொள்ளுப்பாட்டி), அனுராதா கண்ணன் (சாந்தி), சித்தார்த் (கார்த்திக்), பரமேஸ்வரன் ஹரிஹரன் (சங்கரன்), சாய் ஸ்ரீனி (அர்ஜுன்), ஸ்ரீகிருஷ்ணன் (தினேஷ்), சுதா, சுகுணா (வீட்டுப் பணிப்பெண்கள்) தத்தம் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் சிலர் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. ஜனனி எதிர்கொள்ளும் பிரச்சனை வேண்டுமானால், விவாகரத்து வரையில் போவதற்கான கடுமையான பிரச்சனையாக, அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக விவாகரத்து என்பதே படுபாதகமான ஒன்று என்று நிறுவுவதும், இழிவும், அவமரியாதையும், பாலியல் வன்முறையும் நிகழ்த்தும், நிகழ்த்த முயற்சிக்கும் ஆண்களைப் பற்றி அணுவளவும் கண்டிக்காமல், பெண்களை மட்டும் கட்டுப்படுத்த முனைவதும், ஆங்காங்கு வாரி இறைக்கும் முற்போக்குக் கருத்துகளை இரக்கமே இல்லாமல் மீண்டும் வாரி எடுத்து ஒரு மூலையில் கொட்டுவதற்கு ஒப்பாகி விடுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவேளை, அக்குடும்பத்தினர் கலாச்சாரக் காவலர்களாகவும் அவதாரமெடுத்து, ஜனனி ஹரிணியைப் பார்த்து, ‘இதென்ன கர்மமோ, ஆம்பள பொம்பளங்கற வித்தியாசமில்லாம, புருஷா மத்தியில இப்படித்தான் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டை போட்டுண்டு’ என்று சொல்லாமல் விட்டதும், அமெரிக்கா செல்வதற்கு கார்த்திக் பின்னர் ‘அனுமதி’ தந்ததும், ‘ கிரகாச்சாரம், கடல் தாண்டறதா? இதெல்லாம் பாத்துண்டு இன்னும் நான் உசுரோட இருக்கனுமாடா சங்கரா!’ என்று அரற்றாமல் விட்டதும் கொஞ்சம் ஆறுதல்தான்! எந்த ஒரு நிறுவனத்திலும், தகுதி இல்லாமல் பணி நியமனம், பதவி உயர்வு அளிப்பதில்லை. குடும்பச் சூழல் காரணமாகவே, பதவி உயர்வுக்கு உரிய தேர்வை எழுதாத காரணத்தினால்தான், தமக்கு அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, எழுத்தராகவே விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டு கூறும் சாந்தி, இன்று தன்னைவிடப் பணி நிலையில்  இளையவர்களும்  தகுதியே இல்லாதவர்களும் (!) உயர் அதிகாரிகளாக உள்ளதாக வெறுப்பை உமிழ்வது போன்று பேசுவது அபத்தம் அல்லவா! பத்மா ஸ்டேஜ் கண்ணனின் நாடக அரங்கம் அருமை. தங்கபாண்டியன் மற்றும் சிவா, ராஜேந்திரன், செல்வனின் மேடை நிர்வாகம் சிறப்பு. மைலை பாபுவின் ஒளியும், விருது பெற்ற பெரம்பூர் குமாரின் ஒப்பனையும்,  முத்தாய்ப்பாக  குஹபிரசாத்தின் பின்னணி இசையும், ஸ்ரீஜித்தின் ஒலிக் கோர்ப்பும், பாடலைப் பாடிய அனந்துவின் குரலும் நாடகத்தின் பின்புலத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது சிறப்பு! சில குறைகள் இருந்தாலும், போதிய அளவு ஆழ்ந்து இல்லாது மேம்போக்காகத்தான் என்றாலும், முன் முயற்சியாக பெண்களின் தலைமுறை இடையேயான பல்வேறுபட்ட மனநிலைகளை, பிரச்சனைகளை முன்னெடுத்துக் கதைக் கருவாக்கி, சிறந்த கலைஞர்களைக் கொண்டு, திறம்பட ‘அவள் பெயர் சக்தி’ என்கிற நாடகமாக இயக்கி வழங்கியுள்ள தாரிணி கோமல் சந்தேகமின்றி, பாராட்டுக்குரியவரே! மது ராஜேந்திரன்