காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த காலம் பசியும் பறந்ததுநின்நாமம் அன்றோ நெஞ்சில் நிலைத்தது வாழிய வாழிய நின்புகழ் வாழியவேவாழிய வாழிய நின்கொள்கை வாழியவேவாழிய வாழிய எம்வழிகாட்டி வாழியவேவாழிய வாழிய அண்ணா வாழியவே!

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய உரையை ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாக அச்சேற்றிய பெருமை இவரையே சாரும். இந்தப் பதிப்பு வெளிவர வ. உ. சி. க்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். பரிமேலழகர் தவறாக உரை எழுதிய சில குறள்களுக்கு, இப்பதிப்பில் புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற தலைப்பை ‘மக்கட் பேறு’ என்று மாற்றியவர் வ. உ.சி. கல்வி அறிவு இருபாலருக்கும் பொதுவானது என்ற விளக்கத்தையும் தந்தவரும் அவரே. “திருக்குறள் ஆசிரியரைக் குறை கூறினால்கூடச் சிலருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அதன் உரையாசிரியர்களைக் குறை கூறினால் கோபம் வந்துவிடுகிறது. எதிலும் நன்மையும் தீமையும் உண்டு. எதில் தீமை இருந்தாலும் களைய வேண்டியதுதான்” என்று காரைக்குடியில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் கூறியுள்ளார் வ.உ.சி. திருக்குறளை அடுத்து, வ.உ.சி.யைக் கவர்ந்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதியான பொருள் அதிகாரத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொல்காப்பியப் பதிப்பில், ‘பொருளதிகாரத்தை நான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் இல்லாத நிலப் பாகுபாடு, செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான இளம்பூரணர்மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தின் சில இயல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார். சில இயல்களைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை துணையுடன் வெளியிட்டார். 1935இல் சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்ட வ.உ.சி. திருக்குறள் கருத்துகளை மெய்யறம் என்ற நூலில் செய்யுள் வடிவில் எழுதினார். தமது சுய சரிதையையும் செய்யுள் வடிவிலேயே எழுதியிருக்கிறார். வ.உ.சி. எழுதிய நூல்கள் எனது பாடல் திரட்டுமெய்யறம்மெய்யறிவுசுய சரிதைஎனது அரசியல் பெரும் சொல்வ.உ.சி. கண்ட பாரதி மேலும் தனது வாழ்நாளில் இருமுறை (1917 – 1930) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை விருத்தி உரையை வெளியிட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர், இன்னிலை என்று சொல்லி ஒரு ஏட்டை வ. உ. சி. யிடம் கொடுத்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார். அந்த நூலை வ. உ. சி. வெளியிட்ட பிறகு மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்கள் அந்த நூல் போலியானது என்று குறிப்பிட்டனர். இதனால் வ. உ. சி. மிகவும் மனம் வெதும்பினார். சொர்ணம் பிள்ளை இதேபோல வ. வே. சு. அய்யர் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றியிருக்கிறார். ‘அகமே புறம்’, ‘மனம் போல் வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என தனது மனம் கவர்ந்த எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருவகையில் வ.உ.சி.யின் வாழ்க்கைக்கு ஜேம்ஸ் ஆலன் பெரிதும் உதவியிருக்கிறார் என்றே கூறலாம். வ.உ.சி. போற்றுதும்!

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள். செய்திகளைச் செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகமாகும். காலை 7.15 மணி என்று தெரிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராவார்கள். செய்தி முடிந்தவுடன் ரயிலுக்குச் செல்பவர்கள், பஸ் பிடிப்பவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் இடையினில் செல்ல மனம் இடம் தராது. அப்படிப்பட்ட கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண் சுவாமி, சென்னையில் தன் 87 வது வயதில் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.  சரோஜா என்று இயற்பெயர் கொண்ட சரோஜ் நாராயண் சுவாமி, மும்பையில் பிறந்தவர். தாய்த் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாயின் காவிரித் தண்ணீரும், தான் பார்த்த தமிழ் சினிமாக்களும், படித்துப் படித்து மகிழ்ந்த பாரதியார் பாடல்களும்தான் தன் தமிழ் உச்சரிப்பிற்குக் காரணம் என்பார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபின், டெல்லியில் யூகோ வங்கியில் பணியில் இணைந்தார். அருகிலேயே டெல்லி அகில இந்திய வானொலி நிலையம். தமிழார்வம் காரணமாக அங்கே பணி கிடைத்தது. தமிழ் செய்தி வாசிப்பின் பொற்காலம் அங்கிருந்து தொடங்கியது. சரோஜ்தான் இந்தியாவில் தமிழில் செய்தி வாசித்த முதல் செய்தி வாசிப்பாளர்.  வானொலியில் 35 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் செய்தி ஒளிபரப்புத் துறையில் சில காலம் பணி புரிந்தார். செய்தி ஆவணங்களுக்கு (news reels) குரல் கொடுத்தல், சினிமாக்களுக்கு சப் டைட்டில்கள் எழுதுதல் என்று பலவகையான பணிகளில் ஈடுபட்டார்.  தன் வானொலி அனுபவங்களைப் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது செய்தி வாசிப்புக்கால அனுபவங்களில் முக்கியமானவை அவரது பேட்டிகளில் இருந்தே நமக்குக் கிடைக்கின்றன. 31.10.1984 இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஒரிஸா பயணங்களைப் பற்றிக் காலைச் செய்திகளில் சொன்னவர், ‘இந்திராவின் ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக’ என்று பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது, அன்று மாலையே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைச் சொல்ல நேரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று வருந்திக் குறிப்பித்துள்ளார். செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் சுகம், துக்கம் போன்றவற்றைச் செய்தி வாசிப்பில் காண்பித்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் என்றாலும், அன்று சற்று நெகிழ்ந்து போய் இருந்ததாகவும், அவர் மரணத்தை அறிவிக்கும்போது, ‘அன்னை இந்திரா காந்தி’ என்று செய்தியில் எழுதப்படாத ‘அன்னை’ என்ற வார்த்தையைச் சேர்த்து தான் சொன்னதையும், அதற்காக அவர் மிகவும் பாராட்டப்பட்டார் என்பதையும் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். பின்னர் வந்த காலங்களில் பஞ்சாபிலிருந்து செய்தி வாசிப்பாளர்கள் வரமுடியாமல் போக, அவர்களின் பணிச் சுமையும் இவருக்குச் சேர்ந்தது.  காலை 5.30 மணி செய்திக்கு, 3 மணிக்கே தயாராக ஆரம்பித்து விடவேண்டும். ஆங்கில, இந்தி செய்திகளை வைத்துக்கொண்டு, மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்வது அந்தந்த மாநில மொழிச் செய்தி வாசிப்பவரின் பொறுப்பு என்பதால் வேலைப்பளு அதிகம். சில சமயங்களில் ஒரு சில வார்த்தைகளுக்காக, தூதரகங்களைத் தொலைபேசியில் அழைத்து உதவிகள் வாங்கியதையும் அவர் பேட்டிகளில் குறிப்பித்துள்ளார்.  தன்னால் மறக்க முடியாத காலம் பங்களாதேஷ் போர் நடந்த காலம் என்று கூறியுள்ள சரோஜ், அப்போது செய்திகளைக் கேட்ட நேயர்கள், ஏதோ தானே இந்திய வெற்றிக்குக் காரணம் என்பது போல மகிழ்ந்து தனக்குப் பாராட்டு மடல்கள் எழுதியதை சந்தோஷமாகக் குறிப்பிட்டுள்ளார்.  “பலர் என்னிடம், ‘உங்கள் குரல் மேல் (male) வாய்ஸ் போல இருக்கிறதே’ என்பார்கள். ‘ஆம், என் குரல் மேலான குரல்தான்’ என்பேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.   மும்பையில் பிறந்து, டெல்லியில் பணிபுரிந்து, கிழக்கு வங்காளத்தின்  விடுதலைச் செய்திகள் சொல்லி, பஞ்சாபியில் கலக்கிய கணீர்க் குரல் சென்னையில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டதன் மூலம், தான் இந்திய தேசத்திற்கே சொந்தமானவர் என்று நிரூபித்திருக்கிறார்.  2009 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. கம்பீரக் குரலின் தமிழ் என்றும் நம் நினைவில் தங்கும்.  கோவை பிரசன்னா

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடியமயிலையின் வானம்பாடிஆழ்ந்த தமிழ்ஞானிஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார் அதனால்தான்பாரதிதாசன் இப்படி அறையலுற்றார் ‘தமிழையே வணிகமாக்கித்தன்வீடு மக்கள் சுற்றம்தமிழிலே பிழைப்பதற்குதலைமுறை தலைமுறைக்குத்தமிழ்முதலாக்கிக் கொண்டபல்கலைத் தலைவன் எல்லாம்தமிழ்ச் சீனி வேங்கடத்தின்கால் தூசும் பெறாதென்பேன்’ மொழிக்கு சமயங்களின் கொடைகளைமுத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும் ‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்பொறிவாயில் ஐந்தவித்த புத்தனைப் பின்தொடர்ந்த‘பௌத்தமும் தமிழும்’ அடுத்து வந்தது‘சமணமும் தமிழும்’ ‘இசுலாமும் தமிழும்’‘இந்துமதமும் தமிழும்’ என்றெல்லாம்சமயத்தோடு மொழிவரலாற்றைச் சேர்த்து எழுதினார் அழகர் கோவில் வரலாறு எழுதப் புகுந்தஅறிஞர் தொ.பரமசிவன்மயிலை வேங்கடத்தின் ஆய்வையேமுதற்புள்ளியாகக் கொண்டார் தரவில்லாமல் இருண்டிருந்த களப்பிரர் வரலாற்றைஇலக்கிய வெளிச்சத்தில் கரம்பிடித்து அழைத்து வந்தார்பல்லவ மன்னர்கள் வரலாற்றைப்பலநூல்களாய் எழுதித் தந்தார் மகாபலி புரத்தை மாமல்லபுரம் என்றுகண்டுதமிழர் மனதில் மகிழ்ச்சி பெய்தார்மகேந்திரப் பல்லவனின் மத்த விலாச அங்கதத்தைதமிழில் தந்தவரும் மனோன்மணியத்தைபதிப்பு செய்தவரும் மயிலையார்தான் நுண்ணிய கலை ஆய்வும் அவரே தொடங்கிவைத்தார்சங்க கால வரலாறு தொட்டுசமகால இலக்கிய வரலாறு வரைமயிலை சீனி வேங்கடசாமியின் கொடை உண்டு கல்வெட்டு ஆய்வுக்கும் செப்பேட்டு ஆய்வுக்கும்சொல்வெட்டுச் செய்த மயிலை சீனி வேங்கடசாமிக்குசூலை எட்டில் நினைவு தினம் தமிழைக் கொண்டாடுமுகத்தான்தமிழ்த் தேனீயை அறிந்து போற்றுவோம் கோமதி சங்கர்

நெடுங்கணக்கு – பகுதி 3

நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார். க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட மொழிகள், தேவநாகரி நெடுங்கணக்கைப் பார்த்து, தாமும் வல்லொலி – மெய், மெல்லொலி மெய்களை அறிவிக்க, தனித்தனி எழுத்துகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தமிழ், வல்லொலி எழுத்தையும் மெல்லொலி எழுத்தையும் குறிக்க, ஒரே வடிவெழுத்தையே பெற்றுள்ளது என்றும் கூறும் கால்டுவெல், இம்முறை அம்மொழியின் வடிவெழுத்தை மட்டும் பற்றியதன்று ; இஃது, அம் மொழியுடன் பிறந்த, அம்மொழிக்கே உரிய ஓர் ஒலி (ஒலிப்பு) முறையாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இம்முறை, எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளது என்றாலும், தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே முறையாகவும், முழு வளர்ச்சியும் பெற்றுள்ளது என்கிறார் கால்டுவெல். முதற்கண் நிற்கும் க், ட், த், ப் என்ற வல்லெழுத்துகள் நான்கும் (இவற்றை ஹகர ஒலி இணையா வல்லெழுத்துகள் என்கிறார் கால்டுவெல்) ‘ட’ சொற்களின் மொழி முதல் எழுத்துகளாக வரும், இரட்டித்து வரும் க், ட், த், ப் என வல்லொலி வல்லெழுத்துக்களாகவே ஒலிக்கப் பெறும். அதே மெய் எழுத்துக்கள் சொற்களின் இடையே தனித்து வரின், க், ட், த், ப் என மெல்லொலி வல்லெழுத்துக்களாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். மெல்லொலி வல்லெழுத்து, மொழி முதல் எழுத்தாக வராது. அவ்வாறே வல்லொலி வல்லெழுத்து, சொல்லின் இடையே இரட்டித்து அன்றி, தனியாக வராது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப் பெற்றால், அச்சொற்களில் உள்ள வல்லொலி வல்லெழுத்து, மெல்லொலி வல்லெழுத்தாகவும், மெல்லொலி வல்லெழுத்து வல்லொலி வல்லெழுத்தாகவும் அவை நிற்கும் இடங்களுக்கேற்ப மாற்றியே ஒலிக்கப் பெறும் என்று கூறும் கால்டுவெல, சமஸ்கிருத ‘தந்த’ என்றும் சொல், தமிழில் ‘தந்தம்’ எனவும், ‘பாக்ய’ என்றும் சொல் தமிழில் ‘பாக்கியம்’ எனவும் வருவதை சுட்டிக்காட்டுகிறார். இம்முறை, தனிச் சொற்களிடையே மட்டுமல்லாமல், இரு சொற்கள் புணர்ந்த தொகைச் சொற்களிடத்தும் வரும் என்கிறார். இரு சொற்கள் புணர்ந்துழி, வருமொழி முதற்கண் நிற்கும் மெய்யெழுத்து, அச் சொல் புணராது தனித்து நிற்புழி, வல்லொலி வல்லெழுத்தாக இருப்பினும், நிலைமொழியோடு புணர்ந்து இடையயழுத்தாம் தன்மையுற்று விடவே, மெல்லொலி வல்லெழுத்தாகவே மாற்றி ஒலிக்கப் பெறும். தெலுங்கில் இவ்வேறுபாடு வேறு வடிவெழுத்து கொடுத்து எழுதுவதன் மூலமாகவே காட்டப்படுகிறது என்கிறார் கால்டுவெல். அண்ணனும், தம்பியும் என்ற பொருளில் ‘அன்னதம்முலு’ என வரவேண்டிய சொல், புணர்மொழிக்கண், ‘அன்னதம்முலு’ என்றே எழுதப்படும். அதுபோன்றே, ‘அடிபட’ என்ற பொருளில், ‘கொட்டபடு’ என வரவேண்டிய சொல் ‘கொட்டபடு’ என்றே வரும். ஆனால் தமிழில், ‘கொட்ட’, ‘படு’ என்ற இவ்விரு சொற்புணர்ச்சி ‘கொட்ட’, ‘படு’ என இரட்டிக்கப்படுகிறது என்கிறார். ‘எண்ணுப் பொருட்கண்’வரும் இரு சொற்கள், இடையில் ‘எண்ணும்மை’ பெறாமல், ‘கபிலபரணர்’ என்பது போல் எண்ணப்பட்டு, இரு சொற்களுக்கும் ஒத்த ‘பன்மை விகுதி’ கொண்டு முடியும் என்கிறார். அதே போன்று ‘ச’ என்ற எழுத்து தனித்து வந்துழி மிகவும் மென்மையாகவும், ஷ், ச் இவ்விரு எழுத்துகளின் ஒலிகளுக்கும் இடைபட்ட ஓர் ஒலியுடையதாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். இவ்வெழுத்தின் ஒலிப்புமுறை முன்னர் கூறியபடியே என்றாலும், செயற்படும்போது சில மாறுபாடு நிகழ்கிறது என்று கூறும் கால்டுவெல், இவ்வெழுத்து சொல்லின் முதற்கண் நிற்பினும், அன்றி இடையில் நிற்பினும் மெல்லொலி வல்லெழுத்தைப் போன்று, ‘ச’ என ஒலிக்கப் பெறுவதே  மாறுபாடாகும் என்கிறார். இதுபோன்றே, ‘ற’ கரம் பற்றியும் நிலவுகிறது என்கிறார் கால்டுவெல். தனித்து வந்தால் ‘ற்’ எனவும், இரண்டாக இணைந்து வந்தால் ‘த்த்ர்’ எனவும் ஒலிக்கப்படும் என்கிறார். ஒரே வடிவெழுத்து,  ஓரிடத்தில் ‘க’ காகவும், மற்றொரிடத்தில் ‘க’ வாகவும், ஓரிடத்தில் ‘ட’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ட’ வாகவும், ஓரிடத்தில் ‘த’ வாகவும் மற்றொரிடத்தில் ‘த’ வாகவும், ஓரிடத்தில் ‘ப’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ப’ வாகவும் ஒலிக்கும் முறையானது, தமிழ்மொழி தோன்றிய காலத்தே உடன் தோன்றி அம்மொழியினின்று பிரிக்க இயலாதவாறு ஒன்றி நிற்கும் சிறப்பு இயல்பாகும் என்கிறார் கால்டுவெல். வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும் ஒன்று பிறிதாக மாறும் இத் திராவிட ஒலிப்புமுறை அமையும் வகையில் தமிழ் நெடுங்கணக்கு வரிசை செய்யப்பட்டது என்று கூறும் கால்டுவெல், தமிழ் நெடுங்கணக்கு ஒரே வடிவெழுத்து, இவ்விரு வகை வல்லொலிகளையும் ஒலிக்கப் போதும் என்று கருதி, சமஸ்கிருத மெல்லொலி வல்லெழுத்துக்களை தவிர்த்தது என்கிறார். இது திராவிட மொழிகளுள் மிகப் பழைய மொழியாகிய தமிழ்மொழி வாயிலாக வெளிப்பட்டு தோன்றும் திராவிட ஒலிப்பு முறைகளாகும் என்றும் கூறுகிறார் கால்டுவெல். இந்தோ -ஐரோப்பிய மொழி எதிலும் வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும், ஒன்று பிறிதாக மாறுதல் அடைவதை நாம் கண்டதில்லை என்று கூறும் கால்டுவெல், ஏப்ரு மொழி மெய் எழுத்துக்கள், ‘பெகத்’, ‘கெப்ஹத்’ என அவை நிற்கும் இடத்திற்கு ஏற்ப இருவகையாக ஒலிக்கப் பெறும் என்கிறார். அம் மெய் எழுத்துக்களுள் யாதேனும் ஒன்று, ஒரு சொல்லின் முதலிலோ, அல்லது ஓர் ‘அசை’யின் முதலிலோ வந்தால் அது வல்லொலி வல்லெழுத்துப் போலவே ஒலிக்கப்பெறும் என்றும் அவ்வெழுத்து ‘ஹகர’ ஒலி இணைந்த எழுத்தாயின், அது இயற்கையாய் பெற்றுள்ள ‘ஹகர’ ஒலியை இழந்து ஒலிக்கப் பெறும். இதைக் குறிக்க ‘தகெஷ்’ என் வழங்கப்படும் ஒரு சிறு புள்ளி பொறிக்கப்படும் என்கிறார் கால்டுவெல். ‘திராவிட மெய் எழுத்துக்கள் ‘ பற்றி கால்டுவெல் விரிவாகக் கூறுவதை அடுத்த பகுதியில் காணலாம். கந்தசாமி விநாயகம்

நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://hexamedia.in/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ எழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார். தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல். ‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார். மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது; இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல். தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையொட்டிய எழுத்து எதுவும் தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையொலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம்; அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார். சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தைத் தமிழ் கொண்டுள்ளது. மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக, பயனின்றித் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து (விஸர்க்கம்) என்கிறார். சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசைப் படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல். தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது. இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறும் கால்டுவெல், தமிழில் வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல். தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார். ‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘ஷ­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல். சமஸ்கிருத ‘ஸ’ என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். திராவிட ஒலிப்பு முறைதமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார். உயிர் எழுத்துகள் : தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார். ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார். மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல். ‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார். இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது. குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர். கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும். சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக, விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது. சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார். இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல். தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல். இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல். தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல். ‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல், திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார். ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்றபோது, ஈற்று மெய்யெழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல். ‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும்போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல். கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார். தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’, தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல். திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன என்கிறார் கால்டுவெல். எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார, ‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார். எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். கூ (கோண்டு) மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல். ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன. ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல். அடுத்து ஒரிய மொழி குறித்துக் கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஒரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். மேலும், ஒரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர். நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையைப் பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல். எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல். பிராமணர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்களில் இருந்தே இன்றைய தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில், பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ‘சமஸ்கிருதத்திற்கு முந்திய தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல். மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். ‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், ‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல். அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்தப் பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்றாகவும் இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல். அவ்வடிவெழுத்துகள், கொச்சியைச் சேர்ந்த யூதர்களும் கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும் அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல். தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாகத் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, அவர்களுக்கு தமிழின் தொன்மை குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யூதர்களிடத்தும் சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும், மெய்யெழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு, அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல். ‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண்படுகிறார் கால்டுவெல். ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற் காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டு காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை, அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல். ‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல். ‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது, அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் – அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார். எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமை பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல். ‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு