மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம்.   மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப்  பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net    விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார், மகனால் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்மணி. உடல் முழுக்க வியர்த்துப் போயிருந்த அவரை ஆசுவாசப்படுத்தி அமரச்செய்து, பிரச்சினையை விசாரித்தேன். தனக்கு தூக்கம் பிடிக்கவில்லை, கைகள் நடுங்குகின்றன, தலை ஒரு பக்கமாக வலிக்கிறது, என்னாகுமோ ஏதாகுமோ என்று எப்பொழுதும் பயமாகவே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இளைய மகளின் செயல்பாடுகள்தான் என்றார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் தன் மகள், தன் வயதுக்குரிய பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், காரணமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வதாகவும், தான் நினைத்தது மட்டுமே சரி என்று பிடிவாதமாகத் தன்னிடம் சண்டையிடுவதாகவும் கூறினார். மகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் கூறிய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு மனப் பதட்ட நோய் இருப்பதாக அறிய முடிந்தது. அவர் அதில் இருந்து குணமடையத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தேன். மருமகளைக் குறை சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மகளைப் பற்றி ஒரு தாய், புதியவரிடம் குறை சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும் என்று அவர் மகளையும் ஒரு முறை ஆலோசனைக்கு அழைத்து வரச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்து தொடர் சிகிச்சைக்காக என்னைச் சந்திக்க வந்த அவர், தன் கணவருடன் வந்திருந்தார். தனக்கு இருந்த மனப் பதட்ட அறிகுறிகள் எல்லாம் சரியாகி, தற்போது நலமாக இருப்பதாகவும் தன் கணவர்தான் மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் கூறினார். அவர் கணவரிடம் ‘என்ன செய்கிறது?’ என்று நான் கேட்க, மிகவும் களைப்பாக சக்தியே இல்லாதது போல் உணர்வதாகவும், காலையில் எழுந்தவுடன் மனம் மிகுந்த இறுக்கமாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவரும், தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் மகள்தான் காரணம் என்று தன் மனைவியைப் போலவே கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தன் மகள் இருப்பதாகவும், சிறிய பிரச்சினைகளைக் கூட மிகப் பெரியதாகப் பார்ப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகளை நோக்கி ஆனந்தமாகப் பாட வேண்டிய தந்தையே, மிகவும் மனம் நொந்து தன் மகளின் செயல்பாடுகள் பற்றி சொல்லி வருத்தப்பட்டது, உண்மையில் அவர் மகளுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருப்பதைப் புரிய வைத்து, அதில் இருந்து மீண்டு வர சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு, கண்டிப்பாக அவர்களின் மகளையும் சிகிச்சைக்கு அழைத்துவரும்படி கூறினேன். அவரிடம் சொல்லி அழைத்து வருவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறினார்கள் இருவரும். அவர்கள் சென்று சரியாக ஒரு வாரம் கழித்து, அவர்களின் மூத்த மகன், தன் இளைய சகோதரி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் தன்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்தபடி ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அவரிடமும் அவர் சகோதரியை ஒரு முறை என்னிடம் அழைத்து வரும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர், தன் சகோதரி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு பின் மறுப்பதால் வீட்டில் உள்ள  அனைவரும் மிகக் குழப்பமான மனநிலையில் இருப்பதாக என்னிடம் வந்து கூறினார். வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினை, எப்படி மற்ற மூவரின் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதற்கெல்லாம் காரணமான அவரை,  ‘எனக்கே அவரைப் பார்க்கனும் போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தங்கையை ஒரு வழியாகப் பேசி அழைத்து வந்து விட்டதாகவும், வெளியில் காத்திருப்பதாகவும் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் மூவர் மூலம் எதிர்மறையான குணங்களால் மட்டுமே அறியப்பட்ட ஒருவரை முதலில் சந்திக்கும் போது, நான் கேள்விப்பட்ட மோசமான சுபாவங்களுடன் கூடிய ஒரு  நபரைப் பார்க்கப் போவதாக நினைப்பது சரியாக இருக்காது. அவரைப் பற்றி என் மனதில் ஏற்பட்ட முன்முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு, திறந்த மனதுடன் எந்த வித கண்டனம் செய்யும் மனப்பான்மையுமின்றி, குறை காணும் மனமற்று, புதியதொரு நபரைச் சந்திப்பது போல் சந்தித்தால் மட்டுமே அவர் பிரச்சினைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய முடியும். தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மாற்றிக் கொள்ள அறிவுரை சொல்வார்களோ என்ற பயத்துடன் வரும் அந்தப் பெண்ணை, சிறு புன்னகையுடன்  வரவேற்று அமரச் செய்து, அவரைப் பற்றிய எந்தவித முன் முடிவுகளும் எனக்கில்லை என்பதை முதலில்  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அவரும் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொண்டு தன் மனதினைத் திறப்பார். அந்த மனநிலையுடனே நான் அவரைச் சந்திக்க, அவரும் தன் பிரச்சினைகளை அழுதுகொண்டே சொல்லத் தொடங்கினார். தன் கல்லூரிக் காலத்தில் தனக்கு நேர்ந்த சில துயரமான சம்பவங்கள் தன் மனதை பாதித்தது முதல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக அவர் பிரச்சினைகளைக் கேட்டதில் அவருக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை அளித்தேன். ‘நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகமே. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏதாவது ஒரு விஷயம்  இருக்கும்’ என்று  மனநலப் பிரிவு பேராசியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. முன்முடிவுகளின்றி புத்தம் புதிதாக ஒவ்வொருவரையும் சந்திப்பது மட்டுமே, அந்த மனிதரையும்  சூழலையும் முழுமையாக உணர்வதற்கு உதவும்  என்பதே அவரிடம் நான் கற்ற பாடம். நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அவர்கள் பற்றிய நம் கருத்துக்களுடனும், முன் முடிவுகளுடனும், அபிப்ராயத்துடனும் பார்க்கிறோம். உண்மையில் ஒரு மனிதனுடைய குணங்கள் என்பது நிலையானவை அல்ல. மாறாக, மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது என்பது போல மனிதனின் குணாதிசயங்களும் பல மாற்றங்கள் கண்டு மாறிக் கொண்டேயிருக்கும் என்றுதான் அறிவியலும்  நமக்குச் சொல்கிறது. ஒரே நதியில் ஒருவர் இருமுறை கால் நனைத்திட முடியாது என்ற ஹெராக்லிடஸ் உடைய புகழ் பெற்ற சொற்றொடர் போல் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முறை நாம் சந்தித்த மனிதரை மீண்டும் மறுமுறை நாம் சந்திப்பதேயில்லை. நாமும் மாறியிருப்போம், மற்றவரும் மாறியிருப்பார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறர் பற்றிய நம் அபிப்ராயங்களை, முடிவுகளை, கருத்துக்களை முற்றிலும் மறந்துவிட்டு, நம் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் திறந்த மனதுடன் புத்தம் புதிதாய்ச் சந்திக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டால்,  நாம்  வாழும் சிறியதொரு வாழ்க்கை புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் மிக அழகானதாகவும் இருக்கும். இப்படித்தான் ஒரு முறை என் அருமை  நண்பர் ஒருவரிடம் புத்தம் புதிதாய்ச் சந்திப்பது பற்றிய என் புரிதலை, நுண்ணர்வைப்  பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நன்றாகப் புரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாக  என்னிடம் வாங்கிய பழைய கடன்களை எல்லாம் முற்றிலும்  மறந்துவிட்டு, தினமும் திறந்த மனதுடன், புத்தம் புதிதாய் என்னை வந்து சந்தித்து புதியதாகக் கடன் கேட்கத் தொடங்கி விட்டார். 😃😃 கட்டுரையாளர்: Dr. ர. நிஷாந்த், D.P.M,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை,தொடர்புக்கு: 9486496169ravi.nishanth79@gmail.com படங்கள்: இணையத்திலிருந்து

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான்.  சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள்.  “தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள்.  தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான்.  கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.   எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான்.  ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான்.  மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது.  மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது.  உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான்.  மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார்.  அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.  அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.   மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார்.  கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார்.  வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்.  “உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”.  இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன். Dr. ர. நிஷாந்த்,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை. படங்கள்: இணையத்திலிருந்து

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோயை பற்றிய முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…. மஞ்சள் காமாலை நோயானது சித்த மருத்து வத்தில் சிறப்பாக குணப்படுத்த படுகிறது. ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. அதில் குறிபிட்ட ஒரு வகையை மட்டும் தான் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். இப்போது எத்தனை வகையான மஞ்சள் காமாலை இருக்கிறது என காண்போம்.  1.ஹீமோலைட்டிக் மஞ்சள் காமாலை இவ்வகை மஞ்சள் காமாலையானது , முன்பு கூறியது போல் இரத்த சிவப்பணுக்களின் வாழ்க்கை காலமான 120 நாட்களுக்கு முன்பே உடைய ஆரம்பிப்பதால் வருகிறது. அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் உடைவதால் அதிகளவு இணையமற்ற பிலிரூபின்கள் உருவாகின்றன. இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும். இதன் அறிகுறிகள்: வயிற்று வலி அடர்த்தியான ப்ரெளன் கலர் மூலம் அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் பொதுவான உடல் சோர்வு  2.Hepatocellular jaundice   அதாவது, கல்லீரலினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலை ஆனது கல்லீரலில் உள்ள நோய் மற்றும் குறைபாடு களினால் ஏற்படும். ஹெபாடிட்டிஸ் எனப்படும் கல்லீரல் தொற்று, சிர்ஹோசிஸ் எனப்படும் கல்லீரல் நோய் போன்ற வற்றால் கல்லீரலின் செயல்பாடு குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இணையமற்ற பிலீருபின் இணையான பிலீருபின் ஆவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலையை கொடுக்கிறது. இதன் அறிகுறிகள்: 1. அடர் நிறம் கொண்ட சிறுநீர். 2. #வெளுமை நிற மலம் 3. உடல் சோர்வு 4.வயிற்று வலி  3.Obstructive மஞ்சள் காமாலை இந்த வகை மஞ்சள் காமாலை நோயானது, பித்தப்பையில் ஏற்படும், பித்த கல்லினால் உண்டாகும் அமைப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.  இதன் அறிகுறிகள் : 1. மஞ்சள் நிற உடல் 2. அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் 3. வெளுமை நிற மலம் 4. உடல்அரிப்பு 5. காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி தொடரும்…