சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்
உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பவர்களை தேர்தல் பணியில் ஈடுபடக் கூறி கட்டாயப் படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் சிலர் வருந்தினார்கள். இந்தச் சிக்கல் குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பாவையாக இருந்தன. அண்மையில் விபத்துக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவச் சான்று பெற்று பள்ளியில் வழங்கி மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தொலைபேசியில் அவரை அழைத்து, “உங்களுக்கு தேர்தல் பணி ஆணை வந்துள்ளது. என்னைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தலைமை ஆசிரியர் கூறுகிறார். உங்களிடம் கேட்ட பிறகு கையெழுத்திடலாம் என்று அழைத்தேன்” என உடன் பணியாற்றும் ஆசிரியர் சொல்ல, மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியரோ, எனது உடல் நிலை தேர்தல் பணி செய்யும் நிலையில் இல்லை. ஆகவே நீங்கள் கையெழுத்திட வேண்டாம்” எனக் கூறி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலக ஊழியர் வழியாக அலைபேசி அழைப்பு. “மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சான்று அளிக்க வேண்டும். எப்போது வந்து தேர்தல் ஆணையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியரை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஏற்கனவே தங்களிடம் மருத்துவ விடுப்பு தந்துள்ளேன். நீங்கள்தான் இதை மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்” என்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், தலைமை ஆசிரியர் உடனடியாக மறுத்து, “இதில் நானோ, மாவட்டக் கல்வி அலுவலரோ எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆணையை ரத்து செய்து கொள்ளுங்கள்” என்கிறார். அடுத்து மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு சூழலை விளக்க, அவரும் அதே பதிலைக் கூறுகிறார். “இந்த ஆணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளது. நீங்களே சென்று உங்கள் மருத்துவச் சான்றை இணைத்து, கடிதம் எழுதித் தெரிவித்து ஆணையை ரத்து செய்து கொள்ள வேண்டும்” என்கிறார். மீண்டும் மறுநாள் காலை பள்ளியிலிருந்து விடாமல் அலைபேசி அழைப்பு. “இன்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைத்தாக வேண்டும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்த, அந்த ஆசிரியரும் வேறு வழியின்றி, “ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளுடன் உளவியல் ரீதியான சிக்கலையும் இவர்கள் உருவாக்குகிறார்களே” என வருந்தியதுடன், மருத்துவமனையிலிருந்து பள்ளிக்குச் சென்று அன்றைய தேதியில் கையெழுத்திட்டு ஆணையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி மருத்துவமனை சென்று சிகிச்சையைத் தொடருகிறார். ஒப்புகைச் சீட்டில் அவர் கையெழுத்திட்ட தேதி ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் தேதி என்ற முரண்பாடு குறித்துக்கூட எண்ணாமல், தேர்தல் ஆணையைப் பெற வற்புறுத்தித் தினித்துள்ளார்கள் மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியரும். “ஒப்புகைச்சீட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களின் தேர்தல் பணி ஆணையை நீக்குவதற்கும் பள்ளித் தலைமை ஆசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலரும்தானே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியர். குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், இவ்வாறான தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது கணவரை பள்ளிக்கு அனுப்பி ஆணையைப் பெற்றுச் சென்றிருக்கிறார். தேர்தல் பணிக்கான ஆணைகள் அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக கேட்டுப் பெறுவார்கள். அப்படி ஒரு பள்ளியில், பெண் ஆசிரியர் உடல் நலமின்மையால் மருத்துவ விடுப்பில் இருந்தார். பள்ளிக்கு வந்தோ அல்லது வேறு யாரையாவது அனுப்பியோ அந்தப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை வரவழைத்து படிவத்தை வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் ஒரு தலைமை ஆசிரியர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக உடலெங்கும் மயிர் நீக்கிக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரிடமிருந்து போன் வருகிறது. “ஆர்டரை வாங்குங்கள், இல்லையெனில் உங்கள் கணவரை கலெக்டர் அலுவலகம் போகச்சொல்லுங்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர். ‘ஆபரேசன் தியேட்டர் உள்ளே போகும்வரை போனில் பேசிக்கொண்டே போனேன்’ என்கிறார் ஒரு பெண் ஆசிரியர். “எங்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியரின் உண்மையான நிலைமை இது. ஆசிரியர் தவறிக் கீழே விழுந்து தண்டுவடத்தில் பிரச்சினையின் காரணமாக ஆபரேசன் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது. மருத்துவர் ஆலோசனையின்படி அவர் அதிக நேரம் உட்காரவே கூடாது. ஆனால், கலெக்டர் உத்தரவு, தற்போது எதுவும் செய்ய முடியாது. பயிற்சி நாளில் கடிதம் எழுதி கேன்சல் செய்து விடுங்கள் எனக் கல்வித்துறையில் கூறிவிட்டனர்” என்று உடன் பணிபுரியும் ஆசிரியருக்காக வருந்துகிறார் மற்றொரு ஆசிரியர். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதமான சோகக் கதைகள். தலைமை ஆசிரியர்களும், உயர் அதிகாரிகள் பலரும் எங்களைப் போல ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள், சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்கள்தானே? ஆனால், உயர் பொறுப்புக்கு வந்ததும் இவ்வாறு உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை மனித நேயம்கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், பல நிலைகளில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள், துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு அரசு ஊழியர் அவருடைய பிரச்சனைகளை, தனது உடனடி உயர் அலுவலரிடம் (Immediate Superior) தான் அதற்கான சான்றுகளுடன் முறையிட முடியும். தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியரின் உடல் மற்றும் மன நலனில் சிறிதும் அக்கறையின்றி, எதற்கெடுத்தாலும் “இது தேர்தல் அவசரம், இதற்கு நான் பொறுப்பல்ல” என்று தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தலைமைப் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் கீழ் மட்ட ஊழியர்கள் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாவது நிகழ்கிறது. ஊழியரது உடல்நலப் பிரச்சனையை உறுதி செய்து அரசு மருத்துவர்கள் சான்றளித்தாலும்கூட, அதையும் நம்பாமல் அல்லது தங்கள் பொறுப்பை உணராமல் விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மிகச் சில ஆசிரியர்களே இவ்வாறான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யக்கூடிய நிலையில் கூடவா அதிகாரிகள் இல்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வாக்குச் சாவடி அலுவலராகவும் பொறுப்பு வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தற்போது தேர்தல் பணிக்கான ஆணையையும் பெற்றுள்ளனர். ஏற்கனவே 6-8 வகுப்புப் பாடங்களை இணைய வழியிலும் 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகவும் கற்பித்து வரும் ஆசிரியர்கள், தற்போது புதியதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கருடா அலைபேசி செயலியையும் பதிவிறக்கம் செய்து, களத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள், எல்லோருக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாக இருப்பதில்லை. ஆனாலும் அந்தப் பணிக்காகவே வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. போன் பழுதானாலோ அல்லது பழைய மாடல் போன் வைத்திருப்பவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சினை காரணமாகவோ, பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக புதிய ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். சில நேரங்களில் வழக்கமான டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே இணைய வழிக் கல்விக்காகவும் சொந்தப் பயன்பாட்டுக்கான போனைப் பயன்படுத்தி வருகிறோம். Activities, assignments என ஏராளமான இடவசதி போனில் தேவைப்படுகிறது. தேர்தல் பணிக்காகவும் அதே போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் முற்றாக செயலிழந்துவிடுகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான கருவிகளை வழங்கினால், வேலையும் எளிதாகும்; தேர்தல் தொடர்பான தகவல்களும் பாதுகாப்பாகவும் அழிந்து விடாமலும் இருக்கும் என்ற கருத்தையும் ஒரு சில ஆசிரியர்கள் முன் வைக்கிறார்கள். “தலைமை ஆசிரியர்களும் தட்டிக் கழிக்கின்றனர், கல்வி அலுவலர்களும் பொறுப்பிலிருந்து நழுவுகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பக்கம் நிற்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கின்றன? என்று கேட்டோம். “ஆசிரியர் நலன் சார்ந்து சங்கங்கள் செயல்பட்ட காலம் போய் பல ஆண்டுகள் ஆயிற்று” என ஒரே குரலில் பதிலளிக்கிறார்கள் ஆசிரியர்கள். “ஏற்கனவே பள்ளிகள், மாணவர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுப்பதில்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளாத இந்தச் சங்கங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் இருப்பதை விட அவற்றைக் கலைத்து விடலாம்” என்கின்றனர். தேர்வு நிலை (Selection grade) வாங்க 2 1/2 ஆண்டு காத்திருப்பு, 10, 12 -ஆம் வகுப்புகளது சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பித்து இரண்டரை ஆண்டுகள் காத்திருப்பு என்பதோடு இன்னும் பலப்பல சிரமங்கள் என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள். அலுவலகப் பணியான, பணிப் பதிவேடுகளை (SR) scan & upload செய்யும் பணியும் தற்போது ஆசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது என்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், வாக்காளர் கணக்கெடுப்புப் பணி உள்ளிட்ட, தொடர்ச்சியான தேர்தல் ஆணையப் பணிகளுக்காக தனியே ஆட்களைத் தேர்வு செய்து அவர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும். தேர்தல் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் இதர துறையிலிருந்து பணியமர்த்திக் கொள்ளலாம். முக்கியமாக, உண்மையாகவே உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தல் பணியாற்ற இயலாதவர்களுக்கு இப்பணியிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடைமுறைகளை இந்த அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியம். மாறுமா ஆசிரியர்களின் அவல நிலை? படங்கள்: இணையத்திலிருந்து