பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் தங்கையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்விக்கலாம் என்ற யோசனை வைத்திருந்ததையும் கடைசியில் ஆதித்த கரிகாலனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்கும் யோசனையாக அது மாறிப்போயிருந்ததையும் நினைத்து, அவளின் சோகத்தில் குந்தவைக்கு சுவாரசியம்கூடப் பிறந்தது. என்னவென்று அவளிடமே விசாரிக்கலானாள். அவள் தன் கண்ணீருக்கு மத்தியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது தானே எனக் கூறினாள். திடுக்கிட்ட குந்தவை, “சம்புவரையரையும் கந்தமாறனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாயா?” என வினவியபோது, அதை மறுத்த மணிமேகலை, அவர்கள் மதுராந்தகனையும் பின்பு ஆதித்த கரிகாலனையும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர்களைத் தான் வெறுப்பதாகவே கூறினாள். மேலும் ஆதித்த கரிகாலன் தன்னை சகோதரியாக நினைத்து மடல் எழுதியிருப்பதையும் குறிப்பிட, குந்தவை மேலும் திகைத்தாள். அவள் வெகுவாகக் கலங்கிப் போயிருப்பதால், அவளுக்கு ஆறுதல் கூறி, அவளிடம் ‘என்ன நடந்தது’ என்று அக்கறையுடன் விசாரித்தாள். அவள், வாணர் குலத்து வீரர் வந்தியத்தேவர், பாதாளச்சிறையில் சிறைப்பட்டிருப்பதை மீட்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவரை எப்படியாவது விடுவிக்குமாறும் வேண்டிக்கொள்ள, குந்தவை திகைத்தாள். குந்தவை வந்தியத்தேவனைப் பார்க்கப் போவதற்கே தயங்கிக்கொண்டிருக்க, மணிமேகலை, அவன் மீதான கொலைப்பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் வந்திருப்பதையும் வந்தியத்தேவன் பேரில் அவள் கொண்டிருக்கும் தூய அன்பினையும் கண்டு நெகிழ்ந்தாள். வானதி அவளை மேலும் விசாரித்தாள். ஆதித்த கரிகாலனால் வந்தியத்தேவருக்கு ஆபத்து இருப்பதாக நந்தினி தன்னை நம்பவைத்திருந்ததையும் ஆனால் ஆதித்த கரிகாலருக்கு அந்த எண்ணமேயில்லை என்று அவர் குந்தவையிடம் ஒப்படைக்கச் சொல்லி எழுதியிருந்த ஓலையில்  இருந்து தான் தெரிந்துகொண்டதையும் மணிமேகலை கூறினாள். குந்தவை அந்த ஓலையை வாங்கிப் படித்தாள். தன் விதியைத் தாண்டி, தான் செல்லப் போவதாகவும் வந்தியத்தேவன் முடிந்தவரை தன்னைக் காபந்து பண்ணியதாகவும் இதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு, தானே பொறுப்பு என ஆதித்த கரிகாலன் அதில் எழுதியிருந்தான். குந்தவை ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு மணிமேகலையிடம், அவள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாகச் சொன்னால் அவரின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் இதை வந்தியத்தேவரும் விரும்பமாட்டார்; தவிர வந்தியத்தேவர் அந்தப் பழியைத் தானே ஏற்கவும் முனைந்து மணிமேகலையைக் காப்பாற்றவே விரும்புவார் எனவும் கூறினாள். மனமுடைந்து போன மணிமேகலை, எப்படியாவது வந்தியத்தேவனை இப்பழியிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அப்போது அங்கு பொன்னியின் செல்வர் வர, வானதியையும் மணிமேகலையையும் சற்றுத் தள்ளி இருக்குமாறு கூறிவிட்டு, தம்பியுடன் குந்தவை தனித்துப் பேசலானாள். அப்போது தனக்குப் பட்டம் சூட்டுவதைப்பற்றித் தன் அதிருப்தியைத் தெரிவித்தவர், மணிமேகலையைக் கண்ணுற்று என்னவென்று வினவ, பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக சம்புவரையர் மகள் வேண்டி நிற்பதை குந்தவை வருத்தத்துடன் கூறினாள். பெரிதும் அதிர்ந்துபோன பொன்னியின் செல்வர், வந்தியத்தேவனை இத்தனை நாள் தாம் நினைத்துப் பாராமல் இருந்ததைக் குறித்து வெட்கினார். தான் நன்றிகெட்ட செயல் செய்துவிட்டதாக வருந்தி, உடனே அவனை விடுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகச் சொல்லிக் கிளம்ப, அப்போது அங்கு வந்த மலையமானும் பூதி விக்கிரம கேசரியும் அவரைப் போகவிடாது வாயிலிலேயே பலவந்தமாகத் தடுத்தனர். திகைத்துப்போன அருள்மொழிவர்மரிடம் பூதி விக்கிரம கேசரி கோட்டைக்காவல் பாதுகாப்பு, சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து தன்னிடம் வந்திருப்பதைக் கூறினார். மலையமான், வந்தியத்தேவனை இளவரசர் விடுவித்தால் ஆதித்த கரிகாலனின் கொலைப்பழி அவர் மீதே திரும்ப வாய்ப்பிருப்பிருக்கிறது எனக் கூறினார். சக்ரவர்த்தி மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் சம்புவரையர் மற்றும் மற்ற குறுநில அரசர்களை அழைத்துவர பார்த்திபேந்திரன் போயிருப்பதாகவும் ஆனால் மதுராந்தகன் பட்டம் சூடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் பூதி விக்கிரம கேசரி தெரிவித்தார். கரிகாலன் மரணம் பற்றிய உண்மை வெளிப்படும்வரையில் இளவரசர் அமைதியாக இருப்பது நல்லது என்ற அவர்களின் முடிவை குந்தவை ஒப்புக்கொள்ள, வந்தியத்தேவனைப் பாதாளச் சிறையில் சென்று பார்த்துவிட்டாவது வரலாம் என்று அனைவரும் முடிவு செய்து மணிமேகலையுடன் கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபொழுது வைத்தியர் மகன் பினாகபாணி மட்டுமே இருந்தான். வைத்தியர் மகன் பழையாறையில் வந்தியத்தேவனால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு முதன்மந்திரி அநிருத்தரிடம் சென்றான். முன்னொரு சமயம் அவன் பாதாளச்சிறையில் இருந்தபொழுது பக்கத்துச் சிறையில் இருந்த பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவனுக்கு இலங்கையில் பாண்டிய நாட்டு ரத்தினஹாரம் மற்றும் மணிமகுடம் இருக்குமிடம் குறித்தும் சோழகுலத்துப் பட்டத்து வாரிசு ஒருவரின் பிறப்பு ரகசியம் குறித்தும் தெரியும் என்றும் தன்னை விடுதலை செய்தால் அதைச் சொல்வதாகவும் தன்னிடம் கூறியதாகச் சொன்னான். அநிருத்தர் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக  சேனாதிபதியிடமிருந்து விடுதலை உத்தரவை வாங்கி அளிக்க, அதை எடுத்துக்கொண்டு பினாகபாணி பாதாளச் சிறையை அடைந்தான். அங்கு பக்கத்தில் இருந்த வந்தியத்தேவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இழுக்காகப் பேசிவிட்டு, அந்த ரகசியம் அறிந்த பைத்தியக்காரனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். தானே அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் நல்லது எனக் கேட்டுக்கொண்டிருந்தவனை, பக்கத்து அறையிலிருந்து சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வந்த வந்தியத்தேவன், அடித்துக் கட்டிப் போட்டான். வந்தியத்தேவன் பைத்தியக்காரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி பினாகபாணி, பொன்னியின் செல்வர் முதலானவர்களிடம் அழுதான். கடம்பூரில் இருந்து வந்தியத்தேவனைக் கட்டி இழுத்துவந்தபோது, அவனுக்கு தீக்காயங்களாலும் தன் எஜமானனுடைய மரணத்தைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் பெரிதும் மயங்கிய நிலையிலேயே தஞ்சைக்கு வந்தான். அவன்மீது இளவரசரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திப் பாதாளச்சிறையில் அடைத்திருந்தார்கள்.  அப்போது பக்கத்துச் சிறை அறையிலிருந்த பைத்தியக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்டவன், பினாகபாணி தன்னை விடுவிக்கப் போவதாகக் கூறவும், இருவரும் திட்டம் தீட்டி அவனைக் கட்டிப்போட்டுவிட்டு பினாகபாணி போல வந்தியத்தேவன் உடுத்திக்கொண்டு வாசலில் காத்திருக்கும் அநிருத்தரின் ஆட்களுடன் வெளியே சென்றனர். வழியில் பொன்னியின் செல்வர், குந்தவை, மணிமேகலை, வானதி, சேனாதிபதி என அனைவரும் எதிரே வர, தன்னைப் பார்க்கத்தான் போகிறார்கள் என அறியாத வந்தியத்தேவன் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் நின்றுகொண்டான். இவ்வளவு அருகிலிருந்தும் யாரிடமும் அணுகி உதவி கேட்க முடியவில்லையே என மருகினான். பின்னர் அநிருத்தரின் ஆட்களிடமிருந்தும் தப்பி, பைத்தியக்காரனும் வந்தியத்தேவனும் முன் பழுவூர் ராணியைச் சந்தித்த பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில், அதே வழியில் சென்று மதிலேறிக் குதித்து மறைந்துகொண்டனர். இருண்டபின்னேதான் சுரங்கப் பாதையை அடைய முடியுமென்பதால், மறைந்து உட்கார்ந்திருந்தபோது வந்தியத்தேவன் அந்தப் பைத்தியக்காரனின் கதையைக் கேட்டான். அவன் பெயர் கருத்திருமன். கருத்திருமன் ஒரு படகோட்டி. ஒருநாள் கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே விழுந்த, புத்தி சுவாதீனமற்று இருந்த ஊமைப் பெண்ணொருத்தியைக் கருத்திருமன் காப்பாற்றினான். அவளை ஈழ நாட்டில் விட்டு வரும்படி சோழ நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதால், ஓடத்தில் ஏற்றிக் கூட்டிப் போனான். வழியில் இன்னொரு மனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது. அவர் பாண்டிய அரசர் என்று தெரிந்தது. பின்னர் பாண்டிய அரசர், இலங்கை அரசன் மகிந்தனுக்கு, கருத்திருமன் மூலம் ஓலை கொடுத்தனுப்பினார். மகிந்தன் பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்தான். பாண்டியனின் தந்தை முன்பு, இலங்கையில் தங்கள் குலத்தின் புராதன ரத்தினஹாரத்தையும் மணிமகுடத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தையும் கருத்திருமன் பார்த்துக்கொண்டான். பின்னர் பாண்டியருடன் ஊர் திரும்பியபின் அந்த  ஊமைப் பெண்ணை, கோடியக்கரையில் அவளது சகோதரியான வாணியுடன் பார்த்து அதிர்ச்சியுற்றான். அப்போது அந்தப் பெண் கருவுற்று இருந்தாள்.  அவர்களின் தமையனாரான கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் வீட்டில் இரு சகோதரிகளும் இருந்தனர். மந்தாகினியின் தங்கையான வாணியின் மீது ஆசைப்பட்டுத் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, கோடியக்கரை குழகர் கோயிலுக்கு வந்த செம்பியன் மாதேவி, அக்கா தங்கை இருவரையும் தன்னுடனே அழைத்துச் சென்றதால், வருந்தி பாண்டிய நாட்டுக்கே கருத்திருமன் சென்றுவிட்டான். பாண்டிய அரசர் நாட்டை மீட்கும் முயற்சியில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, அவர் அந்த ஊமைப்பெண்ணை முடிந்தால் கூட்டி வரும்படி கூறினார். பழையாறையில்  வாணியைச் சந்திக்கச் செல்லும்போது அவள் ஒரு குழந்தையைப் புதைக்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுக்குக் கேட்கும் திறன் இல்லாததால், குழந்தை அழுததைக்கூடக் கேட்க இயலாமல் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்திருந்தாள். பின்னர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாகவும் கூறித் தன் கதையை முடித்தான். வந்தியத்தேவனுக்கு இப்போது அந்தக் குழந்தையைப் பற்றிய எல்லா உண்மையும் புரிந்துபோனது. அதற்குள் இருட்டிவிட, இருவரும் சுரங்கப்பாதை வழியே சென்று, சில பொற்காசுகளையும் நிலவறையிலிருந்து எடுத்துக்கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது நதியில் ஒரு ஓடம் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அருகே செல்ல, மறைவிலிருந்து சிலர் வந்து வந்தியத்தேவனைத் தாக்கி ஓடத்துடன் கட்டிப் போட்டனர். தன்னை கட்டிப்போட்டது ஆழ்வார்க்கடியான்தான் எனத் தெரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனைத் திருப்பித் தாக்கிப் படகில் கட்டிப்போட்டான். முதன்மந்திரியிடம் கொண்டுபோவதற்காகவே தன்னைத் தாக்கினான் என்பதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், தாங்கள் இருவரும் ஈழத்துக்குத் தப்பிபோவதாகவும் அதற்கு இரண்டு குதிரைகள் எங்கு கிடைக்கும் எனவும் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான். பெரிய பழுவேட்டரையரை அழைத்துக்கொண்டு வரும்போது, சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு அவனது குடிசையில் படுத்துக் கிடப்பதாகவும் அவனைப் பூங்குழலியும் வாணி அம்மையாரும் பார்த்துக்கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறி, அங்கு சென்றால் அந்தக் குதிரைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அப்போது கருத்திருமன், சேந்தன் அமுதனுக்கு அடிபட்ட விஷயம் செம்பியன் மாதேவியாருக்குத் தெரியுமா என்றும் கேட்டுக்கொண்டான். பின் இருவரும் அங்கு செல்லத் தொடங்கினர். பூங்குழலி, அடிப்பட்டிருந்த சேந்தன் அமுதனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள். சேந்தன் அமுதன், தனக்குக் குணமாகிவிட்டால் பூங்குழலி தன்னை விட்டுப் போய்விடுவாள் என்பதால், தான் குணமாக விரும்பவில்லை என்று கூற, பூங்குழலி நெகிழ்ந்தாள். பூங்குழலிக்கு அருள்மொழிவர்மர் மேல் அன்பிருப்பதைப் பற்றி அவன் வினவ, வானதியே அவருக்கு உரியவள் என்றும் தன் அத்தைக்குக் கிடைக்காத சிங்காதனத்தின் மேல் எனக்கு  ஆசை ஏற்பட்டது என்றும் கூறினாள். சேந்தன் அமுதனை அத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களைச் செய்யுமாறு கேட்க, அவன் மறுத்து சிவத்தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம் எனக் கூறினான். தன் பதவி ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, சேந்தன் அமுதனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப்

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி மேற்றிசைக்குச் செல்லப் போவதாகவும் கூறினான். மேலும் குந்தவையை வந்தியத்தேவன் பொருட்டு மனங்கலங்காது இருக்குமாறு கூறி விடைபெற்றான். திருப்புறம்பியத்தை அடைந்த ஆழ்வார்க்கடியான் அங்கு இடும்பன்காரி, சோமன்சாம்பவன், கிரம வித்தன் மற்றும் இராக்கம்மாள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அவர்கள் அனைவரும் பச்சைமலைக்குச் செல்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். அவனைப்போலவே அவர்களைப் பின் தொடர்ந்துவந்த பூங்குழலியைக் கண்டு, அவர்கள் செல்லும் இடத்திற்கு இருவரும் சென்றனர். வழியில் ஊமைராணி இறந்ததைக் கேட்டு வருந்தினான். ஒரு இடத்தில் ரவிதாஸன் மற்றும் ஆபத்துதவிகள் மறைந்து கூட்டமாகச் சமைத்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். ஆழ்வார்க்கடியான் மட்டும் அங்கிருந்த ஒரு குகைக்குள் மறைந்து சென்றான். அங்கு பழுவேட்டரையர், தன் காளாமுகத் தோற்றத்தோடு, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். அருகில் நந்தினி தலைவிரி கோலமாய் அமர்ந்து அவரைக் கஞ்சியை உட்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தாள். முதலில் நந்தினியைக் கண்டு மகிழ்ந்த பழுவேட்டரையர், பின் அவளைப் பலவாறாகத் திட்டத்தொடங்கினார். ஆனால் நந்தினி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இத்தனை நாள் தன்னைப் பட்டமகிஷியாக வைத்திருந்ததற்கு நன்றி கூறினாள். ஆதித்த கரிகாலனின் முடிவு தனக்குத் தெரிந்ததானாலே, அதிலிருந்து பழுவேட்டரையரை விலக்குவதற்காகவே, அவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினாள். ஆனால் விதிவசத்தால் அவர் வந்து சேர்ந்ததைப் பற்றியும் ஆதித்தகரிகாலனைச் சந்தித்தபொழுது, தன்னால் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதையும் குறிப்பிட்டாள். வந்தியத்தேவனின்பால் ஆதித்த கரிகாலனின் கோபத்தைத் தூண்டி, கரிகாலன் அவனைக் கொல்ல வருகையில், மணிமேகலை அவனைக் காப்பாற்ற இளவரசரைக் கொல்லுவாள் எனத் திட்டம் தீட்டி வைத்திருந்ததையும் கூறினாள். அப்போது தெய்வப் பயனாக காளாமுக வேஷத்தில் தாங்கள் உதவிக்கு வந்ததாகக் கூற, பழுவேட்டரையர், இடும்பன்காரியிடமிருந்து தான் வாங்கிவைத்திருந்த கத்தியை நந்தினி மீதே, தான் எறிந்தபோது அது இளவரசர் பேரில் பாய்ந்துவிட்டது எனப் பெரிதும் வருந்தி அவளைத் தூற்றினார். நந்தினி அவரைப் பெரும்பாடு பட்டு இங்கு தூக்கிவரச் செய்ததாகவும் மூன்று நாட்கள் அவருக்குப் பணிவிடை செய்து அகமகிழ்ந்து போனதாகவும் இனிமேல் விடைபெற்றுச் செல்லப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து விலகிவந்து பூங்குழலியிடம் அமர்ந்தான். குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் இருப்பதைக் கூறினான். அப்போது அவள் தன் அத்தையைக் கொன்ற சோமன் சாம்பவனைக் கொல்லக் காத்திருப்பதாகக் கூறினாள். பூங்குழலி, அரண்மனையில் தன் அத்தையைக் கொன்றவனைத் துரத்திக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வரும்பொழுது, தன்னுடன் சின்ன பழுவேட்டரையரும் வந்தார் எனவும் சுரங்கப் பாதையில் மதுராந்தகன் மறைந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தப் பழி அவர்மீது விழுந்து விடுமோ என அஞ்சி அவரைக் கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் கூறினாள். அப்போது இருவரையும் ரவிதாஸனின் பாண்டிய ஆபத்துதவிக் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவர்கள் மீது தாக்குதலுக்குத் தயாராக, நந்தினி உள்ளிருந்து வந்து, அவர்களைத் தடுத்து, ஆழ்வார்க்கடியானிடம் தன் தாய் இருக்குமிடத்துக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். ஆழ்வார்க்கடியான், சோமன் சாம்பவன்தான் அவள் அன்னையைக் கொன்றுவிட்டான் எனக் குற்றம் சாட்ட, நந்தினி உடைந்துபோய் உட்கார்ந்து அழுதாள். அப்போது சின்ன பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் வர, பாண்டிய ஆபத்துதவிகள் ஆழ்வார்க்கடியான் தலையிலும் பலமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.  சேந்தன் அமுதனும் ஒரு குதிரையில் கட்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். சின்ன பழுவேட்டரையரைக் கண்டதும் பூங்குழலி, கொலைகாரர்கள் அவர்கள்தான் என்றும் அவர்களைப் பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அப்போது குகையிலிருந்து பெரிய பழுவேட்டரையர் எழுந்து வெளியில் வந்தார். திருமலையும் கந்தமாறனும் குகையினுள் நுழைய முயல, பெரிய பழுவேட்டரையர், ரவிதாசனும் மற்றவர்களும் குகையை அடைத்துவிட்டுத் தப்பித்துவிட்டதாகக் கூறினார். தளர்ந்து அடிபட்டு பிரேதக்களை பொருந்திய முகத்துடன் தன் மூத்தவரைக் கண்டுகொண்ட சின்ன பழுவேட்டரையர், அவரை வணங்கி அழுது நின்றார். ‘உன் பேச்சைக் கேட்காமல் மோசம் போனேன்’ என்று பெரியவர் வருந்தினார். பின் அதுவரை நடந்ததை சின்ன பழுவேட்டரையர் சொல்லி முடிக்க, பெரியவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். பூதி விக்கிரம கேசரியிடம் கோட்டைப் பாதுகாப்பு இருப்பதையும். தங்கள் குடும்பத்தின் மேல் கைவைக்க கூடாது என எச்சரித்து வந்ததையும் கூறினார். வழியில் கந்தமாறனைக் கண்டு கூட்டி வந்ததாகவும் மற்ற அரையர்களுக்கு, படை திரட்டி வருமாறு ஓலை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அப்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த நந்தினியைப் பார்த்து, தன் உயிரை நந்தினிதான் காப்பாற்றினாள் என்று சின்ன பழுவேட்டரையரிடம் கூறிவிட்டு நந்தினியை நெருங்கினார். ஆழ்வார்க்கடியான் நந்தினியிடம் ‘இப்போதாவது வந்தால் வைணவக் கைங்கரியங்கள் செய்யலாம்’ என அழைக்க, நந்தினிஅவன் தன்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி உகுத்தாள். தூரத்தில் நின்று பூங்குழலி தன் அத்தை போலவே நந்தினி இருப்பதை சேந்தன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி தன்னை நெருங்கிய பெரிய பழுவேட்டரையரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பின் அங்கிருந்த புரவியின் மேல் ஏறிக்கொண்டு பாய்ந்தாள். அவளைத் தொடர முயன்றவர்களை, பெரிய பழுவேட்டரையர் தடுத்துவிட்டார். ஆம். நந்தினி மறைந்தாள்.. இந்தக் கதையில் இனி நந்தினி வரமாட்டாள்.. யார் கண்டது? என்றோ எங்கோ அவளை நாம் சந்திக்கக்கூடும். தஞ்சையில் ஆதித்த கரிகாலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, கூடவே ஜனசமுத்திரம் அலையலையாக திரண்டது. பழுவேட்டரையர்களின் பால் ஜனங்களின் அதிருப்தி பெரியளவில் இருந்ததால், அவர்களுக்கெதிரான கோஷங்கள்  எழுந்துகொண்டேயிருந்தன. ஈமச் சடங்குகள் நடந்து சக்ரவர்த்தியின் குடும்பம் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது மதுராந்தகனும் இல்லாதபடியால், அவருக்கு எதிரான கோஷங்களுடன் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அநிருத்தரின் மாளிகைக்கு முன்பு சென்று கோஷமிடத் தொடங்கினர். வேளக்காரப் படையினர் வந்து துரத்தியடித்தனர். உண்மையில் மதுராந்தகன் அங்குதான் மறைந்திருந்தார். அநிருத்தர், அவருடைய பிறப்பு ரகசியம் தனக்குத் தெரியுமெனவும் ஆனால் அதைச் சொல்ல முடியாதெனவும் கூறியதில் மதுராந்தகன் சஞ்சலம் அடைந்திருந்தான். அப்போது செம்பியன் மாதேவிப் பிராட்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் ராஜ்ய உரிமை பற்றிய பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பிராட்டியார் மதுராந்தகன் தன் மகனில்லை என்ற உண்மையைக் கூற நேர்ந்தது. மதுராந்தகன், அவர் மனம் புண்படும்படிப் பேசி உண்மையைச் சொல்லுமாறு பல்வேறு வார்த்தைகளால் ஏசினான். அநிருத்தரிடம் அந்தக் கதையை சொல்லுமாறு செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டார். ‘செம்பியன் மாதேவி தன் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்த சமயத்தில், கண்டராதித்தர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில், அக்காவும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்தீரிகள் அரண்மனைத் தோட்ட த்தில் குடியிருந்தார்கள். கர்ப்பஸ்தீரியான அந்த ஊமைப் பெண்ணை ,அவள் சகோதரியுடன் செம்பியன் மாதேவி க்ஷேத்ராடனம் சென்றபோது சந்தித்துக் கூட்டிவந்து போஷித்துக் கொண்டிருந்தார். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது அசைவில்லாமல் இருந்ததைக்கண்டு பதறி அழுதபடி பார்க்கவந்த அநிருத்தரிடம் தெரிவித்தாள். தன் கணவரிடம் எப்படி இதைச் சொல்வேன் எனக் கதறிய செம்பியன் மாதேவியிடம் அநிருத்தர் ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் கர்ப்பஸ்தீரிக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், ஆண் குழந்தையை எடுத்து வரச் செய்து, செம்பியன் மாதேவியிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த ஊமை ஸ்தீரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். குழந்தைகள் நன்றாக வளரும் என்று கூறிய அநிருத்தரிடம் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள். அசைவில்லாமல் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடும்படி, அந்தத் தங்கையான ஊமை ஸ்தீரியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு பெண் குழந்தையை, தன் சீடனான ஆழ்வார்க்கடியானிட்ம் கொடுத்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.  செம்பியன் மாதேவி, இதைச் சிறிதுகாலம் கழித்துத் தன் கணவரான கண்டராதித்தனிடம் உணமையைக் கூறி மன்னிப்பும் கேட்டார். யார் வயிற்றில் பிறந்த குழந்தையாயினும் என்ன, நம் குழந்தை போலவே வளர்ப்போம். ஆனால் ராஜ குடும்பத்துக்கு வாரிசாக வேண்டாம். சிவத்தொண்டாற்றும்படி வளர்ப்போம். அவனுக்கு சிவ சாம்ராஜ்யமே போதும். ராஜ்ய உரிமை வேண்டக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு சில நாட்களில் இறந்தும் போனார்.’ இவற்றையெல்லாம் அநிருத்தர் சொல்லி முடித்ததும் அதிர்ந்த மதுராந்தகன், இது யாருக்கும் தெரியாதெனில் இதற்குப் பிறகும் இதை மறைத்து வைக்குமாறும் அதற்கு ஈடாக அவருக்குப் பரிசளிப்பதாகவும் கூறினான். அநிருத்தர் மறுத்து, செம்பியன் மாதேவி என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே ஏற்பேனெனக் கூற, மதுராந்தகனுக்குச் சினம் மிகுந்தது. செம்பியன் மாதேவியிடம் இதை மறைத்துவிடுமாறு கூற, அவர் அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நல்வார்த்தைகள் கூறி அவனை ஆற்றுப்படுத்தினார். மேலும் அதை வெளியில் சொல்லுவதைத் தான் விரும்பவில்லை எனவும் மதுராந்தகனை, அரசர் கூட்டவிருக்கும் சபையில், ராஜ்யம் ஆளும் சிந்தனை தனக்கில்லை; சிவத்தொண்டில் முழுகப் போகிறேன், என அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுராந்தகன் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அநிருத்தர் சபை கூட இன்னும் மூன்று தினங்கள் இருப்பதாகக் கூறவும் மதுராந்தகனின் மனத்தில் பலவிதத் தீய எண்ணங்கள் எழத் தொடங்கின. சேந்தன் அமுதனின் தாய்க்கு இந்தச் செய்தி தெரியும் என்பதையும் அறிந்துகொண்டான். அப்போது அருள்மொழி உள்ளே வந்து, செம்பியன் மாதேவியின் தாள் பணிந்து, இந்தப் பேச்சுகளை மறைந்திருந்து கேட்டதற்கு மன்னிக்கும்படியும் மதுராந்தகர் அவருடைய மகனில்லை என வெளியில் தெரிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த ரகசியம் தனக்கும் தன் தமக்கை இளைய பிராட்டி குந்தவைக்கும் கூடத் தெரியுமென அவர் சொல்ல, அனைவரும் வியப்பிலாழ்ந்தனர். அநிருத்தர் மூன்று நாட்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடரும்

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு நந்தினி வேண்ட, ‘மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மன் படைத்த தளிர்க்கரங்களால் வாளைத் தொடலாகாது’ என அவளிடம் கூறினான். பெருமூச்செறிந்தவாறே நந்தினி, ‘இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையை சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அந்த பகற்கனவு கண்ட காலமெல்லாம் மறைந்து இந்த திக்கற்ற அனாதையின் கைகளில் வாளைத் துணைக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. எனவே அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என வேண்டினாள். ஆதித்த கரிகாலன், அவள் தன்னை அனாதையென்று சொன்னதை எள்ளல் செய்து அவள் காலால் இட்ட வேலையைத் தலையாய் செய்ய எத்தனையோ பேர் காத்திருப்பதாக கூறினான். அந்த தூர்த்தர்களிடமிருந்து தன் காலை வெட்டிக்கொள்ளவாவது அந்த வாளின் துணை வேண்டுமென நந்தினி பதிலளித்தாள். அதற்கு கரிகாலன், ‘பழுவேட்டரையர் இருக்கும்போது அந்த தைர்யம் யாருக்கு வரும்’ என்றான். ‘ அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்று தெரிந்த பிறகு அந்த வாலிபப் புலிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இந்த வாள் சுழற்றப் பயின்றேன்’, என்றாள் நந்தினி. ‘வாள் வீசக் கற்றுக் கொண்டதற்கு அதுதான் நோக்கமா? உன் வேண்டுகோளைப் புறக்கணித்து உன் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொல்லும் நோக்கமில்லையா?’ என்றான் கரிகாலன். ‘ஒரு சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வேளை வந்திருக்கும் போது என் கரங்களில் வலிவும் நெஞ்சில் உறுதியுமில்லாமல் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கெளரவத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகிப்பேன். தயவுசெய்து அதைக் கொடுத்து விடுங்கள்’, என்றாள். ‘அந்த பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் அந்த பாதகனை தண்டிக்கறேன்.’, என்று கர்ஜித்தபடி ஆதித்த கரிகாலன் திரைச்சீலையை நோக்கிச் செல்ல. நந்தினி அவன் காலைத் தொட்டு மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக் கொண்டு ‘ கோமகனே.. வேண்டாம்.. வேண்டாம்’ என்றாள். ‘ உன் கருணையை வேறு எங்காவது வைத்துக்கொள், ஏரித்தீவில் நீ வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதெல்லாம் பொய் என நினைத்தேன். கந்தமாறன் சொன்ன பிறகே அனைத்தும் உண்மையென புரிந்து கொண்டேன். நண்பனைப் போல நடித்து சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்டாதே’ எனக் கூறி மேலே நகர்ந்தான். நந்தினி திகைத்து வாயிற்படியருகே அசையாது நின்றுகொண்டிருக்கும் கந்தமாறனைப் பார்த்து அவனைத் தடுக்குமாறு கத்தினாள். ஆனால் அவன் ஒரு அசட்டுச்சிரிப்பை சிரித்துவிட்டு பேசாமல் நிற்க, ஆதித்த கரிகாலன் வேகமாய் கத்தியின் நுனியால் திரைச்சீலையை நகர்த்தினான். உள்ளே சிறிய கத்தியுடன் க்றீச்’ என்று கத்தியபடி மணிமேகலை இருக்கவும் ஆதித்த கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். பெரிதாகச் சிரித்தவாறே கந்தமாறனை அழைத்து ‘இந்தப் பெண்புலிக்கு எத்தனை வீரப் புலிக்குட்டிகள் பிறக்குமோ தெரியாது. கொண்டுபோய் உன் அம்மாவிடம் விட்டுவிட்டு வா’ என்று இருவரையும் அனுப்பிவிட்டு நந்தினியை ஏறிட்டான். ஒரு நாடகம் நடித்து அவர்களை அனுப்பி விட்ட தாகவும் இனிமேலாவது உண்மையை மனம் விட்டு பேசலாமென நந்தினியிடம் கூற, அவள் ‘அத்தனையும் நடிப்பா’ என வியந்தாள். ‘நடிப்பு உனக்கு புதிதா’ எனக் கேட்ட கரிகாலன் ‘மணிமேகலையை தான் கொல்லப்போகும்போது தடுக்காதது ஏன்? அவள் சாகட்டும் என விட்டுவிட்டாயா?’ என்று வினவ, அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக நந்தினி கூறினாள். ‘அவ்வளவு அன்பை நந்தினி யார் மீது வைத்தாலும் அவர்கள் தனக்கு விரோதியாகிவிடுவார்’ என ஆதித்த கரிகாலன் கூறினார். நந்தினி பதறி இல்லையெனக் கூறினாள் ‘உண்மையைச் சொல்.சோழ சாம்ராஜ்யத்தை பங்கு போடுவதற்கோ, மணிமேகலையை எனக்குத் திருமணம் செய்விப்பதற்காகவோ இங்கு நீ வரவில்லை. நான் நம்ப மாட்டேன். என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையும்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டும் போய் விடவே நான் விரும்புகிறேன்.அதற்கு முன்னால் ஒரு தடவை உன்னைப் பார்த்துப் போகலாம் எனவே வந்தேன். நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய். நான் என் மூர்க்கத்தினால் அதை உனக்குக் கொடுக்கவில்லை. அதற்கு வருத்தப் படுகிறேன். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய், என்னை எதற்கு வரவைத்திருக்கிறாய்? பழுவேட்டரையரை எதற்காகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும். வீரபாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழிமுடிக்கும் நோக்கத்துடனேயே நீ இங்கு வந்திருக்கிறாய். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டுமெனவே கந்தமாறனையும் மணிமேகலையையும் வெளியில் அனுப்பினேன். இதோ வாளைப் பெற்றுக்கொள்’ என வாளை நீட்டினான் கரிகாலன். வாளினைப் பெற்றுக்ககொண்ட நந்தினி நடுங்கி கண்ணீர் விட்டு தேம்பலுடன் அழலானாள்.‘உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்கு கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவி விட வேண்டாம். உன் சபதத்தை உன் கையாலேயே முடித்துக் கொள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்வித தீங்கும் செய்தவளாக மாட்டாய். பேருதவி செய்தவளாவாய்?’ என்று கரிகாலன் கூற, அழுகையை அடக்கிக் கொண்டு நந்தினி, ‘ நான் இங்கு வந்த நோக்கம் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் எனக்கு அந்த தைரியம் இல்லை. என் கைகள் நடுங்குகின்றன’ என்றாள். ‘ ஆம். ஏன் உன் நெஞ்சம் உறுதியாயிற்றே.. இளகிவிட்ட காரணம் என்ன?’ ‘உங்கள் நண்பர் வந்தியத்தேவன் சொன்ன செய்திதான் காரணம்’ ‘ நீயும் நானும் உடன்பிறந்தவர்கள் என்று அவன் சொன்னதை நீ ஏரிக்கரையில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது அதை நம்பவில்லை என்று கூறினாயே’ ‘அவர் என்னைப் பெற்ற அன்னையை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்புகிறேன். எனக்கொரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுங்கள். வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்குவதாக செய்த சபதத்தை என்னால் முடிக்க இயலவில்லை. என்னை நானே கொன்று கொண்டு முடியலாம் என நினைத்தால் அதற்கும் என்னிட்ம் தெம்பில்லை. நீங்கள் இந்த வாளால் என்னை வெட்டிக் கொன்று விடுங்கள். இனிவரும் ஜென்மங்களில் நான் நன்றியுடன் இருப்பேன்.’என்று சொல்லியபடி நீட்டிய வாளை ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டு அந்த அரண்மனையே அதிரும்படி பெரிதாகச் சிரித்தான். யாழ்களஞ்சியத்திலிருந்து இதைக்கேட்ட வந்தியத்தேவன் மருண்டான். இளைய பிராட்டி குந்தவை தன்னை இதுபோன்ற சந்தர்ப்பத்திலிருந்து ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தற்போது வெளிவந்து அவர்களைக் குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக காத்திருக்கலாம் என முடிவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘ஒருகாலத்தில் உங்களிடமிருந்து மலர்மாலை சூடுவதாக கனவு கண்டேன். உங்கள் கையால் வாளை சூடும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்’ ‘அப்படியானால், நான் இந்த வாளைக் கொண்டு உன்னிடம் சேர்வதற்கு தடையாய் இருப்பவர்களைக் கொல்கிறேன். நீ என்னுடன் வந்துவிடு நந்தினி’ ‘என்னால் யாரும் சாக வேண்டாம். நமக்கு என் தலைவிதிதான் தடையாக இருக்கிறது’ ‘ அந்த தடையை நான் மாற்றி எழுதுகிறேன். தடை செய்யாதே. வந்தியத்தேவன் சொன்னதைப்பற்றி நாம் சகோதர முறை என யோசிக்கிறாயா?’ ‘இல்லை. நான் உங்களுக்கு ரத்த சம்பந்தமே இல்லை. அதில் சந்தேகமும் இல்லை. நான் பழுவேட்டரையரின் மனைவி. உங்களுக்கு பாட்டி முறை.’ ‘அந்தக் கதையை சொல்லி என்னை ஏமாற்றாதே நந்தினி. உன்னை விட்டு நான் காஞ்சிக்கு சென்ற பின்னும் என்னை ஓயாமல் வதைத்துக் கொண்டே இருந்தாய். நீ மட்டும் அங்கு குதூகலமாய் பழுவேட்டரையரின் மனைவியாக இருந்து கொண்டு என்னை ஆட்டுவித்தாய்’ ‘நான் மட்டும் சுகபோகங்களில் முழுகிக் கிடந்தேன் என நம்புகிறீர்களா?’ ‘இல்லையல்லவா? அப்படியானால் கிளம்பு. எத்தனையோ தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் எனக்கு ராஜ்யம் பெரிதன்று’ ‘ராஜ்யத்தை துறந்தாலும் இந்தக் கீழ்க்குல மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் இல்லையா’ கேட்டுவிட்டு ஏளனமாக நந்தினி நகைக்க,‘என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உனக்கு பெரியதாய் போயிற்றா? அதற்காகத்தான் என்னை சிறுபிராயத்திலிருந்து விரும்பினாயா?’ என்று குரோதம் ததும்ப கரிகாலன் கேட்டான். ‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதற்காகவே பழுவேட்டரையரை மணந்தேன். வீரபாண்டியரை காப்பாற்ற முனைந்தேன்’. அந்த பெயரைக் கூறியதும் கரிகாலன் வெகுவாக கோபப்பட்டு, ‘இதைச் சொன்னால் நான் கோபப்படுவேன். உன்னை வெட்ட வந்தால் அந்த வந்தியத்தேவன் வந்து என்னை வெட்டிவிடுவான் என கணக்கு போட்டிருக்கிறாயா’ என வாளை சுழற்றிக்கொண்டு ஓடத் தொடங்க.நந்தினி அவர் காலில் விழுந்து ‘வாணர்குல வீரரைப்பற்றி தாங்கள் கூறுவது அபாண்டம். அவரைக் கொலை செய்தால், மணிமேகலை தன் உயிரையே விட்டுவிடுவாள். என் நெஞ்சில் உங்கள் திருவுருவத்தைத்தவிர வேறெதுவும் இல்லை. இது சத்தியம்’ என கதறி அழுதாள். கரிகாலன் தணிந்து அவளைத் தன்னுடன் வருமாறு கெஞ்சினான். நந்தினி மறுத்து தன்னுடைய உண்மையான கதையை கூறினாள். ‘ என் வாழ்க்கையின் விமோசனம் மரணம் ஒன்றுதான். ஈழநாட்டில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் மாதரசி என் அன்னை என்பதை என்னைப்போல பலரும் அறிந்திருந்தனர். என் அன்னையை அத்தகைய வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் என்னுடைய தந்தை… என்னுடைய தந்தை… அவர்தான்’ விக்கி அழுதுகொண்டே ஆதித்த கரிகாலனின் காதில் சொல்லி முடித்தாள். ஒரு கணம் அதைக் கேட்டு பதறித்துடித்த ஆதித்த கரிகாலன், தன் ஆவேசம் தணிந்து அதை ஒத்துக் கொண்டான். ‘ஆம் நந்தினி. இப்போது எனக்கு எல்லாம் தெரிகிறது. உன் ஆழ்மனதில் நீ எவ்வளவு துன்பபட்டிருக்க வேண்டுமெனவும் புரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடிய போது நான் அதை மறுத்தது எத்தனைக் கொடுமை என்று தெரிகிறது நந்தினி. நான் செய்ததற்கு வேறு பிராயச்சித்தமே இல்லை. நம் இருவருக்கும் நடுவில்

பொன்னியின் செல்வன் – Ps 25

பொன்னியின் செல்வன் – Ps 25

தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம். நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.அப்போது மணிமேகலை உள்ளே வர நொடியில் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு தேனொழுக அவளுடன் பேசலானாள். மணிமேகலை, பழுவேட்டரையர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதை தன் தமயனும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு நந்தினியிடம் உடனே சொல்ல வந்ததாக பதட்டத்துடன் கூறினாள். பெரிதாய் அந்த செய்திக்காக அலட்டிக் கொள்ளாத நந்தினியை அதிசயத்துடன் பார்த்த மணிமேகலையிடம், ‘ இது கந்தன் மாறனும், பார்த்திபேந்திரனும் தன்மேல் துர் எண்ணம் கொண்டுள்ளதால் என்னை அடைய அவர்கள் செய்யும் சதியாக இருக்கலாம்’, என்றாள். ‘தன் கணவருக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கை உள்ளதாகவும் தனக்கு மணிமேகலையை நினைத்து தான் பயம்’ எனவும் கூறினாள். மணிமேகலை தன் மனது வந்தியத் தேவனிடம் இருப்பதாகவும், ஆதித்த கரிகாலருக்கு மணம்முடிக்க கந்தன்மாறன் தொடர்ந்து தன்னை வற்புறுத்துவதால் அவனை வெறுப்பதாகக் கூறினாள். நந்தினி மணிமேகலையின் நிலையைக் கண்டு தான் வெகுவாக கலங்குவதாகவும் ஆதித்த கரிகாலர் மணிமேகலையை மணந்து கொள்ள ஆசைப்படுவதால் கந்தன்மாறன், அவள் தகப்பனார், அனைவரும் சேர்ந்து வந்தியத் தேவனின் உயிருக்கு ஊறு விளைவிக்க வாய்ப்பிருப்பதாகவும் விருப்பமில்லாத ஆண்மகனைக் கல்யாணம் செய்து கொண்டால் அந்த துயரத்தை மணிமேகலையால் தாங்க முடியாதெனவும் கூறி மணிமேகலையைக் குழப்பினாள். வீரனான வந்தியத் தேவனிடம் இதையெல்லாம் எடுத்துக் கூறினால், அதை மறுத்து நேருக்கு நேராய் நின்று ஆபத்தில் மாட்டிக்கொள்வான்; எனவே தன்னிடம் கூட்டி வந்தால் பழுவேட்டரையரின் நிலையை பார்த்து வருமாறு தான் கெஞ்சிக் கேட்டு சுரங்க வழியில் அவனை பாதுகாப்பாக அனுப்பிவிட்டால், நாம் இங்கே சமாளித்துக் கொள்ளலாம் என மணிமேகலையிடம் நைச்சியமாகக் கூறினாள். அதை அப்படியே நம்பிய பேதை மணிமேகலை, உடனே அவனை அழைத்து வருவதாகக் கூறி வெளியே சென்றாள். அப்போது வேட்டை மண்டபத்தின் ரகசிய அறையிலிருந்து மந்திரவாதி ரவிதாசன் கதவைத் தட்ட, நந்தினி வேட்டை மண்டபக் கதவைத் திறந்து சுரங்க அறைக்குள் நுழைந்தாள். ரவிதாஸனின் முகம் முன்னிலும் கோரமாய் இருந்தது. அவன் உடலில் காயங்கள் இருந்தன. நந்தினியின் சபதத்தை நிறைவேற்றுவது குறித்து திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு, ‘இன்றில்லையானால், மறுபடி ஆதித்த கரிகாலனை முடிப்பது இயலாததாகிவிடும்’ எச்சரித்தான். ‘யாரும் குறுக்கே வராமலிருந்தால் போதும், இன்று எடுத்த காரியம் முடிக்காமல் விடமாட்டேன்’ என்று கூறிய நந்தினி அவன் உயிரைப் பறித்தபின்பு தானும் தன்னுயிரை விட்டுவிடப் போவதாகக் கூறினாள். ரவிதாஸன், அவளை அங்கிருந்து பாதுகாப்பாக சுரங்க வழியில் அழைத்துக்கொண்டு கொல்லிமலைக்கு போகத் தயாராக இருப்பதாகவும் அதற்காகவே நான்கு பேர் சுரங்க அறையில் காத்திருப்பதாகவும் கூறினான். பரமேஸ்வரன் வெளியில் காத்திருப்பதாகவும், ஐயனார் கோவிலில் ஒரு காளாமுகனைத் துரத்திவிட்டு தேவராளன் காத்திருப்பதாகவும் கூறினான். காரியம் முடிந்ததும் தான் சிரிக்கப் போவதாகவும், அப்போது உதவிக்கு வருமாறும் நந்தினி சொல்லிவிட்டு சுரங்க அறையை விட்டு வெளியே வந்தாள். அன்று மதியத்திலிருந்து ஆதித்த கரிகாலர் ஒரு நிலையில் நில்லாமல் உன்மத்தம் பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்ததைக் கண்டு வந்தியத்தேவன் கலங்கினான். ஆதித்த கரிகாலரின் பாட்டனார் மிலாடுடையார் சைன்யத்துடன் வருகிற செய்தியை சம்புவரையர் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார். தன்னை சம்புவரையரும் பழுவேட்டரையரும் செய்கிற சதிச் செயல்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே தன் பாட்டனார் படை திரட்டி வருகிறார் எனக் கூறி அவரை நோகடித்தான். பார்த்திபேந்திரன் சமாதானம் செய்ய முன்வர, ‘கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் பழுவூர் இளைய ராணியிடம் மதிமயங்கி தன்னை இங்கே கூட்டி வந்த’தாகப் பழி கூறினார். அதை ஒப்புக்கொண்ட பார்த்திபேந்திரன், நல்ல நோக்கத்துக்காகவே நந்தினி அவனை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். அதை ஒப்புக்கொள்ளாத கரிகாலன் தன்னை பின்னாலிருந்து தாக்கி கொல்ல பார்த்திபேந்திரனும், கந்தன்மாறனும் முயன்றதாகவும் வந்தியத்தேவன் காப்பாற்றியதால் தான் பிழைத்தேன் எனவும் பேசிக்கொண்டே போனார். மேலும் ஈழத்திலிருந்து அருள்மொழிவர்மரைக் கூட்டிவரச் சென்றுவிட்டு நடுக்கடலில் மூழ்க விட்டு விட்டதாக சொல்லியபோது கந்தன் மாறன் உள்ளே வந்தான். இளவரசர் அருள்மொழி சாகவில்லை என்றும் லட்சக்கணக்கான மக்கள் புடைசூழ தஞ்சைக்கு செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவான் கரிகாலன் என்று எல்லோரும் நினைத்தபோது, மகிழ்ச்சியடைவதற்கு பதில் கோபப்பட்ட ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவனைப் பார்த்து, தான் சொல்லும்வரை நாகப்பட்டினத்திலேயே அருள்மொழிவர்மன் இருப்பார் எனக் கூறியது எப்படி மாறியது எனக் கேட்டார். இளைய பிராட்டி அப்படி சொல்லித்தான் தன்னை அனுப்பியதாகவும், நடுவில் என்ன நிகழ்ந்தது எனத் தனக்குப் புரியவில்லை என வந்தியத்தேவன் சொல்ல, ஆதித்த கரிகாலன் வெகுவாக கோபப்பட்டார். தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் எனவும், தொலைவிலேயே இருக்குமாறும், மறுநாள் அவனுக்குரிய தண்டனையை வழங்குவதாகவும் கூறி அவனை வெளியேற்றி விட்டார். பிற்பகலில் சம்புவரையரும் பார்த்திபேந்திரனும் மிலாடுடையாரை எதிர்கொண்டு அழைக்க ஆதித்த கரிகாலரின் ஆணையின் பேரில் வெளியே செல்வதை தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கரிகாலரின் கோபத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நந்தவனத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது சந்திரமதியும் மணிமேகலையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. மணிமேகலை சந்திரமதியிடம் ‘எங்கேயாவது தேடி வந்தியத்தேவனைக் கண்டுபிடித்து வரும்படி’க் கூறி அவளை அனுப்பி வைத்தாள். மணிமேகலையின் மீது கரிசனம் கொண்ட வந்தியத்தேவன் அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டிருந்தாலும், கந்தமாறன் தன்மீது வைத்துள்ள அவநம்பிக்கையையும் உத்தேசித்து அங்கு வந்ததிலிருந்து மணிமேகலையை விட்டு தள்ளியே இருந்தான். இப்போது மணிமேகலை தன்னைத் தேடுவதை அறிந்து கொண்டவன், அவளுக்கு தன்னுடைய உதவி தேவைப்படலாம் எனத் தோன்ற தனியே அமர்ந்து கொண்டிருந்த மணிமேகலையை நெருங்கி குரல் கொடுத்தான். தனிமையில் அமர்ந்திருந்த மணிமேகலை வந்தியத்தேவனின் குரலைக் கேட்ட தும் விதிர்த்து குளத்தில் விழப் போக, அவன் தாங்கிப் பிடித்தான். அதற்கு வெட்கப்பட்டவளாய், தன்னை பொருட்டாக மதிக்காததில் கோபமுற்று நன்றிகெட்டவர் என்று மணிமேகலை குற்றம் சாட்டினாள். தன் நிலையை விளக்கிய வந்தியத்தேவன் கந்தன்மாறனின் கோபத்துக்காகவே ஒதுங்கியதாக தெரிவிக்க, ‘அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கோட்டையை விட்டு வெளியேறுமாறும்’ மணிமேகலை வேண்டினாள். வந்தியத்தேவன் மறுக்க, ‘நந்தினி கூறியது சரிதான்’ என மணிமேகலை கூறவும், அவன் பதட்டமுற்று நடந்ததைக் கேட்க, அனைத்தையும் சொல்லி முடித்தாள்.நந்தினி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் அவளின் செயல்கள் சந்தேகத்துக்கு இடமாய் இருப்பதாகவும், தான் அறையிலிருந்து வெளியேறிய பின் வேட்டை மண்டபத்திலிருந்து குரல்கள் கேட்டதாகவும் மணிமேகலை கூறினாள். நந்தினி அறையிலிருந்து வேட்டை மண்டபத்துக்கு போகும் வழி ஒன்றும், வெளியிலிருந்து வரும் வழி ஒன்றும் அல்லாமல் அரண்மனைக்குள் இருந்து போகிற மூன்றாவது வழி இருக்கிறதா என வந்தியத் தேவன் கேட்க மணிமேகலை இருப்பதாகக் கூறினாள். அதை தனக்கு காட்டித் தருமாறு வந்தியத்தேவன் மணிமேகலையிடம் வேண்டினான். தன்னைக் கூடவே அழைத்துச் செல்லும் நிபந்தனையை விதித்து ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு அந்த வழியில் மணிமேகலை அவனைக் கூட்டிச் சென்றாள். போகும் வழியில் வந்தியத்தேவனின் அருகாமையில் கிளர்ச்சியுற்று மகிழ்ந்து, அவனுடன் குறும்பாக பேசியபடியே மணிமேகலை வர அவன் உள்ளமோ என்னமோ நடக்கப் போகிறது என்ற அபாய உள்ளுணர்ச்சியால் பயந்திருந்தது. அப்போது குறுகிய பாதையில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு விளக்கைத் தவறவிட்டனர். அப்போது இடும்பன்காரி விளக்குடன் எதிரே வந்து இவர்களைக் கண்டு திடுக்கிட்டது போல நடித்தான். மணிமேகலை சுரங்கப் பாதையை சரிபார்க்க வந்ததாகவும், வேட்டை மண்டபத்தில் வேல் ஒன்றை எடுக்கப் போவதாகவும் கூறி விளக்கை வாங்கிக் கொண்டு இடும்பன்காரியை அனுப்பி வைத்தாள். இருவரும் வேட்டை மண்டபத்தை அடைந்தபொழுது முதலில் புலப்படவில்லையாயினும் இருட்டு கண்களுக்கு பழகிய பின் அங்கிருந்த விலங்குகளின் பின் மனிதர்கள் மறைந்து நின்று கொண்டிருந்தது தெரிந்தது. அப்போது திடீரென ரவிதாஸனின் ஆட்கள் வந்தியத்தேவனை பின்னிருந்து இழுத்து அங்கிருந்த வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், மணிமேகலையையும் கலைமானின் கொம்புகளோடு கட்டிவைத்தார்கள். வந்தியத்தேவன் அவளை அவிழ்த்து விடுமாறும், நந்தினியின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்ததாகவும் கூறினான். ரவிதாஸன் இந்த அறையிலும் வெளியேயும் எது நடந்தாலும் அமைதியாக இருப்பான் எனில் அவனுடைய உயிருக்கு ஏதும் தீங்கு செய்ய மாட்டோம் என்றும் நந்தினிதான் பாண்டிமாதேவி, தான் பாண்டிய முதன் மந்திரி என்றும் சொல்லிக்கொண்டு போனான். இந்த சந்தர்ப்பத்தில் மணிமேகலையை யாரும் கவனிக்கவில்லை ஆதலால் அவள் கையிலிருந்த கத்தியால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு விடுவித்துக் கொண்டவள், ரவிதாஸன் துவாரத்தை திருகி அதில் வெளியே பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வந்தியத்தேவனின் கட்டுகளையும் விடுவித்தாள். சப்தம் கேட்டு அனைவரும் அவன்மேல் பாய, வந்தியத்தேவன் தன் வலிமையைக் காட்ட, கதவைத் திறந்து கொண்டு நந்தினி வேட்டை மண்டபத்திற்குள் வந்தாள். அனைவரையும் திட்டியவள், மணிமேகலையை அவள்தான் வந்தியத்தேவனை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அறையினுள் கூட்டிச் சென்றாள். உடனடியாக வந்தியத்தேவனை தப்பிச் செல்லும்படி நந்தினி கேட்க, அவளின் வாளைக் கொடுத்து விட்டால் தான் உடனே அங்கிருந்து போய்விடுவதாக அவன் மறுமொழி உரைத்தான். நந்தினி தடுமாற, ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் எனவும், சகோதரஹத்தி ஏற்படாதவாறு தடுக்கவே தான் வாளைக் கேட்பதாகவும் வந்தியத்தேவன் இறைஞ்சினான். இதை ஆதித்த கரிகாலனிடமே சொல்லித் தடுக்கலாமே என நந்தினி ஏளனமாய் வினவ, தான் தடை செய்தால் இன்னமும் அதிகமாக கோபப் படுவார் என்பதால் தான் நந்தினியிடம் இறைஞ்சுவதாக வந்தியத்தேவன் கூறினான். மேலும் ஈழநாட்டில் அவளின் தாயாரை தான் சந்தித்ததையும் அவர் சோழ நாட்டின் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பதையும், பொன்னியின் செல்வனை எல்லா ஆபத்திலிருந்தும் காத்து வருவதையும் குறிப்பிட்டான். இப்போது ஆதித்த கரிகாலனுக்கு நந்தினியால் தீங்கு நேருமானால் அந்த மாதரசி நந்தினியை எந்நாளும் மன்னிக்க மாட்டார் எனவும் எச்சரிக்கை செய்தான். நந்தினி தொய்வுற்று அமர, அரண்மனையில் தன் அன்னை போல் வேடமிட்டு நந்தினி சுந்தர சோழரை பயமுறுத்தியதையும், அனைத்தும் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை, வாளைக் கொடுத்துவிட்டால் இனியும் யாரிடமும் கூற மாட்டேன் எனவும், வந்தியத்தேவன் சொல்லச் சொல்ல நந்தினி இளகினாள். வாளை எடுத்து அவன் கையில் கொடுக்க

பொன்னியின்செல்வன் – 24

பொன்னியின்செல்வன் – 24

இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். பூங்குழலி களைப்பினால் வாடி நின்றிருந்ததைக் கண்டு ‘சமுத்திரகுமாரி’ என அவளை விளித்து, அதுவரை நடந்ததையெல்லாம் இருவரின் வாயிலாகவும் அறிந்து கொண்டார். யானையினாலும், அங்குசத்தினாலும் பாதிப்பு ஏற்படுமென பழுவேட்டரையர் அறிந்திருந்ததைக் கேட்டு ஆச்சர்யப் பட்டவர், மந்தாகினி தனியே ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்றறிந்ததும் பதைத்துப் போனார். பூங்குழலி, ‘தன் அத்தை அவருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கடைசியாக ஒருமுறை பொன்னியின் செல்வனைக் காண விரும்புவதாக’ தகவல் அனுப்பியிருப்பதைக் கேட்டவுடன் ஒரு கணமும் தாமதிக்காமல் தஞ்சை சென்றாக வேண்டும் என்று கூறினார். அங்கு தஞ்சையில் காலையில் வழக்கமாக நிகழ்வது போல கோட்டை திறந்ததும் வேளக்காரப் படையினர் உள்ளே சென்றனர். ஆனால் உடனே எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டதைக் கண்டு மக்கள் அனைவரும் திகைத்துப் போயினர். பொதுவாக வேறு ஏதாவது படையெடுப்பின்போதோ அவசர நிலையின் போதோதான் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் அச்சமும் பதற்றமும் அடைந்தனர். அப்போது கோட்டையின் வடபுறம் தவிர மூன்று புறங்களிலும் இருந்து சேனைகள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பயந்தனர். அருகில் நெருங்கிப் பார்த்தவர்கள் அதன் முகப்பில் சோழச் சின்னமான புலிக்கொடியைப் பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார்கள். சோழர்களின் தென்திசை சேனாதிபதி பூதி விக்கிரம கேசரிதான் படைகளுக்கு தலைமையேற்று வந்து கொண்டிருந்ததும் மக்களுக்கு தெரிந்து போயிற்று. விக்கிரம கேசரி அங்கு வந்திருப்பது தங்கள் பிரியத்துக்குரிய இளவரசர் அருள்மொழியை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே எனப் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியுடனேயே வரவேற்றனர்.கூடாரம் அடிக்கப் பட்ட பிறகு விக்கிரம கேசரி தலைமையில் சிற்றரசர்களின் கூட்டம் கூடிற்று. பழுவேட்டரையர்கள் சக்ரவர்த்தியை வெகுநாட்களாக சிறைவைத்து இருப்பதாகவும், அவர்களின் சூழ்ச்சியால் சக்ரவர்த்தி மனம் மாறி தன் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு போரே அறியாத மதுராந்தகனுக்கு பட்டம் அளிக்க விரும்புகிறார் எனவும் சிலர் கூறினர். சக்ரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை என வருத்தப்பட்ட பூதி விக்கிரம கேசரி, இலங்கையில் இளவரசரைக் கொல்ல நடந்த சதிகள் பற்றியும் இங்கு வந்த பிறகு திருவாரூரில் யானைக்கு மதம் பிடித்ததையும் இளவரசர் காணாமல் போனதையும் சொல்லச் குழுவினர் அனைவரும் கடுங்கோபம் அடைந்தனர். பழுவேட்டரையர்களை எதிர்த்து கோட்டைக்கதவை திறந்து சக்ரவர்த்தியை விடுவிக்க வேண்டுமென அனைவரும் ஒரே குரலில் முழங்கினர். அப்போது ஒரு காவலாளி வந்து ரகசியமாக அவரின் காதில் ஏதோ சொல்ல, அவர் உடனே எழுந்து தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலுக்கு குதிரையேறிச் சென்றார். அங்கு அம்பாரியுடன் கூடிய யானை நின்றிருந்தது. அம்பாரிக்குள் இரண்டு பெண்கள் இருப்பதாகப் பட்டது. யானைப்பாகன் தனது கொம்பை எடுத்து ஊதிவிட்டு, ‘ கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடம் இருந்து சக்ரவர்த்திக்கு செய்தி கொண்டு வந்திருப்பதாகவும், வானதிதேவிக்கும் அவர் தோழி பூங்குழலி அம்மைக்கும் கோட்டைக் கதவை திறந்து விடும்படியும்’ முழங்கவும், பூதி விக்கிரம கேசரி ஆச்சரியத்துடன் வானதியைப் பார்த்தார். யானையிலிருந்த வானதி, பெரியப்பா.. எனப் பேசத்தொடங்க. பூதி விக்கிரம கேசரி, ‘இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் குந்தவை உன்னிடமா செய்தி அனுப்பியிருக்கிறார், அப்படி என்ன சேதி’ என வினவ, ‘அருள்மொழிவர்மரைப் பற்றி செய்தி கொண்டு வந்திருப்பதாக’ வானதி கூறினாள்.‘இளவரசர் எங்கே இருக்கிறார்’ என்று அவர் கேட்க, ‘அதை மட்டும் சொல்ல முடியாது’ என உறுதியான குரலில் மறுத்து விட்டு யானைப்பாகனை முழங்குமாறு மேலும் கட்டளையிட்டாள். இதே சமயத்தில் கோட்டையின் உள்ளே இருந்த சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டர் வெகுவாக கலங்கியிருந்தார். பூதி விக்கிரம கேசரி படையெடுத்து வந்திருந்தது எரிச்சலைக் கிளப்பியிருந்ததுடன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் இங்கு வந்து சேராமலிருந்தது இன்னும் கவலையைக் கிளப்பியிருந்தது. அநிருத்தருடன் சென்று கொடும்பாளூர் வேளார் படையெடுத்து வந்த செய்தியை சக்ரவர்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்துச் சென்றால், அநிருத்தர் சக்ரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இந்த சமயத்தில் அதைச் சொல்ல வேண்டாமெனவும் அறிவுரை கூறினார். ‘இது போன்ற மனம் வருத்தும் செய்திகளால் அரசரின் உடல்நிலை மேலும் சீர்கெட்டால் அதன் பழியும் சின்னப் பழுவேட்டரையரையே சேரும்’ என்று அநிருத்தர் கூற, அநிருத்தரிடமே அரசரிடம் செய்தி சொல்லும் பொறுப்பை விட்டுவிட்டு கோட்டைப் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைகளைக் கவனித்தார். அப்போது கொடும்பாளூர் இளவரசி கோட்டைக் கதவுக்கு அப்பால் இருப்பதாக சேதி வரவே அவளை அனுமதிக்கவே கூடாது என்று நினைத்தபடி கோட்டைக் கதவை நெருங்கியவர், ஒரு சிறு பெண்ணை அனுமதிக்காமல் தான் பயப்படுவதா என்று யோசித்துக் கொண்டே, கோட்டை மதிலின் மீதிருந்து அவர்களை பார்வையிட்டார்.அப்போது வானதியும் அவளின் பெரிய தந்தையும் வாக்குவாதம் செய்வதைக் கண்டார். யானைப்பாகன், ‘பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்ரவர்த்திக்கும் செய்தி கொண்டு வந்திருப்பதாகவும்’ கொம்பு ஊத, தன் அண்ணன் இந்தப் பெண்ணிடமா செய்தி அனுப்புவார் என்ற சந்தேகத்துடன் கதவைத் திறந்து விட ஆணையிட்டார். உள்ளே இரு பெண்களும், யானைப்பாகனுமாக உள்நுழைந்ததும் வானதி தன் வணக்கத்தை தெரிவித்து பெரிய பழுவேட்டரையர், பாண்டிய ஆபத்துதவிகளிடமிருந்து சக்ரவர்த்திக்கு ஆபத்து ஏற்படப் போகிறது, அசட்டையாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தி அனுப்பியிருப்பதாக கூறினாள். ஆனால், ‘அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், அதை உங்களிடம் தமையன் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை’ எனச் சின்னப் பழுவேட்டரையர் அலட்சியமாய் கூறினார். ‘அரண்மனைக்கு வந்து போகும் மந்திரவாதியைக் குறித்து நீங்கள் கூறியதை தாம் அலட்சியம் செய்ததை மன்னித்து கவனமாக இருக்கும்படி’ பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வானதி சொல்லியதும் அவர் திகைத்தார். மேலும் இங்கு வரப்போகும் ஆபத்தைச் சொல்லவே தன்னை இளைய பிராட்டி அனுப்பியதாகவும், பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற கடம்பூர் விரைந்துள்ளதாகவும் கூற சின்னப் பழுவேட்டரையர் வானதியை முழுதாய் நம்பி உள்ளே அனுமதித்தார். கோட்டைக் காவலை பலப்படுத்த சில உத்தரவுகளை இட்டு விட்டு திரும்புகையில் இரண்டு பெண்களுடன் யானைப்பாகனும் அரண்மனைக்கு உள்ளே சென்றதைக் கண்டு பதைத்த சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை அவன் பாண்டிய ஆபத்துதவியாக இருக்க கூடுமோ எனப் பாய்ந்து சென்று அவன் கரத்தை இறுக்கமாகப் பிடித்து ‘ யாரையடா ஏமாற்றப் பார்த்தாய்?’ என கர்ஜித்தார். முன்னே சென்ற இரண்டு பெண்களும் சொல்வதறியாது திகைக்க, மாட்டிக் கொண்ட இளவரசர் வெண்ணெய் திருடிய கள்வனைப் போல் புன்னகைத்தார். .இளவரசரை அடையாளம் கண்டு கொண்ட காலாந்தக கண்டர் நடுக்கமடைந்து நாக்குழற மன்னிப்பு கேட்க, அருள்மொழிவர்மர் சிரித்துக்கொண்டே தங்கள் கட்டளைக்கு ஒப்புக் கொடுக்கவே வந்ததாக பணிவுடன் கூறினார். காலாந்தக கண்டருக்கு இளவரசர் அருள்மொழி மீது எந்த தீய எண்ணமும் என்றைக்கும் இருந்ததில்லை. அவரைப்போய் அடா என்று பேசியதுடன், தகுந்தமுறையில் வரவேற்பு கொடுக்க முடியவில்லை என்பதும் அவரை நிலைகுலையச் செய்ய, வருந்தி மன்னிப்புக் கேட்டார், அத்தகைய வரவேற்பை தந்தை இந்நிலையில் இருக்கும்போது தவிர்ப்பதற்காகவே இம்முறையில் உள்நுழைந்ததாக இளவரசர் சின்னப் பழுவேட்டரையரை அமைதிப் படுத்தினார். அந்த கால இடைவெளியிலேயே இளவரசரைக் கண்ணுற்ற படையினர் மனம் மகிழ்ந்து சிறு கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கோஷம் வெளியில் கேட்காதவாறு அமைதிப் படுத்திய சின்னப் பழுவேட்டரையர் இளவரசரை உடனே உள்ளேயும் அனுப்பி வைத்தார். பூங்குழலி கவலையுடன் அவர்களுடன் செல்லாமல் தனித்திருக்கவும் அவளை விசாரித்தவர், பாதாளச்சிறை பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து பற்றியும் அவள் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்தார். தான் நேரிலேயே காட்டுவதாக அவள் சொல்ல இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு விரைந்தனர். காலையில் தன் அத்தை அந்த சுரங்கத்தில் ஒளிந்திருந்தவனை அடையாளம் காட்டியதையும், தன் அந்திமக் காலத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததும் அவளுக்கு நினைவில் வந்து அச்சுறுத்தியது. அப்போது ‘வீல்’ என்ற அத்தையின் சத்தம் கேட்டு சின்னப் பழுவேட்டரையரைப் பற்றிப் பொருட்படுத்தாமல், பூங்குழலி சக்ரவர்த்தியின் அறையை நோக்கி பாய்ந்தோடினாள். அங்கு சக்ரவர்த்தி படுத்திருந்த அறையில் அனைவரும் நின்றிருக்க அவருக்குமுன் மந்தாகினி தேவி சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள். ஆபத்தை உணர்ந்து கொண்ட பூங்குழலி பாய்ந்து போகுமுன்னர் ஒரு வேல் மேலிருந்து மந்தாகினி தேவியின் மீது பாய்ந்தது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஏதோ ஒரு பொருள் மேலிருந்து வீழ அங்கிருந்த தீபம் அணைந்து விட்டது. இருளில் யாரையும் பார்க்கமுடியவில்லை. அதற்குள் யாரோ மோதிக் கொள்ளும் சத்தமும், மகாராணியின் ‘ஓ’ என்ற ஓலமும் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் விளக்கைக் கொண்டு வரும்படி கட்டளையிட விளக்கு வந்து சேர்ந்திருந்த பொழுது மந்தாகினி தேவி, உடலில் வேல் தாங்கி தரையில் வீழ்ந்து கிடந்தார்., இவ்வளவு காலமும் கால்கள் சக்தியற்று படுக்கையில் கிடந்த சக்ரவர்த்தி தானே தவழ்ந்து வந்து அவரின் அருகில் அமர்ந்திருந்தார். மந்தாகினி தேவி சக்ர்வர்த்தியைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் தலையை சக்ரவர்த்தியின் மடிமீது இளவரசர் அருள்மொழி தூக்கி வைத்தார். பூங்குழலி ‘அத்தை அத்தை’ என கதறத் தொடங்க, இளவரசர், ‘ பல காலம் பிரிந்திருந்தவர் சேர்ந்திருக்கின்றனர் அவர்கள் இருவரும் தனியே இருக்கட்டுமென ’ அவளை சமாதானப் படுத்தினார். அத்தையைத் தவிர தனக்கு யாருமேயில்லை என பூங்குழலி கதறினாள்.அப்போது இளவரசர் தனக்கு தாயை விட மேலானவளான போதும், தந்தையுடன் தாய் சேர்ந்து இருப்பதைக் கண்டு தான் ஒதுங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், பூங்குழலியும் அவள் அத்தையும் சோழகுலத்துக்கு எப்பேற்பட்ட நன்மை செய்திருக்கிறார்கள் என விளக்கினார். மேலிருந்தவன் எறிந்த வேலை தன் மார்பில் வாங்கிக்கொண்ட மந்தாகினி தேவி, கீழே விழ, அவரைக் காப்பாற்ற மூன்று வருடமாக படுக்கையிலேயே இருந்த சக்ரவர்த்தி அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டமையால் வேலெறிந்த கொலையாளி, விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்திருந்த சக்ரவர்த்தியை மீண்டும் இருளில் குத்த முயன்றதில் கத்தி தலையணையில் சொருகி விட்டிருந்தது. அதைத் தடுக்க முயன்ற மகாராணி கத்தியதை அனைவரும் கேட்டிருந்தனர். இரண்டு முறையும் சக்ரவர்த்தியைக் காப்பாற்றியது மந்தாகினி தேவிதான். மேலும் பூங்குழலியின் உதவியினால் கோட்டைக்கு உள்ளே வந்ததாலும் இந்த நேரத்தில் தந்தையின் அருகே தான் இருந்தததால் தான் சின்னப் பழுவேட்டரையரின் மேல் எந்தப் பழியும் வீழாமல் தப்பிக்க முடிந்தது என இளவரசர் எடுத்துக் கூறினார். சின்னப் பழுவேட்டரையர் தன் கோட்டைக் காவல் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார். விழித்துக் கொண்ட சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலியைப் பாராட்டுவதாக நினைத்து தக்க

பொன்னியின் செல்வன் – 23

பொன்னியின் செல்வன் – 23

வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார்.  பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து  விடுவித்துக் கொண்டவர், வெகுவாக அடிப்பட்டிருந்த போதும் தான் செய்ய வேண்டிய செயல்களை எண்ணி மனதிடத்துடன் எழுந்து நின்றார். அப்போது வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த தூமகேது பிரகாசித்து வானிலிருந்து பெரும் வெளிச்சத்துடன் ஒளிர்ந்து வீழ்ந்தது. துர்ச்சகுனமாக அதைக் கருதியவர்,  முதலில் நாகைக்கும், தஞ்சைக்கும் செய்தியை அனுப்பிவிட்டு ஆதித்த கரிகாலனை காப்பாற்ற தானே முயல வேண்டுமென நினைத்த அந்த வீரக்கிழவர் தன் காயங்களை பொருட்படுத்தாது வேகமாக விரைந்தார். அந்த இடம் குடந்தைக்கருகில் இருக்கிறதென்பதையும் அங்கே பக்கத்தில்தான் குடந்தை ஜோதிடர் வீடு இருக்கிறதென்பதை யோசித்து அவர் மூலம் செய்தி அனுப்பலாம் என்று குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு வேகமாக விரைந்தார். அப்போது வீட்டின் வாசலில் ரதங்கள் நிற்பதையும், வானதி, குந்தவையின் பேச்சு சப்தம் கேட்பதையும் உணர்ந்தவர் சீடனின் எச்சரிக்கையை தன் ஹூங்காரம் மூலம் அலட்சியம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார். குந்தவை, மந்தாகினி காணாமல் போனதையும், தூமகேது மறைந்ததையும் வைத்து வருந்தி நாகையிலிருந்து வந்துகொண்டிருக்கும் அருள்மொழியை பழையாறையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாலையிலேயே புறப்பட்டவள், வழியில் குடந்தை ஜோதிடரிடம் ஏதாவது கேட்டுச் செல்லலாமென வந்திருந்தாள். பழுவேட்டரையரின் ஹூங்காரத்தை அடையாளம் கண்டு கொண்டு ஜோதிடரிடம் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்த திரைச்சீலையின் பின் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். ஜோதிடரிடம் பதட்டமாக பேசிய பழுவேட்டரையர், அவரது சீடனிடம் முத்திரை மோதிரத்தை தருவதாகவும், அதை எடுத்துக் கொண்டு தஞ்சை எடுத்துச் சென்று சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிபொக்கிஷ நிலவறையில் காத்திருக்கும் யமனிடமிருந்து சக்ரவர்த்தியை காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அப்போது உள்ளிருந்து வெளிப்பட்ட குந்தவை மறைந்திருந்து அவரது பேச்சை கேட்க நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க, குந்தவையிடம் பழுவேட்டரையரும் நந்தினியின் போதனைகளால் இத்தனை நாள் தான் நடந்து கொண்டற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனே தஞ்சைக்கு திரும்பி சக்ரவர்த்தியை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் தான் கடம்பூர் திரும்பி தன் கையாலேயே நந்தினிக்கு முடிவு கட்டுவதாக சூளுரைக்க, குந்தவை அவரின் தாள் பணிந்து நந்தினியை அவர் எதுவும் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அவள் தங்களுடைய சகோதரி என்று வேண்டினாள். திகைத்து நின்ற ப்ழுவேட்டரையருக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து போக ஆதித்த கரிகாலனுக்கு இது தெரியுமா எனக் கேட்க, வந்தியத்தேவன் மூலமாக சொல்லி அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள். ஆதித்த கரிகாலன் அதை நம்பியிருக்கமாட்டான் எனக் கூறிய பழுவேட்டரையர் தான் இளவரசி வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு கடம்பூர் சென்று கரிகாலனை காப்பாற்றுவதாகவும், பொன்னியின் செல்வனையும் சக்ரவர்த்தியையும் காப்பது குந்தவையின் பொறுப்பு என்று கூறி விடை பெற்றார். சில நிமிடத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து கொடும்பாளூர் படைகள் தஞ்சையை முற்றுகையிட நெருங்கி கொண்டிருப்பதாக கூறினான். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்தைக் கூட்டிக் கொண்டு பழுவேட்டரையர்கள் சின்ன இளவரசரையும், சக்ரவர்த்தியை எங்கேயோ சிறைவைத்திருப்பதாக சந்தேகப் பட்டு கோட்டைப்பொறுப்பையும், தனாதிகாரி பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நிபந்தனை வகுத்துள்ளதாக கூறினான். மேலும் அருள்மொழி வர்மருக்கு வானதியை திருமணம் செய்து, அடுத்த பட்டத்துக்கு உரியவராக அவருக்கே  பட்டாபிஷேகம் நடத்துமாறும் இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்று நாட்களுக்குள் தரைமட்டமாக்கிவிடுவேன் எனவும் செய்தி அனுப்பியிருப்பதாக கூறினான். ஆழ்வார்க்கடியானின் செய்தியைக் கண்டு குந்தவை சகோதர யுத்தம் மூண்டு விடப் போகிறதே எனக் கலங்க, வானதி தன் பெயரை இந்த கலகத்தில் இழுத்து வைத்து தன் பெரிய தகப்பனார் பேசுவதில் விருப்பமில்லை என புலம்பினாள். நேரே சென்றாவது தன் பெரிய தகப்பனாரிடம் இதை வலியுறுத்தப் போவதாக வானதி சொல்ல, அப்போது உள்ளே நுழைந்த பூங்குழலி இடக்காக, சோழ சிங்காதனத்தில் பட்டத்தரசியாக அமர யாருக்குதான் ஆசை இல்லை என்பது போல் பேச வானதி சினந்தாள். இருவரையும் அமைதி படுத்திய குந்தவை, பூங்குழலி அங்கு எப்படி வந்தாள் என விசாரிக்க, தன் அத்தை பொக்கிஷ நிலவறையில் ஒளிந்து கொண்டு சக்கரவர்த்தியைக் கொல்ல ஆயுதத்துடன் மறைந்து இருக்கும் கொலைகாரன் ஒருவனைப் பின்தொடர்வதாகவும், அவனிடமிருந்து சக்கரவர்த்தியை காப்பாற்ற முயல்வதாகவும், பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து இருப்பதாக அவர் உணர்ந்து அதனால் பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற தன்னை அனுப்பியதாகவும் கூறினாள். மேலும் மற்றவர்கள் போல் தனக்கு அரண்மனை வாழ்வு பிடிப்பதில்லை எனவும் வானதியை இடித்துரைத்தவாறே கூறினாள். வானதி மேலும் சினந்து ஒருவேளை பொன்னியின் செல்வரை மணக்கும் நற்பேறு தனக்குக் கிடைத்தால் கூட சிங்காதனத்தில் தான் உட்காரப் போவதில்லை என ஆவேசமாக சபதமிட்டாள். அனைவரும் திகைக்க, பூங்குழலி, சிரிப்பும் அழுகையுமாய் பாட வேறு தொடங்கினாள். பைத்தியங்கள் போல் இரு பெண்களும் நடந்து கொள்வதைக் கண்ட குந்தவை, ஆழ்வார்க்கடியானை வினவ, அவன் இளவரசியின் ரதத்தில் இணைந்திருந்த படகைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்ததாகவும், பழுவேட்டரையர் அதையும் எடுத்துச் சென்றுவிட்டதால் என்ன செய்வதென புரியவில்லை எனவும் கூறினான். ஜோதிடரின் சீடனை வேறொரு படகைச் சம்பாதித்துக் கொண்டுவர அனுப்பியிருப்பதாகவும், அதில் குந்தவையும் வானதியும் அரண்மனைக்குச் சென்று சக்ரவர்த்தியை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு கூறினான். வானதி அதை அடியோடு மறுத்து தான் பொன்னியின் செல்வனிடம் செல்லப் போவதாக கூறினாள். அதற்குள் அரசலாறு உடைந்து வெள்ளம் வருவதாக ஜோசியர் கூறி படபடப்புடன் அம்மன் கோவிலின் கூரை மீது ஏறிக் கொள்ளச் சொல்ல அனைவரும் ஓடினர். பூங்குழலி விரைவாக மேலே ஏறி குந்தவைக்கு கைகொடுத்து ஏற்றிவிட்டாள். பின்னால் வந்த வானதி பூங்குழலியின் கையை பற்ற விரும்பாமல் தண்ணீருக்குள் வீழ்ந்தாள். நீரின் போக்கில் சென்று ஜோதிடர் குடிசையின் கூரை மீது ஏறிக்கொள்ள அனைவரும் நிம்மதியுற்றனர். ஆனால் அவ்வீட்டின் சுவர்கள் வெள்ளத்தினால் கரைய கூரை மட்டும் மிதந்து வெள்ளத்தினூடே சென்றது. வானதி அங்கிருந்து ‘ தான் மிதந்து பொன்னியின் செல்வரை சந்திக்கப் போவதாக பூங்குழலிக்கு கேட்குமாறு கத்திக் கொண்டே மிதந்து போய்க் கொண்டிருந்தாள். குந்தவை வானதியைக் குறித்து பெரிதும் கலங்க, சீடனின் படகு மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி இருந்த கூரையோ  வெகுவாக அவர்களை விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தது. படகு இவர்கள் அருகே வந்து ஏற்றிக்கொண்டு வானதியை நோக்கி செல்வதற்குள் வானதி வெகுதூரம் அடித்துச் செல்லப்படுவாள். இதையெல்லாம் நினைத்து குந்தவை கவலைப்பட்டாள். பூங்குழலி தன் அஜாக்கிரதையால்தான் வானதி கீழே விழ நேர்ந்தது என்றும், தான் எப்படியாவது அவரைக் காப்பாற்றிக் கூட்டி வருவதாகவும் குந்தவையிடம் உறுதி கூறிவிட்டு வெள்ளத்தில் குதித்து படகை நோக்கி வேகமாக நீந்திச் சென்றாள். இந்த வெள்ளம் இப்படியிருக்க மக்கள் வெள்ளம் சூழ, பொன்னியின் செல்வர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து மக்களால் தன் பிரயாணம் ஆங்காங்கே தடை படுவதும், நதிகளில் மழைவெள்ளம் அதிகரித்து வருவதால் திருவாரூரிலேயே தங்கிச் செல்லுமாறு ஊர்மக்கள் சொன்ன அறிவுரைகளும் அவரை வெகுவாக சங்கடப் படுத்தின. யானை மூலமாகத் தான் தனியே கிளம்புவதுதான் உசிதம் என முடிவு கட்டி யானைப்பாகனை அழைத்துவரச் சொன்னபோது, முருகைய்யன் இளவரசரைப் பார்ப்பதற்கு அழுதுகொண்டே வந்து சேர்ந்தான். தான் இங்கு வந்த பொழுது, அவன் மனைவி ராக்கம்மாள் யானைப்பாகனை மயானத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பின் தொடர்ந்து போனபொழுது, மந்திரவாதி போன்ற ஒருவன், ‘நாளைக் காலை இளவரசர் ஏறும் யானைக்கும் மதம் பிடிக்கப் போகிறது. நீ தப்பி ஓடி விடு’ என்று யானைப்பாகனிடம் கூறியதைப் பார்த்ததாக வந்து கூறினான். இளவரசர் அன்றுவரை நடந்ததை நினைத்துப் பார்த்த பின் தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அன்றிரவு உறங்கினார். அதிகாலையிலேயெ எழுந்து பிரயாணத்துக்கு தயாராக, யானைப்பாகனை  பலமுறை அழைத்தபின் முகமெல்லாம் மாறிப்போனவனாக யானைப்பாகன் வந்து சேர்ந்தான். அவன் மேலே ஏறி உட்கார முயல யானை அவனை துதிக்கையால் தூக்கி எறிந்தது. ஜனங்கள் நாலாபக்கமும் யானைக்கு மதம் பிடித்து விட்டது என பயந்து சிதறி ஓடினர். அந்த கலவரத்தை சரியாகப் பயன் படுத்திக் கொண்ட இளவரசர் சடுதியில் முருகைய்யன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு யானையின் மேலேறி அம்பாரியை தள்ளிவிட்டு விட்டு அதன் காதில் ஆணையிட யானை வெகுவேகமாக அங்கிருந்து ஓட தொடங்கியது. யானைக்கு மதம் பிடிக்கவில்லை, வந்த போலி யானைப்பாகனின் தீய நோக்கத்தால்தான் யானை அவனை தூக்கி எறிந்தது என்பதைப் புரிந்து கொண்ட இளவரசர் சரியாக அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். இளவரசர் சொன்னதைப் புரிந்து கொண்ட முருகைய்யன் தூக்கிவீசப்பட்ட யானைப்பாகனிடம் போக அவன் தான் யானைப்பாகனில்லை என்று நடித்தான். நேற்றிரவு மந்திரவாதியாக நடித்தது நீதானே என்று கேட்கவும் போலி யானைப்பாகனாக வந்திருந்த பாண்டிய ஆபத்துதவி ரேவதாஸ கிரமவித்தன் அங்கிருந்து ஓடிவிட்டான். வீசியெறிந்த அங்குசத்தை எடுத்துக்கொண்டு ஊரில் ஒரு வீட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த உண்மையான யானைப்பாகனை விடுவித்தான். மயானத்தில் யானைக்கு மதம்பிடிக்காமலிருக்க சில மருந்துகளைத் தருவதாகக் கூறி தன்னை இந்த வீட்டில் கட்டிவைத்து விட்டதாக யானைப்பாகன் அழுதான். இளவரசரின் நலம் குறித்து விசாரித்த அவனை ஊர்மக்களிடம் முருகைய்யன் கூட்டிச் செல்ல, அனைவரும் உண்மை அறிந்து தஞ்சைச் சாலையில் சிலரும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு சிலரும் ஆவேசத்துடன் புறப்பட்டனர். நதி வெள்ளத்தில் வானதி சென்று கொண்டிருந்த கூரை ஆங்காங்கே வேகமாகவும் மெதுவாகவும் சென்றது. பயமாக இருந்த போதும் இளவரசரிடம் தன்னைக் கொண்டுபோகிறது என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு நதியின் கரை தெரியவும், அது திருவல்லம் தலம் என்பதும் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி அங்கு திருப்பணி செய்திருந்ததும் அவள் ஞாபகத்துக்கு வந்தன. அங்கு முன்பு ஒருநாள் தங்கியிருந்த பொழுது மரத்திலிருந்த பறவைக்குஞ்சுகள் கீழே விழுந்து விடாமல் தான் பதட்டமுற்றதும், அவற்றைக் காப்பாற்ற பெயர் தெரியாத ஒரு இளைஞன் யானையின் மீது அமர்ந்து வந்து காப்பாற்றியதும் நினைவுக்கு வந்தது. யாரென்றே தெரியாமல் அந்த இளைஞனை ‘யானைப்பாகா’ என்று மிரட்டியதும் பின் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் கிளம்புகையில் அந்த யானைப்பாகன்தான் அவர் என்று தெரிந்தவுடன் தான் மயங்கிவிழுந்ததையும் எண்ணிக் கொண்டு சிலிர்ப்படைந்தாள். தன்னை பட்டத்தரசியாக்கும் பொருட்டு தன் பெரிய தகப்பனார் இளவரசரின் கழுத்தில் தன்னைக் கட்டுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஒரு யானைப்பாகனாக அவர் இருந்தாலும் அவரையே 

பொன்னியின் செல்வன் – 22

பொன்னியின் செல்வன் – 22

நாகப்பட்டினத்து சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஜூரம் குணமாகிவிட்ட பொழுதும் அங்கு மறைந்திருப்பது அசெளகர்யமாய் இருந்தது. எனவே அங்கிருந்த தலைமை பிஷூவிடம், புத்த சமயம் பற்றியும் அவர் சென்று வந்த நாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இளவரசரை புத்த பிட்ஷூகள் சேர்ந்து விஹாரத்தில் மறைத்து வைத்திருந்து புத்த சமயத்துக்கு அவரை மாற்ற முயற்சி செய்வதாக வதந்தி பரவி வருவதாக பிட்ஷூ வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது மக்கள் விஹாரத்தை சூழ்ந்து கொண்டு இளவரசரை வெளியே அனுப்புமாறு கூக்குரலிட்டுக் கொண்டு இருப்பதாக சீடர்கள் பதட்டத்துடன் கூறினர். முருகைய்யன் என்ற படகோட்டியும் அவன் மனைவியும்தான் பெரிதாய் சத்தம் போட்டு வதந்தியைப் பரப்புவதாக சீடர்கள் மேலும் தெரிவித்தனர்.இளவரசர், இந்த சங்கடத்தை விலக்கவும் அங்கிருந்து மக்கள் அறியாமல் வெளியேறவும் திட்டமிட்டார். வெளியில் திரண்டு நிற்பவர்களில் முருகைய்யன் ஒருவனை மட்டும் அழைத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். முருகைய்யன் தன் பேச்சை மீறமாட்டான் என உறுதி தெரிவித்த இளவரசர் அவன் உள்ளே வந்தவுடன் முன்போல வாய்க்கால் வழியாக ஆனைமங்கலத்துக்கு சென்றுவிடுவதாகக் கூறினார். வெளியே சென்ற பிஷூ, மக்களின் ஆரவாரத்தை அடக்கியபடி இளவரசரை சமீபத்தில் பார்த்தவர் முன்வருமாறு கூற, படகோட்டியும் அவன் மனைவியான ராக்கம்மாளும் முன்வந்தனர். படகோட்டியே உள்ளே சென்று இளவரசர் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளட்டும் என்றபடி இளம்பிஷு அவனை உள்ளே அழைத்துச் செல்ல, தலைமை பிஷு கூட்டத்தைக் கட்டுப் படுத்தத் தொடங்கினார். எக்காலத்திலும் இளவரசரை புத்த மதத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என உறுதி கூறிய ஆச்சாரிய பிஷூ நாகப்பட்டினத்தை நெருங்கி வரும் புயலையும் அதன் ஆபத்தையும் மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். கடல் அங்கு ஆவேசமாக பொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓட ஆரம்பித்தனர். தயங்கி நின்ற ராக்கம்மாளையும் ஒருவன் வந்து காதோடு ஏதோ சொல்லிக் கூட்டிப் போனான். தலைமை பிஷூவுக்கு கடல் பொங்கி வந்து சூடாமணி விஹாரத்தையும் மூழ்கடித்துவிடும் என்ற பயத்தினால் இளவரசரை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஆபத்து இல்லாத பகுதியான ஆனைமங்கலத்துக்கு அழைத்துப் போகும்படி படகோட்டியைக் கேட்டுக் கொண்டார்.படகு ஆனைமங்கலத்துக்கு அருகில் செல்லும்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட இளவரசர் விஹாரத்தில் இருந்த தலைமை பிஷுவுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கும் எனக் கருதி உடனே படகைத் திருப்ப ஆணையிட்டார். அவர் சந்தேகப் பட்டபடியே புத்தரின் பாத சரணங்களை இறுகப் பிடித்தப்படி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த ஆச்சாரியரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து படகில் கொண்டு வந்து சேர்த்தார். புயல்காற்றும் சிறு தூறலும் வெள்ளமும் படகைத் தாக்க முருகைய்யன் பிரயாசைப்பட்டு படகை ஓட்ட, வழியில் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவிருந்த கன்றுக்குட்டியை ஆச்சார்யரும், இளவரசரும் காப்பாற்றினர். ஆனைமங்கல மாளிகையை அடைந்த பொழுது அங்கிருந்த வாயிற்காப்பானை, அங்கே அடைக்கலமடைந்திருந்த மக்களுக்குத் தெரியாமல் வேறு வழியாக மேன்மாடத்துக்கு அழைத்துச் செல்ல பணித்தார்.மக்களுக்குத் தேவையான பொருளுதவிகளைச் செய்யுமாறு ஆணையிட்டுக் கொண்டிருக்கையில் முருகைய்யன் அவன் மனைவியை நினைத்துக் கவலைப்பட இளவரசர் அவனைத் தேற்றினார். அவன் அங்கு வர நேர்ந்ததைப்பற்றி சொன்னான். தன்னுடைய அத்தையாகிய மந்தாகினி தேவியை பழுவேட்டரையர் கைது செய்து கொண்டு போனதையும், பூங்குழலி அவர்களைப் பின் தொடர்ந்து சென்றதையும், இராக்கம்மாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதை சந்தேகித்து இவனை இங்கு கூட்டி வந்ததையும் விவரமாகக் கூறினான். ஈழத்து அரசியை கைதுசெய்த செய்தியைக் கேட்டதும் பதைத்த இளவரசர் உடனடியாகத் தான் கிளம்புவதாக அறிவித்தார். மறுநாள் சிறு வியாபாரி போல மூட்டை ஒன்றை தோளில் சுமந்தபடி முருகைய்யனைக் கூட்டிக் கொண்டு இளவரசர் கிளம்ப, மறைவில் இருந்த இராக்கம்மாள் வேண்டுமென்றே இளவரசரின் காலில் விழுந்தாள். முருகைய்யனின் சமிக்ஞையை கண்டுகொள்ளாமல், இளவரசர் பிழைத்து வந்ததை சந்தோஷத்துடன் மக்களுக்கு அறிவித்தாள். கூட்டம் சேர்ந்ததைக் கண்ட இளவரசர் தான் ஒரு வியாபாரிதான் எனச் சொன்னபோதும் கவனிக்காமல் திரும்ப திரும்ப இளவரசர்.. இளவரசர் எனச் சத்தமாகப் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்க்கலானாள்.முருகைய்யன் ரகசியமாக இளவரசர் மாறுவேடத்துடன் ஊருக்குச் செல்ல இருப்பதாகக் கூற, அதையும் பழுவேட்டரையருக்கு பயந்து இப்படி போகும் நிலை இளவரசருக்கு வந்து விட்டதே எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தாள். கூட்டம் கூடி மக்கள் அனைவரும் வந்துவிட எண்பேராயத்தின் தலைவர், இளவரசர் உயிர்பிழைத்ததற்கு மகிழ்ச்சி அடைந்து ஒருநாளாவது தங்கிப் போகும்படி வற்புறுத்தினார். கூட்டம் அதிகமாக சேர ஆரம்பித்தைக் கண்ட இளவரசர் மறுக்க முடியாமல் மாலையில் கிளம்புவதாக கூற அவருக்குண்டான யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன. கூட்டம் கூடி ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தனர். பெரும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. இளவரசர் அங்கிருந்து கிளம்ப தாமதமாவதைக் கண்டு பதட்டமடைந்தார். மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சக்ரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்தும், பழுவேட்டரையர்களின் அதிகாரம் மீதான அதிருப்தி குறித்தும் பேசிக்கொண்டே இருக்க இளவரசருக்கு உடனே அங்கிருந்து கிளம்பி தந்தையைக் காண வேண்டுமென்ற தவிப்பு உண்டாயிற்று. யானைகளும், குதிரைகளும், மக்களுமாக பெரும் அணியுடன் தஞ்சையை நோக்கி பெருந்திரளாக இளவரசர் புறப்பட்டார். கடம்பூரிலிருந்து கிளம்பிய பழுவேட்டரையர் மிகுந்த மன உளைச்சலுடன் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். என்னதான் நந்தினியின் முன் எப்பொழுதும் போல அவள் பேச்சைக் கேட்டு பரிவாரங்கள் இல்லாமல் ஒரு பத்துப் பேரை மட்டும் கூட்டிக் கொண்டு மதுராந்தகனை அழைத்து வர தஞ்சைக்கு உடனே கிளம்பி விட்டிருந்தாலும், மூன்று வாலிபர்கள் இடையே அவளைத் தனியாக விட்டு விட்டு வந்தது அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவளின் மோகனசக்தி அவளை விட்டு தூரமாக வந்தபின், பூரணமாக விலகியிருந்த சூழ்நிலையில், பல விஷயங்களை சிந்திக்க தொடங்கி னார்.பழுவேட்டரையர் யோசித்துக் கொண்டே வந்ததில், ஆற்றில் திடீரென ஏறி வந்த வெள்ளத்தை கவனிக்காது தன்னிலையிலேயே மூழ்கிப்போனார். வெள்ளத்திலும் காற்றிலும் தத்தளித்து படகு கரைசேர்ந்த போது பெரும் மரம் ஒன்று சாய்ந்ததில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் கூட வந்தவர்கள் நிலைமையை உடனே சமாளித்து நீந்த தொடங்கி விட்டார்கள். நந்தினியின் நினைவிலேயே மூழ்கியிருந்த பழுவேட்டரையர் தன்னைச் சமாளித்துக் கொண்டு உத்வேகம் கொண்டு நீந்தி மேலே வருவதற்குள் வெள்ளம் அவரை படகு கவிழ்ந்த இட த்திலிருந்து வெகுதூரம் கூட்டிச் சென்று விட்டது. வெகு பிரயாசைப்பட்டு நீந்தி கரையை அடைந்த பழுவேட்டரையர் நதிக்கரையோரமாகவே நடந்து சென்று குடந்தை நகரை அடையலாமென நினைத்தார். ஆனால் புயல் வலுத்ததால் மறுபடியும் வெள்ளம் வந்து அவரை உருட்டிச் செல்ல இந்தமுறை நாம் சேற்றில் முழுகிவிடப்போகிறோம் என பயந்தார். அப்போது ஏதோ ஒரு சக்தி அவரை உந்த கையில் கிடைத்த கல்லைப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தார். அந்த இடத்தில் துர்க்கா பரமேசுவரியின் கோவிலில் முணுக்கென வெளிச்சத்துடன் தெய்வம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது. தெய்வத்தின் அருளாலேயே தான் காப்பாற்றப்பட்டதாக மகிழ்ந்தவர் அங்கு வைத்திருந்த நிவேதனப் பொருட்களை உண்டு விட்டு அங்கேயே அன்றிரவைக் கழித்தார். கனவில் தேவி வந்து நந்தினியை நம்பாதே என்று எச்சரிக்க திடுக்கிட்டு எழுந்தவர் நன்றாக விடிந்திருந்ததையும் சுற்றி வெள்ளம் ஓடிக் கொண்டிருந்ததையும் தற்போது தாம் வெளியே போகவேண்டுமானால் கோவிலுக்கு வெளியே உள்ள மரம் விழுந்தால்தான் பாலம் போல உபயோகப் படுத்தி காட்டுப்பகுதிக்கு செல்ல ஒரே வழி என்பதையும் உணர்ந்தார். பொறுமையுடன் அன்றைய பகலும், இரவும், அடுத்த பகலும் காத்திருந்த பின் மறுநாளைய மாலையில் அம்மரம் வீழ்ந்தது. துர்க்கா பரமேசுவரியை வணங்கி விடைபெற நினைத்தபோது மந்திரவாதி என யாரோ அழைக்கும் குரல் கேட்டு தூங்குவது போல் பாசாங்கு செய்து ஓரமாக கண்மூடிப் படுத்துக் கொண்டார். வந்தவன் தேவராளன். இரவிதாஸன்தான் தூங்குவதாக நினைத்து அருகில் வரும்வரை அழைத்துக் கொண்டே வந்தவன், முகம் பார்த்து விட்டு பயந்து அந்த மரத்தின் வழியாகவே வேகமாக ஓட்டம் பிடித்தான். பழுவேட்டரையர், மந்திரவாதியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென அவனைத் தொடர்ந்து சென்றார். தேவராளனின் சேற்றுக் கால்தடத்தை தொடர்ந்து சென்ற பழுவேட்டரையர் தாம் வந்திருக்கும் இடம் பழைய திருப்புறம்பியம் பள்ளிப்படை என்று அறிந்து கொண்டு, தேவராளனும் ரவிதாசனும் பேசுவதை ஒட்டுக் கேட்கலானார். சுந்தர சோழனையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என பேசிக்கொண்டிருந்ததை மறைவில் இருந்து கேட்டுத் திகைத்தார். இரவிதாஸனிடம் தேவராளன், தான் பழுவேட்டரையரை பார்த்து விட்டு வந்ததைப் பற்றிக் கூற, இரவிதாஸன், அவர் மீது கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு வந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டான். மேலும் இளவரசரை விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது பாண்டியர்களின் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்த இராக்கம்மாள்தான் என்றும், வரும் வழியில் யானைப்பாகனாக ரேவதாஸக் கிரமவித்தன் யானைப்பாகனாக அமர்ந்து இளவரசன் உயிரை எடுப்பான் எனவும், சுந்தரசோழரது அரண்மனையின் பாதாள சுரங்கத்தில் சோமன் சாம்பவன் அரசரைக் கொல்லக் காத்திருப்பதாகவும் கூறினான். தேவராளன் நந்தினியைப் பற்றி அதிருப்தியை வெளியிட, அவளை இனிமேல் பாண்டிமாதேவி என்று அழைக்குமாறும், ஆதித்த கரிகாலனை கொல்லாமல் அவள் ஓயமாட்டாள் எனவும் இரவிதாஸன் அவனை சமாதானப் படுத்தினான். வந்தியத்தேவனை நந்தினி காப்பாற்றியது பற்றிய சந்தேகத்தை தேவராளன் கேட்க, முடிந்தால் நந்தினி வந்தியத்தேவன் மூலமாகவே ஆதித்த கரிகாலனை கொல்லுவாள் என்று கூறியவன், சோமன் சாம்பவன் பாதாள சுரங்கத்தில் உள்ள பொக்கிஷங்களை கொண்டு வருவான் எனவும், நந்தினி வேலை முடிந்தவுடன் சுரங்கம் வழியே வெளியேறி வந்து, எல்லோரும் கொல்லிமலை சென்று, சோழநாட்டில் நடக்கும் அல்லோலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே பாண்டியருக்கு படை திரட்டலாமெனவும் விவரித்தான். இதையெல்லாம் கேட்ட பழுவேட்டரையருக்கு தன் தலைமேல் இடிவீழ்ந்தாற் போல் ஆயிற்று. சோழர்குலத்தை பூண்டறுக்க செய்ய சபதமெடுத்தவள் தன் மனைவியாக இத்தனை நாள் இருந்ததை நினைத்து வேதனையுற்றார். அப்போது அவர் கனைத்ததில் திரும்பிய இருவரையும் தன் கைகளால் கொல்ல முயல, தேவராளன் தப்பித்து மண்டபத்தின் மேல் பெயர்ந்திருந்த கல்லை அவர் மீது தள்ள, அந்த இடைவெளியில் இரவிதாஸன் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள, மண்டபக் கல்லும் மரமும் ஒருசேர பழுவேட்டரையரின் மேல் விழுந்தது. இருவரும் வேகமாக ஓட்டம் பிடித்தனர்.