நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்
பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு நூலகம்போல் மாறியிருந்தது. வரவழைக்கப்பட்டப் புத்தகங்களில் ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம்’ என்ற நூல் இல்லை. பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற நூலைப் பெற்று அனுப்பிவைக்குமாறு ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தணியாத அறிவு தாகம் கொண்டிருந்த பகத்சிங். ‘ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்’ என்று பிரகடனம் செய்த, முதலாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் கர்த்தார் சிங்கைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டவர், இரண்டாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் காலேஜ் என்ற கல்லூரியில் பகத்சிங் படித்துக்கொண்டிருந்தபோது, அக்கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு நெருக்கமான ஆசிரியரான வித்யாலங்கர் என்பவர் மூலம் அரசியலும் ஆன்மீகமும் கலந்த அரவிந்தரைப் போன்ற மனிதரான சச்சின் சன்யால் என்ற புரட்சியாளரிடம் அறிமுகமானார். அவர் வழியாக உலக அரசியல், இந்திய அரசியல், இந்திய அரசியலில் வெள்ளையன் வந்த கதை, பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை அறிந்துகொண்டார். இத்தகைய சூழலில் சட்ட மறுப்பு இயக்கம் வந்தபோது, அதில் முழு வேகத்தோடு பகத்சிங் இறங்கினார். கோரக்பூர் மாவட்டத்தில் செளரி சௌரா என்ற கிராம மக்களிடம் கொந்தளிப்பு அதிகரித்திருந்ததால், காவல் நிலையத்தைத் தாக்கி 22 காவல் துறையினரைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தியை அறிந்து, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார் காந்தி. பகத்சிங் போன்ற ஏராளமான இளைஞர்களைத் திசை திருப்பிய வரலாற்றுப் போக்கின் கரு இதுதான். போராட்டம் வாபஸ் பெறப்பெற்றதால் இளைஞர்கள் பலர் தனித்தனியாக இயக்கம் கண்டனர். நவஜவான்பாரத் சபா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் பொதுச்செயலாளராக பகத்சிங் விளங்கினார். 1921ஆம் ஆண்டில் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுப்பு இயக்கம் 1922இல் திரும்பப் பெறப்பட்டது. அதிலிருந்து 1928ஆம் ஆண்டு வரை எந்தவிதமான போராட்டமும் இந்தியாவில் நடக்கவில்லை. விடுதலைப் போராட்டம் மந்தமாகவே போய்க்கொண்டிருந்தது. 1928இல் சைமன் என்கிற வெள்ளையன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை நிர்ணயிப்பதற்காக வந்தது. இந்தக் குழுவில் இந்தியர் யாரும் இடம்பெறவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் கோபக் கனலை எழுப்பியது. ‘இந்திய நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நீ யார்? இந்த நாட்டில் வியாபாரம் செய்ய வந்த நீ, ஆளத் தொடங்கி விட்டாய். ஆள வந்த உன்னை முற்றிலுமாக அகற்றியே தீருவோம்’ என்று கூறி, ‘சைமனே திரும்பி போ’ என்று முழக்கமிட்டுத் தங்களது கோபத்தை இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தினர். அந்த நேரத்தில், சந்திரசேகர ஆசாத்தால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுச் சங்கத்தின் செயற்குழு கூடி, அதன் பெயரை ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப் படை என்று மாற்றிக்கொண்டது. சங்கம் என்று இருந்ததை, படை என்று மாற்றியதுடன் அதனுள் சோசலிசம் என்பதைப் பொதிந்து வைத்தார்கள். சோசலிசம், உலகத்தில் நம்பத் தகுந்த மிகச்சிறந்த விஞ்ஞான எழுச்சியாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில்தான், தமது அமைப்பின் பெயரை இளைஞர்கள் அவ்வாறு மாற்றினார்கள். இந்தப் படை சார்பாக சைமன் கமிஷனை எதிர்த்துப் பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்வதோடு, கருப்புக் கொடி காட்டவும் முடிவெடுத்து, முடிவின்படி செயல்பட்டனர். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினர் பகத்சிங்கும் அவரது தோழர்களும். ‘புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வதல்ல; அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றி அமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்; இப்போதுள்ள அரசாங்க அமைப்பு தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அதில் நாங்கள் முன்வரிசையில் இருப்போம்’ என்று அந்த இளைஞர் கூட்டம் வேலை செய்து வந்தது. ‘கையில் புத்தகம் இல்லாமல் பகத்சிங்கைப் பார்த்ததே கிடையாது’ என்கிறார் அவரது நண்பர் சிவ வர்மா. ஆரம்பக் காலங்களில் விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, தாஸ்தோவஸ்கி, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப் படித்தார். கம்யூனிசத்தில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு, மாக்சிம் கார்க்கி, லெனின் ஆகியோரின் நூல்களைப் படித்தார். இந்தி, ஆங்கிலம்,பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் பகத்சிங்கிற்குத் தெரியும். உருது மொழியில் உள்ளம் உருகும் கவிதைகளைப் படைத்தார். படிப்பைவிட, தேச விடுதலையும் கம்யூனிசச் சிந்தனைகளும் அவரை முழுமையாக ஆக்கிரமித்தன. தன்னுடைய சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை, தாடி உள்ளிட்டவற்றை அகற்றி, இந்தியன் என்ற உணர்வைத் தவிர வேறு அடையாளமே இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்து, முறுக்கு மீசையும் தலையில் தொப்பியுமாக மாறினார். வாழ்வின் குறுகிய காலத்திற்குள்ளேயே அரசியல், கடவுள்,மதம்,மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். பகத்சிங் சிறையில் இருந்தபோது, ‘கனவுலகத்திற்கு அறிமுகம்’, ‘நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?’, ‘சோஷலிசத்தின் கோட்பாடுகள்’, ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’, ‘மரணத்தின் வாசலில்’ ஆகிய நூல்களை படைத்தார். இவற்றில் கனவுலகத்திற்கு அறிமுகம், நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?ஆகிய படைப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. மற்ற படைப்புகளும் சிறையிலிருந்து ரகசியமாக வெளியே கொண்டுவரப்பட்டாலும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது – அரசு அடக்குமுறை எந்திரம் முழு வீச்சில் இருந்த போது – அக்கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. பேச்சையும் எழுத்தையும் வெற்றிகரமாக உபயோகித்துக்கொண்ட பகத்சிங், விவாதம் செய்வதில் வல்லவர். சோஹன் சிங் ஜோஷ் குருமுகி, உருது ஆகிய மொழிகளில் மாத இதழாக அமிர்தசரஸில் நடத்திய இதழில் பல புனைபெயர்களில் கட்டுரைகள் எழுதினார். ஹிந்தியில் பிரதாப், பிரபா (கான்பூர்), மஹாரதி (டெல்லி), சாந்த் (அலகாபாத்) ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். சீக்கியர்களின் இலக்கியம் முழுவதும் குருமுகி எழுத்து வடிவில் உள்ளது. அதன் உள் கூறுகளில் ஹிந்தி அதிக அளவில் இருந்தாலும் பஞ்சாபியே அதன் பிரதான கூறாகும். எனவே சீக்கியர்கள் குருமுகியில் எழுத்து வடிவத்தில் எழுதப்படும் பஞ்சாபியைத் தங்கள் மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பஞ்சாப் ஹிந்தி சாகித்ய சம்மேளனம் 1924இல் ஏற்பாடு செய்திருந்த பஞ்சாப் மொழி மற்றும் எழுத்து வடிவம் பற்றிய கட்டுரைப் போட்டிக்கு பகத்சிங் எழுதிய கட்டுரையில், ‘மொழியை ஒரு மதப் பிரச்சினையாக மாற்றாமல் அதற்கு ஒரு விரிவான தோற்றத்தைத் தர வேண்டும்’ என்கிறார். ‘ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகும் தடைகளை அகற்றி, பஞ்சாபி மொழி மற்றும் எழுத்து வடிவம் தொடர்பாக இலக்கிய விழிப்புணர்வை சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். பரஸ்பர விவாதங்களின் மூலமே தீர்மானித்திட வேண்டும். இதற்கு மத அடிப்படையை விட்டொழித்து அணுக வேண்டும். அமிர்தசரசிலிருந்து வெளிவரும் பிரேம் போன்ற இதழ்களின் மூலம் மொழியை மேம்படுத்த வேண்டும். பஞ்சாப் பல்கலைக்கழகத்திடமிருந்து பஞ்சாபி மொழிக்கான அங்கீகாரத்தைக் கோர வேண்டும். இதன் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இடைஞ்சல்கள் எல்லாம் இவ்வாறு அகற்றப்பட்ட பின்னர், பஞ்சாபி மொழி ஓர் அழகிய, தரமான இலக்கியங்களைப் படைத்திடும் மொழியாக மாறிடும். பஞ்சாபி மொழியும் இந்தியாவின் நல்ல மொழிகளுக்கு இடையில் வைத்து எண்ணப்படக்கூடிய ஒன்றாகத் திகழும்’ எனக் கூறியதன் மூலம், மொழி மீது பகத்சிங் கொண்டிருந்த கருத்து தெள்ளத் தெளிவாக இருக்கிறது எனலாம். அக்கட்டுரையைப் படித்த சாகித்ய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அதை மிகவும் போற்றிப் பாராட்டினார். அக்கட்டுரைக்கு 50 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அந்தக் கட்டுரை, 1933 பிப்ரவரி 28 அன்று ஹிந்தி இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையின்போது, பகத்சிங் எப்போதும் புத்தகங்களையும் துப்பாக்கியையும் தன்னுடையே வைத்திருந்தார். நாட்டின் மீது, இலக்கியத்தின் மீது, மொழியின் மீது அளவிடற்கரிய பற்றுக் கொண்டிருந்த பகத்சிங்கின் நிறைவேறாத ஓர் ஆசையும் உண்டு. தூக்கிலிடப்படுவதற்கு முன் அவரது கடைசி ஆசையை அதிகாரிகள் கேட்டபோது, சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த பேபே என்ற பெண்ணின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தினார். அதிகாரிகளின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தபோது, அதற்கான விளக்கத்தை பகத்சிங் கொடுத்தார். ஒரு குழந்தையின் மல ஜலங்களை முகம் சுளிக்காமல் தூய்மை செய்பவரை ‘தாய்’ என்கிறோம்! இங்கே இத்தனை பேரின் கழிவுகளை அகற்றி, அந்தப் பணியைச் செய்கிற அவரும் நம் அனைவருக்கும் ‘தாய்’தானே! அதனால்தான் அந்த அன்னையின் கைகளால் கடைசி உணவைச் சாப்பிட விரும்புகிறேன் என்று சொன்னபோது, கேட்டவர் கண்களில் நீர் தழும்பியது! அதன்படி, அந்தப் பெண்ணும் 23ஆம் தேதி உணவு தயாரித்து எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று முன்னதாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டதாலும் வெளியிலிருந்து சிறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதாலும் அவரது கடைசி ஆசை நிறைவேறாது போயிற்று. தூக்கிலிடப்படுவதற்குச் சற்று முன்னர் வரை, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தார் பகத்சிங். தூக்கிலிடுவதற்கு அதிகாரி அழைத்ததும் அதிகாரியைப் பார்த்து, ‘ஒரே ஒரு அத்தியாயம்தான் இருக்கிறது. எனது கடைசி அத்தியாயம் முடிவதற்குள் அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிடுகிறேன்’ என்று கூறினார். அவருடன் இருந்த தோழர்கள், ‘இந்த நிலையிலும் படித்துக்கொண்டிருக்கிறாயே?!’ என்று கேட்டபோது, ‘அறியாமையோடு பகத்சிங் இறந்துவிட்டான்’ என்று யாரும் கூறக்கூடாது. அறிவோடுதான் பகத்சிங் இந்த தேச விடுதலைக்காக மரணத்தை ஆலிங்கனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்’ என்றார். ஏற்றத்தாழ்வு இல்லாத,சாதி, மத பேதம் இல்லாத, எல்லாரும் இந்தியன் என்ற பெருமித முயற்சியோடு, மண்ணிற்காக மகிழ்ச்சியுடன் மடிந்தாரே பகத்சிங்! அவரை நாம் என்றும் நினைத்துப் போற்ற வேண்டும்; அவர் வழி நடக்க வேண்டும். தூக்கு மேடைஏறுவதற்கு முன்பாகச் சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிப் போராட்டம் வெகு விரைவில் நடக்கவிருக்கிறது. அந்தப் போராட்டம் தீர்மான முடிவை ஏற்படுத்தும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தச் சக்திகளை ஒழித்துக்கட்டும் போராட்டத்தில் நாங்களும் பங்கு கொண்டோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார். இன்று அவரது பிறந்தநாளில் (28.09.1907) அவரது நினைவுகளைப் போற்றுவோம்.