அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி
கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும் கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள் மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன. கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார். பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர் அல்லது தலைவர் பதவிகளையும் அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.