பொன்னியின் செல்வன் 16

பொன்னியின் செல்வன் 16

பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான். கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு உளறினான். விழித்து எழுந்ததும் கொல்லன் அவன் உறக்கத்தில் உளறியதைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினான். மேலும் இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி அங்குவரை பரவியிருப்பதையும் சற்றுமுன் இவ்வழியே சென்ற பழுவேட்டரையரின் பரிவாரங்கள்மூலம் அந்தச் செய்தி வந்துசேர்ந்திருந்தது என்பதையும் கொல்லன்மூலம் அறிந்தான். குளம்புகளில் லாடம் அடித்துக்கொடுத்த கொல்லனுக்கு நன்றி கூறிவிட்டுப் பழையாறை வழியில் செல்ல ஆரம்பித்தான். வழியில் ஆபத்துதவி தேவராளன் குறுக்கிட்டு, ரவிதாஸனைப்பற்றியும் இளவரசரைப்பற்றியும் கேட்க, வந்தியத்தேவன் கவனமாகப் பதிலளித்தான். ஒரு மூடுபல்லக்கைச் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் நந்தினி வந்தியத் தேவனிடம் பேசவிரும்புவதாகக் கூறி அழைத்தான் தேவராளன். இவனும் பல்லக்கின் அருகே செல்ல, சுற்றி மறைந்திருந்த வீரர்கள் அவனைத் தாக்கிப் பல்லக்கிற்குள் கட்டிப்போட்டுப் பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன் பல்லக்குப் பயணத்தின் நோக்கத்தையும் முடிவையும் அறியும்பொருட்டு அமைதியானான். அப்போது பல்லக்கில் ஏதோ மயக்கும் புகை எழவும் அதில் நினைவிழந்தான். கண் விழித்தபோது ஒரு அறையில் இருந்தான். திறந்த கதவின் வழியாக நந்தினி வரவும் இலங்கையில் கண்ட ஊமை ராணியின் தோற்றத்தை ஒப்பிட்டு அவள்தான் ஆடை, ஆபரணங்கள் அணிந்து வந்துவிட்டாளா என்று அதிசயித்தான். பொக்கிஷ நிலவறையில் இருந்து அவள்தான் அவனைத் தப்பிக்கவிட்டதாகவும் அவன் ஒரு நன்றிகெட்டவன் எனவும் பல்வேறு வார்த்தைகளால் அவனை வெறுப்பேற்றினாள் நந்தினி. பிறகு  அருள்மொழிவர்மரைப்பற்றிக் கேட்டாள். குந்தவையையும் பூங்குழலியையும் எள்ளி நகையாடினாள். வந்தியத்தேவன் அத்தனைக்கும் அசைந்துகொடுக்காது அவளை அமைதியுறுமாறு வேண்டினான். அப்போது வந்தியத்தேவன் முன்பு கொல்லுப்பட்டறையில் கண்ட வாளைக் கைகளில் எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் நந்தினி.  ’ஆடை, ஆபரணங்களால் அலங்கரிந்த என்னுடைய உடம்பிலோ நெஞ்சத்தில் வஞ்சம்கொண்ட கொடியவன் ஒருவனின் விஷநெஞ்சத்திலோ இந்த வாளைச்செலுத்திக் குபுகுபுவெனப் பெருகும் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சாகவேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞை’ என்றெல்லாம் ஆவேசம் வந்தவள்போலப் பேசிக்கொண்டுபோனாள். அவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது, ‘பழுவேட்டரையர் எங்கே?’ என வந்தியத்தேவன் பேச்சைத் திருப்பினான். அவரும் பார்த்திபேந்திரனும் வெறியாட்டக்காரனிடம் இளவரசர்பற்றிக் குறிகேட்கப் போயிருப்பதாகச் சொல்லி, அதற்கும் பெரிதாய்ச் சிரித்து, பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், ஏன் ஆதித்த கரிகாலனும்கூடத் தன்முன் வர அஞ்சுவதைக் கூறினாள்.. ஆதித்த கரிகாலனை கண்டு தன்னைப்பற்றி  அஞ்சவேண்டாம் என்ற செய்தியைச் சொல்லுமாறு நந்தினி கேட்க வந்தியத்தேவன் மறுத்தான். இளவரசரைப்பற்றிக் கேட்க, அதுவும் தனக்குத் தெரியாது என்று கூறி அவளின் முத்திரை மோதிரத்தைத் திருப்பியளித்தான். அதை அவனையே வைத்துக்கொள்ளச்சொன்னவளிடம் ஊமை ராணி அவள்தானா என்ற சந்தேகத்தை வந்தியத்தேவன் கேட்டான். நந்தினி இல்லையென மறுத்துவிட்டு மறுமுறை அவளைக்கண்டால் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறும் இல்லையெனில் தன்னையாவது அவளிடம் கூட்டிச்செல்லுமாறும் கேட்டு அவனைத் தன் ஆட்களிடமிருந்து விடுவித்தாள். தன்னைக் கடத்திப்போன இடத்திலிருந்து பழையாறைக்குப் பயணம் செல்லும் வழியில் சென்றவன் இருளடையவும் சிறிதுநேரம் உறங்கிக்கொண்டிருந்தபொழுது இரண்டு காளாமுக வீரசைவர்கள் அவனைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் பேசிக்கொண்டு கடந்துசென்றனர். ஆதித்த கரிகாலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசிக்கொண்டதை மறைந்திருந்து வந்தியத்தேவன் கேட்டபொழுது, விரைவில் தன் எஜமானருடன் சென்றுசேர்ந்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டு பழையாறையை நெருங்கினான். எப்படி பாதுகாப்பைத் தாண்டி உள்ளே நுழைவது என்று கவலைப்பட்ட பொழுது, மதுராந்தகர் தன் பரிவாரங்களுடன் வருவது தெரிந்தது. செம்பியன் மாதேவி முக்கியமான விஷயம் பேசவருமாறு அனுப்பிய அழைப்பை ஏற்று மதுராந்தகர் கிளம்பியபொழுது அவர் மாமனாரான சின்ன பழுவேட்டரையர் அன்னையிடம் பட்டம் குறித்தும் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தார்.  வந்தியத்தேவன் வேண்டுமென்றே பரிவாரங்கள் நடுவே நுழைந்து  நிமித்தம் கூறுவோன்போல, கடம்பூரில் மூடு பல்லக்கில் வந்த நிகழ்ச்சியைக்கூறி நடிக்க, மதுராந்தகன் அவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பழையாறை கோட்டைக்குள் நுழைந்தார். சிவ சீல சிரோன்மணியான செம்பியன் மாதேவி திருநாரையூர் நம்பி எனும் சிவக்கொழுந்தை மரியாதையுடன் வரவேற்று சபையில் பாடச்செய்து சிறப்பு செய்துகொண்டிருந்தார். மதுராந்தகருக்கு அதையெல்லாம் காணக்காண எரிச்சலாய் இருந்தது.  தனியிடத்தில் வந்து வந்தியத்தேவனை நிமித்தம் சொல்லுமாறு கேட்க, அவன் ஆ..ஊ எனக் கத்திக்கொண்டு நடித்தான். பின் அவர் பட்டம்சூட்ட ஒரு பெண் தலைவிரிக்கோலத்தில் தடையாக இருப்பதாக இட்டுக் கட்டினான். பின் தலைவலியால் துடிப்பதாகக் கூறி நகர்வலம் போய்விட்டு வருவதாகச் சொல்லி மாளிகையிலிருந்து வெளியேறினான். மதுராந்தகரை அவரது அன்னை அழைப்பதாகச் செய்தி வரவும் ஆத்திரத்துடன் கிளம்பிச்சென்றார். கோடியக்கரையில் வந்தியத்தேவனுடன் மூலிகை பறிக்க வந்துவிட்டு, பின்பு பழுவேட்டயர்களிடம் காட்டிக்கொடுத்த வைத்தியர் மகன் பினாகபாணியிடம், வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்தால் தன்னிடம் தகவல் சொல்லுமாறு நந்தினி சொல்லியிருந்தாள். அதனை ஏற்றுக் காத்திருந்தவன் வெளியேவந்த வந்தியத்தேவனைக் கண்டான். அப்போது மக்களிடம் குற்றவாளி, ஒற்றன் என்றெல்லாம் கூறி வந்தியத்தேவனை மாட்டிவிட, அங்குவந்த ஆழ்வார்க்கடியான் அவனை சாமர்த்தியமாகத் தப்பிக்கவைத்தான். பின்பு குந்தவையைச் சந்திக்க அனுப்பிவைத்தான். இளவரசரைக் கடல்கொண்ட துக்கச் செய்தியை அப்போது தூதர்கள் கொண்டுவந்திருந்தனர். செம்பியன் மாதேவி மதுராந்தகரிடம், தன் கணவர் கண்டராதித்தருக்கு மண்ணாளும் ஆசை இல்லாததோடு, சுந்தரசோழரின் பரம்பரையே தனக்குப்பின் ஆளவேண்டுமென்றும், அதற்குத் தன் வாரிசு தடையாக இருக்கக்கூடாது என்றும் வாக்குப் பெற்றுக்கொண்டு சிவபதம் அடைந்ததாகக்கூறி, மதுராந்தகர் தந்தையின் விருப்பம்போலவே நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். மதுராந்தகர் பொறுமை இழந்து செம்பியன் மாதேவியைக் கண்டபடி ஏசினார். ஆத்திரத்தில் கழுத்திலிருக்கும் உருத்திராட்ச மாலையைக் கழற்றியெறிய முயல, கழுத்தைவிட்டு அது நகரவில்லை. தன் மகன் பட்டத்தை அடையத் தடையாக இருக்கும் நீயெல்லாம் ஒரு தாயா?  என்றெல்லாம் கேட்க, தன் மகன் உயிருடன் இருப்பதும் தனக்கு முக்கியம் என செம்பியன் மாதேவி விளக்க, அவன் கோபம் சற்றுத் தணிந்தது. தனக்குப் பல சிற்றரசர்கள் உதவுவார்கள் என்றெல்லாம் சொல்லி தாயைச் சமாதானப்படுத்த தொடங்கினான். அவர்களையெல்லாம் நம்புவதில் பயனில்லை என்று பெரிய பிராட்டி அறிவுரை சொல்லத்தொடங்கியபொழுது அரண்மனை வாசலில் பெரும் ஓலமும் சாபக்குரல்களும் கேள்விக் குரல்களும் பயங்கரப் பேரொலியாக கேட்டன. மதுராந்தகரை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு செம்பியன் மாதேவி மாடத்தைநோக்கி விரைந்தார். வந்தியத்தேவன் ஓடத்தில் குந்தவையைச் சந்தித்தான். சில நொடிகள் பேச்சிழந்து நின்றபிறகு நடந்தவை அனைத்தும் சொல்லும்படி குந்தவை கேட்க, எல்லாவற்றையும் சொல்லலானான். இளவரசருக்குக் கடும் சுரம் ஏற்பட்டதையும் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்து சென்றதையும் கூறிக்கொண்டிருந்தபொழுது வானதி தோட்டத்திலிருந்து ஓடிவந்து தண்ணீருக்குள் விழுந்தாள். இளவரசர் இறந்துவிட்டதாக நினைத்து வானதி தன் உயிரையும் விட்டுவிட வேண்டுமென நீரில் பாய்ந்திருந்தாள். அவளைக் காப்பாற்றி, குந்தவை தன் மடியில் வைத்து மயக்கத்தைத் தெளியவைத்துக் கொண்டிருந்தபொழுது வந்தியத்தேவன் பூங்குழலியின் மீதான இளவரசரின் எண்ணம் குறித்தும் பூங்குழலி இளவரசருக்காகத் தன்னுயிரையும் பணயம் வைப்பாள் என்பதையும் கூற, குந்தவை ஆத்திரமுற்றாள். மயக்கம் தெளிந்துவிட்ட வானதியும் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்ற ஆறுதலையும் ‘பூங்குழலியை விரும்புகிறார்’ என்ற துயரத்தையும் ஒருசேர அடைந்தாள். வந்தியத்தேவன் ஊமை ராணியைப்பற்றிக்கூற குந்தவை பரபரப்படைந்தாள். நந்தினிக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைப்பற்றிக் கூறவும் நந்தினி தன் தமக்கையென்று முன்னமே தனக்குச் சந்தேகம் இருந்ததையும் கூறி வருந்தினாள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலியை இளவரசர் மணக்கமுடியாது என குந்தவையும் குலம், கோத்திரமெல்லாம் அந்தப் பெண்ணின் அன்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என வந்தியத்தேவனும் நடத்திய வாக்குவாதத்தில் வானதி மயக்கம் பூரணமாகத் தெளிந்து எழுந்தாள். ஆழ்வார்க்கடியான் விரைந்து வந்து, ‘இளவரசர் கடலில் மூழ்கிவிட்டதுபற்றி ஆத்திரமாயிருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் குந்தவையை அழைத்தான். குந்தவையும் செம்பியன் மாதேவியும் மாடத்தில் வந்து நின்றவுடன் கூட்டத்தில் அனைவரும் அவர்களை நோக்கி முறையிட்டனர். பழுவேட்டரையர் சூழ்ச்சியால்தான் ஏதோ நடந்துவிட்டது என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, குழப்பமும் ஆத்திரமும் மிகுந்து அந்த இடம் களேபரமாகக் காணப்பட்டது. அப்போது குந்தவை குறிப்புணர்த்த, ஆழ்வார்க்கடியான் பெரிய குரலில், இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நிமித்தக்காரன் சொல்வதாகக் கூற, நிமித்தக்காரனாக வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனும் அதை  ஆமோதித்தான். வைத்தியர் மகன் அவனைப் பார்த்து ஒற்றன் எனக் கத்த, ஆத்திரமுற்று மேலிருந்து குதித்து வந்தியத்தேவன் அவனோடு சண்டையிடத் தொடங்கினான். அதற்குள் அநிருத்த பிரும்மராயர் அங்கே வருகைதந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆணையிட்டுவிட்டு கூட்டத்தையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பியன் மாதேவியைத் தனியே சந்தித்தார். சுந்தர சோழச் சக்கரவர்த்தி மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட இருப்பதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் கேட்க, செம்பியன் மாதேவி தன் கணவரின் ஆணையை மீறமாட்டேன் என்று மறுத்தார்.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக முதன்மந்திரி சொல்ல வர, மதுராந்தகர் உள்ளே வரவே அதைச் சொல்லாமலேயே விடைபெற்றார். மதுராந்தகர் அநிருத்தரை தன் முக்கிய எதிரியாக கருதுவதாகத் தன் தாயாரிடம் கூறினான். குந்தவையைச் சந்தித்த அநிருத்தர், நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர் அனைத்தையும் அறிந்து வைத்திருந்ததைத் தெரிந்துகொண்டு வியந்துவிட்டு வந்தியத்தேவனை விடுவிக்கும்படி கோரினாள். ஆனால், வந்தியத்தேவன் நந்தினியைச் சந்தித்ததை அநிருத்தர் சொல்லி அவன் நந்தினியின் ஒற்றனாய் இருக்கலாம் எனச் சந்தேகப்பட, குந்தவை மறுத்தாலும் அவன் மறைத்ததை நினைத்துக் குழம்பினாள். இளையராணியின் சூழ்ச்சிக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமல்லாது, மதுராந்தகர், கந்தன்மாறன் மற்றும் பார்த்திபேந்திரன் அனைவரும் மயங்கி அவள் பேச்சுக்கு ஆடுவதையும் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு வரவழைத்து சம்புவரையர் மகள் மணிமேகலையை திருமணம் செய்து கொடுக்கத் திட்டம் தீட்டியுள்ளதையும் கூறினார். ஆனால் அது வெளிப்பேச்சுதான் எனவும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் அவளுக்குத் தொடர்பிருப்பதால் இதன் பின்னால் வேறு சூழ்ச்சி இருக்கலாம் என்று கூற, குந்தவை பயந்தாள். அநிருத்தர் வந்தியத்தேவனைத் தான் விடுவிப்பதாகவும், அவன் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்குமாறும், தடுக்க முடியாது போனால் நிழல்போல ஆதித்தரைப் பிரியாமல் காக்குமாறும் ஆணையிடச் சொல்லி குந்தவையிடம் சொல்லி முடித்தார். வந்தியத்தேவன் பக்குவமற்று நடந்து கொள்வதால் ஆழ்வார்க்கடியானையும் உடன் அனுப்புவதாக முடிவெடுத்தனர். நடுவே வந்த வானதி பிடிவாதமாகக் கொடும்பாளூர் போவதாகக் கூற தடுக்க முயன்று முடியாமல் போக, குந்தவை அவளுக்கு விடை கொடுத்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 8

பொன்னியின் செல்வன் – 8

ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது.  ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் பொறுமையாகவே தகுந்த பதிலைக் கூறினான். சற்று முன் பறையறிந்து சென்றதைப் பற்றி குந்தவை கேட்கவும், அது ஒரு ஒற்றனைப் பற்றி என்று ஆழ்வார்க்கடியான் கூறவும் குந்தவை ஆர்வமாய்க் கேட்கலானாள். அவன் ஒரு முரட்டு வாலிபனென்றும் சக்ரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும் அடுத்து பட்டத்துக்கு வரப்போகிறவர்களைப் பற்றியும் தன்னிடமும் குடந்தை ஜோசியரிடமும் விசாரித்ததைக் கூற, தான் அங்கு அவனை சந்தித்ததாகக் குந்தவை கூறினாள். மேலும், எங்கு அவனைக் கண்டாலும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு குந்தவை கூற, ஆழ்வார்க்கடியான் விஷமப் புன்னகை செய்தபடி ‘அவனே உங்களைத் தேடி வருவான்’ என்று கூறினான். செம்பியன் மாதேவியைச் சந்தித்ததையும் குந்தவையைப் பார்க்க வருமாறு அவர் சொல்லச் சொன்னதையும் கூறி ஆழ்வார்க்கடியான் விடை பெற்றான். ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து தனது தமையனாரான ஈசான பட்டரைப் பார்க்க சிவன் கோவிலுக்குச் சென்றான். ஈசான பட்டர் சிவனைப் பழித்துப் பேசியதற்காக ஆழ்வார்க்கடியானை வெகுவாகக் கோபித்துக் கொண்டதைப்போல பாவனை செய்தார். அவரின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கவே ஆழ்வார்க்கடியான் அவரை விடாமல் பின் தொடர்ந்தான்.  கம்சன் வேடம் பூண்டவனுக்கு ஈசான பட்டர் உதவி செய்வதைப் புரிந்து கொண்டான். காலையில் அந்த மர்ம மனிதனும் ஈசானபட்டரும் மறைந்து செல்வதைக் கவனித்து அவர்களின் பின்னாலேயே சென்றான். இருவரும் ஓடையில் படகில் ஏறியபோது திரும்பிப் பார்த்தவனின் முகத்தைக் கண்டபோது, தன் சந்தேகத்தின்படி அது வந்தியத்தேவன்தான் என்று தெளிந்தான். முதன் மந்திரி அநிருத்த பிரும்மராயரின் அரண்மனைக்குச் சென்று அதன் நந்தவனத்தில் புகுந்து வந்தியத்தேவன் இறங்கப் போகும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.  நீரோடைக் கரையில் இருந்து ஈசானபட்டரும் வந்தியத்தேவனும் இறங்கி படிக்கட்டுகளின் வழியாக மேற்புறத்துக்கு வந்ததும் வந்தியத்தேவன் சிலையெனச் சமைந்து நின்றான்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்திருந்த குந்தவை எழுந்து நின்று வந்தியத்தேவனை கண்ணோடு கண் நோக்கினாள். உலகமெலாம் ஒருமுறை நின்றுவிட்டதைப் போலவும், அந்த நொடியில் பல யுகங்கள் பயணம் செய்து திரும்பியது போலவும் தாங்கள் யாரென மறந்து ஆதி ஆணும் ஆதிப் பெண்ணுமாய் முதன்முதலாய் கண்டு இச்சை கொண்டது போலவும் இருவரின் மனங்களும் சஞ்சாரம் செய்தன. வெளியில் இதைக் காட்டிக்கொள்ள முடியாமல் இருவரும் தவிக்க, ஈசான பட்டர் தொண்டையைக் கனைக்க, நிஜவுலகை அடைந்த குந்தவை வலிந்து வருவித்துக் கொண்ட கடினக் குரலில், ‘என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?’ எனக் கேட்க, சீண்டப்பட்டது போல, நீங்கள் யாரெனத் தெரிந்தால்தான் அதைச் சொல்ல முடியும்’ எனத் துடுக்காக வந்தியத்தேவன் கூறினான்.  ‘யாரைப் பார்க்க நினைத்தீர்கள்?’ என்று குந்தவை வினவ, சோழர் தொல் குலத்தின் மங்கா மணிவிளக்கை, சுந்தரச் சோழரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள்மொழிவர்மரின் தமக்கையுமான இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென நீட்டி முழக்கி நிமிர்வுடன் வந்தியத்தேவன் கூறினான். ‘தானே குந்தவை’ என்று  அவள் கூறவும் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்ததும் அவரைத்தான் எனக் கேட்டுத் தெளிந்து கொண்டான். அதற்குமேல் அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், தங்கள் மனதையும் இருவரும் சொற்களில் மறைத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர். வந்தியத்தேவன் கொடுத்த ஓலையைப் படித்த குந்தவை மேலும் மலர்ந்து அடுத்து என்னவென்று கேட்க, ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று அவன் கூற, அதற்கு முன் முக்கியமானதொரு வேலையை ஒப்படைக்கப் போவதாகக் குந்தவை சொல்ல, வந்தியத்தேவன் மறுத்தான்.  இளவரசர் தன்னை குந்தவையின் அந்தரங்கக் காவலனாக எதை ஏவினாலும் செய்வதற்காகவே அனுப்பினார் எனவும், ஆனால் தான் பழுவேட்டரையர்களைப் பகைத்துக் கொண்டு அவர்களால் தேடப்படுபவனாகவும், நெருங்கிய நண்பனான கந்தமாறானாலேயே துரோகி என்று குற்றம் சாட்டப்படுபவனாகவும் இருக்கிறேன். வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்பவன் தன்னை ஒற்று பார்ப்பதாகவும் கூறினான். நந்தினி தன்மேல் ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள் எனவும் இத்தனை இக்கட்டில் தன்னை முக்கியமான காரியத்துக்கு உபயோகப்படுத்துவது குந்தவைக்கு சிக்கலில்தான் முடியும் என்று கூறி வருந்தினான். ஓடையில் படகில் ஏறி அவன் வந்ததிலிருந்து நடந்த கதையை ஒன்றுவிடாமல்  குந்தவை கேட்டுக் கொண்டாள். வந்தியத்தேவனும் வந்து சேர்ந்த கதையைச் சொல்லி, அந்த சந்திப்பு சீக்கிரம் முடிந்து விடாதபடி நீட்டிக் கொண்டே போனான். பழுவேட்டரையர்களின் படைவீரர்களால் துரத்தப்பட்ட வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தபொழுது பின்னால் படைவீரர்கள் நெருங்க, சேந்தன் அமுதனிடம் குதிரையை ஓட்டிக்கொண்டு முன்னால் செல்லும்படியும் என்னைக் கேட்டால் ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று கூறுமாறும் சொல்லித் தப்பிக்க யத்தனித்தான். சேந்தன் அமுதன் பொய் கூறமாட்டேன் எனச் சொல்லவும், வந்தியத் தேவன் நிஜமாகவே நீரில் மூழ்க, தொடர்ந்து வந்த படைவீரர்கள் சேந்தன் அமுதனைத் துரத்திச் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து தப்பித்து இரவில் அடர்ந்திருந்த தோப்புகளில் மறைந்து பழையாறைக்குச் சென்று கொண்டிருந்தான். இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறங்கியபோது நந்தினியின் அரண்மனையில் கேட்ட அதே ஆந்தைக்குரல் கேட்க, தூணில் ஒளிந்து கொண்டு பார்த்தபொழுது அந்த மந்திரவாதி ரவிதாஸன் வந்துகொண்டிருந்தான். பார்க்கவே அச்சமூட்டும்படி இருந்த ரவிதாஸன், இருளில் தன்னைக் கவனித்திருக்க மாட்டான் என்று நினைத்திருந்த பொழுது, அவன் வந்தியத்தேவன் கழுத்தை நெறித்து  நந்தினியின் முத்திரை மோதிரத்தைத் தருமாறு கேட்க சமாளித்து தூணைப் பிடித்து காலால் தாக்கிவிட்டுத் தப்பித்தான். பழையாறை நகரில் நுழைய தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த பொழுது, நாடகக் கோஷ்டியுடன் இணைந்து கம்ஸ வேஷம் தரித்து ஊருக்குள் புகுந்து சிறிது நேரம் தெருக்களில் ஆடிக் களித்தபின் ஆதித்த கரிகாலன் சொன்னபடி ஈசான பட்டரைச் சந்தித்தான். சமணர் முழையில் அவனை ஒளித்து வைத்த ஈசான பட்டர், தக்க நேரம் பார்த்து இளவரசியைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.  விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட குந்தவை, இதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறும்படியான அபாயமானதொரு வேலையைத் தரப்போவதாகக் கூற, வானிலேறி விண்ணையே சாடும் வேலையாக இருப்பினும் செய்யக் கூடியவனாக வந்தியத்தேவன் சித்தமானான். திரும்பவும் மண்டபத்திற்கு வந்து  பனை ஓலைத்துணுக்கில் தங்கப் பிடி இட்ட எழுத்தாணியில் குந்தவை எழுதினாள். ‘பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்’ என்று எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சித்திரம் ஒன்றை வரைந்து, “உடனே இந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்று அருள்மொழிவர்மரிடம் கொடுத்து, அவரைக் கையோடு கூட்டிவர வேண்டும்” எனக் கட்டளையிட்டாள்.  ஆதித்த கரிகாலரிடம் பணிபுரிந்த வந்தியத்தேவன், சுந்தர சோழரையும் சோழர் குலவிளக்கான குந்தவையையும் சந்தித்த பிறகு, இளவரசர் அருள்மொழிவர்மரையும் சந்திக்கப் போகும் பேறை நினைத்துப் பெருமிதம் கொண்டான். “இப்போதே கிளம்புகிறேன்” என்று ஓலையை வாங்கும்பொழுது குந்தவையின் காந்தள் விரல்களைத் தீண்டியபொழுது மறுபடியும் அவன் உலகம் சுழல மறுத்து நின்றது. ஈசான பட்டரின் குரலைக்கேட்டு நடைமுறைக்குத் திரும்பினான்.  மறுநாள், படைவீட்டு சாலையின் வழியே யானையில் அமர்ந்தபடி குந்தவையும் வானதியும் பராந்தகர் ஆதுரசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீதியில் ஈழநாட்டுக்குச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகள் குடியிருந்தார்கள். அங்கிருந்தவர்களின் நலத்தை விசாரித்து அவர்களுக்குத் தேவையானதை வழங்க உத்தரவு இடுவது குந்தவையின் வழக்கம். இன்றும் அதுபோல வானதியைப் பரிகசித்தபடி உத்தரவை வழங்கிக் கொண்டிருந்தவளை, தலைமை வைத்தியர் அணுகி வணங்கினார். தான் சொன்ன இளைஞனை இலங்கைக்கு அனுப்பி மூலிகைகள் தருவித்துக் கொள்வதாகச் சொன்ன ஏற்பாட்டை உறுதி செய்துகொண்ட குந்தவை, அவனைப் பற்றிக் கேட்க, வைத்தியர் அந்த இளைஞனுடன் கோடியக்கரை வரை என் மகனும் துணைக்குச் செல்வதாகக் கூறி அவர்களை அறிமுகப் படுத்தினார்.  வானதி வைத்தியர் போல் வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனை அடையாளம் கண்டுகொண்டு குந்தவையிடம் கூற, அவள் ஏதும் தெரியாதது போல இருக்கலாம் என்று சமாதானப் படுத்தினாள். குந்தவை வைத்தியரிடம், சக்கரவர்த்திக்கு  வைத்தியம் செய்ய மூலிகை எடுக்கப் போகவேண்டியிருப்பதால் வழியிலுள்ள அரசு அதிகாரிகள் இவர்கள் கோரும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற திருமந்திர ஓலையையும், கலங்கரை விளக்குக் காவலருக்கு ஒரு ஓலையும் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொண்டாள். கிளம்பும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தபின்னும் ஏதோவொரு சாக்கை வைத்துக்கொண்டு குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக குந்தவை குறிப்புணர்த்த, வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் குதிரையில் கிளம்பினர். குந்தவை தன் மனம் வந்தியத்தேவனின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை எண்ணி அதிசயப்பட்டபடி இருக்க, வானதி அதைக் கண்டுபிடித்தாற்போல் ஏதோ கேட்க, யோசனையுடன் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தொடரும் சவிதா

பொன்னியின் செல்வன் – 6

பொன்னியின் செல்வன் – 6

கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் கடம்பூரிலிருந்து திரும்பவில்லை என்பதையும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான். அரண்மனையினுள் நுழைந்தவன் சின்னப் பழுவேட்டரையரைச் சந்திக்க எங்கு செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரு புலவர் கூட்டம் அரசரைச் சந்திக்க அவரின் அனுமதி வாங்கச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். தமையனாரை விட ஆஜானுபாகுவாய் வீற்றிருந்த சின்ன பழுவேட்டரையரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். வீர இளைஞர்களைக் கண்டால் தன் காவல்படையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆவலில் ஆர்வமாகக் கவனித்த சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனின் தூதுவன் என்றதும் முகம் கடுத்தார். ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, அரசரிடம் தானே ஓலையைச் சேர்த்து விடுவதாகக் கூறினார். இதை எதிர்பார்த்திருந்தபடியால் வந்தியத்தேவன் கடம்பூரில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்ததாகவும் அவர்தான் இந்த ஓலையை அரசரிடம் தன்னையே கொடுக்கச் சொன்னதாகவும் இட்டுக் கட்டிக்கூற, அரசரைப் பார்க்க உள்ளே அனுப்பினார். அரசரைக் கண்டதும் பரவசமும், அவர் நோயில் நலிந்து காணப்பட்டதால் வருத்தமும் அடைந்த வந்தியத்தேவனுக்குப் பேச்சே வரவில்லை. மகனிடமிருந்து வந்த ஓலை என்றது அரசரும், அரசியுமான வானமாதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். தான் கட்டிக்கொண்டிருக்கும் பொன்மாளிகைக்கு வருகை தருமாறு ஓலையில் ஆதித்த கரிகாலன் எழுதியிருந்ததைப் படித்த அரசர், ‘தெய்வங்களுக்கு மட்டுமே பொன்மாளிகை ஏற்படுத்த வேண்டும்; மனிதர்களுக்குத் தேவையா?’ என்று வருந்த, தாயும் தகப்பனுமாயும், நாட்டுக்கான அரசனுமாயும் விளங்கும் சுந்தரசோழர்-வானமாதேவிக்குப் பொன்மாளிகை கட்டியது தவறில்லை என வந்தியத்தேவன் இனிய சொற்களைக் கூற, இருவருக்கும் வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. தூரத்தில் சின்ன பழுவேட்டரையர் வருவதைக் கண்டவன், தான் சொல்ல நினைத்ததை அவசர அவசரமாகக் கூறினான். ‘தாங்கள் தஞ்சையிலிருந்து கிளம்ப வேண்டும். இங்கு அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அபாயம்.. அபாயம்’ .. எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்ன பழுவேட்டரையர் உள்ளே நுழைய, அவர் கடைசி வார்த்தையைக் கேட்டு விட்டார். அப்போது புலவர்கள் உள்ளே வர, வந்தியத்தேவன் அவர்களுடனேயே போய் நின்றுகொண்டான். வந்த புலவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட, அரசர் அதில் லயித்து மகிழ்ந்தார். பாடல்கள் வழி ஒரு குறிப்பு இருந்தது. அது இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கிருந்து உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டாம் என்பதாகும். நடுவில் குந்தவை தேவியைப் பற்றி அரசர் பேசியபோது, அவரின் முகம் நெகிழ்ந்ததைக் கண்ட வந்தியத்தேவன், அவரைச் சந்தித்து அடுத்த ஓலையைக் கொடுக்க வேண்டும் என்று இடுப்பைத் தொட்டு பார்த்தான். ஓலையைக் காணவில்லை. எங்கோ தொலைந்து போய்விட்டது என்று தெரிந்துகொண்டவன், இருப்பில் நிற்காமல் பதட்டமுற்று கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த புலவர்களுடனேயே திரும்ப முனைந்தான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் அவனைப் போகவிடாமல் இறுகக் கைப்பற்றி அரசரிடம் கூட்டிச்சென்று அபாயம் என அவர் காதில் விழுந்ததைப் பற்றி விசாரித்தார். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன், தான் அபயம் எனக் கேட்டதாகவும், தனக்கு ஒரு பத்து கிராமங்களாவது தங்களுடைய முன்னோர் பூமியில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் முறையிட்டான். அதையும் ரசித்த அரசரிடம், சின்ன பழுவேட்டரையர் ஓலைக்கு என்ன பதில் அனுப்புவது என்று கேட்க, அரசர் தஞ்சையை விட்டு வெளியே போவதில் அதுவும் பெண் பிள்ளைகள் போகும் பல்லக்கில் கால் செயலிழந்த நிலையில் போவது விருப்பமில்லை என்று கூறினார். அதற்குத் தகுந்த பதில் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்ததும் கலந்துகொண்டு அனுப்பலாம் எனவும், தன் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் போல் இருப்பதாகவும், எனவே ஆதித்த கரிகாலனையும், ஈழம் சென்றிருக்கும் அருள்மொழி வர்மனையும் வரச் சொல்லி ஓலை எழுதவேண்டும் எனவும் கூறினார். அதுவரை வந்தியத்தேவனை இங்கேயே தங்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார். ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கான சின்ன பழுவேட்டரையரின் ஆட்சேபனையைப் புலவர்களின் பாட்டால் குறிப்புணர்த்தியதைப் புரிந்துகொண்ட அரசர், அதற்கும் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். யமனிடமிருந்து கூட மீட்டு வருபவர் என்னும் அளவுக்கு அரசர் சின்ன பழுவேட்டரையரின்பால் நம்பிக்கை வைத்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது. ஓலையைத் தொலைத்திருந்த வந்தியத்தேவனுக்கு மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. அவன் நினைத்தாற்போலவே அந்த ஓலை சின்ன பழுவேட்டரையரிடம் ஒரு காவலன் மூலமாக அடைந்திருந்தது. ‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான தீரன் வேண்டும் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? ஓலையைக் கொண்டு வருபவனே அந்த வீரன்’ என்றும், ‘வந்தியத்தேவனைப் பூரணமாக நம்பலாம்’ என்றும் ஆதித்த கரிகாலன் அந்த ஓலையில் எழுதியிருந்ததைக் கண்ட சின்ன பழுவேட்டரையர், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று புரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்திருந்தார்.  அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, வந்தியத்தேவனைக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நன்கு உபசரிக்கும்படி ஆணையிட்டார். வெகுதூரம் வந்த களைப்பு போக அந்த மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட சுகபோக உபசரிப்பில் வந்த விஷயத்தையே மறந்து போகும் வண்ணம் மகிழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். புதிய உடைகள், உணவு எல்லாவற்றையும் ருசித்தவன், அங்கிருந்த சிற்பக் கூடத்தைச் சுற்றிப் பார்த்து சோழர்குல வரிசை, பராக்கிரமம், போர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், அதில் பழுவேட்டரையர் பரம்பரை செய்த தியாகங்கள், உதவிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புரிந்து கொண்டான்.  தன்னைக் கண்காணிப்பதற்கே இந்த உபசரிப்பு என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன், சடுதியில் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்த காவலாளிகளிடம் தன் பொருட்களைத் திருப்பித் தருமாறு சண்டையிட ஆரம்பித்தான். முன்வாசலில் குதிரையில் வந்த சின்ன பழுவேட்டரையரை ஓரக்கண்ணில் கவனித்தவன் தன்னை நெருங்கியவர்களை எல்லாம் ஒரே சுற்றில் வீழ்த்தினான். என்ன கலாட்டா என்று நெருங்கியவர், அவனின் வீரத்தை மனதுக்குள் மெச்சி, தமையனாரிடம் கலந்து கொண்டு  அவனைத் தன் காவற்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தன் பொருட்களெல்லாம் காணவில்லை, திரும்ப வேண்டும் என்று கேட்ட வந்தியத்தேவனிடம் என்ன பொருட்கள் எனக் கேட்க, அவன் வேறுவழியில்லாமல் குந்தவை தேவியின் ஓலையும் அதில் இருப்பதாகக் கூறி அனைத்துப் பொருட்களும் எனக்குத் திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தான்.  அவர் ஆணையின்படி எடுத்து வந்த பொருட்களில், தவறவிடப்பட்டிருந்த ஓலையும் அவன் வைத்திருந்ததை விட அதிகப் பொற்காசுகளும் இருந்தன. இதிலிருந்தே தன்னை உளவு பார்த்ததைப் புரிந்து கொண்டவன், அதிகப்படியாக இருந்த காசுகளை மறுத்தான். அதை வைத்துக்கொள்ளுமாறு கூறிய சின்ன பழுவேட்டரையர், அவன் அன்று அங்கேயே தங்கி, பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துவிட்டுப் போகிறானா என அவன் திட்டத்தை விசாரித்தார். இருந்துவிட்டுப் போவதாகவே கூறியவன், தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென அனுமதி கேட்டான். அவனுடன் இரு காவலாளிகளைத் துணைக்கு அனுப்பி, சுற்றிப் பார்க்கச் சொல்லிவிட்டு சின்ன பழுவேட்டரையர் கிளம்பினார்.  தான் தப்பிப் போகாமல் இருப்பதற்குத்தான் காவலாளிகள் இருவரும் வருகிறார்கள் என்று புரிந்துகொண்ட வந்தியத்தேவன், வேடிக்கை பார்ப்பது போல் போக்கு காட்டிக்கொண்டே, அங்கிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டு வந்தான். திடீரென அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்து, இந்தக் கோட்டையில் உதவி செய்வதானால் அவள்தான் செய்ய முடியும் என்று தோன்ற, காவலாளிகளிடம் இருந்து தப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியில் வேளக்காரப் படை வந்து கொண்டிருந்தது. திடீரென வேளக்காரப் படை வரிசையில் சிறிது குழப்பம் ஏற்பட, அதைப் பிடித்துக் கொண்ட வந்தியத்தேவன் அங்கிருந்து ஓடிய வீரர்களுடன், தானும் ‘பிடி.. பிடி’ என்று சத்தம் போட்டுக்கொண்டே எதிர்ப்பட்ட சந்தின் வழியே தப்பி ஓடினான்.  அவர்களுடனே சிறிது தூரம் ஓடியவன், பின் வழி மாறி சிறிய சந்துகளிலெல்லாம் மாறி மாறிச் சென்று, ஒரு பெரிய மதில் சுவரின் ஓரத்தில்  அமர்ந்து கொண்டான். இந்நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள், எப்படியேனும் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே சுவரின் மீது சாய்ந்து தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் யாரோ அழைப்பது கேட்டு விழித்தவன் மேலிருந்து ஒரு பெண் உருவம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.  அந்த உருவம் ‘என்ன தூக்கமா? இரு ஏணி வைக்கிறேன். ஏறி வா’ எனக் கூறிவிட்டு மூங்கில் ஏணி ஒன்றை இறக்க, வந்தியத்தேவனால் நம்பவே முடியவில்லை. சரி ஆனது ஆகட்டும். போய்ப் பார்க்கலாம் என ஏறத் தொடங்கினான். ‘ம். அங்கே இளையராணி காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்குத் தூக்கம் கேட்கிறதா’ என்று அந்தப் பெண் கேட்க, வந்தியத்தேவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இளையராணி என்றால் நந்தினியின் மாளிகைக்கா நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணியவன், மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என வேகமாக ஏறினான். மதிலின் உச்சியில் ஏறிக் கீழே பார்த்தபோது, அது ஒரு அரண்மனையின் விஸ்தாரமான தோட்டம் எனத் தெரிந்தது.  யாருடையது எனக் கேட்கத் தொடங்கிய வந்தியத்தேவனை ‘உஷ்.. என அடக்கியபடி அந்தப் பெண் முன்னால் நடந்தாள். வந்தியத்தேவனும் தொடர்ந்தான்.  நடுவில் காவலாளிகளின் சத்தத்திற்கு மறைந்து கொண்டபோது நிலவின் வெளிச்சத்தில் அந்தப் பெண் வந்தியத்தேவன் முகத்தை உற்றுப்பார்த்து, ‘நீ போனமுறை வந்த அதே மந்திரவாதிதானா?’ என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் சமாளித்துக் கொண்டு அடிக்கடி மாறுவேடம் பூண்டாக வேண்டிய அவசியத்தைக் கூறினான். பின் ஒரு லதா மண்டபத்தை அடைந்தார்கள். அந்த இரவில் அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் ஒரு விதத்தில் தேவலோகமென வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. உள்ளே சென்ற பெண்ணிடம் பேசிய குரலை வைத்து, அது நந்தினிதான் எனப் புரிந்து கொண்டான்.  உள்ளே வந்தியத்தேவன் நுழைந்தபோது ஒயிலாய் சப்பர மஞ்சத்தில் நந்தினி சாய்ந்திருந்தாள். அவனைக் கண்டு வியந்தபோதும், பணிப்பெண்ணின் முன் இருவரும் சமாளித்துக் கொண்டனர். அழகெனும் தெய்வமே உருக்கொண்டாற்போல் நந்தினியின் மோகன உருவத்தைக் கண்டு மயங்கிய வந்தியத்தேவன், முன்னொருமுறை மதுவால் ஏற்பட்ட மயக்கத்தையும், சித்தம் கலங்குவதால் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று தான் உறுதி எடுத்துக் கொண்டதையும் நினைத்து, இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணிக் கொண்டு திடமாய் தன்னை

கரைசேராப் படகுகள் – 6

கரைசேராப் படகுகள் – 6

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார். “அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு, “டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார். “அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன பண்றதுன்னு தெரியல. குப்புசாமி ரெட்டி  நெல்லா கொடுக்கலாம்னு சொல்றாரு. நான் பணமா  கொடுக்கலாம்னு யோசிக்கறேன்” என்று அம்மாவிடம்  அனைத்தையும் கொட்டினார் செந்தாமரை.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மரகதம், “இதே விசயத்த நம்மகிட்ட சொன்னா  கேட்டுக்க மாட்டோமா..? ஆம்பளங்கற  கவுரதி  குறைஞ்சிடுமோ?” என்று மனதிற்குள்  பொருமினாள்.  “மரகதம், வீட்டை பத்திரமா பாத்துக்க. புழக்கடை பக்கம் ராத்திரில போக வேணாம். கதவை அழுத்தி தாப்பா போடு”  என்று  எச்சரிக்கை செய்துவிட்டு, போருக்குச் செல்வதுபோல  கட்டிலைக் கம்பீரமாகத் தலையில் வைத்துக்கொண்டு  செந்தாமரை கிளம்பினார். அந்த சமயத்தில் கோழி விற்பவன், பெரிய கூடையில் கோழிக்குஞ்சுகளை அடைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் எடுத்துக்கொண்டு வந்தான். செந்தாமரை அவனிடம், “நீ எந்த ஊரு பா? வியாபாரம் எப்படிப் போகுது?” என்று பேச்சுக் கொடுத்து, அவனோடு பேசிக்கொண்டே களத்துமேடு வந்து சேர்ந்தார். தூரத்தில்  விளக்கு வெளிச்சம் தெரிந்தது.   “யாருப்பா அது?” என்று அதட்டலாக ஒரு கத்தல்  வந்தது. கத்தியது  குப்புசாமிரெட்டி. “மச்சான் நான்தான் செந்தாமரை” என்று பதிலுக்குக் கத்தினார். “ஏய் செந்தாமரை..  உனக்கு கீழண்டை  மாணிக்கம் வயல்ல  மணிலா போட்டிருக்கான். நாலு கொடி புடுங்கிட்டு வா; சுட்டு சாப்பிடுவோம்”  என்று அதிகாரம் பண்ணினார் குப்புரெட்டி. செந்தாமரையும்  கொஞ்சம் கொடி பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து, இரண்டு களத்துமேட்டுக்கும் நடுவில் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்தினார். “மச்சான் ஒரு கொடிமட்டும் கையில அகப்படாம, வழவழன்னு புடுங்கவே முடியலை மச்சான்” என்று கடுப்பாகக் கூறினார் செந்தாமரை. மணிலா கொடியைத் திருப்பிவிட்டு கொளுத்திக் கொண்டிருந்த குப்புசாமி, திடீரென்று சிரித்தார். கையில் கொம்பு வைத்துக்கொண்டு கொளுத்திய கொடியைப் புரட்டிப் போட்டு  சிரித்துக் கொண்டே, “செந்தாமரை, உனக்கு எத்தனை நாளா பாம்பு கறி சாப்பிடணும்னு ஆசை?” என்று கேட்டார். “க்குவா… வாந்தி வருது. பாம்பு கறியா..?” என்று குமட்டினார் செந்தாமரை. “பின்ன, மணிலா கொடிகூட பாம்பு சேர்த்து பிடிச்சி வந்திருக்க? நாம அதையும் சேர்த்து சுட்டுகிட்டு இருக்கோம்” என்று சொன்னார் குப்புரெட்டி. இருட்டில் மணிலா கொடிக்கும் பாம்புக்கும்  வித்தியாசம் தெரியாமல், பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்த செந்தாமரை, குப்பு ரெட்டியோடு சேர்ந்து சிரித்தார். குடும்பக்  கதையைப் பேசிக்கொண்டு  களத்து மேட்டில்  இருவரும் படுத்துத் தூங்கினார்கள். சூரியன் உச்சந்தலையைப் பிடித்து இழுத்ததும், எழுந்து மோட்டரைக் கிளப்பிவிட்டு, வேப்பங்குச்சியை வாயில் வைத்துக் கொண்டே   வயக்காட்டைச் சுத்திவந்து  அண்டைவெட்டி, மடைமாற்றி, குளித்துவிட்டு, களத்துமேடு வருவதற்கும் எட்டு மணி சங்கு கூவறதுக்கும்  சரியாக இருந்தது. மரகதம் அதிகாலையிலேயே எழுந்து  அருக்காணி கொடுத்துவிட்ட பிஞ்சு அவரைக்காயில்  கால் கிலோ பூண்டைக் கொட்டி நல்லெண்ணெயில் முக்கி, குளிசெலவு போட்டு  நல்ல மணமா அவரைப்பிஞ்சு வதக்கலும் சுடச்சுட சாதமும் புனிதாவுக்குக் கொடுத்தாள். கருப்பட்டி காபி போட்டு மாமியாருக்கு கொடுத்தாள். இன்று சற்று அசந்து தூங்கியதில், கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது. மரகதத்தால் பால் கறக்கமுடியவில்லை. மரகதம் தூக்குசட்டியில் கெட்டிக் கூழும், புதுசா வெள்ளையா இருக்கற நெத்திலிக் கருவாடு, மொச்சை, கத்தரிக்காய், வாழைக்காய், உருளை, முருங்கை, சொரக்காய் எல்லா காய்கறிகளையும்  போட்டு சும்மா தகதகன்னு மின்னுகின்ற  நெத்திலி கருவாட்டுக்  குழம்பும்  எடுத்துக்கொண்டு வயலுக்கு வந்தாள். ஒரு கை தலையில் இருக்கும் கூழ்  அண்டாவைப் பிடித்துக்கொண்டிருக்க, தோளில் செந்தாமரையின் சட்டையைப் போட்டுக்கொண்டு, ஒரு கையில் தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில்  மரகதம் நடந்துவரும் அழகில்  மயங்கி, சூரியனும் கூடவே ஓடி வருகிறான். அதற்குள்  ஆட்கள் எல்லாம் கதிர் அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  செந்தாமரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “மாமா.. ஏழாம் காப்புக்கு சம்பந்தி வீட்டுக்கு சொல்லணும்” என்று இழுத்தாள் மரகதம். “கூறு கெட்டவளே, அறுவடை நடக்குது. இப்ப போயி,,,” என்று கருவாட்டுக் குழம்பை நக்கிச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் செந்தாமரை. “அதான்.. நான் இருக்கேனுங்க.. இதோ இருக்குது  மாம்பாக்கம். வயலில் குறுக்கால போனா பொழுது சாயறதுக்குள்ள வந்திடலாம்” என்று வழி சொன்னாள் மரகதம். செந்தாமரை மெளனமாக  சாப்பிட்டு முடித்து, சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். பெண்கள் ஆண்களிடம் காரியம் சாதிக்கும் இரண்டு இடம், ஒன்று சாப்பிடும் இடம்; இன்னொன்று திருமணம் ஆனவர்களுக்குத் தெரியும். பெண்களைப் பெற்றவர்கள் செல்வதற்குச் சங்கடப்படும் இடம் பெண்ணைத் திருமணம் செய்து  கொடுத்த வீட்டிற்குத்தான். செந்தாமரையும் அதே சங்கடத்துடன்  மாம்பாக்கம் நோக்கி நடந்தார். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம். “சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார். தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.  மரகதம்  சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.  வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.  “வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள். “வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க”  என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.  “ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம். “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம். “செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு”  என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும்  ஆர்வமுடன் கேட்டாள்.  “சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை. “என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.  “ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு  வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.  “மரகதம்….  மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்  பட்டம்மா.  பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே  பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.  “ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு  பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!”  என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.  “ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்”  என்று  அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். “அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.  “ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.  “ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.  “என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட  சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி. அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இன்னிக்கு இப்பதானே தென்னன்டை  தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி. தொடரும் சாம்பவி சங்கர்